Advertisement

உத்தம தேச பக்தன் உத்தம்சிங்!

இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்டவர்கள் ஏராளம். வரலாற்றில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் உண்டு. ஒன்று மணியாச்சி ரயில்வே நிலையத்தில் பிரிட்டிஷ் கலெக்டர் ஆஷ், வாஞ்சி நாதனால் சுடப்பட்டு, தானும் இறந்த நிகழ்வு. மற்றொன்று ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பிரிட்டிஷ் பிரிகேடியர் ஜெனரல் ஓ டயர், இந்திய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு.

கொடூர ரவுலட் சட்டம் : இந்திய சுதந்திரப் போராட்டம் காந்தியடிகள் வழியில் நாடெங்கும் நடந்து கொண்டிருந்த நேரம். பிரிட்டிஷார்கள் இந்தியர்களுக்கு எதிராக, பல அடக்கு முறைகளை ஏவினர். அதை சட்டத்தின் மூலமாக நிறைவேற்ற ஆங்கில நீதிபதி சிட்னி ரவுலட் தலைமை யில் ஒரு குழு அமைத்தது. இக்குழு இந்திய போராட்டங்களை ஆராய்ந்து அதை அடக்க ஒரு சட்டம் இயற்றியது. இதற்கு பெயர் தான் ரவுலட் சட்டம். இந்திய சுதந்திர போராட்டக்காரர்களை அரசாங்க ஆணை ஏதுமின்றி ஆங்கிலேயர்கள் கைது செய்யலாம். இந்தியர்கள் யாரையா வது அபாயகரமானவர்கள் என்று பிரிட்டிஷார் கருதினால் காரணமின்றி காவலில் வைக்கலாம். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக விரோத குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட்ட இடங்களில் காவலில் இருக்கக் கட்டாயப்படுத்தலாம், மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரிட்டிஷ் அரசு துரோக வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கலாம். இதில் நடுவர் என்ற பதவி கிடையாது. இக்கொடூர ரவுலட் சட்டம் 1919ம் ஆண்டு மார்ச் 21ல் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்த சக்திபால், சலாபுதீன் கிட்சுலு என்ற இரண்டு டாக்டர்கள்1919ம் ஆண்டு ஏப்ரல் 10ல் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டனர். இதை அறிந்த மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போராட்டம் செய்தனர். இந்தியாவில் பல இடங்களில் தபால், வங்கி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

ஜாலியன் வாலாபாக் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919 ம் ஆண்டு ஏப்ரல் 13ல் சீக்கிய, இந்து, முஸ்லீம், பார்சி இன மக்கள் ஆண், பெண்,
குழந்தைகள், முதியோர் கூடினர். அன்று சீக்கிய மதத்தின் 'பைசாகி' என்ற திருவிழா. இத்துடன் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களும் கலந்து கொள்ள மைதானம்
சென்றனர். ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அக்கூட்டத்தில் 'கதர் பார்ட்டி' என்ற சுதந்திரப் போராட்ட அமைப்பை சேர்ந்த வாலிபன் சுறுசுறுப்பாக மக்களுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்தான்.

ஜெனரல் ஓ டயர் : பிரிட்டிஷ் அரசின் மிலிட்டரி ஜெனரலாக அமிர்தசரஸில்இருந்தவன் மைக்கேல் ஓ டயர். மக்கள் கூட்டம் ஜாலியன் வாலாபாக்கில் கட்டுக்கடங்காமல் கூடி
யிருந்ததை அறிந்த டயர், தன் கூர்க்கா ரெஜிமன்ட்டை அழைத்துக் கொண்டு ஜாலியன் வாலாபாக்
கூட்டத்தை சுற்றிலும் துப்பாக்கி யோடு படையை அணி வகுக்கச் செய்தார். இம்மைதானம் சுற்றி லும் பெரிய செங்கல் சுவரால் தடுக்கப்பெற்றது. மைதானத்தில் நுழைய குறுகிய வழிகள் உள்ளன. அனைத்து வழிகளையும் அடைத்து கொண்டது கூர்க்கா ரெஜிமென்ட் படை. டயர், கூடிய கூட்டத்தை கலைக்கத் துப்பாக்கியால் சுடுவதற்குத் தயார் செய்தார். மக்கள் எந்த வழியிலும் வெளியேற முடியவில்லை.

வாலாபாக் படுகொலை : பிரிட்டிஷாரின் சட்ட திட்டத்தின் படி அரசுக்கு எதிரான ஒரு கூட்டத்தை கலைக்க எச்சரிக்கை செய்ய வேண்டும். தடியடி நடத்த வேண்டும். அப்படியும் கலைய வில்லை என்றால், கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்த வேண்டும். பின் வானத்தை நோக்கிச் சுட வேண்டும். அதன் பின் தான் கூட்டத்தினரை நோக்கி சுட வேண்டும். அதுவும் கால்
முட்டிக்கு கீழ் தான் சுட வேண்டும். இது சட்டம். இது எதையும் செய்யாமல், நிராயுதபாணியாக இருந்த இந்திய மக்கள் மீது ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். இதை ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்து மக்கள் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. குண்டு மழையில் மக்கள் கொத்துக் கொத்தாக ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர். உயிர் காக்க ஓடிய மக்கள் நெருக்கடியில் இடிபட்டு தரையில் விழுந்து மடிந்தனர். குழந்தைகள் கூட்டத்தினர் கால்களில் மிதிபட்டு இறந்தனர். எங்கும் மரண ஓலம். இன்னும் சிலர் மதில் சுவரின் மீது ஏறி தப்பி விடலாம் என்று ஓடி சுவர் மீது ஏறினர். அவர்கள் முதுகிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து செங்கல் சுவரை துழைத்து கொண்டு சிதறியது. அச்சுவர்களில் பாய்ந்த குண்டுகளின் தடம் இன்றும் உள்ளது.

பிணவறையான கிணறு : இன்னும் பலர் மைதானத்தில் இருந்த ஒரு கிணற்றுக்குள் குதித்து தப்பிக்க எண்ணினர். அங்கும் எல்லோரும் குதித்ததால் மூச்சுத்திணறி அக்கிணற்றிலேயே சமாதியானார்கள். இன்றும் அக்கிணறு பாதுகாப்பட்டு வருகிறது. இக்கொடூரத்தையெல்லாம் திமிரின் உச்சத்திலிருந்து நிறைவேற்றிய டயர் ஏளனத்தோடும், எக்காளத்தோடும், ''நான் கூட்டத்தைக் கலைப்பதற்கு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடும் போராட்டக்காரர்களுக்கு படிப்பினையாக இருக்க வேண்டும் என்று நடத்தினேன்,'' என்றார். இதையெல்லாம், அக்கூட்டத்திற்கு தண்ணீர் கொடுத்து கொண்டிருந்த ஒரு வாலிபர் வேதனையோடு பார்த்து கொண்டிருந்தார். மரண ஓலம், துப்பாக்கிச் சத்தங்கள், குழந்தைகளின் அலறல், அவன் காதுகளில் அதிர்வலையை ஏற்படுத்தின. ''என் நாட்டிற்கு வந்து, நிராயுதபாணியாக இருந்த எம் மக்களை சுட்டுக்கொன்ற உன்னை... ''என கதறினான் அந்த வாலிபன்.
உத்தமன் உத்தம்சிங் பஞ்சாப் மாநிலம் சுனாம் என்ற கிராமத்தில் முக்தாசிங், ஆஷாகபூர் தம்பதிக்கு 1899ம் ஆண்டு டிசம்பர் 26 ல் பிறந்தான் சாகித் உத்தம்சிங். ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்தமக்களுக்கு தண்ணீர் கொடுத்து கொண்டிருந்தானே ஒரு வாலிபன், அவன் தான் இந்த சாகித்உத்தம்சிங். சுதந்திரப் போராட்டத்தின் போது சிறைவாசம் அனுபவித்தார். அவர் மனதில் ஜாலியன் வாலாபாக் வடுகள் ஆழமாக பதிந்து விட்டன. பல நாடுகளுக்கு சென்று கடைசி யில் லண்டன் வந்தார் உத்தம்சிங்.
லண்டனில் டயர் : கடந்த 1919 ஏப்.13ல் ஜாலியன் வாலாபாக் கொடூரம் இந்தியா முழுவதும் பரவியது. சுதந்திரப் போரின் உக்கிரத்தை அறிந்த பிரிட்டிஷ் அரசு, டயரை லண்டனுக்கு அழைத்து விசாரித்தது. டயர் மேல் தவறில்லை என்று விசாரணை கமிட்டி கூறியது. பின் டயர் லண்டனிலே பணி ஓய்வு பெற்றார். 1940 மார்ச் 13ல் லண்டனில் இருந்த உத்தம சிங்கிற்கு ஒரு தகவல் கிடைத்தது. லண்டனில் உள்ள ஹார்டன் ஹால் என்ற இடத்தில் ஜெனரல் டயர் ஆங்கிலேய கனவான்கள் மத்தியில் பேசுவதாக அறிந்தார். உத்தம்சிங் ஒரு புத்தகத்தில் உள்ள பக்கங்களை துப்பாக்கி வடிவத்தில் செதுக்கி, அதில் ஒரு துப்பாக்கியை வைத்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க பெரிய கனவான் போல் அக்கூட்டத்திற்கு சென்று அமர்ந்தார். டயர் கூட்டத்தில் பேசி விட்டு மேடையிலிருந்து இறங்கும்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் டயரை சுட்டுக் கொன்றார். பிரிட்டிஷ் போலீசார் உத்தம்சிங்கை கைது செய்து விசாரித்தனர்.

துாக்குக்கயிறுக்கு முத்தம் : ஜாலியன் வாலாபாக் நிகழ்வு நடந்த 21 ஆண்டுகளுக்கு பின் டயர் சுடப்பட்டார். அப்போது உத்தம்சிங்கிற்கு 40 வயது.விசாரணை லண்டலின் உள்ள பென்டோன்வில் சிறையில்நடந்தது. அப்போது, ''நான் டயரை சுட்டேன். நான் அவரை சுடு
வதற்குத் தகுதியானவன்தான். டயர் தான் குற்றவாளி. நிராயுதபாணியாககூடியவர்களின் மீது எந்த எச்சரிக்கையும் செய்யாமல் சுட்டார். கொத்துக் கொத்தாக என் தாய் நாட்டு மக்கள் என் கண் முன்னே மடிந்தனர். உயிர் பிழைக்கஎழுப்பிய ஓலங்கள், குழந்தைகளின்கதறல், முதியவர்கள் ரத்தவெள்ளத்தில் வீழ்ந்தது எல்லாம் என் நெஞ்சில் பதிந்து விட்டன. 21 ஆண்டுகள் காத்திருந்து என் தாய் நாட்டிற்காக அவரை சுட்டேன். அதற்காக நான் துளியும் வருந்தவில்லை,'' என்றார். டயரின் தாய் நாட்டு மண்ணிலேயே அவரை கொன்ற மகிழ்ச்சி உத்தம்சிங் முகத்தில் தெரிந்தது.''என் இந்திய தாய் நாட்டிற்காக லண்டனில் என் உயிர் போவது எனக்கு பெருமிதம் தான். என்னால் என் தாய் நாடு நிச்சயமாக உங்களிடம் இருந்து விடுதலை பெறும். என் மக்கள் சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசிப்பார்கள்,'' என்று கூறி துாக்குக்கயிற்றை முத்தமிட்டு வீர மரணம் அடைந்தார் அந்த உத்தம தேச பக்தன் உத்தம்சிங். அவ்வீரரின் உடல் பென்டோன்விஸ் சிறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அந்த உத்தம்சிங் தன் தாய் நாட்டிற்காக லண்டனில் துாக்குக்கயிற்றில் வீர மரணம் அடைந்த நாள் ஜூலை 31.

- கே.கருணாகரப்பாண்டியன்
வரலாற்று ஆராய்ச்சியாளர் மதுரை
98421 64097

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement