Advertisement

ஆறுவது சினம்... கூறுவது தமிழ்

'தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே'

தன்னை அறிவதும் ஒரு வகைப் பயிற்சி. அது ஒரு முயற்சி என திருமந்திரம் குறிப்பிடுகிறது. தன்னை அறிபவன் சினத்தை விலக்குவான். மனமெனும் மங்கல விளக்கை ஒளி பெறச் செய்ய சினம் எனும் கோபத்தை விரட்ட வேண்டும். ஒருவனுடையநிழல் அவனுடன் தங்குவது போல, சினமும் உடலின் உள்ளும், புறமும் இருள் சூழ வைத்து மனதில் மாசாய் தங்கி விடும்.

சினம் என்னும் கோபம் : உடலுக்கும், மனதுக்கும் கேடு செய்யும் தேவையற்ற வெளிப்பாடேயாகும். அடக்க முடியாத கோபத்தில் இருந்து ஒருவன் விலகி இருந்தால் ஞானியாவான் என
விதுரநீதி கூறுகிறது.சினம் தோன்ற பல காரணிகள் உண்டு. இயலாமை, ஆற்றாமை, தனிமை, வெறுமை, தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், கழிவிரக்கம், புறக்கணிப்பு, மன அழுத்தம் என இவையனைத்தும் சினம் ஏற்படுவதற்கு சாதகமான காரணிகள்.ஒளவையார் இயற்றிய
ஆத்திசூடியில் 'ஆறுவது சினம்' என்கிறார். ஆறுவது என்றால் வெம்மையிலிருந்து குளிர்ந்த
தன்மைக்கு கொண்டு வருவது. சினம் கொண்டால் உடல் நலிந்து மனிதநேயம் வற்றி இதயத்தை
சீர்குலைத்து விடும்.சினம் தவிர்த்தால் சினம் என்னும் கோபம்இல்லத்தை, உறவினை,
சமுதாயத்தை, பின்பு நாட்டையே புற்று நோய் போன்று ஊடுருவி தீமை பயக்கும். ஒருவருடைய எண்ணத்திற்கும், ஆசைகளுக்கும் தடை வரும் நிலையில் சினம் தீவிரமாக உருவெடுக்கும்.
'சினம் என்பது சேர்ந்தாரை கொல்லி' என்பதுண்டு. சினம் தன்னையும் அழித்து சார்ந்தவர்
களையும் அழித்து விடும். வெவ்வேறு சூழ்நிலையில் இருந்து வரும் ஆணும், பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தால் இணைவர். அதனால் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் மாறுபட்டிருக்கலாம். இல்வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் கருத்து வேறுபடும். அந்நிலையில் சொற்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொறுமை காத்தால்... : சொற்களுக்கு உயிர் உண்டு. இனிய சொற்கள் உயிராய் நின்று இரு மனங்களை ஒன்றிணைக்கும். சினம் கொண்டு வரும் சொற்கள், விவாதத்தை ஏற்படுத்தி
வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடும். சினம் ஏற்படும் போது சிறிது நேரம் பொறுமை காத்து காரணத்தை விளக்கினால் மனம் மாறுபடும். 'மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச் சினத்து விளக்கினை செல்ல நெருக்கினால் மனமானது மாயா விளக்காய் மாறும்' என
திருமந்திரம் கூறுகிறது.மழை வேண்டுமானால், கடல்நீர் ஆவியாகாது வான் சென்று பொழிய வேண்டும். பழம் வேண்டுமெனில் விதை முளைத்து, மரமாகி கனி கொடுக்க வேண்டும். அனைத்திற்குமே கால இடைவெளி தேவைப்படும். அதுபோல சினம்கொள்ளும் போது கால இடைவெளி கொடுத்தால் மனம் அமைதியுறும். சினம் கொண்டு உடனே தீர்வு காண நினைப்பது, இடையூறை வரவழைக்கும்.ஒரு வீட்டில் எப்போதும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே விவாதம் நடக்கும். ஒரு நாள் தந்தை அமைதியாக மகனைப் பார்த்து, ''வளர வேண்டிய பிள்ளை உனக்கு கோபம் வரக்கூடாது. கோபம் வந்தால் வீட்டின் பின் சுவரில் ஆணி அடி,'' என்றார். மகனும் கோபம் வரும் நேரம் சுவரில் ஆணி அடிக்க துவங்கினார். நாளடைவில் ஆணி அடிப்பது குறைந்து கொண்டே வந்து பின் முற்றிலும் நின்றது. அதன் பிறகு மகனின் கோபமும் குறைந்து விட்டது.
மகன் தந்தையிடம், ''தனக்கு கோபம் தணிந்துள்ளதாக,'' கூறினார். உடனே தந்தை மகனிடம்,
''இப்போது நீ அடித்த ஆணியை எடுத்து விடு,'' என்றார். மகனும் அவ்வாறு செய்தார். பின்பு தந்தை மகனிடம், ''ஆணியை எடுத்தவுடன், சுவரில் ஓட்டை
இருக்கிறதே பார்த்தாயா'' என்றார். மகனும் பார்த்ததாக கூறினார். அடித்த ஆணியால் சுவரில் ஓட்டை விழுந்ததை போல தான் சினத்தால் உருவாகும் சொற்கள், செயல்கள் மனதில் ஓட்டை எனும் மாறாவலியை ஏற்படுத்தி விடும். மனமானதால் அது சீர் செய்ய முடியாத வடுவாக மாறி விடும் என்றார்.

சினம் என்ற தீ : சினம் என்பது தீ போன்றது. சாதக பாதகங்களை நினையாது உடனே பற்றிக் கொள்ளும். சினத்தினால் ஏற்படும் உராய்வு வாழ்வில் பேராபத்தை உருவாக்கும். உறவுகள் எனும் விழுதை வேரறுத்து விடும்.கூட்டுக்குடும்பத்தில் பெரியவர்கள் இருப்பதால், பிடிக்காத கருத்தை மற்றவர்கள் திணித்தாலும் இல்லத்தில் உள்ளவர்கள் மரியாதையின் பொருட்டு
மவுனமாக இருப்பர். அதுவே பல இடையூறுகளுக்கு விடுதலை அளிக்கும். அதைக் கண்டு வளரும் குழந்தைகள் இல்லத்திலும், சமுதாயத்திலும் தேவையற்ற விவாதத்தில் ஈடுபட மாட்டார்கள். சிலர் சுதந்திரம் என்ற பெயரில் அர்த்தமற்ற காரணங்களுக்கு கோபம் கொண்டு சண்டையிட்டு தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் நிம்மதி இழக்க வைப்பர். இதைக் கண்டு வாழ்வில் மலர வேண்டிய குழந்தைகளின் மனமும் சிதறி விடுகிறது. விட்டுக் கொடுக்கும் எண்ணம் இல்லாமல் போய்விடுகிறது. வாழ்வின் மொத்த மதிப்பும் இல்லறத் தலைவியின் கைகளில் உள்ளது என்று வள்ளுவம் உரைக்கிறது.

இல்லதென் இல்லவள் மாண்பாளால் உள்ளதென்
இல்லவள் மாணாக்கடை

இன்றுள்ள பொருளியல் வாழ்வில் அகவியல் வாழ்வு சிதைவடைகிறது.

சமுதாய தாக்கம் : தன்மானத்திற்கு இடையூறு வந்தால், நினைப்பது தடைப்பட்டால், ஆசைகள் நிராகரிக்கப் பட்டால், அடக்கி வைக்கப்பட்டால், நேர்மறை எண்ணங்கள் மறைந்து, எதிர்மறை
எண்ணங்கள் வளர்ந்து சினமாக உருவெடுக்கும். சமுதாயத்தில் உருவாகும் சினம் காட்டுத்தீயை
போன்றது. எங்கும் பற்றி எரியும். வாய் சண்டை, வாய்க்கால் சண்டையாக முடியும். வீட்டுத் தகராறு, வீதித்தகராறாக மாறி விடும். சமுதாயத்தில் உணர்வுகளைமறைத்து வெற்று வார்த்தைகளை பிடித்து கொண்டு சினம் கொள்வதால் கலகமும், கலவரமும் ஏற்படலாம்.

சிந்தனை திறன்

'நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற'

ஒருவருக்கு பகைவன் சினமே. பாதகமான சினத்தை மாற்றினால் சாதகமான மனம் உருவாகும். மவுனம் தீவிரப்படும்போது சினத்தின் தாக்கம் குறையும். மன்னிக்கும் பண்பிருந்தால் சினம் தோன்றாது. கொதி நிலையில் இருக்கும் மனதை அமைதியாக்க வேண்டும். அடக்கி வைக்கும் சினமும், உடலில் பல நோய்களை உருவாக்கும். ஹார்மோன் அதிகளவில் சுரந்து முக்கியமாக
சிறுநீரகம், இதயம் இரண்டையும் பாதிக்கும். இதயத்தில்படபடப்பும், உடலில் நடுக்கமும் தோன்றும்.

பொறுமை அவசியம் : சினம் ஏற்பட்டால் அதை அடக்காது, மாற்றும் வழியை
திறமையுடன் கையாளலாம். பொறுமையுடன் இருக்க பயில வேண்டும். இப்பயிற்சியே,
முயற்சியின் முதல் படி. அதை அயர்ச்சி அடையாது தொடர வேண்டும். பேசாதிருப்பது தீர்வல்ல; தீர்வு காண அமைதியான முறையில் சொற்களை தேர்ந்தெடுத்து பேச வேண்டும். சினத்தால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதை பொறுமையுடன் சிந்தித்து சீர் செய்ய வேண்டும். எங்கு சினம் உருவாகியதோ அந்த இடத்தை விட்டு அகன்று, பிடித்த செயலில் கவனத்தை திருப்ப வேண்டும். ஆழ்ந்த மூச்சால் சினம் கட்டுப்படும். சினத்தை தணிப்பதற்கு குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள்உள்ளது. கோபம் நம்மை கையாளக் கூடாது. கோபத்தை நாம் கையாள வேண்டும் என்பதே ஆளுமைத் திறனாகும். பயன் என்னும் இலக்கை நோக்கி பயணிக்கும் போது பயனற்ற சினத்தைத் தவிர்ப்போமா.

-முனைவர் ச.சுடர்க்கொடி
கல்வியாளர், காரைக்குடி
94433 63865

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • G. Venkittu - Lagos,நைஜீரியா

    ரொம்ப அருமையாய் இருந்தது பொறுமை பற்றி பேசியது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement