Advertisement

நிற்க அதற்குத் தக!

'கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'

இது அனைவரின் வாழ்வோடும் தொடர்புடைய ஒரு குறளாகும். நம்முடைய வாழ்க்கை பல்வேறு புறத்துாண்டல்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. உண்மையில் நாம் கற்ற கல்வியும் அனுபவமும் நம்முடைய வளர்ச்சியை இன்னும் நெட்டித் தள்ளுகிறது. இந்த உலகம் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை தொடர்ச்சியாக நன்மையும் தீமையும் கலந்தே பயணிக்கிறது.
நம்முடைய வளர்ச்சி எல்லாம் நன்மையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். இன்னமும் நம்முடைய எண்ணத்தில் எதிர்மறையான விஷயங்கள் எல்லாம் எளிதாக பதிந்துவிடுகிறது. நேர்மறைகள் அத்தனை எளிதாக பதிவதும் இல்லை.

'பூக்கள் மலர்வது யாருக்கும்
தெரிவதில்லை;
வெடிகுண்டுகள் சத்தமே
எல்லோருக்கும் கேட்கும்'

எங்கோ எப்போதோ படித்த வரிகள். இதுவே நடைமுறையில் உண்மையும் கூட. ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள் எல்லாம் நமக்கும் நம்மைத் தொடர்பவர்களுக்கும் வழிகாட்டுவதாக அமைகிறது.

நல்ல மனம் : உண்மையில் நம்முள் இருக்கும் நல்ல மனமே நம்மை சிறந்த முறையில் வழிநடத்தும். ஆக்கம் எப்போதும் அமைதியாகவே நிகழும். அது அத்தனை எளிதாக யாருக்கும் தெரியாது. நிச்சயமாக நம்முடைய எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் அதிர்வை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும். அனைவருக்கும் அந்த பாதிப்பு கேட்கும் 'அரிச்சந்திரா' நாடகம் பார்த்த நாள்முதல் மகாத்மா காந்திவாய்மைக்கு மாறியதும், ஷெல்லியின் கவிதைகளால்
கவரப்பட்டபின் தன்னை 'ஷெல்லிதாசன்' என பாரதி தன்னை அறிவித்துக் கொண்டதும்,
இங்கே உருவாக்கம் பெற்ற நடப்பு உண்மைகளே ஆகும் எதைப் பார்த்து கற்றுக் கொள்கிறீர்கள்
என்பதைப் பொறுத்தே நம்முடைய தரம் உயரும்.
'சில நல்ல மனிதர்கள்
நம்மையும் மீறி
நம்முள் ஊடுருவி விடுகிறார்கள்'
(சதா பாரதி)

வாசகரின் கருத்து : ஒவ்வொரு முறையும் நாம் படித்த நுால்கள், பார்த்த திரைப்படங்கள், கேள்விப்பட்ட செய்திகள்ஏதாவது ஒரு வகையிலேநம்முடைய மனதிலே ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. அது நம்மை யும் அறியாமல் நம்முடைய செயல்களிலும் ஊடுருவி விடுகிறது. நிச்சயமாக அது நல்லவகையில் பாதித்தால் இந்த சமூகம் மிகச்சிறந்த மனிதர்களைச் சந்திக்கும். இல்லையெனில் நமக்குள் பிறக்கும் தீய எண்ணங்கள் நம்மை மட்டுமின்றி நம்மைச் சூழ்ந்த அனைவரையும் பாதித்துவிடும்.
'அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி. ஒவ்வொரு சுதந்திர
தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும்
நான் காலைல இருந்து விரதம் இருப்பேன். நமக்காக பட்டினி யோடு போராடி இதை வாங்கிக் கொடுத்திருகாக. இதுல என்ன தப்பு?'-
என் நெற்றிப் பொட்டில் அறைந்ததைப் போன்ற ஒரு நிகழ்வு கடந்த குடியரசு தினம் அன்று கிடைத்தது. தினமலர் நாளிதழில் என்னுடைய கட்டுரை ஒன்று அன்று வெளியாகியிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து வந்த அழைப்பு. மதுரை பேருந்து நிலையத்தில் பூ கட்டி வியாபாரம் செய்துவரும் பாட்டிதான் அழைத்து மேலே சொன்னதை என்னிடம் சொல்லி வாழ்த்தியது.
இன்னொரு அதிசயதக்க உண்மை என்னவென்றால் அந்த பாட்டிக்கு படிக்க தெரியாது போல.

ஓவ்வொரு நாளும் : தன்னுடைய பேரன் வந்தவுடன் இதுபோன்ற கட்டுரைகளோ செய்திகளோ வந்தால் வாசிக்கச் சொல்லி கேட்பாராம். எனது அலைபேசி எண் வாங்கி பேசி வாழ்த்திவிட்டு, இந்த தகவலையும் சொன்னபோது உண்மையிலே நெகிழ்ந்தே போனேன். அந்த பாட்டியிடம் நன்றி தெரிவித்துவிட்டு, பேரனிடம் பேசி பாட்டிக்கு என் சார்பாக ஒரு முத்தமும் வழங்கச் சொன்னேன். அந்த பாட்டியின் தந்தை ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றவராம்.

நேர்மையாக நடக்க வேண்டும்: தன்னுடைய உணர்வுகளை எவ்வித சூழலாக இருந்தாலும் சமரசம் இன்றி வெளிப்படுத்துவது என்பது எல்லோராலும் அத்தனை எளிதாக முடியாது. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி தான் பெற்ற அனுபவத்தையும் தனது வறுமையையும் தாண்டி தேசத்தை நேசிக்கும் அந்த பாட்டியைப் போல ஏராளமானவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதே நாம் அறிந்த உண்மை. நம்மில் பலருக்கும் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் சூழலையும், கூட இருப்பவர்களின் நேர்மையற்ற
செயலையும் காரணம்காட்டி அவற்றை தவிர்த்து விடுகிறோம். நாம் பெற்ற கல்வியும் அனுபவமும் நமக்கு மட்டுமல்ல நமக்கு பின்னர் வரும் தலைமுறைகளுக்கும் வழிகாட்டும் என்பதை மனதிலே எற்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இந்த சமூகத்தின் மீது ஏராளமான குறைகளையும், கோபத்தையும் வைக்கிறோம். ஆனால், உண்மையிலே அதே சமுதாயத்தில் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்பதையும் மறந்து விடுகிறோம்.

படித்தவர்கள் 'நீயெல்லாம் படிச்சவன்தானே?' இந்த கேள்வியை நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்திலே எதிர்கொண்டு இருப்போம். அந்த நிமிடம் நாம் படித்த படிப்புகள் எல்லாம் நம் கண்முன் வந்து அசிங்கமாக திட்டுவதைப் போல இருக்கும். காரணம் படித்தவனிடம் இந்த சமூகம் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத நிலையிலோ, அதை ஒரு பொது
வெளியில் கடைபிடிக்காத நிலையிலோ இந்த கேள்வியை நாம் எதிர்கொண்டிருப்போம். இந்த கல்வி நமக்கு நிறைய அறிவினை கொடுப்பதாக ஒப்பக் கொண்டாலும் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளதா என்று கேள்வி கேட்டால், 'நிச்சயமாக இல்லை' என்ற பதிலே பெரும்பான்மை வரும். காரணம் நாம் நடந்து கொள்ளும் முறை. பள்ளி, கல்லுாரி, வீடு ஆகியவற்றில் அவர்களுக்கு சொல்லித்தரக்கூடிய கல்வியானது வெறும் தேர்வுக்கான ஒன்றாகவே மாறியிருக்கிறது. உடற்கல்வி வகுப்பு, யோகாசன வகுப்பு, ஓவிய வகுப்பு, வாய்ப்பாடு வகுப்பு என்பதையெல்லாம் வாழ்க்கைக் கல்வி என்று சொல்வார்கள். ஆனால், இந்த பாடவேளைகள் பெரும்பாலான கல்வி நிலையங்களில் இருக்கும். ஆனாலும், அந்த பாட வேளைகளிலும் வேறு பாடங்களை எடுத்து எப்படியாவது அவர்களை மாநிலத்தில் முதல் மாணவனாக மாற்றும் குரளி வித்தைகளை, பல நிறுவனங்கள் 'கல்வி' என்ற போர்வையில் நடத்திக் கொண்டிருக்கின்றன. கல்வி என்பது வாழ்க்கையைக் கற்றுத்தரவில்லை. ஏதோ ஒரு வெறுப்பையும் மனபாரத்தையும் குழந்தைகள் மேலே ஏற்படுத்திவிடுகிறோம்.

அறம் செய விரும்பு : அவ்வையின் அறமொழி. உண்மையிலேயே உலக இலக்கியங்களிலே தலை சிறந்த பல அற இலக்கியங்கள் நிரம்பியது நமது தமிழ் இலக்கியமே
ஆகும். ஒவ்வொரு இலக்கியமும் நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதாகவே இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் இன்றளவும் அதனுடைய சுவையும், வளமும் குன்றாமல் போற்றப்படுகிறது என்றால், அது காலம் தாண்டிய கருத்துக்களை நம்மிடையே விதைத்துள்ளது என்பதே. இருப்பது வேறு, வாழ்வது வேறு என்பதை உணர்ந்துகொண்டு வாழ்பவனால்தான், இந்த உலகத்தில் நிலையான மகிழ்ச்சியைப் பெற முடியும். வெறும் பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் பயன்ஏதும் இல்லை. அது வேண்டு மானால் அப்போதைக்கு நம்முடைய மனதிற்கு இதமாக இருக்கலாம். ஆனால், சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள முடியாத எந்த உயிரும் இங்கே நிலைத்திருப்பதில்லை.
நமது இலக்கியங்களும் நாம் சந்திக்கும் அனுபவங்களும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுத்து கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. நாமோ அவற்றை யெல்லாம் ஒரு கடமைக்கு
மட்டுமே படித்துவிட்டு கடந்து போய்விடுகிறோம். நாம் படித்தவற்றை நமது வாழ்க்கைக்காக மாற்றும் போதுதான் வாழ்வு நிலைபெறுகிறது.

இன்றைய சூழலில் நம்முடைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகளாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. எதிர்கால தலைவர்களை நாம் நமது வீட்டிலே உருவாக்கி
கொண்டிருக்கிறோம். அவர்கள் நம்முடைய அறிவுரைகளைக் கேட்பதில்லை; மாறாக நம்முடைய நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள். நம்மைப் போலவே நடக்க முயற்சி செய் கிறார்கள். நாம் சரியாக நடந்துகொண்டாலே போதும்; நம் நாட்டின் எதிர்காலத்தை அவர்கள் சிறப்பாக வழிநடத்தி விடுவார்கள்.

-முனைவர் நா. சங்கரராமன்
இணை பேராசிரியர்
எஸ்.எஸ்.எம்., கலை
அறிவியல் கல்லுாரி
குமாரபாளையம்
99941 71074

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement