Advertisement

உள்ளாட்சியில் இல்லை உண்மையான ஜனநாயகம்!

தமிழக உள்ளாட்சி தேர்தல் விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தை தாண்டி, சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. நீதிபதிகளும் தங்களின் பொன்னான நேரத்தை, இந்த விவகாரத்தில் செலவிட்டு, தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகம் முறையாக இயங்க பாடுபடுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தால் தான், நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான், இதற்கு காரணம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில், நியாயமானவர்கள் போட்டியிடுகின்றனரா... நிர்வாகம் நியாயமாக நடைபெறுகிறதா?
சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும், உள்ளாட்சி அமைப்பில் பிரதிநிதித்துவம் மற்றும் அங்கீகாரம் இருக்கிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், உள்ளாட்சி தேர்தலில், வேட்புமனு தாக்கல் முதல், ஓட்டு சேகரிக்கும் வரை, வேட்பாளர்கள் செய்யும் செலவுகள் ஏராளம். பணம் இருப்பவர்கள் தான், தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை.
தேர்தல் கமிஷன் வரையறுத்துள்ள தொகையை காட்டிலும், பல மடங்கு செலவு செய்யப்படுகிறது. அதை கட்டுப்படுத்த, அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் பயனற்று போகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக, பெயரளவுக்கு தேர்தல் வழக்குகள் பதிவு செய்வதோடு, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள், அநேகமாக முடிந்து விடுகின்றன.
உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாளிலிருந்து, வேட்பாளர்கள் தங்கள் கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் பணம் செலவு செய்வதில், தாராளமாக இருக்கின்றனர். 'கவனிப்பு' இருந்தால் தான், வேட்பாளரை சுற்றி கூட்டம் கூடும். இல்லையேல், அவர் மட்டும் தான், தனியாக, கை கூப்பிய படி, வலம் வருவார்.
தெரிந்தோ, தெரியாமலோ, தமிழகத்தில் அரசியல்வாதிகள் அறிமுகப்படுத்திய இலவசங்கள், இன்று கட்சியினரிடையேயும், மக்களிடையேயும், தொடர்ந்து எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டன.
எந்த தேர்தல் வந்தாலும், நமக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு போட்டியிடுவோர், வேட்புமனு தாக்கல் அன்றே, பல லட்சங்களை, செலவு செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.
ஆளுங்கட்சி வேட்பாளர், 100 பேரை தன்னுடன் அழைத்து வந்தால், எதிர்க்கட்சி வேட்பாளர் அதற்கும் அதிகமானோரை, அழைத்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
சுயேச்சை வேட்பாளர்களும், கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக ஆட்களை களமிறக்கி, வேட்புமனு தாக்கல் செய்வதுடன், செலவுகளும் குறைவில்லாமல் செய்கின்றனர்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து, துவங்கும் செலவினங்கள், ஓட்டுப்பதிவு செய்யும் நாள் வரை தொடர்கின்றன. உள்ளாட்சி தேர்தல் காலத்தில், கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களிலும், பணப்புழக்கம் செழிப்பாக இருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தில் தினமும், 100 பேருக்கு மேல் சாப்பாடு, செலவுக்கு பணம், வாகனங்கள் வாடகை, முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு, 'கவனிப்பு' மற்றும் வாக்காளர்களுக்கு, வேட்பாளர்களின் வசதிக்கு தகுந்தபடி கவனிப்பு.
இப்படி, உள்ளாட்சி பிரதிநிதிகளாக போட்டியிடுவோர், பணத்தை தாராளமாக வாரி இறைத்தால் தான், வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
படித்தவர், நேர்மையானவர், உண்மையாக மக்களுக்கு தொண்டு செய்பவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, மக்களிடம் ஆதரவு கேட்டாலும், மக்கள், அவரை தேர்ந்தெடுக்க முன்வருவதில்லை.
ஆனால், நீதிமன்றங்களில், இந்த வழக்கு தொடர்பான வாதங்களின் போது, 'உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், சமூக நீதி, அனைத்து பிரிவினர் வளர்ச்சி தடைபட்டுள்ளது' என, வாதிடப்படுகிறது.
உண்மையில் பார்த்தால், உள்ளாட்சி தேர்தலில், ஜாதி, கட்சி, பணம் ஆகிய மூன்றையும் பார்த்து தான், வேட்பாளர்களை தேர்வு செய்யும் நிலை இருக்கிறது.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள், ௯௦ சதவீதம் பேர், மக்கள் பணிக்காக போட்டியிடுவதில்லை. கவுரவத்திற்காக, வளர்ச்சி திட்ட நிதிகள் மூலம் கிடைக்கும், 'கமிஷன்' மற்றும், 'கான்ட்ராக்ட்' போன்றவற்றை பெறுவதற்காக மட்டுமே போட்டியிடுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் வெற்றி பெற்ற பின், தாங்கள் செய்த செலவுகளை ஈடுகட்ட, மீண்டும் எப்படியாவது சம்பாதிக்கவே நினைக்கின்றனர்.
மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்கி உள்ளோம் என, அவர்கள் சொன்னாலும், அதில் குறைந்தபட்சம், ௧௦ - ௧௫ சதவீதம் வரை லாபம் அடைந்திருப்பர்.
ஆனால், இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சில நாட்களுக்கு முன் நடந்த வாதத்தின் போது கூட, 'உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர்கள் இல்லாததால், வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமல், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்மையில், உள்ளாட்சி துறையில் நடக்கும் ஊழல்கள், மற்ற துறைகளை காட்டிலும் அதிகம். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இணைந்தே இதில் ஈடுபடுகின்றனர். எந்த ஒரு, 'டெண்டர்' விட்டாலும், அதை எடுக்கும் கான்ட்ராக்டர், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கமிஷனை தந்தே ஆக வேண்டும்.
இந்த முறைகேடுகள் இன்று, நேற்றல்ல; தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளில் மாறி மாறி நடைபெற்றவாறு தான் உள்ளது.
இனி, எந்த ஆட்சி வந்தாலும் இதை ஒழிக்கவும் முடியாது. இந்த துறையில் ஊழல், வேரூன்றி மரமாக வளர்ந்து நிற்கிறது. மேலும், உள்ளாட்சி தேர்தல்களால், கிராமங்களில் மக்கள், பல பிரிவாக பிரியவும் நேரிடுகிறது. ஒருவருக்கு ஆதரவு தந்தால், இன்னொருவர் பகைத்து கொள்வார்.
தங்கள் வேட்பாளர் வெற்றி பெற முடியாமல் போய், எதிரணி வேட்பாளர் வெற்றி பெற்றால், பழி வாங்கப்படும் நிலையும் உள்ளது.
வெற்றி பெற்றவர், தங்களுக்கு ஓட்டளிக்காத மக்களை கண்டு கொள்வதில்லை. அவர்கள் வசிக்கும் பகுதிகளில், எந்த வளர்ச்சி பணியையும் மேற்கொள்வதில்லை.
அடுத்த தேர்தல் வரை, தங்களுக்கு ஓட்டளிக்காத மக்களை எதிரிகளாகவே நினைத்து, புறக்கணித்து விடுகின்றனர். அந்த குடும்பங்களில் நல்லது, கெட்டதுக்கு கூட, வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் செல்வதில்லை; புறக்கணிக்கின்றனர்.
ஒன்றுபட்டிருந்த கிராமங்கள், உள்ளாட்சி தேர்தல் பகை காரணமாக, பல அணிகளாக பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில கிராமங்களில், உள்ளாட்சி தேர்தல் பகைமை, ஜென்ம பகையாகவும் மாறி விடுகிறது.
அது போல, 'ஊராட்சி மன்றங்களில், தலைவர் வைப்பது தான் சட்டம்; ஊராட்சி செயலர் செய்வது தான் திட்டம்' என்ற நிலை உள்ளது. எந்த ஊராட்சி மன்றத்திலும், உறுப்பினர்களை அழைத்து கூட்டம் நடத்தும் முறை, பெரும்பாலும் இல்லை.
தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்கும் நாளில், ஊராட்சி மன்றத்திற்கு அழைக்கப்படும் உறுப்பினர்கள், அதன்பின் கண்டு கொள்ளப்படுவதில்லை. ஊராட்சி மன்றங்களின் கூட்டங்கள் நடைபெறுவதாக, நிகழ்ச்சி நிரல் பதிவு செய்யப்படுகிறது.
அதில், உறுப்பினர்களின் கையொப்பத்தை பெறுவதோடு சரி... தீர்மானங்கள் என்ன, எதற்காக நிறைவேற்றினர் என்பது, பெரும்பாலான உறுப்பினர்களுக்கு தெரியாது.
அது போல, ஊராட்சி மன்ற கூட்டங்களுக்கு, தலைவரும், ஊராட்சி செயலரும், தங்களுக்கு முடியும் நேரத்தில் தான் வருவர்; அலுவல் நேரம் எதுவும் கிடையாது.
ஊராட்சி மன்ற வரி செலுத்தவோ, சான்றிதழ் பெறவோ, மக்கள் விரும்பினால், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களின் வீடுகளுக்கு சென்று தான் பார்க்க வேண்டும்.
அதுவும், சில நேரம் இருக்க மாட்டார்கள். அதற்காக, இன்னொரு நாளும் அலைய வேண்டும். மக்களை தேடி வர வேண்டிய ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி செயலர்களும், தங்கள், 'வேலைகளில்' மும்முரமாக இருப்பர்.
தங்களுக்கு எதிராக ஓட்டளித்த மக்களுக்கு, எதையும் செய்வதில்லை; அவர்களை மதிப்பதும் இல்லை.
'கிராமங்களில் இருந்து ஜனநாயகம் துவங்குகிறது' என, தேச தந்தை மஹாத்மா காந்தி கூறினார். ஆனால், கிராமங்களில் இருந்து தான் சர்வாதிகாரம் துவங்குகிறது என்ற நிலை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களால் ஏற்பட்டு விட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நேர்மையாகவும், நடுநிலையாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட வேண்டும். மாறாக, மக்கள் விரோதப் போக்குடன் செயல்படுவது தான் நடைமுறையாக உள்ளது.
பல சட்ட போராட்டங்களை சந்தித்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவு வரை, அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் நிலைமை, பிரசவ வலி போல இருக்கிறது.
ஆனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தங்கள் ஜனநாயக கடமைகளை மறந்து விடுவர். சமுதாயத்தின் கீழ் மட்டத்திலேயே, அனைத்து முறைகேடுகளும் துவங்க வழிவகை கண்டு விடுவர்.எனவே, உண்மையான ஜனநாயகம், தமிழக கிராமங்களை எட்ட வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை!
இ - மெயில்:srtpadmanathan9gmail.com - ஆர்.பத்மநாதன் -சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • uma - coimbatore,இந்தியா

    It is very True.

  • Dharmadhinakaran - இட க்கழிநாடு ,இந்தியா

    இக் கட்டுரையில், கட்டுரையாளர் அவர்கள் உண்மையானஜனநாயகம், தமிழக கிராமங்களை எட்ட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை என வேதனையோ டு தெரிவித்துள்ளார். உண்மைதான் இருந்தாலும், பாழ்பட்ட அரசியலை, பண்படுத்த முதலில் அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும். தவறான மனிதர்களை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக் கூடாது. பிறகு நிறுத்தும் போது ஆய்வு செய்யாமல், பணம் சார்ந்து வேட்பாளரை நிறுத்துவது , வெற்றி பெற்ற பிறகு அவரை வேவு பார்க்க வேண்டும். தவறிழைத்தால் ஆய்வு செய்து பதவிறக்கம் செய்ய வேண்டும். பின் எந்தக் கட்சியும், அவருக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது. அரசியல் தூய்மை பெறாமல் இந்த தேசம் தூய்மை பெறாது என்பது தான் எனது ஆழமான, திடமான கருத்து.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement