Advertisement

வார்த்தை விளையாட்டின் வித்தகர் வாலி : இன்று நினைவு நாள்

தமிழ் (பேசும்) சினிமாவிற்கும், அவருக்கும் ஒரே வயது; கடைசி மூச்சிருக்கும் வரை தமிழ் சினிமாவிற்காக தன்னைத் தந்தவர் அவர். தகுதியின் காரணமாகவே அரை நுாற்றாண்டாக பிரபல
இயக்குநர்களையும் இசை அமைப்பாளர்களையும் திரும்ப திரும்ப தன்னைத் தேட வைத்தவர். அவர் தான் கவிஞர் வாலி!

காலத்திற்கேற்பவும் தாளத்திற்கேற்பவும் தன் தமிழை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்பதில்
அவருக்கிருந்த ஆர்வம்;சொல்லாங்குழி ஆடுவதில் இயற்கையாகவே அவருக்கிருந்த அபாரத் திறமை; மெட்டுக்களை சாதுரியமாக கையாளுவதற்கு உதவிய அவரது சங்கீத ஞானம்,- மின்னல் வேகத்தில் வார்த்தைகளை இட்டு நிரப்ப வசதியாக தன்னை ஒரு வார்த்தை வங்கியாகவே மாற்றியிருந்த அவரின் வாசிப்புப் பழக்கம், இவை எல்லாமும் சேர்ந்து தமிழ் சினிமா மாறிக் கொண்டே இருந்த காலங்களிலும் மாற்ற முடியாத பாடலாசிரியராக வலம் வந்தவர் வாலி.

தனித்துவம் மிக்க தலைப்புகள் : ஒருமுறை சென்னை புத்தகக்காட்சி கவியரங்கில் பாட இருந்த பழநி பாரதியையும் என்னையும் வீட்டிற்கு அழைத்தார் வாலி. கவியரங்கத்திற்கு என்ன தலைப்புத் தரலாம்? என கேட்டார். பல தலைப்புகளை விவாதித்தோம். அவர் கூறினார் “கவியரங்கம்நடக்கிற இடம் புத்தகக் கண்காட்சி. அதனால் தலைப்பு அதை ஒட்டித்தான் இருக்க வேண்டும்”. யோசித்தோம்.சிறிது நேரத்திற்குப் பின் அவரே குறிப்பிட்ட தலைப்பு “காகிதம் ஓர் ஆயுதம்!”புத்தகம் - பணம் - சுவரொட்டி - பத்திரம் - ஓட்டுச் சீட்டு என்று துணைத்தலைப்புகள்.
இப்படித்தான் இன்னொரு கவியரங்கத்திற்கு அவர் தந்த தலைப்பு “இராமன் எத்தனை இராமனடி”
துணைத் தலைப்புகள் என்ன தெரியுமா? ராமகிருஷ்ணபரமஹம்சர்; ராமலிங்க வள்ளலார்; ராமசாமி பெரியார்; ராமலிங்கம் பிள்ளை; ராமச்சந்திரன் எம்.ஜி.எனக்குத் தெரிந்து இவையெல்லாம் அது வரையிலும் கவியரங்க மேடைகளின் கைக்கு வராத தலைப்புகள்.

வார்த்தை விளையாடும் : காமராஜர் குறித்து வாலிஎழுதிய ஒரு கவிதை...

''சாஸ்திரி வரவும் இந்திரா வரவும்
சந்தர்ப்பம் தந்தவன் - ஒரு
மேஸ்திரி போல மெல்ல ஒதுங்கி
பாரத நாட்டை பார்வையிட்டான்
நாஸ்திகர் கூட நயந்து போற்றும்
நல்லமானுடன்! நாணயம் மிக்கவன்
ஆஸ்திகள் எதுவும்
அவனிடமில்லை - தன்
அஸ்தியை மட்டுமே
வைத்துப் போனான்''
ஆஸ்தி - அஸ்தி என்றதொரு வார்த்தை விளையாட்டு. அதுதான் வாலி!
''எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ? அந்தப்பா எழுதுகிறேன்
என்தப்பா? நீர் சொல்லும்!''
“எந்த வேர்வைக்குமே
வெற்றி வேர் வைக்குமே''
“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்குவிக்கும் ஆள்கூட
தேக்கு விப்பான்!”
“அடக்கமாகும் வரை அடக்கமாயிரு”
அரக்கர் கோமான்
அற்பக்குரங்கென்று அதன் வாலில்
தீ வைத்தான்! -
அது கொளுத்தியதோ அவனாண்ட
தீவைத்தான்!இப்படி ஆங்காங்கே தனது படைப்புகளில் சுகமான சொற் சிலம்பம் ஆடியவர் வாலி.

கர்நாடக சங்கீதம் : எனக்கு தெரிந்து பாடல் ஆசிரியர்களில் பாடலைக்கேட்டதும் ராகத்தை
சொல்லுகின்ற அளவிற்கு கர்நாடக சங்கீதம் தெரிந்தவர் வாலி தான். நான் அவரை நேர்காணல் செய்த 'வாலிப வாலி' நிகழ்ச்சியிலேயே வெளிப்பட்ட விஷயம் அது.சின்னவயதில் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது சங்கீத வித்வான்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தால் விளைந்தது அது என்று வாலியே குறிப்பிட்டிருக்கிறார்.அதுபோல மற்றொரு அம்சம் வாலியின் வேகம்.
“விஜய்” நடித்த காவலன் படத்திற்காக வித்யாசாகர் இசை யில் நானொரு பாடல் எழுதினேன்.
“சாரல் காற்றா சந்தனக்காற்றா
தீண்டித் தீண்டி துாண்டும் பார்வை
தென்றல் காற்றா?''
என்ற பல்லவியுடன் துவங்கிய அந்தப் பாடலை பதிவு செய்து விட்டு அமெரிக்கா போய் விட்டார் வித்யாசாகர்.பிறகு ஒரு சில நாட்களில் பல்லவியை மட்டும் மாற்ற வேண்டும் என்றார் இயக்குனர் சித்திக். இரண்டு முறை சந்தித்து நான் கூறிய பல்லவிகளில் அவருக்கு உடன்பாடில்லை. மூன்றாம் நாள் இரவு அவரை சந்தித்து பல்லவியை கொடுக்க வேண்டிய அவசரம். மாலை நேரம் வீட்டில் எழுதிக் கொண்டுஇருந்தேன். வாலியிடமிருந்து அலைபேசி. வீட்டிற்கு வர சொல்லி அழைத்த அவரிடம் “வேலை இருக்கிறது நாளை சந்திக்கிறேன்,” என்றேன். ''இல்லை இன்றே சந்திக்க வேண்டும்,'' என்றார். நான் யோசிக்கவும், “சரி என்ன வேலை” என்றார். இயக்குனர்
சித்திக்கிடம் கொடுக்க வேண்டிய பாடலை எழுதிக் கொண்டிருப்பதாக கூறினேன். உடனே மெட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வரும்படி கூறினார். சென்றேன்.சில விஷயங்களை என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.இரவு 8:00 மணி. அது வாலியின் உணவு நேரம். அவருடன் நானும் உண வருந்தி விட்டு வரவேற்பறைக்கு வந்தோம். நான் “ஐயா...... பாட்டு” என்றதும் “சரி மெட்டு என்னய்யா,'' என்றார். டைரக்டர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் கேட்டார். அவரிடம் கூறினேன்.
அடுத்த பத்தாவது நிமிடம் பல்லவி தயார். இயக்குனர் சித்திக்கை இரவே பார்த்துக் கொடுத்தேன். பிடித்து போனது அவருக்கு. (ஏதோ சில காரணங்களால் படத்தில் பாடல் இடம் பெறவில்லை). இரண்டு நாட்களாக என்னிடம் முரண்டு பிடித்த பல்லவி பத்தே நிமிடங்களில்
அவரிடம் வசமாகி விடுகிறது. இப்படி வேகமாக பாடல்எழுதுவது கண்ணதாசனுக்கும், வாலிக்கும் கைவந்த கலை.

கமல் பாட்டு :
பல்லவியை திருத்தி விட்டு
என்னிடம் அவர் சொன்ன
செய்திகள் தான் முக்கியம்.
“நான் யார் பாட்டுலேயும் கைவைக்க மாட்டேன்னயா.
மன்மத அம்பு படத்துக்கு தான்
எழுதின பாட்டை கமல் கொண்டு வந்து காண்பிச்சார். நல்லா
யிருக்குன்னு சொன்னேேன தவிர எதையும் திருத்தவில்லை. இதுக்கு முன்பு இளையராஜா இசை அமைத்த ஒரு படம். படத்தோட டைரக்டர் தான் பாட்டெல்லாம் எழுதி இருந்தாரு. ஆனா
ராஜாவுக்கு பாட்டு புடிக்கல. அது பெரிய நிறுவனத்தோட படம். அவங்க கூறியதால் பாட்டு வாங்கி எல்லாத்தையும் மாற்றி குடுத்தேன். ஆனால் அந்த டைரக்டர் பேர்லதான் பாட்டு இருக்கு அதற்கு பிறகு இப்ப உன் பாட்டு தான் திருத்தி இருக்கேன்,” என்றார்.

நான்கு தலைமுறை : நான்கு தலைமுறைநாயகர்களுக்கு பாடல்எழுதிய வாய்ப்பு வாலிக்கு மட்டுமே கிடைத்த வரம். அதே சமயம் மற்ற கதாநாயகர்களை விடவும் எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையில் இருந்த 'கெமிஸ்ட்ரி' தான் அபாரம்!உடல்நலமில்லாமல் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்த நேரம் தமிழக மெங்கும் ஒலித்த பிரார்த்தனை பாடல் கூட ஒளிவிளக்கு படத்தில் வாலி எழுதிய, 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு,' என்ற பாடல்தான். நலம் பெற்று தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆரை பார்க்கப் போன வாலியிடம் ஜானகி பாடலை நினைத்து நன்றி சொல்ல உடனே வாலி “அண்ணன் பிழைச்சது வாலி பாக்கியம் இல்ல உங்க தாலி பாக்கியம்,” என்றாராம்.

எம்.ஜி.ஆரும், வாலியும் : ஆரம்பம் முதலே திரைக்கதை வாயிலாக தனக்கென ஒரு இமேஜை வளர்த்துக் கொண்ட எம்.ஜி.ஆருக்கு பட்டுக் கோட்டைக்குப் பிறகு பாடல்களின் வழியாக அந்த இமேஜை பரவலாக்கியவர் வாலி தான்.இத்தனைக்கும் எம்.ஜி.ஆர். தன்னிடம், இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லி எழுதி வாங்கிய ஒரே பாடல் 'நேற்று இன்று நாளை' படத்தில் இடம் பெற்ற “தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று” என்ற பாடல் மட்டும் தான் என்று என்னிடம் ஒரு முறை வாலியே கூறியிருக்கிறார். ஆக சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு எம்.ஜி.ஆர் மனநிலையை அறிந்து பாடல் எழுதியவர் வாலி.

தமிழ்த் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் என் மனதில் எழுவது இதுதான் “கவிஞர் வாலியின் பெயரில் ஒரு திரைப்பட விருதை வரும் ஆண்டு முதல் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆருக்கு நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற
இந்த நேரத்தை தவிர கவிஞர் வாலியின் பெயரில் விருதை ஏற்படுத்த இன்னொரு பொருத்தமான நேரம் இருக்கிறதா என்ன?

-கவிஞர் நெல்லை ஜெயந்தா
எழுத்தாளர்
99406 97959

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ganapati sb - coimbatore,இந்தியா

    வாலிபக்கவிஞ்சர் வாலியின் திரைப்பாடல்களில் என்றும் வாலிபம் இருக்கும் காப்பிய கவிஞ்சர் வாலியின் ராமாயண மஹாபாரத கந்தபுராண காப்பியங்களில் ஆன்மிகம் இருக்கும் ஒப்பற்ற தமிழ் கவிஞ்சர்களின் வரிசையிலே வாலியின் பெயர் அழியாது நிலைக்கும்

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    வாலி, மேடையில் பேசுனா ஜாலி.. ஆனா இன்னிக்கி அவர் இருக்குமிடம் காலி..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement