Advertisement

இவர்கள் வெளியில் தெரியாத வேர்கள்

இந்திய விடுதலை போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் பலர். மன்னர் காலம் முதல் மகாத்மா காந்தி காலம் வரை எத்தனை எத்தனை போராட்டங்கள். அதில் அவ்வளவாக வெளியில் அறியப்
படாதவர் சிலரை இங்கு பார்ப்போம்.

வீரத்திலகம் குயிலி : சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாரை நாம் அறிவோம் என்றாலும், குயிலியை பற்றி கூற வேலுநாச்சியாரின் வரலாறு அவசியம்.
கி.பி.1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் மனைவியானார் வேலுநாச்சியார். ஆற்காடு நவாப் வரிவசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலேய கம்பெனிப்படை கி.பி.1772ல் ராமநாதபுரத்தை கைப்பற்றியது. பின், சிவகங்கை மீது திடீர் தாக்குதலை தொடுத்தது.அச்சமயத்தில் மன்னர்,
காளையார்கோவிலில் இறைவழிபாட்டில் இருந்தார். லெப் கர்னல் பான்ஜோர் தலைமையிலான ஆங்கில படைகள் கோயிலைச் சுற்றி வளைத்து தாக்கின. இதில் மன்னர் மற்றும் இளையராணி கவுரி நாச்சியார் கொல்லப்பட்டனர். கணவரின் உடலை பார்க்க காளையார் கோவிலை நோக்கி வேலுநாச்சியார் செல்ல, அவரை கைது செய்ய படை அனுப்பினார் நவாப். அந்த படை வழியிலேயே வேலு நாச்சியாரை மடக்கி தாக்கியது.இதில் காயமுற்று தப்பித்த அவர், திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்கு சென்றார். பின்னர்,திண்டுக்கல் கோட்டையில் மைசூரு மகாராஜா ஹைதர்அலி உதவியுடன் 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர் படை திரட்டி மருது சகோதரர்கள் துணையுடன் சிவகங்கையை மீட்க சென்றார்.
அப்போது வேலுநாச்சியார் படையில் தளபதியாகவும், மெய்காப்பாளராகவும் இருந்தவர்தான் வீரநங்கை குயிலி. படைகளை எப்படி வழிநடத்துவது என்று மருது சகோதரர்களுடனும் மற்ற படைத்தலைவர்களோடும் வேலுநாச்சியார் ஆலோசித்தபோது, நரைத்த தலையுடன் ஒரு மூதாட்டி அங்கு வந்து சில யோசனைகளை கூறினார்.'இப்போது நவராத்திரி விழா. நாளை மறுநாள் விஜயதசமி. சிவகங்கை கோட்டையில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோயில் கொலுவை பார்க்க மக்களுக்கு அனுமதி உண்டு. இதை பயன்படுத்தி ராணியின் படை உள்ளே போய்விட முடியும். பிறகு நமக்கு வெற்றிதான்!' என்றார்.யார் அந்த மூதாட்டி என்று வேலுநாச்சியார் உட்பட அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, அந்த மூதாட்டி நரைத்த முடியை அகற்றினார். அவர்தான் வீரமங்கை குயிலி. இவரது ஆலோசனை படியே படை நடத்தப்பட்டது. பூஜைக்காக அரண்மனையின் மையப்பகுதியில் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் எல்லாம்
குவிக்கப்பட்டிருந்தன. வேலு நாச்சியார் தலைமையில் வீரர்கள் எதிரிகளை வெட்டிச் சாய்த்தனர். ஆங்கிலேய வீரர்கள் ஆயுத குவியலை நோக்கி ஓடினர். அப்போது ஒரு பெண் மின்னல் வேகத்தில் முடிவெடுத்தார். கோயில் நெய்யை உடலெங்கும் பூசி, அங்கிருந்த தீப்பந்தத்தை எடுத்து உடலை எரியவிட்டு, உயரமான பகுதிக்கு சென்று ஆயுதக்குவியலில் குதித்தார்.
ஆயுதங்கள் எல்லாம் எரிந்து பொசுங்கின. அவரது உடலும்தான். அவர்தான் குயிலி. அந்த போரில் வேலுநாச்சியார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.

'ஜெய்ஹிந்த்' செண்பகராமன் : கி.பி.1914ல் 'எம்டன்' என்ற நீர்மூழ்கி கப்பலில் பயணித்து
ஆங்கிலேய அரசின் இரு எண்ணெய் கிடங்குகள் மீதும், சென்னை துறைமுகம் மீதும்,
புனித ஜார்ஜ் கோட்டையிலும், திருகோணமலை துறைமுகத்திலும்பீரங்கி தாக்குதல் நடத்தினார் செண்பகராமன். இதனால் சென்னை உயர்நீதிமன்ற வெளிப்புறச்சுவரின் ஒரு பகுதி பெயர்ந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட குண்டு வெடிக்காமல், மண்ணில் புதைந்தது. இது எழும்பூர்
மியூசியத்தில் பார்வைக்காகவைக்கப்பட்டுள்ளது.கி.பி.1915ல் இந்தியாவின் போட்டி அரசாங்கத்தை, ஆப்கானிஸ்தானில் நிறுவிய முதல் இந்தியர். மேலும் இவ்வரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பணியாற்றிய பெருமைக்குரியவர் செண்பகராமன்.

சென்னையில் தாக்குதல்நடத்திய இவர், அடுத்து புதுச்சேரி சென்றார். அங்கு துறைமுகத்தில் சுத்தானந்த பாரதியை சந்தித்து, கைப்பெட்டியை கொடுத்து,சுப்பிரமணிய சிவாவிடம் சேர்க்கும்படி தெரிவித்து 'ஜெய்ஹிந்த்' என்று முழக்கமிட்டார். பின்னர் சிங்கப்பூர் நோக்கிச் சென்றார். துணிச்சல் மிக்க இக்காரியங்களை அவர்ஆற்றும்போது அவருக்கு வயது 23.ரஷ்ய புரட்சியைஉருவாக்கிய லெனினையும் சந்தித்திருக்கிறார். விடுதலை இயக்கங்களுக்கு லெனின்
ஆதரவளித்ததால், அவரை பாராட்ட ஜெர்மனியில் இருந்து ஒரு குழு சென்றது. அதில்
முதன்மையாக இடம் பெற்றவர் செண்பகராமன். ஜெர்மனியில் இருந்த காலத்தில் ஹிட்லரின் நெருங்கிய நண்பர் ஆனார். ஒருநாள் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்தியாவை யும், இந்திய மக்களையும் ஹிட்லர் இழிவாக பேசினார். உடனே கொதித்தெழுந்த செண்பகராமன், இந்தியாவின் பெருமை குறித்தும், தலைவர்களின் மகத்தான திறமை குறித்தும் ஒரு நீண்ட சொற்போர் புரிந்தார். அதை கேட்ட ஹிட்லர், தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.
'வெறும் வாயளவில் மன்னிப்பு கேட்டால் போதாது. எழுத்து வடிவில் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார். வேறுவழியின்றி ஹிட்லர் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டார்.
உலகத்தையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரையே நடுங்க வைத்த, அடி பணிய வைத்த பெருமை மாவீரன் செண்பகராமனுக்கு கிடைத்தது. 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை முதன்முதலில் முழங்கியவர் செண்பகராமன்.

துர்க்கா தேவி : பாஞ்சாலத்தில் பகத்சிங்கின் இயக்கத்தை ஆதரித்து போர்க்களத்தில் குதித்த வீராங்கனை துர்க்காதேவி. பகத்சிங்கோடு தேசிய கல்லுாரியில் பயின்றவர். பகத்சிங்கின் தோழன் பகவதி சரணின் மனைவி.சதிக்குற்றம் சாட்டப்பட்டு பகத்சிங் தலைமறைவாக வாழ்ந்த
போது, அவரை காப்பாற்றதுர்க்காதேவி செய்த தியாகத்தைபாருங்கள்! தலைமறைவு வாழ்க்கை பகத்சிங்கிற்கு சிரமமாக இருந்தது. எனவே பகத்சிங்

லாகூரிலிருந்து வெளியேறுவது நல்லது என்று முடிவு செய்யப்பட்டது. பகத்சிங், ஆங்கிலேயர்
இந்தியன் போல் உடையணிந்தார். பகத்சிங் மனைவியாக ரயிலில் பயணிக்க முன்வந்தார் துர்க்காதேவி. கண்ணீரால் நன்றி சொன்னார் பகத்சிங். இருவரையும் ரயில் நிலையத்தில் வரவேற்றது கணவன் பகவதி சரண்.1930 ஜனவரியில் ரவிநதிக்கரையில் வெடிகுண்டு தயாரித்த
போது குண்டுவெடித்தது.இதில் பகவதி சரண் மரணம் அடைந்தார். அவரைஎப்படி புதைப்பது என்றபிரச்னைகள் வாட்டின. பிணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்குள் போனால் போலீசிடம்
மாட்டி விடுவார்கள் என்பதால், கணவர் உடலை தன் கைகளா லேயே, ரவி ஆற்றின் நீரோட்டத்தில் அழுத்தி விட்டார் துர்க்காதேவி. இத்தகைய தியாகத்திற்கு எதனை உவமையாக சொல்ல முடியும்.

மாவீரன் சுந்தரலிங்கம் : தளபதி சுந்தரலிங்கம்,துாத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் பிறந்த விடுதலை போராட்ட வீரர். இவர் முதலில் வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் வீரராக சேர்ந்து, பின்பு ராணுவ துணை தளபதியாகவும், தளபதியாகவும் பொறுப்பேற்றார்.
கி.பி.1799 செப்.,4ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மேஜர் பானர்மன் தலைமையில் வீர
பாண்டிய கட்டபொம்மனை கைது செய்வதற்காக முற்றுகையிடப்பட்டது. இதை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் வீரன் சுந்தரலிங்கம், மனைவி வடிவுடனும் ஒற்றர் படையினரோடு ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்குகளை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆடு, மாடுகளுடன் கம்பளியை போர்த்தியவாறு வெடிமருந்து கிடங்கு அருகே சென்றனர்.
ஒரு ஆங்கிலேய படைவீரன் இவர்களை அடையாளம் கண்டு, மற்றவர்களை அழைத்தான்.
நிலைமை கைவிட்டு போவதை அறிந்த சுந்தரலிங்கம், வெளிச்சத்திற்காக தான் வைத்து
இருந்த தீப்பந்தத்தை மார்போடு அணைத்து வெடிமருந்து கிடங்கில் பாய முற்பட்டார். அவருடன் மனைவியும் பாய்ந்தார். தற்கொலை படையாக மாறி வெடிமருந்து கிடங்கை சாம்பலாக்கிய அவர்களும் சாம்பலாயினர்.இவர்களை போன்றுவாண்டைய தேவன், பூலித்தேவரின் தளபதி வெண்ணிக்காலாடி வீரர்களின் தியாகங்கள் என்றும் அழியாதவை.இப்படி விடுதலை போரில் வெளியில் தெரியாத வேர்களாக எண்ணற்றோர் இருக்கிறார்கள். அந்த வரலாற்றையும் அறிந்து அவர்களின் தியாகத்தை இந்நாளில் போற்றுவோம்!

முனைவர் இளசை சுந்தரம்
எழுத்தாளர், மதுரை
98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement