Advertisement

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 5

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.


இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரி டம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


9. ஜான்மணி


தங்களுடைய பள்ளிகளுக்கும் தன்னாட்சி வழங்கும் முறை என்னைப் பொறுத்த வரையில் தேவையற்ற ஒன்றாகவே கருதுகிறேன். ஏனெனில் தற்போதைய கல்வித் தரத்தினை அறியாதவர்கள் யாருமே இல்லை. காசு பார்க்கும் கார்ப்பரேட் கம்பெனிகளாகவே கல்வி நிறுவனங்கள் முற்றிலும் மாறிவிட்டன. இந்நிலையில் தன்னாட்சி என்ற அதிகாரத்தினை கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் சூழ்நிலையில் பல புதுமையான கல்வி முறைகளைப் புகுத்துகிறோம் என்ற நோக்கில் கட்டணக் கொள்ளையை ஆரம்பித்து விடுவர். இப்போது தான் ரேங்க் சிஸ்டம் ஒழிக்கப்பட்டு மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை அகற்றப்படுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதை விடுத்து தன்னாட்சி அங்கீகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் போது உயர்கல்வித் துறையில் தற்போது பொறியியல் கல்லூரிகள் பல இழுத்து மூடப்பட்டு வருகிற சூழலில் பள்ளிகளும் அந்தப் பட்டியலில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எங்களது பள்ளியில் பல வசதிகள் உள்ளன. உங்கள் குழந்தையை எங்கள் பள்ளியில் சேர்த்தால் நாங்கள் அப்படி சொல்லித் தருகிறோம்... இப்படிச் சொல்லித் தருகிறோம் அதற்குத் தனி கட்டணம் என்றெல்லாம் கூறி கல்வியை கூறு போட்டு விற்க ஆரம்பித்து விடுவார்கள். தாங்கள் பின்லாந்து, கியூபா ஆகிய நாடுகளின் கல்விமுறைபற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆசிரியர்களை குடிமைப்பணிக்கு ஈடாக மதிக்கின்றனர். கல்வி அனைத்தும் அரசுடைமை தான். ஆகவே தன்னாட்சி என்ற முறையை மாற்றி புதிய கல்விக் கொள்கைகளை புகுத்த கல்வி யாளர்களை கலந்தாலோசித்து அரசுக்கு சமர்ப்பிக்கலாம் என்று கருதுகிறேன்.


தினமலர் விளக்கம்: பள்ளிகளுக்கு தன்னாட்சி வழங்குதல் தேவையற்றது என தாங்கள் முடிவெடுப்பதற்குக் காரணங்களாக கட்டணக் கொள்கை, கல்வி நிறுவனங்கள் காசு பார்க்கும் கார்பரேட் கம்பனிகளாக மாறிவிட்டன என்று சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். இது ஒரு பொதுவான கருத்தாக நிலவத் தொடங்கியுள்ளது. சிந்தித்துப் பார்த்தால், இந்த முடிவு தவறான ஒன்றாக கருதலாம்.

கல்வியில் தரமான ஒன்றை மாணவர்களுக்குத் தருவது அரசின் மிக முக்கிய கடமை. ஏனெனில் தரமற்ற கல்விபெறும் மாணவர்கள் வேலை பெறும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் தரமான கல்வி தருகிறோம் என்று காரணம் காட்டி, காசு பார்ப்பதையும் ஏற்க முடியாது. ஏற்கவும் கூடாது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது, சிலர் தவறாக கல்வி நிறுவனங்களை இயக்கி பணம் பார்க்கிறார்கள் என்பதால், அத்தனை கல்வி நிறுவனங்களும் அப்படித்தான் என்று முடிவெடுப்பது சரியென்று படவில்லை. அநேகமாக, இந்த உண்மை தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்று நாம் நினைக்கிறோம். உங்கள் முடிவு தங்களுடைய கோபத்தை ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக நாம் எண்ணுகிறோம்.

சாலை விபத்துக்களில் மரணமடைவோர் எண்ணிக்கை மிக அதிகமாக இந்தியாவிலும், தமிழகத்திலும் இருக்கிறது என்பதால், சாலைப் போக்குவரத்தை, அதன் முன்னேற்றத்தையும் மறுத்து நிறுத்த முடியுமா? அப்படித்தான் இதுவும். இதற்கு ஒரே வழி. கல்வி நிறுவனங்களின் இயக்கத்தைக் கண்காணிக்கும் பொறுப் புள்ளவர்கள் சரியாகக் கடமையாற்றினால் மிகுந்த நலன் கிடைக் கும். பின்லாந்திலும், கியூபாவிலும் அரசுகளின் மேற்பார்வை மிகவும் நேர்மையாக நடைபெறவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பின்லாந்தில் குறிப்பாக கல்வி நிறுவனங்கள் சிறியதாக இருப்பதால், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாணவனையும் நன்றாக அறிவார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இன்னொரு முக்கியமான செய்தியைக் கண்டோம். கல்வி பயிலுவதில் சற்று தாமதமாகப் பாடங்களைப் புரிந்து கொள்ளும் மாணவர்களிடம், ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்துவதாகச் சொல்கிறார்கள். கட்டணக் கொள்ளையைக் குறிப்பிடும் நீங்கள் பள்ளி வேலை நேரத்திற்கு முன்னதாக வீட்டிற்குச் சென்று, அங்கே 'டியூசன்' எடுத்து பணம் பண்ணும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை சில வாசகர்களே-அவர்களும் பள்ளி ஆசிரியர் கள்-எமக்குஎழுதியிருக்கிறார்கள். ஆகையால், குறையைச் சுட்டிக்காட்டி, பெரும் கட்டாயக் கடமையை ஒதுக்குவது நேர்மையான சமூகப் பார்வையாகாது. தன்னாட்சி தரத்தைப் பற்றியது. தரமற்ற பள்ளிகளுக்கு அரசு தன்னாட்சி வழங்க முடியாது. எனவே, தரமான கல்வி நம் மாணவர்களின் நலன் காக்கபடுவது மிகவும் இன்றியமையாதது என நாம் கருதுகிறோம். அதன் விளைவுதான் நாம் எதிர்பார்க்கும் பள்ளிகளில் தன்னாட்சி வழிப்புரட்சி.


10. சுரேஷ்குமார்
தன்னாட்சி என்பது நிச்சயம் வியாபாரத்தில் சென்று முடியும். வளர்ந்த நாடுகளில் எங்குமே தன்னாட்சி பள்ளிகள் காணோம். இருந்தாலும், நமது நாட்டில் இது ஏமாற்று பேர்வழிகளுக்கு சாதகமாக கூடும். லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் தினமலர், இதற்கு துணை போகக்கூடாது என்பதே எனது அவா.


தினமலர் விளக்கம்: தன்னாட்சி என்பது நிச்சயம் வியாபாரத்தில் சென்று முடியும் என்று தாங்கள் கூறுவது சரியாகப் படவில்லை. ஒரு அவசர முடிவோ எனத் தோன்றுகிறது. கல்லூரிகள் தன்னாட்சி முறை இயங்குவதைப் பார்த்த பிறகுதான் நாங்கள் பள்ளிகளில் தன்னாட்சி என்ற கொள்கையை கையில் எடுத்தோம்.

சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, தன்னாட்சி கல்லூரி, அங்கு தன்னாட்சி, UGC அறிவித்துள்ள வழிகளில், முறையாக இயங்கி மாணவர்கள் நலத்துடன், வேலை வாய்ப்புடன் வெளியேறுகின்றனர். விரும்பினால் நீங்கள் அந்தக் கல்லூரியைச் சென்று பார்வையிடலாம். 'தினமலர்' நடத்தும் கல்லூரி அது. இன்னும் எத்தனையோ கல்லூரிகள் தன்னாட்சியைப் பொதுவாக நன்றாக மேற்கொண்டு இயங்கி வருகின்றன. நல்ல தன்னாட்சிக் கல்லூரி தமிழகத்தில் இருக்கும் பொழுது, நல்ல தன்னாட்சி பள்ளிகள் வரலாம், வரவேண்டும் என்று நினைப்பது எப்படித் தவறாக இருக்க முடியும்?

வாசகர்களில் சிலர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, கணினியில் பார்த்த பொழுது, பின்லாந்து போன்ற நாட்டில் பெரும்பாலும் பள்ளிகள் தன்னாட்சி முறையில் தான் இயங்குகின்றன.
நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல், குறையை முதன்மைப் படுத்தி நாம் மாணவர்களுக்குச் செய்தாக வேண்டிய இன்றியமையாத கடமையை மறப்பது, மறுப்பது சமூக பொறுப்புள்ளோர் செய்யும் காரியமாக இருக்க முடியாது. தவிர, தாங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று, இலஞ்சம் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தினமலர், இங்கே அவற்றிற்குத் துணை போகவில்லை. மாறாக அவற்றைத் தவிர்த்து நேர்மையாக இயங்க முடியும் என்ற உண்மையை வலியுறுத்திக் காட்டுகிறோம். உறுதியாக, நாம் சமூக பொறுப்புடன் நடந்து கொண்டால், படிப்படியாக தவறான வழிகளில் செல்லும் பள்ளிகள், ஒன்று மாறியாக வேண்டும், அல்லது இல்லாமல் மடிந்து போக வேண்டும். இந்த எல்லையை அடைய, அனைவரும், பெற்றோர், ஆசிரியர், மாணவர், லட்சியமாக அரசு அதிகாரிகள், சமூக நலனைக் கருத்தில் கொண்டால், இது உறுதியாக முடியும்.

-தொடரும்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement