Advertisement

இசைபட வாழ்தல் நன்று

இசை எனும் இரண்டு எழுத்து சொல், அனைவரையும் இசைய வைக்கும் சக்தியாக விளங்குகிறது. 'இசை' மனதை ஊக்கப்படுத்தவும் பயன்படுகிறது. 'கல்வி' என்ற சொல்லில் மூன்று எழுத்து இருப்பதுபோன்று, கல்வி-க்கும் மூவர் பங்கு தேவைப்படுகிறது. மாணவர், ஆசிரியர், பெற்றோர் இணைந்து பணியாற்றினால் கல்வி சிறக்கும். இசை என்பது என்ன? - பழைய நாள் தொட்டு மக்களின் உணர்வில் ஊறி நாளடைவில் உருப்பட்ட இலக்கணமுடையது. பாட்டுக்குப் பாவம் போன்று இசையும் முக்கியம். நன்றாக அமைந்த பாடல், தான் பெற்று வரும் சொற்களால் மேன்மையடைந்து சூரியனை நோக்கித் திரும்பும் சூரியகாந்திப்பூப்போலத் தன்மயமாக்கவல்லது. பாட்டு மனிதனுக்கு இன்பத்தைத் தந்து துன்பத்தை நீக்கக்கூடியது. மனிதனை
நல்வழியில் திருப்புவது. இவை பாரதிதாசனின் இசை பற்றிய கோட்பாடுகள்.
மக்கள் பல்வேறு காரணங்களால் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். தமிழிசை மன இறுக்கத்தைக் குறைத்து, மனத்திற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகின்றது.
சென்னையில் கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனையில் இசை மருத்துவ முறை பயன்
படுத்தப்படுகின்றது. புண்பட்ட மனத்தைப் பண்படுத்துவதால் அக்காலத்திலேயே இசைக்குப் பண் என்று நம் முன்னோர்கள் பெயரிட்டனர் போலும். இரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதய நோய் தாக்குதலினின்று பாதுகாக்கும். காலையிலும் நண்பகலிலும், மாலையிலும், இரவிலும் நமது உடலின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. ஒவ்வொரு நாழிகைக்கும் மாறிக் கொண்டிருக்கும் என்று சித்த மருத்துவர்கள் கூறுவர். மாறிக்கொண்டிருக்கும் ரத்த ஓட்டத்திற்கேற்ப நேரத்திற்கேற்ப தனித்தன்மை உடைய பல பண்களைக் கொண்ட சிறப்புடையது தமிழிசை.
இசை என்பதற்கு இசைய வைத்தல், மனத்தை வயப்படுத்துதல் என்ற பொருளும் உண்டு. ஆனாய நாயனார் பசுக்களை மேய்க்கும் பொழுது திருவைந் தெழுத்தைக் குழலில் இசைக்க, பசுக்கள் அறுகம்புல்லைத் தின்று அசைபோடுவதை மறந்து அசைவற்று நின்றன.
பசுவின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்த இளங்கன்றுகள், பால் குடிப்பதை மறந்து மயங்கி நின்றன. காளை, மான் முதலிய காட்டு விலங்குகளும் மயிர் சிலிர்த்து நின்றன. பாம்பும், மயிலும், சிங்கமுமம் யானையும், புலியும் மானும் தத்தம் பகைமை மறந்து அருகே ஒருங்கே நின்றதை சேக்கிழார் அழகுற வர்ணிக்கிறார்.

நாட்டுப்புறத் பெண்கள் : குழந்தைகளுக்கு பாடும் தாலாட்டுப் பாடலும், மரணவீட்டில்
மாரடித்துப் பாடும் ஒப்பாரிப் பாடலும், உலக்கை கொண்டு உரலில் இடிக்கும் போதும், அம்மானை, கழங்கு, தட்டாட்டம் போன்ற விளையாட்டுகளின் போதும் பாடும் பாடல்களும் நடவு,
களையெடுப்பு, அறுவடை காலங்களில் பாடும் வயல்வெளிக் குலவைப் பாடல்களும், விழாக்
காலங்களில் பாடும் கும்மி, நலுங்கு, கோலாட்டப் பாடல்களும் பழந்தமிழிசை வளர்வதற்குப் பறைசாற்றும் தக்க சான்றுகளாகும். செவி வழி கேட்டு வாய்வழி காக்கப்பெற்ற பழந்தமிழர் இசை முறைகளைக் காப்பதும், இசைக்கருவிகளைக் கையாண்டுத் தமிழிசை வளர்ப்பதும் நம்
அனைவரின் கடமை. நாம் அனைவரும் நமது சந்ததியரை அரசு இசைப்பள்ளி, அரசு
இசைக் கல்லுாரிகளில் தமிழிசை பயில அனுப்பி வைக்க வேண்டும்.

கல்வி உளவியல் : ஆசிரியருக்கு கல்வி உளவியல் இன்றியமையாதது. ஆசிரியரையும் மாணவர்களையும் இணைக்கும் பாலம் கல்வி உளவியலே. மாணவரின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப கற்பித்தல், செயல்முறை மூலம் கற்பித்தல், மாணவர்களின் ஒழுக்கத்தை
நல்வழிப்படுத்துதல், நவீன உத்திமுறைகளைக் கையாளுதல், எளிதாகவும் விரைவாகவும், தெளிவாகவும் கற்பித்தல் போன்றவையே கல்வி உளவியல். கல்வி உளவியல் பின்வரும் நான்கு நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

1.மாணவர்க்கு மிகச்சிறந்த கற்றல் சூழலை உருவாக்குதல்.
2.மாணவர் சீரான முறையில் முன்னேற கற்றல்நிலையை உருவாக்குதல்.
3.மாணவர்கள் கற்கும் திறனை மதிப்பிடுதல்.
4.மாணவரின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்து வைத்தல்.

இசை கற்றல் : கற்றல் எல்லா உயிரிகளிடமும் காணப்படும் ஒரு திறனாகும். “தனது செயல், அனுபவம் ஆகியவற்றால் ஓர் உயிரியின் நடத்தையில் ஏற்படும் மெதுவான, படிப்படியான மாற்றம்” என ஹில்கார்ட் என்பவர் கற்றலுக்கு விளக்கம் தருகிறார். கற்றல்
என்பது “படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாடு அடைவதாகும்” என்று “ஸ்கின்னர்” கூறியுள்ளார். எனவே, உள்ளத்தின் சக்தியால் உந்தப்பட்டு, தன் செயல்களால் ஒருவன் பெறும் அறிவு மாற்றங்களையே நாம் 'கற்றல்' என்கிறோம். இது இசைக்கலைக் கல்விக்கும் பொருந்தும்.
கற்றலில் பலவகைகள் உள்ளன. நீந்தக் கற்றல் உடல்திறன்
பற்றியது. செய்யுளைக் கற்பது மனத்திறனைப் பற்றியது. நல்ல பழக்கவழக்கங்களைக் கற்பது ஒழுக்கத்தை வளர்ப்பது. இசையை கற்பது மனதை செம்மைப்படுத்த துணை நிற்கும்.
பல்வேறு திறன்களைக் கற்பதும் அதனால் தன்னிடத்தில் மாறுதலை உண்டாக்கிக் கொள்வதும் கற்றலில் அடங்கும். எனவே, கற்றல் மாற்றத்தைத் தோற்றுவித்தல், வளர்ச்சி, பெறுதல், பொருத்தப்பாட்டைப் பெறுதல் போன்ற பொருள்களைத் தரவல்லது.
கற்றல், முயற்சி இன்றியும் நடைபெறலாம். பள்ளிச் சூழலுக்கு
உள்ளேயும் வெளியேயும் கற்றல் நிகழ்கிறது. ஒருவன் கற்ற இசைக் கல்வி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நாம் கற்பனவற்றில் நலம் தருவனவும் உண்டு, தீமை தருவனவும் உண்டு. ஒருவர்க்கு நன்கு அறிந்த மொழிதான் கற்றலை வேகப்படுத்துகிறது. கற்றலைப் பயனுள்ளதாகவும்
ஆழமுடையதாகவும் ஆக்குகிறது.ஊக்குவித்தலும், ஆசிரியரும்இசை கற்றலில் ஊக்குவித்தலைச் செயல்படுத்த முயல்பவர் இசை ஆசிரியரே. மாணவர்கள் கற்கும் நோக்கத்தையும், அதன் பயனையும் ஆசிரியர், தெளிவாக எடுத்துக்கூறி ஊக்குவிக்கலாம். ஊக்குவித்தல் காரணமாக விளையாட்டு, செயல்முறை போன்ற தன்னார்வக் கல்வியை மிகக்குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ள இயலும். கல்வி கற்றலின் இன்றியமையாமையை ஆசிரியர், மாணவர்களுக்கு
இயல்பாக உணர்த்த வேண்டும். அதே சமயம் கட்டாயப்படுத்தியோ, தீவிரப்படுத்தியோ இசைக் கல்வியைத் திணித்தல் கூடாது. மாணவர்களின் மனவளர்ச்சிக்கு ஏற்றாற்போல் பாடத்திட்டம் அமைத்து ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உரிய பாடம்தொடர்பான பொருட்களை நேரில் காண்பித்தோ பாடி காட்டியும் விளக்கம் கூறினால் அப்பொருள்மீது விருப்பம் ஏற்பட்டு, விரைவில் கற்க வழிவகுக்கும். இவ்வாறு மேலும் பல வழிகளைக் கையாண்டு ஆசிரியர் ஊக்குவித்தலை நல்வழிப்படுத்தலாம். கற்பிப்பதில் ஆசிரியர்களின் திறமை மிக முக்கியம். கற்பவரின் மரபு, சூழ்நிலை எப்படி இருந்தாலும் அவற்றைத் தன் திறமையால் மாற்றி, கற்பவருக்கு ஆர்வம் ஏற்படும்வகையில் கற்பிக்க வேண்டும். மாணவனுடைய தனித்திறமையைக் கண்டு தேவைக்கேற்ப ஊக்குவிக்கவும் ஆசிரியர் தெரிந்திருக்க வேண்டும்.
மெள்ளக் கற்கும் மாணவர்கள் எந்தக் கருத்தையும் எளிதில் ஏற்காமல் தாமதமாகவே கற்பர். பலமுறை இசையின் பாடப்பகுதியை வலியுறுத்தும் போதுதான் அவர்கள் கற்க
முயலுகிறார்கள். இவர்களுக்கு முயற்சியும் ஆர்வமும் திறனும் இயல்பாகவே குறைந்து காணப்படும். சுறுசுறுப்பின்றி மந்தமாகி இருப்பர். பாடக்கேள்விகளுக்கு முரண்பாடான பதில்களையும் குழப்பமான பதில்களையும் கூறுவர். ஆசிரியர் இப்படிப்பட்ட மாணவர்களிடம் அன்பும்
ஆதரவும் காட்டி ஊக்குவிப்பதுடன் கைத்தொழில் போன்ற உடல் உழைப்பு வேலைகளைக் கொடுத்துப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.மாவட்ட அரசு இசைப் பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் மட்டுமின்றி வேறு வழிகளிலும் கற்பதற்குப் பல வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இசையில் சிறந்த முன்னேற்றம் அடைவதற்கு நல்லதொரு இசை ஆசிரியரை அணுகி ஒரு சில ஆண்டுகளேனும் பக்தியுடன் இசையைப் பயில்வதையே தமிழ் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நமது வாழ்க்கை நெறியாகும்.

முனைவர் தி.சுரேஷ்சிவன்
செம்மொழி இசைத்தமிழ் அறிஞர்,
மதுரை-.
9443930540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement