Advertisement

கவனிக்க வேண்டிய காவல் துறை!

காவல் துறையினரின் பணித்திறன், நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. குற்றவாளிகளுக்கு கிடைக்கும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்கள், காவல் துறை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை.

களப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ் நிலை அலுவலர்களில், ஓரளவு கணினி பற்றி தெரிந்தவர்கள் அல்லது படித்தவர்களே, 'சைபர் க்ரைம்' பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனினும், அவர்களுக்கு உதவ, தொழில்நுட்பத்தில் முழுமையாக தேர்ச்சி பெற்ற பொறியியல் வல்லுனர்கள் நியமிக்கப்படவில்லை.

மொபைல் போன் உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றங்கள், பல வழக்குகளில் துப்பு துலங்க உதவியாக இருக்கிறது. ஆனால், அந்த தகவல்களை சேகரிக்கவும், கண்காணிக்கவும், தனியார் நிறுவனத்தின் தயவைத் தான் நாட வேண்டியிருக்கிறது.

அந்த பிரிவில் குவியும் வழக்குகளுக்கு ஈடான, அலுவலர்களும், உபகரண வசதியும் இல்லை. மொபைல் போன் களவு போவதை அவர்கள் வழக்காகவே பதிவு செய்வதில்லை.பொதுமக்களிடம் இருந்து புகாரை வாங்க மறுக்கின்றனர். கீழ்மட்ட காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை திறமை வீணடிக்கப்படுகிறது.

ஒரு புகாரைப் பெற்று, ரசீது கொடுக்கக்கூட, ஆய்வாளரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அது போல, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை தயாரிக்க, கண்காணிப்பாளரின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

இப்போதெல்லாம், காவலர் பதவியில் கூட, பட்டதாரிகள் சேருகின்றனர். ஆனால், திறமைக்கேற்ற அலுவல், அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. முன்பெல்லாம், எட்டாம் வகுப்பு படித்த ஏட்டையா, புகார்களை விசாரித்து, சமரசம் செய்து வைத்தார்.

இப்போது, காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்கள், ஆய்வாளருக்காக காத்திருந்து விட்டு, தாதாக்களிடமும், கூலிப்படையிடமும், போக ஆரம்பித்து விட்டனர். தாதாக்களும், கூலிப்படையும் உருவானதற்கு, போலீஸ் அதிகாரிகள் தான் காரணம்.

காவல் துறையில் உள்ள பல தனிப்பிரிவுகள், ஓய்வை நாடும் திறமையற்ற அதிகாரிகளின் புகலிடமாகவும், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடமாகவும் தான் திகழ்கின்றன.காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்யப்படும் வழக்குகளில் காட்டப்படும் முழு முயற்சியும், உத்வேகமும், தனிப்பிரிவுகளில் பதிவாகும் வழக்குகளில் காட்டப்படுவதில்லை. 'இதெல்லாம் இங்கு வழக்கமில்லை' என, தட்டிக்கழித்து கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, ஒரு மாவட்ட கூட்டுறவு வங்கியில், ஒரு நபர், நகை மதிப்பீட்டாளர் துணையுடன், சில வாடிக்கையாளர்கள் மூலம், போலி நகையை அடகு வைத்து, பெண் கிளை மேலாளரை ஏமாற்றி, கடன் பெற்று விட்டார்.

அந்த வழக்கில், அந்த வங்கி அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர், அடகு வைத்த நபர் மற்றும் வைத்துக் கொடுத்த வாடிக்கையாளர்களை தவிர்த்து, அந்த கிளை மேலாளரை பணத்தைக் கட்டச் சொல்லி மிரட்டினர்.அதற்கு மறுப்பு தெரிவித்த, பெண்ணான அந்த மேலாளர் கொடுத்த புகாரை மறைத்து, அவரையும் சேர்த்து, தனிப்பிரிவில் புகார் கொடுத்து விட்டனர்.
ஒரு ஆண்டாக, அந்த வழக்கை விசாரிக்கும் தனிப்பிரிவு, குற்றவாளிகளை கைது செய்த பிறகும், பணத்தைக் கைப்பற்றாமல், காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.

இது போல, பல கிளை மேலாளர்கள் பலிகடாவாகி, பணத்தைக் கட்டி, கடனாளிகளாக இருப்பதாக சொல்லப்படுகிறது. காவல் துறையின் பணித்திறன் குறைந்து விட்டதற்கு, இது போல பல உதாரணங்களை கூறலாம்.சிலை தடுப்புப்பிரிவு ஆய்வாளரே, கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்று, பணம் சம்பாதித்ததோடு, உரிய காலத்தில் பதவி உயர்வையும் பெற்று இருக்கிறார். அவருக்கு மேலிருந்த கண்காணிப்பு அதிகாரிகள், மெத்தனமாக இருந்தது தான் இதற்கு காரணம்.

பல சந்தர்ப்பங்களில், நீதிமன்றம், உயரதிகாரிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து, எச்சரித்துள்ளது.தனியார் நிறுவனங்களிலும், வீடுகளிலும், பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன், பல வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபட்டிருக்கின்றனர்.காவல் துறை, அது போன்ற கேமராக்களை, நகரின் முக்கிய பகுதிகளிலும், சாலை சந்திப்புகளிலும் ரகசியமாக பொருத்தினால், குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமின்றி, குற்றவாளிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் குற்றங்களைத் தடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இப்போதெல்லாம், குற்றங்கள் நடந்து, பல மாதங்கள் கழித்து தான், காவல் துறையின் கவனத்துக்கு வந்ததாக கேள்விப்படுகிறோம்.காவல் துறையின் உளவுப்பிரிவு சரியாக செயல்படவில்லை என்பதையும், காவல் துறைக்கு தகவல் கொடுப்பவர்களை நியமிக்கவோ, அணுகவோ, காவல் அதிகாரிகள் தவறி விட்டனர் என்பதையும், இது காட்டுகிறது.

காவல் துறை - பொதுமக்கள் உறவு நன்றாக இல்லை என்பதையும், மக்களின் நம்பிக்கையை அது இழந்து விட்டது என்பதையும் தான், இது புலப்படுத்துகிறது.சமூக காவல் பணி என்ற பெயரில், சில நாடுகளில் காவல் துறையினர் பின்பற்றும் முறையை, நம் நாட்டிலும் பின்பற்றினால் தான், இங்கும், காவல் துறை, மக்களின் நன்மதிப்பை பெறும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

சமீப காலமாக, காவலர்கள், தங்களின் குறைகளைத் தீர்க்க, சங்கம் வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.காவல் துறையிலும், ராணுவத்திலும், ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம், அவர்கள் கையில், உயிரைக் கொல்லக்கூடிய துப்பாக்கி கொடுக்கப்பட்டிருப்பது தான்.

பயிற்சியின் போது கூட, மூன்று மாதம், ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து, தகுதியடைந்த பிறகு தான் ஆயுதம் கொடுக்கப்படுகிறது.அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போது, வரம்பு மீறி வன்முறையில் ஈடுபட்டால், தடுப்பதற்கும், அடக்குவதற்கும் கடமைப்பட்ட காவலர்கள் போராட துவங்கினால் கட்டுப்படுத்துவது யார்?

காவலர்களின் குறைகளை வாராந்திர, 'கவாத்' எனப்படும், சிறப்பு ஆய்வு நாளின் போது, கேட்டறியும் முறை சரியாகப் பின்பற்றப்பட வேண்டும்.அதிகாரிகளும், அரசும், காவலர்களின் தேவையை உடனுக்குடன் அறிந்து, பூர்த்தி செய்யத் துவங்கி விட்டால், அவர்கள் குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருக்காது.

மற்ற மாநிலங்களுக்கு இணையான ஊதியம், உரிய காலத்தில் பதவி உயர்வு, அவர்களது குழந்தைகளுக்கு பள்ளி, கல்லுாரிகளில் முன்னுரிமை போன்ற நியாயமான கோரிக்கைகளை, அரசும், அரசு அதிகாரிகளும், தாங்களே முன் வந்து நிறைவேற்ற வேண்டும்.உரிமைக்கு அவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தால், கடமையை மறந்து விடுவர். அப்படி அவர்கள் குரல் கொடுப்பது கூட, நடத்தை விதிகளை மீறிய செயல் தான்.

காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்தி, நல்லவர்களுக்கு உதவி செய்தால், அவர்களின் நன் மதிப்பையும், மரியாதையையும், நட்பையும் பெறலாம்.வேறு எந்தத் துறையிலும் இல்லாத அளவுக்கு, மக்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பது, காவல் துறை தான். நல்லது செய்தால் போற்றுவதும், கெட்டது செய்தால் துாற்றுவதும் அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.

காவல் துறையின் உயரதிகாரிகள் இல்லத்தில், 'ஆடர்லி' எனப்படும், உதவியாளர்களாக, காவலர்கள் நியமிக்கப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் என, சிலர் கூறுகின்றனர்.உண்மையில், அந்த பதவி, மிக அத்தியாவசியமான பதவி. துணை கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு மேலுள்ள அதிகாரிகள் இல்லத்தில், 'கேம்ப் ஆபீஸ்' எனப்படும், முகாம் அலுவலகம் இருக்கும்.அங்கு, 24 மணி நேரமும் யாராவது சிலர், அலுவலில் இருந்து, அந்த அதிகாரியின் கீழ் இயங்கும் நிலையங்களில் இருந்து வரும் தகவல்களையும், உயர் அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகளையும் பதிவு செய்து, அவ்வப்போது, அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

இரவு வரும் தகவல்களை, அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ப, உடனேயோ அல்லது காலையிலோ தெரிவிக்க வேண்டும். தகவல் பெறப்பட்ட நேரம், நடவடிக்கை எடுத்த நேரம் ஆகியவை, பல சந்தர்ப்பங்களில், நீதிமன்றம் முதல், விசாரணைக் கமிஷன் வரை பரிசீலிக்கப்படுவதும் உண்டு.எனவே, காவல் துறையைப் பற்றி, காவலர்களின் அலுவல் தன்மை பற்றி தெரியாதவர்கள், ஆடர்லி பற்றி முன்னர் பேசினர். இப்போது, காவல் துறையில் பணியாற்றும் சிலரே, பேசுவது தான் விந்தையாக இருக்கிறது.

பொதுமக்கள், காவலர்களை மதித்து, ஒத்துழைப்பு வழங்க, அவர்கள் விரும்புவது, எல்லாரையுமே சமூக விரோதிகள் போல பார்க்காமல், இனிமையாக பழகி, பணியில் நேர்மையாகவும், கடமை உணர்வோடும் செயல் பட வேண்டும்.
- மா.கருணாநிதி -
காவல் துறை கண்காணிப்பாளர்
(பணி நிறைவு)
இ - மெயில்: spkarunagmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

  நீங்கள் குறிப்பிட்டு உள்ள பல்வேறு கருத்துகள் முற்றிலும் உண்மையானவை . உங்கள் கருத்துக்களில் உள்ள பல்வேறு அம்சங்களை உங்கள் காவல் துறையில் பனி புரியும் அனைவருக்கும் 8 மணி நேர புத்தாக்க பயிற்சிக்கு ஏற்பாடு செய்தால் ஆறு மாதத்தில் நீங்களும் நானும் சேர்ந்து எந்த வித பண பயனும் எதிர்பார்க்காமல் முறையாக பயிற்சி அளித்து காவல் துறையை உத்வேகம் அடைய செய்யலாம் துறையின் மாண்பு மரியாதை அந்தஸ்து மதிப்பு கண்ணியம் பராக்ரமம் மற்றும் எல்லாம் மேம்படும் .

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  இதையே அவர் பணியில் இருக்கும்போது கூறியிருக்கலாமே? நடவடிக்கையும் எடுத்திருக்கலாம்.

 • Abdul Khader - Riyadh,சவுதி அரேபியா

  Rtd SP Mr.Karunanidi's every posting is remarkable one. If his service would have been extended, he could have contributed his excellent job for the welfare of public. Even now, it is not too late to re-appoint him.

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  காவல் துறையின் உண்மை முகத்தை கூறும் அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement