Advertisement

உடலின் வடிவமே இசையின் வடிவம்

இசை என்ற சொல்லிற்கு இசைவிப்பது, வசப்படுவது என்பது பொருள். கேட்பவர்களை இசைய வைப்பதால் இசை என்றாயிற்று எனவும் கூறலாம்.இசையானது, அசையாத கல் போன்ற மனங்களையும் கரைய வைக்கும் வியத்தகு அற்புதம் உடையது என்றும், கற்றலின் கேட்டலே நன்று என்ற அடிப்படையில் எந்த முனைப்புமின்றி காதுகள் வழியே மனித மூளையில் விந்தை செய்விப்பது என்றும் அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். வானத்தின் இடியோசை. கடலின் அலையோசை. இருதய துடிப்போசை, மரங்களின் அசைவோசை, மிருகங்களின் காலடியோசை, வண்டுகளின் ரீங்காரம், மூச்சுக்காற்றின் சப்தம், கைத்தட்டல் ஓசை, வண்டு துளைத்த மூங்கில், வீசூம் தென்றல், துணையோடு எழுப்பிய ஓசை போன்றவை ஆதி மனிதனின் தாள உணர்வையும், ஸ்ருதி மற்றும் இசை உணர்வை துாண்டியவைகளாக இருந்திருக்க வேண்டும்.
இவ்விதம், இயற்கையோடு இசைந்த நாதமானது, இயற்கையின் அங்கமான உடலோடும் இசைவாகிறது. எனவேதான், உடலின் அங்கங்களை ஒத்து இசையின் வடிவம் அமைய பெற்றுள்ளன என்றால் மிகையானது.ஸ்ருதியும், தாளமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதுபோல மனித உடலானது சுவாச காற்றை உள்ஏற்றி குருதியினை சூடேற்றி ஸ்ருதியாகிய நாதத்தை வெளியே அனுப்புகிறது. அவைதான் ஏழு ஸ்வரங்களாக பிறக்கிறது. தாளம் என்ற அம்சம் மனித உடம்பின் நாடித்துடிப்பு. இதய துடிப்பில் வரும் சப்தம்தான். தாளம் என்ற ஓர் அம்சத்தில் ஐந்து வகையான ஜாதி பிரிவுகள் உள்ளன. அவை சதுஸ்ரம், திஸ்ரம், கண்டம், மிஸ்ரம், ஸங்கீர்ணம் முறையே 4,3,5,7,9 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் நமது முன்னோர்கள் செய்து வைத்துள்ளனர். மேற்கண்ட ஏழு ஸ்வரங்களின் மூலம் கிடைத்த இசையையும், தாளத்தின் மூலம் கிடைத்த ஐந்து வகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைத்து கூட்டியும், பெருக்கியும் பார்க்கையில் மனித உடம்பின் அங்கங்களும், அசைவுகளுமே இசை வடிவமாக அமைக்கப்
பட்டுள்ளதோ என்ற வியப்பில் ஆழ்த்துகிறது.சதுஸ்ரம் - 4 எண்ணிக்கை 'தகதிமி - தகஜனு' என்ற
சொல்லப்படும் 4 லய சொற்கள் நமது உடம்பின் கைகள் இரண்டு, கால்கள் இரண்டு என்ற உறுப்புகளை வலியுறுத்துகின்றனவோ என்று எண்ணத்தோன்றுகிறது. மனிதனுக்குரிய பற்கள் 32 ஆகும். சதுஸ்ர 4 எண்ணிக்கையை 8 ஆல் பெருக்கினால் 32.திஸ்ரம் - 3 எண்ணிக்கை
முகத்தில் உள்ள வலக்கண், இடக்கண், ஞானக்கண் என்ற முக்கண்களும் திஸ்ரம் என்று மூன்று எழுத்துகளாகிய 'தகிட' என்ற லய சொற்களை நினைவூட்டும் வண்ணமாய் அமைய பெற்றுள்ளது. அதுமட்டுமா, நம் உடம்பின் முதுகெலும்பில் உள்ள சிறு சிறு குருத்தெலும்புகள் 24 ஆகும். அதேபோல்தான வீணையில் 24 மெட்டுகளை அமைத்து 16ம் நுாற்றாண்டு முதல் கையாளப்பட்டு வருகின்றது.

சதுஸ்ரம் 8 x திஸ்ரம் 3 = 24.கண்டம் - 5 எண்ணிக்கை : என்னவொரு ஆச்சரியம் பாருங்கள். நம் உடம்பின் கை, கால் விரல்கள் ஐந்தைந்தாக அமைந்திருக்கின்றது. மேலும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் உண்டு. அதுமட்டுமா, மனிதனின் உடம்பில் ஏ, பி. சி, டி, இ என்ற ஐவகை உயிர்சத்துகள் உள்ளன.மனித உடலில் பஞ்ச பூதங்களின் கனஅளவு என்னவென்றால் பிருதிவி (மண்) கால் பங்கு, அப்பு (நீர்) அரை பங்கு, தேயு(நெருப்பு) ஒரு பங்கு, வாயு(காற்று) முக்கால் பங்கு, ஆகாயம் அரை பங்குமாக, ஆக மொத்தம் பஞ்ச பூதங்களும் அமைய பெற்றுள்ளது.மேலும், ஒரு நோயற்ற மனிதன் ஒருநாளில் 21,600 முறை சுவாசிப்பதாக வேதம் கூறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 900 முறையும், ஒரு நிமிடத்திற்கு 15 முறையும் சுவாசிக்கிறான்.ஒரு முறை சுவாசிக்க 4 வினாடிகள் ஆகின்றன. இதற்குள்
கைநாடியானது 5 முறை துடிக்கின்றது. இங்கும் 5 என்பதன் முக்கியம் உயிர் சுவாசத்திலும் இருக்கின்றது. இதை பிரதிபலிக்கும் வண்ணமாக தான் இசையில் கண்டம் எனப்படும் 5 எண்ணிக்கை கொண்ட வகையினை 'தகதகிட' எனும் லய சொற்களால் அமைந்திருப்பது நமக்கு புலப்படுகின்றது.

மிஸ்ரம் - 7 எண்ணிக்கை : மனிதனின் ஜென்மங்கள் ஏழு உண்டு என்று நம் பாரம்பரியமும், புராண கால செய்திகளும் நமக்கு அறிவுறுத்துகின்றன. அதேபோல் மனிதனாலும், இறைவனின் திருவருளாலும் ஆக்கப்பட்ட இசையில் 'ஸ ரி க ம ப த நி' என்ற ஏழு ஸ்வரங்கள் அடிப்படையாக அமைந்துள்ளது சிறப்பு.உலகில் மனிதர்கள் 7 பேர், ஒரே மாதிரியாக இருப்பார்கள்
என்பது உலகியல் உண்மையாக பேசப்படுகிறது.இதன் அடிப்படையில் தான் என்னவோ 7 ஸ்வரங்கள், வீணையின் தந்திகள் 7, மிருதங்கத்தின் அடிப்படை முக்கிய சொற்கள் 7. ஏழு வகை தாளங்கள் என இசையில் அமையப்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
ஸ்ங்கீர்ணம் - 9 எண்ணிக்கை நலவித பக்தி, நவதிருப்பதி, நவராத்திரி, நவகிரகங்கள்,
நவதானியங்கள், நவமணிகள், நவபாஷாணம், நவகோணங்கள் என்று 'நவம்' என்ற ஒன்பதாம் இலக்கிற்கு பல முக்கிய அம்சம் உண்டு. நம் உடலில் உள்ள நவவாயில்கள் கண் 2, காது 2, மூக்கு துவாரம் 2, வாய் 1, குதம் 1, குய்யம் 1 என்றவாறு அமைந்துள்ளது.லயத்திலும் ஸ்ங்கீர்ணம் என்ற ஜாதி வகைக்கு 9 என்ற எண்ணிக்கையை அமைத்துள்ளனர். 'தகதிமிதகதகிட' என்ற ஒன்பது சொற்கள். நமது உடலின் வெப்பம் 36 டிகிரி பாரன்ஹீட்டாக இருப்பது யாவரும் அறிந்ததே.
லயத்தில் சதுஸ்ரம் 4 x ஸங்கீர்ணம் 9 = 36 என்ற ஓர் ஒப்புமையை நாம் இங்கு காண முடிகிறது. மேலும் ஒரு நிமிடத்திற்கு மனிதனின் நாடி 72 முறை துடிக்கிறது. லயத்தில் சதுஸ்ரம் 8 x ஸ்ங்கீர்ணம் 9 = 72 என்ற ஒரு அற்புதமான பொருத்தமும் நமக்கு கிடைக்கிறது.
கண்ணபிரான் கையில் புல்லாங்குழல் இருப்பதன் காரணம் என்னவென்று சின்மயா மகிரிஷி கூறிய விளக்கத்தை என் தந்தை வழியாக நான் கேட்டு தெளிவுற்றேன். குழலில் நவத்துவாரங்கள் உள்ளன. அதில் இருந்து வரும் காற்று நவத்துவாரங்கள் வழியாக மிக அற்புதமான ஸ்வர ஸ்தானத்தையும், நுண்ணிய ஸ்ருதி பேதங்களையும் வெளிப்படுத்தி நம்மை சிறந்த ஒரு இசையில் சொக்க வைக்கின்றன.அதுபோல் நம் உடலானது குழல் போல் நவத்துவாரங்ளையும் கொண்டுள்ளது.இசை என்பது மனம் சார்ந்த ஒன்றாகும். மன அமைதிக்கும், தெளிவான சிந்தனைக்கும் இது வழிவகுக்கிறது. இசைக்கலையை கற்பதன்மூலம் மன அமைதி பெற்று, தீய குணங்கள் நீங்கி நற்சிந்தனைகள் தோன்ற வழிவகுக்கும். வாத்தியங்கள் இசைத்தல் மூலம் பெருமளவில் செயல் இழந்த கைகள், சிறிய அளவில் நுண்ணிய அசைவுகள் குன்றிய விரல்கள் போன்றவை குணமடைகின்றன.

இசையால் நன்மைகள் : வாத்தியக்குழுவில் இசைக்க வைப்பதன் மூலம் குணநலன் பாதிப்புள்ள ஒருவர், சுயக்கட்டுப்பாடு, பிறருடன் ஒத்துழைக்கும் தன்மை போன்றவற்றை பெற முடியும். ஒரு இசைக்கோர்வையை கற்று வாசித்தல் எனும்போது அது இசைத்திறன், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு போன்ற குணங்களை பெற உதவுகிறது. லயத்திற்கே உடல் அசைவுகள், மூட்டு அசைவுகள், மூச்சு இயங்குகின்ற முறை, தசைகளின் இறுக்கத்தை அகற்றுதல் போன்றவற்றிக்கு பயன்படுகிறது.மேலும் பாடல்கள் வாயிலாக பேச்சுத்திறன் குறைவாக உள்ளவர்கள் தங்களின் நாவின் நலத்தையும், பலத்தையும், பெறுவதற்கும், மூச்சு பயிற்சி கிடைப்பதற்கும் வழி செய்கிறது. காற்று கருவிகளை வாசிப்பதன்மூலம், மூச்சு உள்வாங்கும் திறன் அதிகரித்து சுவாசக்கோளாறுகள் நீங்கி நல்ல முறையில் ரத்த ஓட்டம் நடைபெற உதவுகிறது.
மனம் ஒன்றுபடும்போது, கருவிகளை வாசிக்கும்போதும், மனம் பக்குவப்பட்டு ஒருவித ஆழ்ந்த இன்பத்தை இசை கொடுக்கும். யோகம் மற்றும் தியானத்தில் நிலைத்து நிற்பதற்கு இது சமமாகும். பொதுவாக, ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், ஞாபக சக்தியை அதிகரித்தல், நீண்ட ஆயுளை தருதல், சோர்வை போக்கி சுறுசுறுப்பை உண்டாக்குதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், மனதை நல்வழிப்படுத்துதல், முகத்தில் 'தேஜஸை' உண்டாக்குதல், சுவாச உறுப்புகள், நரம்புகள், தசைகள், சுரப்பிகள் என எல்லாவற்றிக்கும் புத்துயிர் அளித்து முக வசீகரத்தை கொடுத்தல், சீரான ரத்தஓட்டத்திற்கு வழிசெய்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல் போன்ற பலவித பலன்களுக்கு இசைக்கலையே உறுதுணையாக திகழ்கின்றன.'ஸ்ருதி மாதா லய பிதா' என்ற சங்கீத சொற்றொடர் ஸ்ருதிக்காகவும், தாளம் என்ற லயத்திற்காகவும் தாயையும், தந்தையையும் இணைத்து ஒப்புமை பாராட்டும் ஒரே கலை இசைக்கலை தான்!.

- முனைவர் கே. தியாகராஜன்
இணை பேராசிரியர், ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லுாரி
மதுரை. 98430 76582

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement