Advertisement

பெண் பெருமை பேசிய தமிழறிஞர்

ஆசைகளை வளர்த்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவர்களுக்குக் கல்வியறிவு இன்மைதான் என சுட்டிக் காட்டி யுள்ளார். பெண்கள் அணிகள் எனக் கருதும் நகைகளைக் 'கால் விலங்குகள்' 'கை விலங்குகள்' 'கழுத்து விலங்குகள்' 'இடுப்பு விலங்குகள்' 'தலை விலங்குகள்' 'விரல் விலங்குகள்' என்றும் கல்வியை 'ஞானாபரணம்' என்றும் வேதநாயகர் குறிப்பிடுகின்றார்.
“பெண்கள் நல்ல புத்திசொல்லுகிற பட்சத்தில் அதைக் கேட்டால் பாதகமென்ன? என்று ஆண்களுக்கு அறிவுரை கூறுகிறார் வேதநாயகர் பேச்சாளார்.மாயூரம் வேதநாயகர் பத்தொன்பதாம் நுாற்றாண்டில் (1826--1889) வாழ்ந்த தமிழறிஞர். தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் - குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் அவர் செய்திருக்கும் தொண்டுகள் அளவிடற்கரியவை. நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய வேதநாயகர் உழைப்பாலும் அறிவுத் திறத்தாலும் படிப்படியாக உயர்ந்து நீதிபதியானார். மாயூரத்தில்
நீண்ட நாட்கள் பணியாற்றியதால் 'மாயூரம் நீதிபதி வேதநாயகர்' என்றே அழைக்கப்பெற்றார்.
முதன்மையான சட்டங்கள், வழக்குகள், தீர்ப்புகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துச் 'சித்தாந்த சங்கிரகம்' என்னும், முதல் சட்டத் துறை நுாலை
வெளியிட்ட பெருமை வேத நாயகரைச் சாரும். இன்னிசை அரங்குகளில் தெலுங்குக்
கீர்த்தனைகளே பாடப்பட்டு வந்த காலத்தில் வேதநாயகர் தமிழ் மொழியில் கீர்த்தனைகள் இயற்றி 'சர்வ சமய சமரசக் கீர்த்தனை' 'சத்திய வேத கீர்த்தனை' என்னும் நுால்களாக வெளியிட்டார்.ஆங்கில மொழியில் உரைநடை இலக்கியத்தின் வளர்ச்சியாகச் சிறுகதையும் புதினமும் தோன்றியிருப்பது போல் தமிழ் மொழியிலும் உருவாக வேண்டும் என்று விரும்பிய வேதநாயகர், 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்னும் புதினத்தை வெளியிட்டுத் தமிழில் புதின இலக்கியத்திற்கு வித்திட்டார் அதனாலேயே 'தமிழ்ப் புதினத்தின் தந்தை' என்றும் போற்றப்பட்டார்.


நீதிநுால் : கையூட்டு போன்ற தீய பழக்கங்களைக் கடியும்வகையிலும் நல்ல பழக்கங்களை வலியுறுத்தும் நோக்கிலும் காலத்திற்கேற்ப 'நீதிநுால்' ஒன்றையும் அவர் எழுதி வெளியிட்டார். மேலும் 'திருவருள் மாலை' 'திருவருள் அந்தாதி' 'தேவமாதா அந்தாதி 'தேவ தோத்திர மாலை' முதலான பல நுால்களையும் தனிப்பாடல் களையும் எழுதியுள்ளார் அவர்ஆடவர் வாழ்வில் சரிபங்கு வகிக்கும் பெண்கள் முன்னேற வேண்டும் அவர்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பம் உடையவராகவிளங்கினார் வேதநாயகா். 1869-ஆம் ஆண்டில் 'பெண்மதி மாலை' என்னும் இசைப்பாடல் நுால் ஒன்றையும் 1870-ஆம் ஆண்டில் 'பெண் கல்வி' 'பெண் மானம்' ஆகிய இரு உரைநடை நுால்களையும் எழுதி வெளியிட்டார்.

பெண் கல்வி : 'பெண்களுக்குக் கல்வி எதற்கு? அவர்கள் படித்து உத்தியோகம் செய்யப் போகிறார்களா என்ன? என்று பலரும் பலவாறு பேசிக் கொண்டிருந்த காலத்தில் 'சரீரத்துக்கு ஆகாரம் எப்படியோ அப்படியே கல்வியானது புத்திக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது' என்று கருத்துரைத்தவர்.வேதநாயகர் பின்வருமாறு பாடுகிறார்:

“கற்றவளே துரைசாணி - கல்லா
மற்றவளே சுத்த மடச் சாம்பிராணி!
சதிகாரர் வலையிற் படாதே - கல்வி
மதியில்லாதவனுக்கு வாழ்க்கைப்படாதே”

என்று பெண்ணுக்கு அறிவுறுத்தும் வேதநாயகர் படித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆண்களுக்கு வலியுறுத்துகிறார். தன் தோழனைப் பெண் பார்க்கத் துாது அனுப்பும் மாப்பிள்ளை, பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு கீர்த்தனையில்
கூறுகின்றான்:

“எழுத்து வாசகம் அறியாதவள் மட்டி
ஏதும் அறியாள் அவள்
சுரண்டுவாள் சட்டி;
கழுத்திலே அவளுக்குத்
தாலியைக் கட்டிக்
காரியமிலை அது காசுக்கு நட்டி”

என்று அக்கீர்த்தனையில் படிக்காதபெண் வேண்டாம் என மாப்பிள்ளை குறிப்பிடுவதாகப் பாடியிருக்கிறார் வேதநாயகர்.நல்ல குடும்பம் குடும்பம் சிறப்புற நடைபெறுவது பெண்கள் கையில்தான் உள்ளது. பெண்ணுக்குப் பற்பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்
வேதநாயகர். நல்லதொரு குடும்பம் அமையப் பெண் என்ன செய்ய வேண்டும்? யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

“தலைவன் நெஞ்சைக்
கரைக்காதே - மாமி
தலைமேல் நீ மிளகாய் அரைக்காதே!
நாத்திமேற் கச்சை கட்டாதே -
தலையணை மந்திரந் தீது - கெட்ட
கலகக்காரிகளுக்குக் கஷ்டம்
போகாது!”

நல்ல மனைவியின் இலக்கணம் என்ன? அவள் ஆபத்து வேளையில் அறிவூட்டும் மந்திரியாகவும் அரும்பிணி வரும்போது அதைத் தீர்க்கும் சஞ்சீவியாகவும், துன்பம் அணுகும்போது ஆறுதல் சொல் பவளாகவும், வறுமைக் காலத்தில் திருமகள் போலக் கை
கொடுப்பவளாகவும் கணவன் பாவ காரியங்கள் செய்யாமல் தடுக்கும் சற்குருவாகவும் விளங்க வேண்டும்.

“ஆபத்து வேளையில் அறிவுசொல்
மந்திரி
அரும்பிணிக்கு அவள் ஒரு
சஞ்சீவி - துன்பம்
அணுகும் போது ஆறுதல்
தரித்ர காலத்தில்
பாபத்தில் வீழாமற் போதிக்குஞ்
சற்குரு”

நல்ல மனைவி என்கிறார் வேதநாயகர்.

நகைப் பற்று : பெண்ணின் அடிப்படையான பலவீனம் நகைகள் மீதும் புடைவைகள் மீதும்
அவள் கொண்டிருக்கும் தணியாத ஆசை. இவ் ஆசையை விட்டு விலகுவது தான்
பெண்ணுக்கு நல்லது என்பார் வேதநாயகர்.பெண்கொடுமைகள் ஆண்கள் பெண்களைக்
கொடுமைப்படுத்தி, கேவலப்படுத்தும் அடிமைகளைப் போல நடத்தும் நிலை மாற வேண்டும் என்றும் பெண்களுக்கும் சம உரிமை நல்கப்படல் வேண்டும் என்றும் 'பெண்மானம்' என்னும் நூலில் வேதநாயகர் எடுத்துக் காட்டுகின்றார்.பெண்ணுக்குக் கணவன் செய்யும் கொடுமை போதா தென்று மாமியார், நாத்தனார் கொடுமை மற்றொரு புறம். நாய், பசு, மாடு முதலிய விலங்கு களின் மீது காட்டும் அன்பைக் கூட மாமியார் தன் மருமகளிடம்
காட்டுவதில்லை. மருமகளுக்கு எவ்வளவு தான் வயிறு பசித்தாலும்,புருஷன், மாமன், மாமி முதலானவர்கள் எல்லாரும் சாப்பிட்டு எல்லா வேலைகளும் முடிந்தபிறகுதான் சாப்பிட வேண்டுமேயன்றிப் பசித்த போது சாப்பிட முடியாத நிலை பெண்களுக்கு உண்டு. இவற்றையெல்லாம் கண்டு வருந்தும் வேதநாயகர் “இது எவ்வளவு பெரிய அநீதி? 'தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு' என்பது போல ஸ்திரீக்குப் பசித்தபோது அவள் முந்திப் புசித்தால் குற்றமென்ன?” என்று பெண்ணின் உரிமைக்காக நியாயமான குரல் கொடுக்கின்றார்.

பெண் பள்ளி : பெண்கள் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று பேசியதுடனும், எழுதியதுடனும் நில்லாமல் அதனை நடைமுறைப்படுத்த வும் முன்வந்தார் வேதநாயகர் 1869-ல் பெண்களுக்கெனத் தனிப்பள்ளி ஒன்றை மாயூரத்தில் சொந்த முறையில் தொடங்கி நடத்தினார்.
வேதநாயகாரின் 'பெண்மதி மாலை' 'பெண் கல்வி' 'பெண் மானம்' என்னும் நுால்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல அரிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட சான்றோர்கள் பட்டியலில் வேதநாயகருக்கு முதல்
வரிசையில் முதல் இடம் உண்டு.

-பேராசிரியர் நிர்மலா மோகன்
மதுரை
94436 75931

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement