Advertisement

தண்ணீருக்காக கண்ணீர் வேண்டாம்

தண்ணீரை தாத்தா ஆற்றில் பார்த்தார்! அப்பா கிணற்றில் பார்த்தார்! நாம் குழாயில்
பார்க்கிறோம்! மகன் பாட்டிலில் பார்க்கிறான்! பேரன் எங்கு பார்ப்பான்? நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.என்பது வள்ளுவன் வாக்கு. பெயர், புகழ், பணம் என எவ்வளவு உயர்ந்தவராயினும், நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ
முடியாது. நிலம், நீர் இவை இரண்டும் சேரும்போது தான் மனிதனுக்கு உணவு கிடைக்கிறது.
இந்த நீரை முறையாக பயன்படுத்துவதற்குத்தான் அக்காலத்தில் நம் முன்னோர்கள் ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளை திட்டமிட்டு அமைத்தார்கள். ஆனால் தற்போது இந்த நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு மழைநீர் சேமிப்பு என்ற தொட்டிவடிவில் மாறியுள்ளது வருத்தத்திற்குரியது. உலக பரப்பளவில் நான்கில் மூன்று பகுதி நீரால் ஆனது. மூன்றாம் உலகப்போர்
வருமானால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என பரவலாக பேசப்படுகிறது. மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், தண்ணீரே நம் வாழ்வின் ஆதாரம்.

அத்தியாவசியத் தேவை : தண்ணீரை பயன்படுத்துவோரிடையே, தேவைகள் அதிகரிப்பதால், இன்று தண்ணீர் போட்டி பொருளாகவும, அதிக விலை கொடுத்து வாங்கும் சந்தை பொருளாகவும் மாறிவிட்டது. பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.தண்ணீர் இல்லாது போய்விட்டால், அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது. பிறப்பிலும், வாழ்விலும், இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத பொருளாக விளங்குவது தண்ணீர்.நாட்டில் குடிநீர் பஞ்சமும்
தண்ணீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ல் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், அதிகரித்து வரும் மக்கள் தொகை போன்ற காரணங்களால், உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது. உலகில் 19 நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேலான தண்ணீர் தேவைக்கு, அண்டை நாடுகளையே நம்பியுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தண்ணீரின் பயன்பாடும் உபயோகமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. முன்னோர்கள் காலத்தில் ஏற்றம் கட்டி நீரிறைத்து, யானைக்கட்டி போரடித்து விவசாயத்தில் தன்னிறைவு கொண்டிருந்த தமிழகம், இன்று கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாக மாறி வருகிறது. விளை நிலங்கள் வீடுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் சொகுசு மாளிகைகளாகவும் மாறிவிட்டன.
விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. துார்ந்து போன ஏரிகளையும், குளங்களையும் துார்வாரி நதிகளை சீரமைத்து கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க முனைப்பு காட்ட வேண்டும்.பெரும்பாலான இந்தியப் பெண்களின் வாழ்க்கை
தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது. தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8 சதவிகிதம் தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கும் செல்கிறது. விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது.

நீர் மேலாண்மை : மழைநீரை முறையாக சேமிக்காமல் இருப்பதும், நீர் நிலைகளை பாதுகாக்காமல் இருப்பதும், மழைக்காலங்களில் நதிகளில் ஓடும் தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுமே இன்றைய குடிநீர் பஞ்சத்துக்கு முக்கிய காரணம். மழை பெய்யும் காலங்களில் மழை நீரை ஒவ்வொரு கிராமத்திலும் குளங்களில் சேமிக்க வழி
செய்தாலே பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு போய் இருக்காது.அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதற்கு நதிகள் இணைப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் மழை காலங்களில் அதிகமான உபரி நீர் கடலுக்கு செல்கிறது. வேறு சில மாநிலங்களில் ஏரிகள், குளங்கள், குட்டைகளை ஆக்கிரமித்துஉள்ளதால், வெள்ளம் ஊருக்குள் வந்து கடலுக்கு வீணாக செல்லும் நிலை நிகழ்கிறது. இதனை தடுக்க நதிகளை இணைக்க வேண்டும். முதலில் நதிகளை இணைப்பதில் பல்வேறு
சிரமங்களும், செலவுகளும் இருக்கத்தான் செய்யும். இதில் செலவாகும் பணம், ஒருமுறை நாம் செலவிட்டால் போதும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பெறும். இதனால் நாட்டில் விவசாயம், வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும்.
முக்கியமாக எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையே வராது.

மழைநீர் சேகரிப்பு : சென்னை நகரை 2015 ல் வெள்ளம் சூழ்ந்த போது, ஊர் முழுக்க நீர் நிரம்பியும் வீட்டு உபயோகத்துக்கு நீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர். மழை நீர் சேமிப்பை மக்கள் மறந்தே போய் விட்டனர். நம் வருங்கால சந்ததிக்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை மழைநீர் சேமிப்பை ஏற்படுத்தவும், அதனை செம்மையாக பராமரிக்கவும் கற்றுக் கொடுப்பதே. அதேபோல் ஒவ்வொரு ஆற்றிலும் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டினால் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையாது. இவை எல்லாவற்றையும் விட, நதிகள் இணைப்பு திட்டங்களை, முனைப்போடு துரிதமாக செயல்படுத்தினாலே, தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் விடும் நிலையை மாற்றிவிடலாம்.ஒரு லிட்டர் நீரில் செய்ய வேண்டிய வேலையை மூன்று லிட்டர் நீரை வாஷ்பேசின் குழாய் மூலம் செலவழிக்கிறோம். நிலத்தடி நீரைப் பெறுவதற்கு
எவ்வளவு மின்சாரம் செலவானாலும் மின்கட்டணம் செலுத்துவதற்குத் தயாராகவே இருக்கிறோம். தொலை துாரங்களிலிருந்து 500 லிட்டர் முதல் 6000 லிட்டர் வரை லாரிகளில் கொண்டு வரப்படும் நீருக்குப் எவ்வளவுப் பணமும் செலவழிக்கத் தயாராக உள்ளோம். நாம் வீணாக சிந்தும் ஒரு லிட்டர் தண்ணீரைப் பெற பூமிக்கடியில் ஆயிரம் அடி ஆழத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

மரங்கள் வளர்ப்பதும்... தீர்வும் ... : நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டுமானால் மரங்கள் வளர்ப்பது மிக மிக அவசியம். ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் குறைந்த
பட்ச மரங்களையாவது நடவேண்டும். மரங்களை வளர்ப்பது மட்டுமே நீர் ஆதாரங்கள் பெருகும்
என்பதில் சந்தேகமில்லை. மரங்கள் நடுவதின் அவசியத்தை உணர்த்த அரசு இன்னும் அதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இலவசங்களை கொடுக்கும் அரசு அதற்கு மாறாக மரங்களையும் நீர்நிலைகளையும் விவசாயத்தையும் நல்லமுறையில் பராமரித்தாலே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

த.ரமேஷ்
பேராசிரியர், ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லுாரி
அருப்புக்கோட்டை.
98944 46246

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement