Advertisement

'விவசாய தேவதைகள்' தேனீக்கள்

தேனீக்கள் சுறுசுறுப்பிலும், சமுதாயவாழ்வு முறையிலும் மனிதனுக்கு ஈடாக திகழும். தேனீ வளர்ப்பு, விவசாயம் சார்ந்த வருவாய் தரும் சுய தொழில். இதன் மூலம் நேரடி, மறைமுக நன்மை உண்டு. தேனீ வளர்ப்பதால் தேன், மெழுகு,மகரந்தம், அரசக்கூழ், தேன் பிசின், தேன் விஷம், தேனீ குடும்பங்கள் கிடைக்கும். அயல் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்க உதவுவதால், 'விவசாய தேவதைகள்' என தேனீக்களை அழைக்கிறோம். இந்தியாவில் 5 வகை தேனீக்கள் உண்டு.

மலை தேனீக்கள் : தெற்கு, தென்கிழக்கு ஆசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் அதிகம் காணப்படும். உருவில் பெரியது. உயர்ந்த மரக்கிளை, பாறை விளிம்பு, அணைக்கட்டு, பெரியகட்டடத்தில் 150 செ.மீ., அகலம், 70 செ.மீ., நீளத்திற்கு ஒற்றை அடையில் கட்டும். தரையிலிருந்து 2,700 மீட்டர் உயரத்தில் கூடு அமைக்கும். அடையின்மேல் பகுதி தேன் சேமிக்கவும், கீழ் பகுதி புழுக்கள் வளரவும் பயன்படும். ஒரு கூட்டில் ஒரு லட்சம் வேலைக்கார தேனீக்கள் திரைச்சீலை போன்று தொங்கும். இதன் கொடுக்கு 3 மி.மீ., நீளம், நம் ஆடை, விலங்குகளின் ரோமத்தை துளையிடும். தொந்தரவு செய்தால், அதிக துாரம் விரட்டி கொட்டும். இரவில் உணவு தேடும் ஆற்றல் பெற்றவை. அதிக தேன் சேகரிப்பதோடு பயிரில் அதிக அயல் மகரந்த சேர்க்கை நடக்க உதவும். ஆண்டுக்கு ஒரு கூட்டில் 37 கிலோ தேன் கிடைக்கும். சந்தையில் இந்தவகை தேனுக்கு வரவேற்பு உண்டு.

கொம்புத் தேனீ : விலங்கியல் நிபுணர் 'ஜான்கிறிஸ்டின்பெப்ரிசியசால்' 1987 ல் கண்டறிந்த 'ஏபிஸ்ப்ளோரியா' இனம். தென்கிழக்காசிய நாடுகளில் அதிகம் வளரும். சிறு தேனீ என அழைப்பர். சமவெளி பகுதியில் காணப்படும். கடல்மட்டத்தில் இருந்து 450 மீட்டர் உயரத்தில் காணப்படும். மரக்கிளை, புதர், திறந்த வெளியில் கூடு கட்டும். ஆண் தேனீ வளர்ப்பு அறைகள், பணி தேனீக்களின் அறைகளை விட 1.5 மடங்கு பெரிது. ராணி தேனீ வளர்ப்பு அறைகள் அடையின் நடு, கீழ் பகுதியில் நடக்கும். ஆண் தேனீ வளர்ப்பு அறை, பணித்தேனீ வளர்ப்பு அறைகள் அடையின் கீழ் விளிம்பில், ஒழுங்கற்ற வடிவில் இனப்பெருக்க காலத்தில் அமைந்திருக்கும். அதிக தொந்தரவு செய்தால் மட்டுமே கொட்டும். இதன் தேன் நீர்த்து, சுவை அதிகமாக இருக்கும். அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவும். கொசுத்தேனீக்கள் , உருவில் மிகச்சிறிய கருப்பு நிறத்தில் இருக்கும். கொட்டாத தேனீ இனத்தை சேர்ந்தது. மரப்பொந்துகள், பாறை மற்றும் சுவர் இடுக்கில் வாழும். இந்திய தேனீக்களுக்கு அடுக்கு, பொந்து, புற்று தேனீ என பெயர் உண்டு. மரப்பொந்து, கிணற்றுசுவர், பானைகளில் கூடுகட்டும். மலை, சமவெளியில் அதிகம் இருக்கும். சாந்த குணம் படைத்த, நாட்டுத்தேனீ இனமாக இருப்பதால், இயற்கையோடு இயைந்து வாழும். வயல்வெளி தேனீக்கள் மணிக்கு 25 கி.மீ., துாரம் பறக்கும். ஆண்டுக்கு 5 கிலோ தேன் எடுக்கலாம். நாள் ஒன்றுக்கு ராணி தேனீ 600 முட்டையிடும். தேன் பிசினை சேகரிக்காது. இத்தாலிய தேனீ 1962 ம் ஆண்டு பஞ்சாபில் அறிமுகமானது. ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பீகாரில் அதிகம் வளரும். இவை அளவில் சிறிது. காலை 11 முதல் ஒரு மணி வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு, தேன் சேகரிக்கும். உணவு தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் கூடுகளை விட்டு செல்லாது. அந்நேரத்தில் சர்க்கரை பாகு கொடுத்து அவற்றை பராமரிக்கலாம்.ராணி தேனீக்கள் நாள் ஒன்றுக்கு 1,800 முட்டையிடும். ஒரு கூட்டத்தில் 60 ஆயிரம் தேனீக்கள் இருக்கும். ஆண்டுக்கு கூட்டில் 25 முதல் 30 கிலோ தேன் எடுக்கலாம். அரசப்பசை, மகரந்தம், தேன் பிசினை வணிக ரீதியில் உற்பத்தி செய்யும். அதிக வருவாய் தரும் இவற்றை வளர்க்க, அதிக முதலீடு, பராமரிப்பு அவசியம். இவ்வகை தேனீக்கள் 5 கிலோ மீட்டர் வரை சென்று தேன் மற்றும் மகரந்தத்தை சேகரிக்கும். சுறுசுறுப்பாக பறக்காததால், பறவைகள் எளிதில் சாப்பிட்டு, வளர்ப்போருக்கு நஷ்டம் ஏற்படுத்தும்.

பெண்களுக்கான சிறுதொழில் : தேனீக்களை வீட்டின் அருகிலேயே வைத்து பராமரிக்கலாம். இவற்றை பெண்கள் லாபகரமான சிறுதொழிலாக வளர்த்து பொருளாதாரத்தை உயர்த்தலாம். வீட்டு தேனீக்கள் வயிற்றின் அடியில் உள்ள மெழுகு சுரப்பியில் உற்பத்தியாகும் மெழுகை கொண்டு தேன் அடைகளை கட்டும். அடை அறைகளில் தேன் மற்றும் மகரந்த சேமிப்பு, புழு வளர்ப்பு நடக்கும். ஒரே கூட்டில் ஒரு ராணி தேனீ, சில நுாறு ஆண் தேனீக்கள், பல்லாயிரக்கணக்கான பணி தேனீக்கள் இருப்பதால், இவை ஒரே சமுதாயமாக வாழ்வதாக கூறலாம்.

தேனீ வளர்ப்பால் பயன் : குகைவாழ் மனிதர்கள் சாப்பிட்ட உணவு தேன். இந்தியாவில் 500 பூக்கும் தாவரங்கள் தேனீக்களுக்கு உணவு தருகின்றன.கடுகு தேன், யூகலிப்டஸ், லிச்சிதேன், சூரியகாந்தி, புங்கம், பல பூச்சிகளில் இருந்து கிடைக்கும் தேன், இமாலய தேன், அகேசியா தேன், காட்டுத்தேன், ஒரு பூக்களில் இருந்து கிடைக்கும் தேன் என இந்தியாவில் பல வகை தேன்கள் உள்ளன.

தேன் உற்பத்தி : உலக நாடுகளில் சீனாவில் தான் அதிகளவு தேன் உற்பத்தியாகிறது. இதற்கு அடுத்து துருக்கி, அர்ஜென்டினா, உக்ரைன், ரஷ்யாவில் உற்பத்தியாகும். வடகிழக்கு இந்தியா மற்றும் மகாராஷ்டிராவில் இயற்கையிலேயே அதிக தேன் கிடைக்கிறது. கடந்த ஆண்டு ரூ.705.87 கோடி மதிப்பிலான 3 லட்சத்து 81 ஆயிரத்து 777 டன் தேன் அமெரிக்கா, சவுதி அரேபியா, மொராக்கோ, வங்கதேச நாடுகளுக்கு ஏற்றுமதியானது.

தேனின் பயன்கள் : குழந்தை, கர்ப்பிணி, பாலுாட்டும் தாய்மார், முதியவர், விளையாட்டு வீரர், நோயுற்றவர்களுக்கு ஏற்ற உணவு. எளிதில் ஜீரணமாகி உரிய சக்தியை தந்து சத்து பற்றாக்குறையை தவிர்க்கும். பாலுடன் சேர்த்து அருந்தினால் முழு உணவாக சேரும். நீரில் தேன் கலந்து அருந்தினால் தாகம் தணியும். எலுமிச்சை சாறும், தேனும் கலந்த பானம் கோடைக்கு ஏற்றது. பால், டீ, காப்பியுடன் சேர்த்து அருந்துவது நல்லது. கல்லீரலின் செயல்பாட்டை துாண்டும். கல்லீரலில் இருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும். இரைப்பை, குடல், நாக்கு புண்களை குணப்படுத்தும். இதயத்தை வலிமைபடுத்த, ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பழங்களை பதப்படுத்தவும், மது தயாரிக்கவும் பயன்படும்.

தேனீக்களின் பால் : அரசக்கூழ், அரசப்பசை என அழைக்கப்படும். 6 முதல் 13 வயதிற்குட்பட்ட பணி தேனீக்கள் இப்பாலை சுரக்கும். ராணீ தேனீக்கு ஆயுட்காலம் முழுவதும் ஊட்டச்சத்து மிகுந்த அரசக்கூழ் உணவாக தரப்படுகிறது. இதில், நீர், புரதம், கொழுப்பு, தாது உப்பு, வைட்டமின் 'பி', அமினோ அமிலம் உள்ளது. தேன் பிசினை தேனீக்கள் மொட்டுமரப்பட்டையில் இருந்து சேகரிக்கும். இதில் வயல்வெளி தேனீக்கள் மட்டுமே ஈடுபடும். கொம்பு தேனீக்கள் பிசினை அதிகம் சேகரிக்கும். பல நோய்களை உண்டாக்கும் பூசணம், பாக்டீரியா, வைரஸ்களை எளிதில் கொல்லும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். புண், காயங்களை தழும்பின்றி ஆற்றும்.

தேனீ விஷம் : பணித் தேனீயின் விஷப்பை, 0.3 மில்லி கிராம் விஷத்தை சேகரிக்கும். இவை ரத்த சிவப்பு அணுக்களை சிதைவடைய செய்யும். கொட்டப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்படுத்தும். கொட்டிய தேனீ அப்படியே கொடுக்கு, அதனை சார்ந்த உறுப்புகளை மீண்டும் எடுக்க முடியாமல் விட்டு செல்லும். தேனீயின் விஷம், மூட்டு வலி, தசைப்பிடிப்பு, முடக்கு வாதத்திற்கு சிறந்த மருந்து. நோயாளியின் உடலில் 3 தேனீக்களை, 3 வாரங்களுக்கு கொட்ட செய்வதின் மூலம் இச்சிகிச்சை அளிக்கலாம். தேனீ கொட்டுவதால் பிற விஷப்பூச்சிகள் கொட்டினாலும் அந்த விஷத்தால் பாதிப்பு இல்லை. இதன் விஷம் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தும். களிம்புகளாக பயன்படுத்தப்படும். தேன் மெழுகு, வெண்மையாக இருக்கும். அத்துடன் மகரந்தம் அல்லது தேன்பிசின் சேரும் போது, மஞ்சள் நிறமாகும்.

மகசூலில் தேனீக்களின் பங்கு : அயல்மகரந்த சேர்க்கை மூலம் பயிர் மகசூலை கூட்டுவதில் தேனீக்களின் பங்கு அதிகம். உணவிற்காக பூக்களை தேடி வரும்போது, உடம்பில் மகரந்தப்பொடி ஒட்டும். பின்னர் தேனீக்கள் பிற மலர்களுக்கு உணவு தேடி செல்லும் போது, மகரந்த துாள் சூல்முடியை சென்றடைவதின் மூலம் பயிரில் அயல்மகரந்த சேர்க்கை நடக்கும்.நம் பொருளாதாரத்தை உயர்த்த பயன்படும் தேனீ வளர்ப்பு தொழிலை மேற்கொண்டு, விவசாயம் காப்போம்.

- கே.சுரேஷ்
உதவி பேராசிரியர்
அரசு வேளாண்மை கல்லுாரி
மதுரை. suresh.ktnau.ac.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement