Advertisement

கொடுத்து மகிழ்ந்தவர் சுவாமி சிவானந்தர் : இன்று (செப்.8) பிறந்த தினம்

ரிஷிகேஷ் எனும் ஆன்மிக பூமி. கங்கை நதி ஓரமாக தெய்வீக காட்சி அளித்தது ஆனந்த குடீரம். சத்சங்கம் முடிந்ததும் சன்யாசிகள் சூழ நடை பயிற்சியில் ஈடுபட்டார் குருநாதர். அந்த குழுவில் ஒரு தாயும் மகளும் தவிர அனைவரும் ஆண் சன்யாசிகள். அவர்கள் ஆசிரமத்தை விட்டு சிறிது வனப்பகுதியில் நடந்து கொண்டிருக்கும் பொழுது, தாயுடன் வந்த அந்த இளவயது மகள் திடீரென கதறி கீழே சாய்ந்தாள். அவளை தேள் தீண்டியிருந்தது. தாய் கதறி அழத்துவங்கினார். என்ன செய்வது எனத் தெரியாமல் சன்னியாசிகள் திகைத்து நின்றனர். குருநாதர் அங்கு நடப்பதையும், தனது சிஷ்யர்களின் செயல்பாட்டையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
சில சன்யாசிகள் ஆசிரமம் சென்று கட்டை மற்றும் கயிறுகளை கொண்டுவந்து அதில் அப்பெண்ணை கொண்டு செல்லலாம் என தீர்மானித்தனர். மேலும் சிலர் வேறு வழிமுறைகளை ஆலோசித்தனர். இதனிடையே ஒரு சன்யாசி விரைந்து வந்து, அந்த கன்னி பெண்ணை துாக்கி தோளில் போட்டுகொண்டு, காட்டுப்பாதையில் விரைவாக பயணித்து ஆசிரம மருத்துவமனையில் சேர்த்தார். "கன்னிப் பெண்ணை எப்படி சன்யாசி தொட்டு துாக்கலாம்" என்பதே சில காலத்துக்குப் பேச்சாக இருந்தது. ஆனால் இதை குருநாதர் கண்டு கொள்ளவில்லை. சில மாதங்கள் சென்றன. ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ஒரு நாய் நோய்வாய்ப்பட்டது. உடல் முழுவதும் சொறியும், சீழுமாக காட்சிஅளித்தது. நோய்வாய்ப்பட்ட நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல யாரும் முன்வரவில்லை. உடனே அந்த சன்யாசி ஒரு துணியால் அந்த நாயை எடுத்து வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
சத்சங்கத்தில் குரு கூறினார். "எனது சிஷ்யனுக்கு கன்னிப் பெண்ணும், நோயுற்ற நாயும் ஒன்றுதான். சன்யாசம் ஆன்மாவில் இருக்கவேண்டும், மனதில் அல்ல." இந்த உண்மை
சம்பவத்தில் வரும் குரு : சுவாமி சிவானந்தர், சிஷ்யன் : சுவாமி
சச்சிதானந்தா (ஆதாரம் : வாழ்வும் வாக்கும் - சுவாமி சச்சிதானந்தா)
இளமை பருவம் : சுவாமி சிவானந்தர், திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடையில்
அதிகாரியாகப் பணிபுரிந்த வெங்கு ஐயர் -பார்வதியம்மாள் தம்பதியினருக்கு, 1887 செப்., 8ம் தேதிஅன்று பிறந்தார். அவரது இயற்பெயர் குப்புஸ்வாமி. எட்டயபுரம் ராஜா உயர்
நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லுாரியில் படித்து மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். 1905ம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். 1909ஆம் ஆண்டு முதல் "அம்புரோஷியா" என்ற ஆங்கில
பத்திரிகையை திறம்பட நடத்தினார். அம்புரோஷியாவிற்கு அமிர்தம் என்று அர்த்தம்.
இந்த காலகட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோக, மலேஷியாவில் தோட்டத் தொழிலாளர்களின் மருத்துவமனையை நிர்வகிக்கக்கூடியப் பணியில் சேர்வதற்கான அழைப்பு வந்தது.
மாதம் 150 டாலர் சம்பளம் அதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மலேஷியா நாட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, 1913ல் மலேஷியா சென்றார்
குப்புஸ்வாமி. வருமானத்துக்காக அங்கு சென்றாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே, மருத்துவத்துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வகித்தார். பயனுள்ள மருத்துவ நுால்களையும் எழுதி வெளியிட்டார். உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மனப் பிணியை தீர்ப்பதில் ஆர்வம் எழுந்தது.

பற்றற்ற வாழ்க்கை : 1923ல் இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில்
உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை வாழலானார். ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த
சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924 ஜூன் 1ம் தேதி, 'சுவாமி சிவானந்த சரஸ்வதி' எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.1934ல் உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடீரம் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, சிகிச்சை, மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 'தெய்வீக வாழ்க்கை சங்கம்' எனும் மிகப் பெரிய
ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. 1963 ஜூலை 14ல், கங்கைக் கரையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.வார்த்தைகளால் வளமாக்கியவர் அப்துல்கலாம் விமானப்
பொறியியல் படித்து முடித்த போது, விமானப்படையில் சேர விண்ணப்பித்தார். ஆனால் தேர்ச்சி பெறவில்லை.

மனம் சோர்ந்தவர் : ரிஷிகேஷில் சுவாமி சிவானந்தரைக் கண்டார். விமானப்படை தன்னை நிராகரித்ததால் வருத்தத்தில் இருப்பதாகக் கலாம் சொன்னார். ”வேறொன்றுக்காக நீ படைக்கப்பட்டுள்ளாய். அதை நோக்கிச் செல்” என்று ஆதரவாகக் கூறினார் சுவாமி. விமானப்படைக்குத்
தகுதியில்லாதவர் என்று கருதப்பட்ட கலாம், ஜனாதிபதி ஆனபிறகு, இந்தியாவின் முப்படை
களுக்கும் தலைவராய் திகழ்ந்தார். செய்வதை சலிப்பின்றி செய்தால், சிகரங்களை ஆளலாம் என்ற சிவானந்தரின் பொன்மொழி அவரை உயரத்துக்குக் கொண்டு சென்றது.

பொன்மொழிகள்: "எளிய வாழ்வும், உயர்ந்த எண்ணமுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். பணியாளர்களை நம்பி இருக்க வேண்டாம். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யப் பழகுங்கள். தேவைகளைக் குறைத்துக் கொண்டால் வாழ்வில் திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும். பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. விளைவைப் பற்றி சிந்திக்காமல் துணிவுடன் கடமையாற்றுங்கள். பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்க வில்லை."

அர்த்தமான பேச்சு : சிவானந்தர் திருவல்லிக்கேணி தேசியப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவியர் மத்தியில் பேசியது, இன்றைக்கும் அர்த்தமும் அவசியமானதும்கூட.
"மாணவியருக்கு, உரிய கல்வி அளிக்கப்பட வேண்டியது அவசியம். மாணவியரின் துாய மனதில், ஆன்மிக, ஒழுக்கக் கருத்துகளை பதியச் செய்தால், பல தலைமுறைகள் முன்னேற்றம் அடைவதற்கான வழியை ஏற்படுத்தியவர்கள் ஆவீர்கள். பெண்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் சொல்லித் தந்தால் போதாது. இலக்கியமும், விஞ்ஞானமும் வேண்டியவை தான். அவர்
களிடம் சமய உணர்வு இயற்கையாகவே ஊன்றி இருக்கிறது. ஆனால், தலைகீழாகக் காட்சி தரும் கல்வி முறை, அந்த உணர்வைத் தகர்த்தெறியும் விதத்தில் அமைந்துள்ளது," என்றார்.
மனிதம் வேண்டும் கடவுள், மதங்களை பார்ப்பதுஇல்லை, மனித மனங்களையே
பார்க்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில், சிவானந்தரின் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிறிஸ்தவ பக்தரை, சுவாமி, ஆஸ்ரமத்தில் இருந்த உணவுக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார்.அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த இந்துக்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை. எழுந்து
சென்றனர். ஆனால் சுவாமியோ கிறிஸ்தவ பக்தரை அமரச்செய்து உணவு பரிமாறினார். சமையல் அறைக்குள்ளும் அழைத்துச் சென்றார். உணவு விடுதி நிர்வாகியிடம், “கடவுள்,
ஒருவனது பக்தியைப் பார்க்கிறாரே தவிர, குலம் கோத்திரத்தை பார்ப்பதில்லை' என்றார். ஆணவம் இல்லாமலும், எதையும் எதிர்பாராமலும் பிறருக்கு நன்மை செய்வது ஒன்றே உண்மையான ஆன்மிகம்" என்று ஆன்மிகத்துக்கு புது விளக்கம் சொன்னவர் அவர்.
கொடுத்து மகிழ்பவர் பக்தர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்துக் கொண்டே இருப்பர். அவரும் அவற்றை தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார். தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் சிவானந்தரை, கவியோகி சுத்தானந்த பாரதியார், "கிவ்ஆனந்தர்" (கொடுத்து மகிழ்பவர்) என்று போற்றினார்.சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நுால்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. "இந்த உலகம் கண்ணாடியை போன்றது. நீங்கள் சிரித்தால் அதுவும் சிரிக்கிறது; சீறி விழுந்தால், அதுவும் சீறி விழுகிறது" என்று, வாழ்வின் யதார்த்த நிலையை உணர்த்தும் பொருள் பொதிந்த தத்துவத்தைத் தந்து சென்றிருக்கிறார் சுவாமி சிவானந்தர். அவர் வாக்கின் வழிநடத்தால் அது நம்மை உயர்த்தும்.

- வெ. பானுமதி
சமூக ஆர்வலர்
மதுரை
94424 22832

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement