Advertisement

லண்டனும், மதுரையும்!

பண்பாட்டுத் தலைநகரங்களான 'தேம்ஸ்' நதிக்கரையில் உள்ள லண்டன் மற்றும் வைகை நதிக்
கரையில் உள்ள மதுரை ஆகியவை சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களாக திகழ்கின்றன. இந்நகரங்களின் நிலப்பகுதி, பண்பாடு குறித்து சில ஒற்றுமை, வேற்றுமைகளை காண முடிகிறது.

இங்கிலாந்து, வேல்ஸ்,ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து நாடுகள் ஒன்றிணைப்புச்
சட்டங்களின் வாயிலாக, ஓராட்சி யின் கீழ் ஒருங்கிணைந்து, லண்டனை தலைநகராகக் கொண்டு ஐக்கிய ராஜ்யமாக (United Kingdom) உருவாக்கியிருக்கின்றனர். தாழ்வான மலைகள், அடர்த்தி
இல்லாத காடுகள், ஒழுங்கற்று வந்து செல்லும் சூரியன் கொண்ட நிலப்பகுதியே ஐக்கிய ராஜ்யம்.
தேம்ஸ் நதிக்கரையோரம் 'ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி' என்ற பொன்மொழியுடன் சிந்தித்தால் நம் சமூகம் ஆலமரம் போல் வேர்கள் பிடிப்பு இன்றி விழுதுகள் துணைகொண்டு தப்பிபிழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆங்கிலேயர்கள் அருகம் புல் போல் சிறிய வேராக இருந்தாலும் உலகமெங்கும் பரவி தன் ஆளுகைக்குள்ளும் பண்பாட்டுக்குள்ளும் உலகையே அரவணைத்திருக்கிறார்கள் என்பதை லண்டனில் ஓடும் 'தேம்ஸ்' நதிக்கரையில் நின்றபோதுஉணரவும் பார்க்கவும் முடிந்தது.

தேம்ஸ் ஒன்றே போதும் : 17ம் நுாற்றாண்டில் ஆட்சி புரிந்த அரசர் முதலாம் ஜேம்ஸ், லண்டன் மாநகராட்சியிடமிருந்து 20,000 பவுண்ட் பணம் கேட்டுள்ளார். லண்டன் மேயர் கொடுக்க மறுத்து விட்டார். அதையறிந்த அரசர் கோபத்துடன், சட்டமன்றங்களையும் அரசவையையும்
பாராளுமன்றத்தையும் 'வின்செஸ்டர் அல்லது ஆக்ஸ்போர்டு' நகரங்களுக்கு மாற்றி விடுவேன் என்று பயமுறுத்தியிருக்கிறார். அஞ்சாத மேயர், உங்களால் தேம்ஸ் நதியை கொண்டு செல்ல முடியாது, அது ஒன்றே எங்களுக்கு போதும் என்று கூறியிருக்கிறார். அந்த நம்பிக்கை இன்று வரை உள்ள ஆட்சியாளர்களிடம் காணமுடிகிறது. அதுபோல தேம்ஸ் நதிக்கரையில் புகைப்படம்எடுப்பதையும் படகில் செல்வதை யும் வாழ்நாள் பெருமையாக சுற்றுலாப் பயணிகள் கருதும்படி செய்து இருக்கிறார்கள்.

தலைமையகங்களின் இருப்பிடம் : தொடர்ந்து பல நுாற்றாண்டு களாக நிதி, கல்வி, பொழுதுபோக்கு, ஊடகம், கலைகள், பண்பாடு போன்ற துறைகளில் செல்வாக்குடன் லண்டன் வலம் வருவதுடன், உலகளவில் பிரபல நிறுவனங்களில் பெரும்பாலான வற்றின் தலைமையகங்களை லண்டன் கொண்டுள்ளது. உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாக இயங்கி வருகிறது. மீன் குஞ்சுகளுக்கு நீந்த கற்றுக் கொடுத்த 'தேம்ஸ் நதி' தான் உலகை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் கலையை யும் கற்றுக்கொடுத்திருக்கிறது.
தங்கள் நிலப்பகுதிக்கு ஏற்ற விளையாட்டுகளான கால்பந்து, கிரிக்கெட், குத்துச் சண்டை, ரக்பி, பில்லியர்ட்ஸ், கோல்ப் போன்றவைகளை உருவாக்கி, அதை பல்வேறு நாடுகளிடையே உள்ள இளையோருக்கு பழக்கப்படுத்தி, அடிமையாக்கியுள்ளது. அந்த விளையாட்டுக்களின் மூலம் வணிக அரசியல் செய்பவர்கள்.

300 மொழி பேசும் மக்கள் : லண்டன் எல்லைக்குள்முன்னுாறுக்கும் அதிகமான மொழிகள் பேசும் பலவிதமக்களும், பண்பாடுகளும்,சமயங்களும் கலந்து தங்களுக்கான நம்பிக்கையுடன் ஒரு ஒழுங்கை பின்பற்றி வாழ்வது அதிசயமாக உள்ளது. அரச குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் உயர் நிறுவனங்களில் பணிபுரியும் பூர்வீக குடிகள் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே லண்டனில் வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் சொந்த ஊர் மற்றும் கிராமங்களில் விரும்பி வசிப்பது ஆச்சரியமாகவே உள்ளது. நாட்டின் உணவுத் தேவையின் அறுபது சதவீத பங்கை, மக்கள்தொகையில் ஒரு சதவீத உழவர்களைக் கொண்டு விவசாயத்தை 'இயந்திரமயமாக மாற்றி' நிறைவு செய்கிறார்கள்.'வேல்ஸ்' நிலப் பகுதியில் 'கால்நடை வளர்ப்பே' பிரதான தொழிலாக உள்ளது.பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின்பு, பூமிப்பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் அடையாளம் கண்டு கொள்ள கடக ரேகை, அட்ச ரேகை போன்ற கற்பனைக் கோடுகளை உருவாக்கி, இந்த இருகோடுகளும் இணையும் புள்ளியை '0' டிகிரி ஆக்கினர். இதுவே உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது. லண்டனில் 'கிரீன்விச்' நகரின் மீது '0' டிகிரி செல்வதால் 'கிரீன்விச் மெரிடியன் டைம் / Greenwich MeanTime' என அழைக்கப்படுகிறது.
நகரும் கழிவறை லண்டனில் நகரும் கழிவறைகள் நகர் முழுவதும் நேர்த்தியான இடங்களில் அமைய பெற்று இருந்தது. நகரும் கழிவறையாக நதியை பயன்படுத்தும் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கத் தானே செய்யும். சுத்தம் என்பது ஒரு சொல்லாக இல்லாமல் ஒரு
சமூகத்தின் கூட்டு செயலாக வெளிப்பட்ட விதம் எங்களை என்னவோ செய்தது. நாம்
எவ்வளவு பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்பதையும் லண்டனுக்கு இணையாக நாம் இன்னும் ஓடவேண்டிய துாரத்தையும் காட்டியது.

மதுரையின் சிறப்பு : மண்ணில் புதையுண்டு இருக்கும் கீழடியின்வரலாறு, ஆங்கில அரசின் எந்தவொரு பழமையான ஆவணங்களையும் விட மிகத்தொன்மையானது என்றே அங்குள்ள மியூசியத்தை சுற்றிப் பார்த்தபோது தோன்றியது. வைகை நதிக்கரையில் அமைந்த மதுரை சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்துவரும் உலகின் சில நகரங்களுள் ஒன்றாகஇருக்கிறது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைத்து, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரமாகவும் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் உள்ளது.மவுரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கி.மு.370-கி.மு. 283), கிரேக்க துாதர் மெகஸ்தெனஸ் (கி.மு.350 - கி.மு.290) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது.

வைகை : வைகை நதி இலக்கியங்களில் 'வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை' எனப் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே போற்றப்பட்டாலும் இன்று மனித சமூகத்திற்கு தாய், தந்தையாய் இருந்த நதியும் கரையும் அந்நியப்பட்டுப் போய் கொண்டுஇருக்கின்றன. நதிநீர் பங்கீட்டுச் சண்டை ஒருபுறம் இருந்தாலும் கழிவுநீர் கலப்பு, சுற்றுச்சூழல் மாசு, ஆக்கிரமிப்பு என்று எத்தனைஎத்தனை வழிகளில் ஒரு நதிக்கு தீங்கிழைக்க முடியுமோ அத்தனை விதமாகவும் நாம் அறிந்தும் அறியாமலும் தொடர்ந்து செய்து வருவது வேதனையளிக்கிறது.

காந்தியும் வைகையும் : காந்தியின் வாழ்வில் வைகை மற்றும் தேம்ஸ் கரையில் உள்ள இருநகரங்களும் மாபெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. காந்தி லண்டனில் தங்கி படித்தது முதல் அவரின் அனைத்து அசைவுகளையும் ஆவணங்களாக பராமரித்து போற்றி வருகின்றனர். அதே நேரம் மதுரையில் காந்தி மியூசியம் தவிர, மற்றவை பாதுகாக்கபடவில்லை என்பதைக் கொண்டே நமக்கு ஆவணப் படுத்தலில் உள்ள கவனமின்மையைக் கண்டுகொள்ளலாம்.

வழி செய்யும் சுதந்திரம் : இன்றையக் காலகட்டத்தில் நம் தொன்மையான குறியீடுகளின் மீதும், பாரம்பரிய சின்னங்கள் மீதும் நாம் நடத்தும் இந்த தாக்குதல்தான் விந்தையான ஒன்று. ஏனென்றால் இதில் படைவீரர்களும் பலியாடுகளும் நாமே தான். சுதந்திரம் என்பது நம்மை நாமே ஆள மட்டுமல்ல, நமது தொன்மை வாழ வழி செய்வதும் தான்.லண்டன் சென்றுதான் நம்
அறியாமையை அறிய வேண்டிய தில்லை. ஒரே ஒருமுறை இந்த வரலாற்று நோக்கோடு, மதுரை நகரை சுற்றி வாருங்கள். வியாபார வெறியில் நமது வரலாற்று சின்னங்கள் மீது நாம் நடத்தும் வன்முறை விளங்கும். தென்னகத்தின் மாபெரும் மாட்டுசந்தையாக விளங்கி இன்று புதையுண்டு இருக்கும் மாட்டுத்தாவணி, கிரானைட் தொழிலால் அழித்து ஒழிக்கப்பட்டு வந்த பிராமி எழுத்துக்கள் மற்றும் சமண மலைகள் என எத்திசை நோக்கினும் நாம் இழந்து வரும் பண்பாட்டு குறியீடுகள் ஏராளம்.எனவே நமக்கு லண்டன் வாசிகள் அளவிற்கு வரலாற்று ஆவணங்களை துதித்து போற்றும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட, நம்மிடம் எஞ்சி இருக்கும்
வரலாற்று தொன்மைகளை மதித்துப் பாதுகாக்கும் பண்பைப் பரவலாக்க வேண்டும். இதற்கான முயற்சிகளுக்கு வரலாற்று அறிஞர்கள் தேவையில்லை, வரலாற்று புரிதலே போதுமானது. இந்த அறிவை வரும் தலைமுறைக்கு கடத்தும் ஆர்வம் முக்கியமானது. இந்தத்தெளிவுடனும், உறுதியுடனும் செயல்படுவோம்.

-பெரி.கபிலன்
உதவிப்பேராசிரியர்
கணினி அறிவியல் துறை
மதுரை காமராஜ்பல்கலை கல்லுாரி, மதுரை
98944 06111

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement