Advertisement

இலக்கிய உலகின் இறைவி - மனம் திறக்கும் மனுஷி

Share
மனுஷி... தமிழ் இலக்கிய உலகில் குறுகிய ஆண்டுகளில் அறியப்பட்ட பெயர். இளம் சாகித்ய அகாடமி 'யுவபுரஸ்கார்' விருது இப்போது இவரை இன்னும் அதிகம் பேசவும், பாராட்டவும், கொண்டாடவும் வைத்திருக்கிறது.சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழும் சராசரிகளுக்கும் உயரிய விருதுகள் சாத்தியப்படுகின்றன. திறமையும், அதிர்ஷ்டமும் அதை சரியான நேரத்தில் பெற்றுத் தந்து விடுகிறது. இவை எல்லாம் அமையப்பெற்ற கவிஞர் மனுஷிக்கு 'ஆதி காதலின் நினைவு குறிப்புகள்' கவிதை நுாலுக்கு கிடைத்துள்ள விருது, இளம் படைப்பாளிகளுக்கு பெரும் நம்பிக்கை.இவரது கவிதைகளுக்கு வலு சேர்க்கும் இந்த மாபெரும் அங்கீகாரம், அவரை இன்னும் இலக்கிய உலகின் இறைவியாகவே உயர்த்தியுள்ளது. நாடகங்கள், குறும்படங்கள், கவிதைகள் மூலம் தனது இளம் வயதிலேயே படைப்புகளால் வெளிச்சம் போட்டு காட்டி, அதில் பன்முக திறமையாளராக உயர்ந்த மனுஷி ஏழ்மையை உழைப்பால் வென்று, விருதால் கவுரவப்படுத்தப்பட்டிருக்கிறார்.புதுச்சேரி பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வில் தொடர்ந்து வரும் அவரோடு ஒரு நேர்காணல்...
* மனுஷி யார் ?
எனது பெயர் ஜெயபாரதி. சமீப காலம் வரை எனது உறவினர்களுக்கும் மனுஷி யார் என தெரியாமல் தான் இருந்தது. யுவபுரஸ்கார் விருது கிடைத்த பின் தான் வீட்டிலும் இந்த மனுஷியின் எழுத்துகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
* கல்வி, குடும்பம்?விழுப்புரம் மாவட்டம் திருநாவலுார் கிராம பள்ளியில் தான் படிப்பை துவங்கினேன். அப்பா விவசாயி. சிறு வயதிலேயே அம்மாவை இழந்தேன். அக்காவின் அரவணைப்பில் வளர்ந்தேன். பி.ஏ., பாரதிதாசன் பெண்கள் கல்லுாரியிலும், எம்.ஏ., எம்.பி.ஏ., புதுச்சேரி பல்கலையிலும் படித்தேன். இப்போது பாரதி, தாகூரை ஒப்பிட்டு முனைவர் பட்டத்திற்கான ஆய்வை தொடர்ந்து வருகிறேன்.
* படைப்புலக பிரவேசம்?பள்ளி நாட்களில் போட்டிகளில் பேச்சு, கட்டுரை, குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டினேன். அது போல் பள்ளி அளவில் வாலிபால் அணியில் பங்கேற்றிருந்தேன். அடுத்தடுத்த நிலையில் பயணப்பட ஊக்குவிப்பதற்கு யாரும் இல்லை. அப்போதும் கவிதைகள் எழுதுவேன். ஆனால் அது என்னிடமே சிறைபட்டிருந்தது.
* இளமையில் எதிர்பார்ப்பு?வீட்டில் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என நான் இதுவரையிலும் கேட்டதில்லை. கேட்கும் நிலையும் இல்லை. எனது படிப்பிற்கான செலவினங்களை கூட டியூஷன் எடுத்து அதன் மூலம் சரிக்கட்டினேன். யு.ஜி.சி., தேர்வில் வெற்றி பெற்ற போது அதற்கான ஊக்கத் தொகை எனக்கு கை கொடுத்தது. ஒரு உள்ளூர் சேனலில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்தேன். இப்படி படிக்கும் காலம் முதல் எனக்கான தேவைகளை யாரையும் பெரிதும் எதிர்பார்க்காமல் நானே பார்த்துக் கொள்கிறேன். .
* நடிப்பு அனுபவம்?கல்லுாரியில் படிக்கும் போது சீனியர் அக்கா, அண்ணன்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது 'வலி' என்ற நாடகத்தில் நான் சீதையாக நடித்தேன். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து. டில்லியில் இந்திய மொழிகள் பண்பாட்டுத்துறை தலைவராக இருந்த ரவீந்திரன் எனது எழுத்து, நடிப்பு திறமைகளை பார்த்து ஊக்கம் அளித்தார். இலங்கை பிரச்னையை மையமாக வைத்து 'மீண்டு வருவோம்', 'தமிழினி', 'பிஞ்சு' குறும்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பிற்கும் விருதுகள் பெற்றிருக்கிறேன்.
* விரும்பும், எழுதும் கவிதைகள்?மொழி பெயர்ப்பு கவிதைகள் மீது தான் எனக்கு ஆர்வம் அதிகம். அது போன்ற கவிதைகளை தான் தொடர்ந்து படிக்கிறேன். தற்போதும் ரவிக்குமார் மொழிபெயர்த்த 'மாமிசம்', இரோம் ஷர்மிளா, தஸ்லிமா நஸ்ரின் உள்ளிட்டோரின் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் நாடுகளில் பெண்களின் நிலை குறித்த புத்தகங்களை விரும்பி படிக்கிறேன்.நான் எழுதும் கவிதைகளை படித்த பலர் என்னோடு பேசும் போது எனக்காக எழுதப்பட்டதாகவே இருந்தது என சொல்வதை கேட்டிருக்கிறேன். தனி மனிதன் சார்ந்து எழுதினாலும் அது சமூகத்திற்கு அது பொருந்துவதாகவே இருக்கும்.
* எழுதிய புத்தகங்கள்?குட்டி இளவரசியின் ஒளிச் சொற்கள், முத்தங்களின் கடவுள், ஆதிக்காதலின் நினைவு குறிப்புகள் என மூன்று கவிதை தொகுப்புகள். அச்சாக்கும் நிலையில் ஒரு சிறுகதை தொகுப்பு தயாராக உள்ளது. கவிதை தொகுப்பும் தயாராகி வருகிறது.
* விருதுக்கான விமர்சனம் பற்றி?இந்திய அளவில் சக படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் என யார் விருது வாங்கினாலும் அவர்கள் மீது தனி மனித விமர்சன தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இது வருத்தம் தரக்கூடியது. விருதுகள் அறிவிக்கும்போது சந்தோஷப்பட வேண்டும், பாராட்ட வேண்டும். சிலர் காழ்ப்புணர்ச்சியால் விமர்சனம் செய்த போதும் அதை நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்த சமூகத்தில் சிலர் இப்படி தான் இருப்பார்கள்.
* லட்சியம்...
நான் ஒரு பேராசிரியையாக வேண்டும் என விரும்புகிறேன். இளைய தலைமுறையினருக்கு பாடதிட்டங்கள் தவிர்த்து இந்த சமூகத்தில் எப்படியான வாழ்க்கை இருக்கிறது, எப்படி வாழ வேண்டும், சக மனிதன் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் தளம் கல்லுாரி தான். அதனால் அதை எதிர்கால லட்சியமாக கொண்டுள்ளேன். எனது கிராமத்திலிருந்து கல்லுாரி படிப்பில் கால்பதித்த முதல்நபராக இருப்பதால் அத்துறை சார்ந்து பணியும், இலக்கிய பயணமும் இணைந்திருக்கும்.வாழ்த்த anangumakal@gmail.com
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement