Advertisement

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே!

படுத்த அரை மணி நேரத்தில் துாங்கிவிடுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஆரோக்கியத் துாக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் இன்றைய தினம் இரவில் சரியாகத் துாக்கம் பிடிக்காமல் துன்பப்படுவோர்தான் அதிகம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் படுக்கையில் கிடக்கும் முதியவர்கள் வரை துாக்கமின்மைப் பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.

துாக்கத்தின் அவசியம் : பகலில் உழைத்த பிறகு இரவில் உடலும் மனமும் ஓய்வெடுத்துக்கொள்ளும் நிலைதான் துாக்கம். நாம் அன்றாடம் மேற்கொள்ளும் பணிகள் சீராக அமையவும் நம் ஆரோக்கியம் காக்கவும் நிறைவான துாக்கம் தினமும் தேவை. ஆழ்ந்த துாக்கம் நீண்ட ஆயுளைத் தரும். ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தது 6 மணி நேரம் துாங்க வேண்டும். அதிகபட்சமாக 8 மணி நேரம் துாங்கினால் நல்லது. பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தை களுக்கு, தினமும் 10 மணி நேரம் துாக்கம் தேவை. வளரிளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு, நாளுக்கு 9 மணி நேரத் துாக்கம் அவசியம். இதற்கு அதிகமாகத் துாங்கினாலும் ஆரோக்கியம் கெடும்; குறைவாகத் துாங்கினாலும் உடலில் பல பாதிப்புகள் உண்டாகும்.

துாக்கம் குறைந்தால் : ஓரிரு நாட்கள் துாக்கம் குறைவதை நம் உடல் ஈடுசெய்து
கொள்ளும். அப்படித் துாக்கம் குறைவது தொடர்கதையானால் பிரச்னைகள் ஆரம்பமாகும்.
வழக்கமான சுறுசுறுப்பு குறையும். கவனம் சிதறும். காரணம் இல்லாமல் எரிச்சல் வரும். கோபம் கொப்பளிக்கும். நிதானம் இழக்கும். பொறுமை பறிபோகும். பணியில் தவறுகள் அதிகமாகும். வழக்கமான பணிகளைச் செய்துமுடிக்க கூடுதல் நேரம் தேவைப்படும். பணித் திறன் குறையும். மறதி ஏற்படும். பசி குறையும். கண் எரிச்சல் தலைவலி உடல் அசதி வயிற்றில் எரிச்சல் குறுமயக்கம் போன்றவை அடிக்கடி தொல்லை தரும். உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற இன்னும் பல பிரச்னைகள் ஆளுக்குத் தகுந்தவாறு தோன்றும்.

துாக்கம் குறைவது ஏன் : மேற்கத்திய உணவுமுறை, பெரிதும் மாறிவிட்ட வாழ்க்கைமுறை, சிதைந்து வரும் உறவுமுறை போன்றவை துாக்கம் குறைவதற்கு அடித்தளமிடுகின்றன. இன்றைக்கு வளரும் பருவத்தினர் பெரும்பாலும் கொழுப்பும், எண்ணெயும் மிகுந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால், உணவு செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. செரிமானத்துக்காக வயிற்றுப்பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வது துாக்கத்தைத் தாமதப்படுத்தும்.நள்ளிரவு வரை 'டிவி' பார்ப்பது, யூடியூப்பில் படம் பார்ப்பது, வாட்ஸ்ஆப், முகநுால் போன்றவற்றில் கருத்துக்களைப் பதிவிடுவது என சமூக
வலைதளங்களில் நேரத்தைத் தொலைத்து விட்டு மிகவும் நேரம் கழித்துத் துாங்கச்
செல்வது பலருக்கும் வழக்கமாகிவருகிறது. இது உடலில் இயற்கையாக அமைந்து
இருக்கும் துாக்கச் சுழற்சியைப் பாதிக்கும். இதனால் துாக்கம் குறையும்.
குடும்பச்சுமை, பணிச்சுமை, மனக்கவலைகள், அடிக்கடி நெடுந்துாரம் பயணம் மேற்கொள்வது போன்றவை, துாக்கமின்மைக்கு அடுத்த காரணங்கள். வேலையின்மை, வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள், ஏமாற்றங்கள்,இழப்புகள் (பணமிழப்பு,நெருங்கிய உறவினர் இழப்பு) முதுமை, தனிமை போன்றவையும் துாக்கத்தைக் குறைப்பதில்முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நோய்களின் பங்கு : அடுத்து உடலில் ஏதாவது பிரச்னை இருப்பது நீடிக்குமானால் அப்போதும் துாக்கம் குறையும். முக்கியமாக நீரிழிவு, இருதய நோய், உயர் ரத்த அழுத்தம்,
ஆஸ்துமா, உடற்பருமன், செரிமானக் குறைபாடு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகப் பிரச்னை, புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய், ஒவ்வாமை, மூளை சார்ந்த நரம்புப் பிரச்னைகள், மூக்கடைப்பு, காரணம் தெரியாத தசைவலி ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
ஆழ்ந்த துாக்கத்துக்கு உடல் மட்டும் ஆரோக்கியமாக இருந்தால் போதாது; நம் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மன அழுத்தம், மனச்சிதைவு நோய், மனச்சோர்வு, மன எழுச்சி நோய், குற்ற உணர்ச்சி, பயம், பதற்றம் போன்றவை இருப்பவர்களுக்குத் துாக்கம்
குறைவது உறுதி.மது அருந்துவது, போதை மாத்திரைகள் சாப்பிடுவது, போதை ஊசிகள் போட்டுக் கொள்வது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களும், புது இடம், காற்றோட்டம் இல்லாத இடம், இரவு நேரப்பணி, பகல் துாக்கம் ஆகியவையும் துாக்கத்தை விரட்டும்.

ஆரோக்கியத் துாக்கம் எது : இரவில் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் துாங்குவதுதான் ஆரோக்கியத் துாக்கம். இரவு 9 மணி - காலை 6 மணி வரை அவரவர் விருப்பத்திற்கேற்ப துாங்கிக்கொள்ளலாம். இரவு 8 மணிக்குள் உணவை உண்டுவிட்டால் நல்லது. அப்போதே நிறைய தண்ணீர் குடித்துவிட வேண்டும். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.
சாப்பிட்டபின் சிறிது நேரம் உறவுகளுடன் பேசலாம். புத்தகம் படிக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். இசை கேட்கலாம். ஒன்றே ஒன்று மட்டும் கூடாது அது வாக்குவாதம். படுக்கச்
செல்வதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட்டுச் செல்ல வேண்டும். இப்படியான சூழலில் உறங்கச்
சென்றால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.துாக்கம் குறைவாக உள்ளவர்கள்உடனே துாக்க மாத்திரைகளைத் தேடிப்போகக்கூடாது. காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும். முறையான யோகாசனம் தியானம் செய்யலாம். இரவில் காரம், மசாலா,
புளிப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, எளிதில் செரிமானம் ஆகின்ற வகையில் ஆவியில் வேகவைத்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். காபி, தேநீர் அருந்த வேண்டாம். பதிலாக பால் குடிக்கலாம்; பழம் சாப்பிடலாம்.

எதிர்மறை எண்ணம் : ஆஸ்துமா, இருதயநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உடற்பருமன், மனநோய் போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 'எங்கே துாக்கம் வரப்போகிறது' எனும் எதிர்மறை எண்ணத்துக்கு 'டாட்டா' காட்டிவிட்டு 'எல்லாம் சரியாகிவிடும்' எனும் நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி
பார்த்துக்கொண்டோ, அலை பேசியை நோண்டிக் கொண்டோ துாங்கச் செல்லும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். மறுநாள் விடுமுறை என்றால் முதல்நாள் நடுநிசியைத் தாண்டி விழித்திருப்பது கூடாது.இரவு நேரப் பணியாலும், தொலைதுாரப் பயணத்தாலும் துாக்கம் குறைந்தவர்கள், மறுநாள் அதைச் சரிசெய்துவிட வேண்டும். முதியவர்கள் பகலில் துாங்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். கண்களை மூடும்போதே கவலை களையும் மூடினால் சுகமான துாக்கம் உறுதி.

சிகிச்சை உண்டா : துாக்கம் பிடிக்கவில்லை என்றால் சுயமாக மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிருங்கள். துாக்க மாத்திரைகளில் பல வகை உள்ளன. ஆளுக்கு ஆள் இதன் தேவை வேறுபடும். மருத்துவரிடம்கலந்து ஆலோசித்து அவரவர் தேவைக்கேற்ப, அளவறிந்து துாக்க மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.மாத்திரைகளைத் தேவையில்லாமல் சாப்பிடக்கூடாது. திடீரென்று நிறுத்தவும் கூடாது. அதேசமயத்தில் துாக்க மாத்திரைகளுக்கு அடிமையாகிவிடவும் கூடாது. மனவழி சிகிச்சை, எண்ணமாற்று சிகிச்சை, உடல் தளர்ச்சி சிகிச்சை, மனவசிய சிகிச்சை போன்ற மாற்று மருத்துவ சிகிச்சைகளை அவரவர் தேவைகேற்ப மருத்துவரின் ஆலோ
சனைப்படி மேற்கொண்டால், துாக்க மாத்திரைகளைக் குறைத்துக் கொள்ள முடியும்.

டாக்டர் கு. கணேசன்
மருத்துவ இதழியலாளர்
ராஜபாளையம்
gganesangmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Xavier - Muscat,ஓமன்

    தர்க்காலத்துக்கு மிகவும் உபயோகமான அறிவுரை.மிக்க நன்றி கணேசன் ஐயா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement