Advertisement

பேச்சும், எழுத்தும்!

பேச்சும் எழுத்தும் சமூக,பொருளாதார, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமையான ஆயுதங்கள். தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும்கவிழ்க்கவும் எழுத்தும் பேச்சும் உதவியிருக்கின்றன என்பதனை அறிவீர்கள். அந்தப் பேச்சும் எழுத்தும் நமக்கு வசப்படவேண்டுமானால் பயிற்சியும், நமக்கு உள்ளே சில வரைமுறைகளை வகுத்துக்கொள்ளுதலும் அவசியம்.
காந்திஜி, பாரதி, விவேகானந்தர்,பெரியார், ஜீவா, கண்ணதாசன், எம்.எஸ்.உதயமூர்த்தி என தன் பேச்சாலும் எழுத்தாலும் நம்முடன் வாழ்பவர்கள் எண்ணற்றோர். அண்ணாதுரை, நேரு, வாஜ்பாய், இந்திரா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பொது மேடைகளில் ஈர்ப்பாக பேசும் திறன் பெற்றவர்கள். நமக்கு காந்திஜியை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, சத்தியாகிரகியாக, அகிம்சை வாதியாகத்தான் தெரியும். ஆனால் முதலில் அவர், சிறந்த எழுத்தாளர். அதன் பிறகு தான் சுதந்திரப் போராட்ட வீரர். இன்னும் சொல்வ தென்றால், சுதந்திரப்போராட்ட வீரரான காந்திஜியை விட எழுத்தாளர் காந்திஜி 20 வருடங்களுக்கு மூத்தவர். அவருடைய சிந்தனை எழுத்தாகவும் பேச்சாகவும் வந்ததன்விளைவுதான் சுதந்திரம் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.

பகுத்தறிவு : பேச்சு, சிந்தித்தல் என்றபகுத்தறிவினை மனிதன் கொண்டிருப்பதால் தான் அவன் பேசுகின்றான். அதாவது அவனது சிந்தனையின் வெளிப்பாடாக பேச்சு அமைந்துள்ளது. அந்தப் பேச்சு எப்படியிருக்கவேண்டும் என்பதைவிட எப்படியிருக்கக்கூடாது என்பதை அறிதல் அவசியம்.வீண் பேச்சு, வெட்டிப் பேச்சு, புறம், பொறாமை, பொய், புரட்டு, பகட்டு, போலி, ஆணவம், அலட்டல், அவதுாறு, கோள், குற்றம் சுமத்துதல், வதந்தி, கேலி, கிண்டல், பரிகாசம், ஏளனம், குத்திக் காட்டல், குறை சொல்லல், திட்டுதல், ஆபாசமாக பேசுதல், நோகடித்தல், சினம், சிடுசிடுத்தல், முணுமுணுப்பு, முறையிடல், கேள்விப்பட்டதை எல்லாம் பேசுதல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், உள்நோக்கத்தோடு பேசுதல், நயவஞ்சமாக பேசுதல், செய்யாததை சொல்லல், அடுக்கடுக்காக பிறரை ஏமாற்றும் வகையில் பேசுதல், அடுத்தவர் பேச்சின் குறைகளை விமர்சித்தல்.. போன்றவற்றை பேச்சின்போது தவிர்த்தல் அவசியமாகிறது.
எப்படி பேச வேண்டும் பேச்சு என்பது எளிமையாக வார்த்தைகளை வீணடிக்காமல் இருக்கவேண்டும். பங்கேற்பாளர்களின் முகம் பார்த்தும் அவர்கள் கவனம் நம்மை விட்டு
விலகாமலும் இருக்கும் வண்ணம் பேச்சு அமையவேண்டும். பேச்சின் ஊடாக நகைச்சுவை மேற்கோள், எளிய சொற்களால் ஒப்பீடுகள், சங்க இலக்கியம் முதல் புதுக் கவிதை வரை சின்னச் சின்ன குறிப்புகளாகச் சொல்வோமேயானால் அது அனைவரையும் சென்றடையும். உண்மை
யறிந்து உரைத்தல் அனைத்திலும் மேலானது.காமராஜரின் பேச்சில் வசீகரம் இல்லையென்றாலும் வாய்மை இருந்தது. அவ்வை “செய்வன திருந்தச் செய்” என்கிறார். உரிய ஆதாரங்களுடன் பேசுதல்அவசியம். ஒரு சிறிய சொல்லில் பலரின் சுமைகளைக் களைந்துவிட முடியும். ஒரு வெற்றிகரமானப் பேச்சு என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. முதலில் குரல் வளம். மேலும், சரளமாக பேசுதல். அதேநேரத்தில் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தல் வேண்டும். பேச ஆரம்பிக்கும் போதே 'எழுந்துபோகாதே.. உட்காரு..' எனக் கட்டளையிடுதல், பெரிய செய்தியை புரிகிறதா என்று கேட்பது, நமது புலமையைக்காட்டிட மனனம் செய்த பகுதிகளை, பாடல்களை கடகடவென ஒப்பிப்பது போன்றவை கூட்டத்தினரைக் கவராது
அத்தகையப் பேச்சுத் தோல்வியைத் தரும்.பேச்சின் ஊடே, நமது தாய்மொழியான தமிழின் பெருமையையும் அதன் மூலம் தமிழனின் தொன்மை, பாரம்பரியம், மரபு, கலாசாரங்களையும் எடுத்துச் சொல்லவேண்டும். தொட்டுவிட்டுச் செல்லும் சிலவார்த்தைகள் கூட வீரியமாகும் வாய்ப்புண்டு.

எண்ண ஓட்டம் : நம் எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடாகத்தான் எழுத்தை பார்க்கவேண்டும். பரிதிமாற்கலைஞரின் எழுத்து தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தினைப் பெற்றுத்தந்தது. வ.உ.சி தமிழுக்கு நிறையதொண்டாற்றியிருந்தாலும் ஜேம்ஸ் ஆலன் என்ற புகழ்பெற்ற
ஆங்கில எழுத்தாளரின் நுாலை தமிழாக்கம் செய்தது அவரது எழுத்து வல்லமையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு உணர்த்தியது. சிறையிலிருந்து மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதமானது, மகளுக்கு மட்டுமல்ல இந்திய மக்களுக்கே வரலாற்றினைப் போதித்தது. தம்பிக்கு அண்ணாத்துரை எழுதிய கடிதங்கள் அந்தகால அரசியல் சூழலை இன்றைக்கும் அறியும் ஆவணமாகத் திகழ்கிறது. எழுத்து என்பது சிறந்த ஆவணம். வள்ளுவரும் தொல்காப்பியரும் இன்றைக்கும் நீக்கமற நம்முள் நிலைத்திருக்கிறார்கள். அதற்குக்காரணம் அவர்களின் எழுத்துக்களே.துாண்டும் எழுத்து எழுத்து என்பது வாசிப்பவரை முழுவதும் படிக்கத் துாண்ட வேண்டும். அதற்கு மொழி நடை, லாவகமான எடுத்துச் சொல்லல் அவசியம். பாரதி, கண்ணதாசன் போன்றவர்களின் உரைநடையும் கவிதைகளும் இன்றைக்கும் பேசப்படுகிறதென்றால் அதிலுள்ள
எளிமையும், இயல்பும், உண்மைத் தன்மையுமாகும். எழுத்துக்கு உண்மை மிக அவசியம். எழுத்துக்கள் தெளிந்த நீரோடை போல பயணிக்கவேண்டும். வாசிப்பவர்களைக் கட்டிப்போடும் வல்லமை மிக்கதாக இருக்கவேண்டும். புதியவர்களை எழுதத் துாண்ட வேண்டும். கவிஞர் வாலி, வலம்புரி ஜான், தென்கச்சி சுவாமிநாதன் எனப் பலர் தங்கள் எழுத்து நடையை நம் அருகில் இருந்து பேசுவதுபோல் கையாண்டனர்.

எழுத்தில் கனம் என்பது : சத்தமாக உரைப்பதில் இல்லை. நெஞ்சில் தைக்கும் வார்த்தைகளை இலகுவாகச் சொல்வதில்தான் இருக்கிறது. 'காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்..' என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளின் வலிமை இதற்கு ஒரு சான்று.
மக்கள் பிரச்னையை மையப்படுத்தி அதை படிப்பவரின் பிரச்னை யாக எடுத்துக் காட்டும் போக்கும், தவறு என நாம் சொல்லும் செய்திக்கு எது சரியானது என்று சொல்லும் பேராற்றலும் நம் எழுத்தினை வலிமைபெறச் செய்யும். அதே நேரத்தில், நம் எழுத்து
வல்லமையைக் காட்டவேண்டும் என்பதற்காகக் கடுமையான வார்த்தை பிரயோகம், வாசிப்பவரின் ஆற்றலை குறைத்துமதிப்பீடு செய்வது போன்றவை எழுத்துக்களைப் பலவீனப்படுத்தும்.
வெற்றிடம் பேச்சு, எழுத்து என்ற இந்த இரண்டு துறைகளிலும் இன்று பெரிய வெற்றிடம் உள்ளது. நல்ல பொருள் ஈட்டக்கூடியன இத் துறைகள். மேலும் புகழும் தரகூடியது, அதற்கும் மேலாக பேச்சுக்கும் எழுத்துகளுக்கும் நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆற்றல் உண்டு. இதை விஞ்ஞானபூர்வமாகஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள். எழுத்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி உண்டு என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம், வருத்தம், அவசரம், துக்கம், ஆத்திரம், சாதித்த உணர்வு, வெற்றி, தோல்வி போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களை மனதில் கற்பனை செய்து
கொள்ளுங்கள். அந்தந்த உணர்வு இருக்கும்போது, உங்களது கையெழுத்தில் மாற்றங்கள் தானாக உருவாவதை கவனியுங்கள். பேச்சும் எழுத்தும் சுவையானது, சுகமானது. ஆனால் அது எப்போது என்ற கேள்வி எழுகிறது. அதனை வாழ்வியலுக்கும் முன்னேற்றத்திற்கும் முன்நிறுத்தும் போதே விடையாகிறது.

மனதை மாற்றும் : பல போர்களை பேச்சுக்கள் தீர்த்து வைத்திருக்கின்றன.இப்போது என்றில்லை. சங்ககாலத்திலிருந்தே அதற்கான சான்றுகள் நமக்கு இருக்கின்றன. பேச்சு மனதை மாற்றும்: மயக்கும். 'செய் அல்லது செத்துமடி' என்ற காந்திஜியின் வார்த்தை கடைக்கோடி மனிதனையும் உணர்ச்சிப் பிழம்பாக எழவைத்தது. இன்றைக்கு படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்ற குறை இருப்பதனைக் காண்கிறோம். இதற்குக்காரணம் என்ன? வாசிப்
பதைவிட நம் காதுகளில் விழும் தகவல்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதுதான். நம் வரவேற்பறை தொலைக்காட்சி நமக்கு அனைத்துச் செய்திகளையும் கொண்டுவந்து கொட்டுவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. ஒரு நல்ல புத்தகத்தை எடுத்து ஒரு முறை வாசித்துப் பாருங்கள்

மாற்றத்தை உணர்வீர்கள். : உலகிலேயே அடுத்த பத்துஆண்டுகளுக்கு அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா மட்டுமே இருக்கப்போகிறது. எனவே சமூக மேம்பாட்டினை, மக்கள் நலத்தினை முன்நிறுத்தி எழுதவும் பேசவும் செய்யும் இளைஞர்களைப் பாராட்டுங்கள். அப்போதுதான் புதிதுபுதிதாக இளைஞர்கள் சமூகத் தளத்துக்கு வருவார்கள். சமூக மாற்றத்துக்கு அடித்தளமிடுவார்கள். சமூக மாற்றமும் சமூக அந்தஸ்தும் படிப்பாலும் எழுத்தாலும்
மட்டுமே சாத்தியமாகும்.

-ரா. சொக்கலிங்கம்
தலைவர், கண்ணதாசன் நற்பணி மன்றம்
மதுரை
98421 88991

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement