Advertisement

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி-8

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர் வாகிகளுக்கும் வழங்கப் பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கி யிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளி யீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து உள்ளனர். அந்த கருத்துகளையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


13. கிரிதர் பிரான், மூவரசம்பேட்டை,சென்னை -600091

பல சமூக நல விஷயங்கள் தொடர்பாக அடிப்படை விபரங்கள் அறியாத நிலையிலேயே என்னைப்போன்ற பலர் உள்ளோம் என நினைக்கிறேன். சாதாரண மக்களுக்கு இவை குறித்து தெளிவான சிந்தனை ஏற்படுத்த சிறந்த தகவல் பறிமாற்ற முறை இல்லை. மக்களுக்கு அரசின் செயல்களைப் புரிந்துகொள்ளவும், விவாதிக்கவும் தெளிவுபெறவும் ஊடகங்கள் உதவுவதில்லை. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என நமது நாட்டில் மக்களைப் பாதிக்கக்கூடிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக கல்விமுறை நடைமுறைகள் நமது நாட்டைப் போல இவ்வளவு தெளிவற்றதாக வேறெங்கும் இருக்கிறதா என தேடுதல் மிக எளிது. பாடத்திட்டம் குளறுபடிகள் சரிசெய்யப்படவில்லை. சோறே சரிவர வேகாத நிலையில் பந்தியிட முற்பட்ட கதையாக, பள்ளிப் பாடத்திட்டம் முறைப் படுத்தும் முன்னரே பள்ளிகளுக்கு தன்னாட்சி கேட்பது உள்ளது. சமூகநீதி அறச்சிந்தனையையே பள்ளிகள் தனியார்மயம் செய்யும் தற்போதுள்ள நடைமுறை தகர்த்து வருகிற நிலையில், பள்ளிகளுக்கு சுயாட்சி கேட்டல், குரங்கு சாராயம் குடித்து, அதற்கு தேளும் கொட்டியது போல் ஆவதுடன், தனியார் கல்விக் கொள்ளையை நிரந்தரப்படுத்தும்.
நமது மாநிலத்தில் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் திறம் மற்றும் தரம் குறித்து வரும் செய்திகள், நம்பிக்கை அளிக்கின்றனவா? அக்கல்லூரிகளில் படித்து வெளிவந்த மாணவர்கள் சமூக நிலை என்ன? (வேலை வாய்ப்பை விடுங்கள், அது எல்லாம் ஒரே கதை தான்). அவைகளின் செயல்திறன் ஊழல்மிக்க நிர்வாகத்தால் கண்டு கொள்ளப் படாமல் இருப்பதே உண்மை. பேராசிரியர் நியமனத்திலிருந்து எல்லாவற்றிலும் நெறியின்மை படர்ந்து வரையறையற்ற ஊழல்கள் மலியவில்லையா? அவற்றை நேர்செய்யவென்ற பெயரில் ஊழல் அதிகாரிகள் அனுப்பப்படவில்லையா?

பணம் படைத்தவர்கள், அரசியல் முதலைகள் சாராயம் காய்ச்சி ஆலை வைத்தவர்களில் சிலர் கல்லூரிகள் நடத்த ஆரம்பித்தனர். அவர்கள் நலனுக்காகவே கல்லூரிகள் தன்னாட்சி வழங்கப்பட்டதோவென அவர்கள் தன்னாட்சி கல்லூரி நடத்துகின்றனர். மதுக்கடைகளை நடத்தி பணம் பார்த்தவர்கள், அரசு (டாஸ்மாக்) கடைகளை எடுத்துக் கொண்டபின், பள்ளிகள் நடத்துவதில் மூச்சாகியுள்ளனர். பாரம்பரியமிக்க சில பள்ளிகள் தவிர பெரும்பாலானவை இந்த சாராய வகையினரிடமும் உள்ளதை நாமறிவோமே. இவர் களிடம் தன்னாட்சியா? நினைக்கவே பயமாக உள்ளதே!

இத்தகைய நிலை உள்ளது அறிந்தும் தினமலர் வெளியீட்டாளர் போன்றோர் பள்ளிக்கல்வித்துறை தன்னாட்சி கேட்பது விசித்திரம். முதலில் பள்ளிக்கல்வி தனியார் மயமாவதைத் தடுக்க வேண்டும். இவ்விலக்கை நீர்த்துப்போகச் செய்யும் எவ்வித முயற்சிக்கும் நல்லிதயம்கொண்ட சமுதாயமும், தினமலர் போன்ற மதிப்பு மிக்க ஊடகங்களும், அதன் வெளியீட்டாளர் போன்ற சான்றோர்களும் துணை போகக் கூடாது.


தினமலர் விளக்கம்: தன்னாட்சி முறை செயல்படுத்தப்படும் பொழுது, அது உறுதியாகத் தவறாக பயன்படுத்தப்படும் என்ற தங்கள் கருத்தை, தங்கள் அச்சத்தை இன்னும் ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுடைய கடிதங்களும் அவற்றிற்கு தினமலர் அளித்த விளக்கங்களும் தினமலரில் வெளியாகியுள்ளன.

தங்கள் கடிதம் கூறும் செய்திகள்: ஒன்று: மக்கள் அரசின் செயல்களைப் புரிந்து கொள்ள ஊடகங்கள் உதவுவதில்லை. இரண்டு: கல்வி நடைமுறைகள் நம் நாட்டில் தெளிவற்று இயங்குகின்றன; தெளிவான கல்விக் கொள்கை வகுத்துக் கொண்ட பின்னரே மற்றவை பற்றி யோசிக்க வேண்டும்; முதலில் தெளிவான கல்விக் கொள்கையை வகுத்தபின் அதை திட்டமிட்டு உறுதியுடன் செயலாற்ற வேண்டும். மூன்று: தரமான இலவச கல்விவழங்குவது அரசின் கடமை; நான்கு: பள்ளிகளை தனியார் மயம் செய்யும் தற்போதுள்ள நடைமுறை தகர்ந்து வருகிற நிலையில் பள்ளிகளுக்குச் சுயாட்சி கேட்டல், குரங்கு சாராயம் குடித்து தேளும் கொட்டியது போல், தனியார் கல்விக் கொள்கையை நிரந்தரப்படுத்துவது போலாகும். ஐந்து; தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் திறம்பட இயங்குவதில்லை. ஆறு: ஊழல் நிர்வாகம் அதைக் கண்டு கொள்வதில்லை. ஏழு: பாரம்பரியம் மிக்க சில பள்ளிகள் தவிர பெரும்பாலான பள்ளிகள் பணம் பண்ணுபவர்களிடம் இருக்கின்றன. எட்டு: இந்தச் சூழலை அறிந்தும், தனியார் மயமாவற்கு தினமலர் துணை போகக்கூடாது.

ஊழல் மிக்க அதிகாரிகளால் சமூகத்தில் நிலவும் அவலநிலையைத் தாங்கள் பல வழிகளில் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். தங்கள் கூற்று முழுவதும் உண்மைக்குப் புறம்பானது என்றோ, ஏதோவொரு காழ்ப்புணர்ச்சியில் சொல்லப்பட்டனவென்றோ யாரும் சற்றும் கருதமுடியாது. அரசு இயந்திரமும் பள்ளிகளும் மிகத் தரமின்றி செயல்படும் நிலையைக் கண்டு தங்களுள் கொதித்தெழும் முறையான கோபத்தைத் தங்கள் கடிதம் உணர்த்துகிறது. இது ஒருபுறமிருக்க, தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள எட்டு காரணங்களில் சில நாம் எடுத்துக் கொண்டிருக்கும் குறிக்கோளிற்கு அப்பாற்பட்டது என நாங்கள் கருதுவதால் அவற்றிற்கு விளக்கம் தரவில்லை; தர விரும்பவில்லை.

தெளிவான கல்வி கொள்கை வகுத்து, அதை திட்டமிட்டு செயல்படுத்தியபின் தன்னாட்சியைப் பற்றியோ, மற்ற எந்த மாற்றத்தைப் பற்றியோ சிந்திக்கலாமென்று தாங்கள் கூறுவது போல் தெரிகிறது. தாங்கள் முக்கியமாக சரியாகக் கருதும் தெளிவான கல்விக் கொள்கையை வகுக்கத் தான் அரசு பெரும் முயற்சி எடுத்து, சரியாகத் திட்டமிட்டு ஆசிரியர்களிடமும் கல்வியாளர்களிடமும் கருத்துக்களை, யோசனைகளைக் கேட்டுப் பெறுகிறது. இந்தத் திட்டத்தில் தமிழக பள்ளி ஆசிரியர்களே பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று, புது பாடத்திட்டம் எப்படி இருந்தால் மாணவர்கள் பயன் பெறுவர் என்று விபரமாக சொல்லியிருக்கின்றனர். இந்த முறை சரியில்லையென்று சொல்ல முடியுமா? கல்விக் கொள்கையைப் பற்றி சொன்னவர்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக நலன் விரும்புவோர்களும் தான். ஆகையால், தங்களுடைய கண்ணோட்டப்படியே, இன்று அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் திறம்பட இயங்கவில்லையென்று ஒரு முடிவு எடுத்துள்ளீர்கள். சற்று கூர்ந்து நோக்கினால், சில கல்லூரிகளைத் தவிர்த்து பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகள் சரியாக இயங்குவதைக் காண்பீர்கள். தன்னாட்சி பெறுவதற்கு முன்னால் பல நிலைகளில் கல்லூரி சிறந்த மாற்றத்தைக் காண்பித்து, வல்லுநர் குழுவின் பரிந்துரை பெற வேண்டியுள்ளது. ஊழல் சூழலில் தன்னாட்சி பெறுவது எளிது என்று தாங்கள் கருதலாம். இன்றளவும் நன்றாக இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளன. மேற்கோளாக, தினமலர் நடத்தும் தன்னாட்சிக் கல்லூரி இயங்கும் விதத்தை தாங்களே விரும்பினால் நேரடியாக வந்து பார்க்கலாம்; தாங்கள் வந்து பார்க்க வேண்டும். வேலை வா<ய்ப்பைப் பற்றி அவநம்பிக்கை தெரிவித் துள்ளீர்கள். எத்தனை கல்லூரிகள், மாணவர் சேர்க்கையின்போது, தங்கள் கல்லூரியில் படித்து வெளியேறிய மாணவர்கள் பெற்றுள்ள வேலைவாய்ப்பை மாணவர்களின் படத்துடன் வெளியிட்டு வருகின்றன என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பாரம்பரியம் மிக்க பள்ளிகள் தவிர என்று தாங்கள் கூறியுள்ளீர்கள். இது வரவேற்கத்தக்கது. எல்லா பள்ளிகளும் சரியில்லையென்று சொல்வது சரியாக இருக்காது என்று தாங்களே உணர்ந்திருக்கிறீர்கள். நாங்களும் அந்த உண்மையை அறிவோம். ஆனால், தினமலர் சரியாக இயங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை வளர வேண்டும் என்று விரும்புகிறது. அதன் முயற்சி தான் பள்ளிகளில் தன்னாட்சியென்ற மேலான கருத்து. சுருக்கமாக, தெளிவான கல்விக்கொள்கை தரத்தை உயர்த்தும். இன்னும் நன்றாக இயங்கும் பள்ளிகளில் தரம் உறுதியாக நிலைத்திருக்கும். தரமற்ற பள்ளிகளின் நடுவே, தரமான பள்ளிகளைச் சுட்டிக் காட்டுவது அரசின் சமூகப் பொறுப்பு. அதன் வெளிப்பாடாகத்தான் அது வழங்கும் தன்னாட்சி. இது தான் தினமலரின் ஆழமான உணர்வு. சமூக நலன் பேணும் உண்மையான ஆர்வம்.

ஒன்றை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். சமூக நலன் பாதிக்கும் எந்தவொரு செயலுக்கும் தினமலர் துணை போகாது. அதே நேரத்தில் சமூகத்தின் அவலநிலை கண்டு, "எல்லாம் போய்விட்டது" என்று புழுங்கி இயலாமையால் செயலிழந்து விட மாட்டோம். குறைகளின் நடுவில் நிறைவைச் செய்யும் துணிவை இழக்க மாட்டோம். சாராயம் குடித்த, தேள் கொட்டு வாங்கிய குரங்குகளின் எண்ணிக்கை குறையத் தொடர்ந்து போராடுவோம். தாங்களும் இந்த தார்மீக எண்ணத்தை உணர்ந்து, சமூக மாற்றமெனும் தவத்திற்கு பங்களிக்க முன் வருவீர்கள் என்று நம்புகிறோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement