Advertisement

உணவில் கலப்படம் கொடிய குற்றம்!

உணவில் கலப்படம், நேற்று இன்று, தோன்றியதல்ல. மன்னராட்சி காலத்திலிருந்தே, இந்த அநீதி நடந்து கொண்டு தான் இருக்கிறது. பாலில், தண்ணீர் கலந்து விற்றது அந்தக்காலம். பால் கெட்டு போவதை தடுக்கவும், அதன் அடர்த்தியை கூட்டவும், சுவையை அதிகப்படுத்தவும், ரசாயனங்களை கலப்பது இந்தக்காலம்.
அரிசியில் கல்லை கலந்தது அந்தக்காலம். அரிசியில் 'பிளாஸ்டிக்'கை கலப்பது, இந்தக்காலம். கால மாற்றத்துக்கு ஏற்ப, கலப்படப் பொருள் தான் மாறுகிறதே தவிர, கலப்பட கலாசாரம் மாறவில்லை.
கலப்படத்துக்கு, அடிப்படை காரணம், மனிதனின் பேராசை தான். குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும்; கொள்ளை லாபம் பெற வேண்டும் என, வியாபாரிகள் ஆசைப்படுவது தான், கலப்படத்துக்கு பாதை அமைக்கிறது. மற்ற பொருட்களை விட, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து விற்பது, நம் நாட்டில் அதிகம்.
இன்றைய இயந்திரதனமான அவசர வாழ்க்கையில், வாங்கும் உணவுப்பொருள் தரமானதா என, பார்த்து வாங்க, மக்கள் முயற்சிப்பதில்லை. இதனால், கலப்படம் மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டியது கட்டாயமாகிறது.
அதனால், மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, இரைப்பைப்புண், உடற்பருமன், நீரிழிவு, கல்லீரல் நோய், சிறுநீரக நோய், புற்றுநோய், மூளைநோய், மாரடைப்பு எனப் பல நோய்கள் வரிசை கட்டி வந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
வாங்கும் பொருளில், சிறிது கவனம் செலுத்தினால், அது, கலப்படப் பொருளா, இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம். பாலில், தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதா என அறிய, தரையில் கொஞ்சம் பாலை ஓட விடுங்கள். அது ஓடிய இடத்தில், தடம் இல்லையென்றால், பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது எனவும், வெள்ளையாக தடம் தெரிந்தால், சுத்தமான பால் எனவும் தெரிந்து கொள்ளலாம்.
மைதாவில் மரவள்ளிக்கிழங்கு மாவு கலப்படம் செய்யப்படுகிறது. மைதா மாவை பிசையும் போது, அதிக தண்ணீர் தேவைப்பட்டால், அதில் கலப்படம் உள்ளது உறுதியாகிறது.
தேயிலையில் உளுந்துத்தோல் அல்லது கடலை பருப்புத்தோல் சேர்க்கப்படுவதுண்டு. தண்ணீரில் நனைக்கப்பட்ட வடிகட்டியில் சிறிது தேயிலையை துாவி, அதன் நிறம் பிரியாமல் இருந்தால், சுத்தமான தேயிலை என்றும், நிறம் மாறினால், கலப்பட தேயிலை என்றும் கண்டுபிடிக்கலாம்.
தேனில் சர்க்கரைப்பாகு கலப்படம் செய்கின்றனர். தேன் துளியை தாளில் இட்டால், சுத்தமான தேன், தாளில் அப்படியே இருக்கும்; சர்க்கரை கலப்பு இருந்தால், தாள் ஊறி விடும்.
பாலில் ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை அறிய, தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம், 'இமேட்' எனப்படும், 'எலக்ட்ரானிக் மில்க் அடல்டரேஷன் டெஸ்டர்' கருவி உள்ளது.
இது, வீட்டுக்கே வந்து, பாலில் கலப்படம் உள்ளதா என்பதைத் தெரிவிக்கும், ஒரு நடமாடும் கருவி. பொதுமக்கள் சந்தேகப்படும் பாலை, இதன் மூலம் இலவசமாக சோதனை செய்து கொள்ளலாம்.
இப்படி எளிய வழிகளில் கலப்படத்தை கண்டுபிடிக்க, தனியார் தொண்டு நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. பெண்கள் இவற்றில் பயிற்சி பெற்று, கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை வாங்கி, உபயோகித்து, வீட்டில் உள்ளோர் ஆரோக்கியத்தை காக்கலாம்.
உணவு பொருட்களில் கலப்படங்களை தடுப்பதற்கு, 'உணவுக் கலப்பட தடைச்சட்டம்- - 1954' இருந்தது. அதை, 'உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம்- - 2006' என மாற்றி, 2011ல் நடைமுறை படுத்தினர்.
இதன் படி, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் செய்யும் இந்திய ஆணையம், தரக்கட்டுப்பாடுகளையும் உறுதி செய்கிறது.
இந்த அமைப்பு, அவ்வப்போது, உணவுப்பொருட்களின் மாதிரிகளை பரிசோதித்து, அவற்றில் கலப்படம் இருக்கிறதா என, தெரிவிக்கிறது.
சமீபத்தில், தமிழகம் முழுவதும் பெறப்பட்ட, 122 பால் மாதிரிகளில், 26 தரம் குறைந்தவை என, இந்த அமைப்பு தெரிவித்தது. மேலும், ஆண்டு தோறும் கலப்படத்தின் அளவு அதிகரித்து வருகிறது என்றும் எச்சரித்துள்ளது.
உதாரணமாக, 2011 -- 12ல் கலப்படத்தின் அளவு, 12.8 சதவீதம். 2015 --16ல், 26.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அப்படியானால், உணவு பாதுகாப்புத்துறை சரியாக செயல்படவில்லை என்பதையே, இது புலப்படுத்துகிறது.
உணவில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் அதிகாரம், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறது.
மாவட்டங்களில் உள்ள இந்த அதிகாரிகள், தங்கள் அதிகாரத்தை முறைப்படி பயன்படுத்தி, மக்களால் அதிகம் நுகரப்படும் உணவுப்பொருட்கள் கலப்படமில்லாமல் இருக்கின்றனவா என, கண்காணிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தாலே, அந்த குற்றங்களை தடுத்தாலே, பெரும்பாலும் கலப்படங்களை தவிர்த்து விட முடியும்.
ஆனால், அந்த அதிகாரிகள் பதிவு செய்யும் வழக்குகள் மிகவும் குறைவு. வழக்குப்பதிவு செய்தாலும், நடவடிக்கை எடுப்பது, இன்னும் குறைவு. அப்படியே நடவடிக்கை எடுத்து, தண்டனை கொடுத்தாலும், பல பிரிவுகளில், குறைந்தபட்ச அபராதம் தான் வசூலிக்கப்படுகிறது.
மேலும், உணவுப் பொருட்களில் கலக்கப்பட்டுள்ள ரசாயனங்கள் சரியான அளவில் இருக்கிறதா, கலப்படம் இருக்கிறதா என, கண்காணிக்க போதுமான ஆய்வுக்கூடங்கள், அதிகாரிகள் இல்லை.
தமிழகத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் செய்யும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடங்கள், மொத்தமே ஏழு தான் உள்ளன.
இங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் நுகர்வோர் உணவுப்பொருட்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, இந்த ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை, மிக மிகக்குறைவு.
இதனால், மேலை நாடுகளில் உள்ளது போல், உணவு பாதுகாப்பு குறித்த தொடர் கண்காணிப்பு, நம் நாட்டில் போதுமானதாக இல்லை என்பது பெருந்துயரம்.
எந்த ஓர் உணவு பொருளையும், புகார் வரும் போது மட்டுமே ஆய்வு செய்வது, நாட்டில் எழுதப்படாத விதி. மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருளான பாலில் தொடங்கி, உயிர் காக்கும் மருந்துகள் வரை, எங்கும், எதிலும், கலப்படம் எனும் நிலைமை நாட்டில் நீடிப்பது, கொடிய குற்றம்.
கலப்படம், பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பது நிச்சயம். ஆகவே, உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர, உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்த பின்னரே, மக்களை சென்றடையும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டந்தோறும்,
உணவுத்தர ஆய்வுக்கூடங்களை அமைத்து, கலப்பட குற்றத்துக்கென காவல் துறையில் தனிப்பிரிவு தொடங்கி, கண்டுபிடிக்கப்படும் கலப்படக்காரர்களுக்கு, உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்.
உணவு கலப்படம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, மாவட்ட அளவில் தனி நீதிமன்றங்களை தொடங்குவதும் அவசர, அவசிய தேவையாகும்.
மக்களின் முக்கிய வாழ்வாதாரமான உணவில், கலப்படம் செய்வோர் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். கலப்பட குற்றத்துக்கு சொத்துகளை பறிமுதல் செய்தல், மரண தண்டனை கொடுத்தல் உள்ளிட்ட கடும் தண்டனைகள் வழங்கப்படும் வகையில், தமிழகத்தில் சட்டங்கள் இயற்றி, உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
பால் கலப்பட பிரச்னையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர், அதிக அக்கறை காட்டுவதால், புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு தடை எதுவும் இருக்காது என, நம்பலாம்.
அதே வேளை, கலப்பட பிரச்னையை, அரசு, சட்டங்களால் மட்டுமே தீர்த்து விடும் என, நம்புவதும் தவறு. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே, ஓரளவுக்கு இதை கட்டுப்படுத்த முடியும்.
நுகர்வோர் வாங்கும் உணவுப்பொருள் எதுவாக இருந்தாலும், அது தரமானதா, ஐ.எஸ்.ஐ., அல்லது 'அக்மார்க்' முத்திரை உள்ளதா, அதன் காலாவதி தேதி என்ன என்பன போன்ற, பல விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்; வாங்கும் பொருளுக்கு ரசீது கேட்க வேண்டும்.
வாங்கிய பொருளில் கலப்படம் இருப்பதாகவோ, அது போலி என்றோ, அதன் அளவு, தரம், விலை போன்றவற்றில் குறைபாடு உள்ளதாகவோ, சந்தேகம் வந்தால், தமிழக உணவுப்பாதுகாப்பு துறையின், மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம்; சட்டப்படி பதிவு செய்யப்பட்ட, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பிடமும் புகார் செய்யலாம்.
சந்தேகப்படும் உணவுப் பொருளை, முழுவதுமாகவோ, மாதிரி எடுத்தோ, அந்தந்த மாவட்ட அரசு உணவு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பலாம்.
உணவுப் பொருளில், கலப்படம் உறுதி செய்யப்படுமானால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில், வழக்கு தொடுக்கலாம். அங்கு, நுகர்வோருக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால், அதை எதிர்த்து, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்.
தீர்ப்பு திருப்தி இல்லை என்றால், தேசிய ஆணையத்திடம் புகார் செய்யலாம். இந்த, மூன்று இடங்களில் புகார் செய்ய கட்டணம் ஏதுமில்லை; மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு கிடைக்கும்.
பெரும்பாலான அரசுத்துறைகளில், நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம்களை அரசு நடத்துகிறது. அந்த கூட்டங்களில் புகார் அளித்து, அப்போதே குறைகளை தீர்த்து கொள்ளவும் வழி இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட, உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், மக்களும் ஒருங்கிணைந்த குழுக்கள் அமைத்து, கிராமம், நகரம் எனப் பிரித்து, உணவுப் பாதுகாப்பு, உணவு கலப்படங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
எவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரங்களை தொடர்ந்து மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
உணவு கலப்பட பிரச்னைக்கான தீர்வு, பொதுமக்கள் கையில் தான் உள்ளது. தகுந்த விழிப்புணர்வும், தங்களுக்கான உரிமையை பெறுவதற்கான முயற்சியும் இருந்தால், சாமானிய மக்களும், கலப்படமில்லாத உணவு பொருட்களை பயன்படுத்தி, உடல் நலத்தை பெறலாம்.
இ--- -மெயில்: gganesan95gmail.comடாக்டர் கு. கணேசன்---- எழுத்தாளர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement