Advertisement

விளையாட்டும் கல்வியே...

இன்று நம்மில் பலரும் கல்வி என்றால் புத்தகப்படிப்பு மட்டும் தான் என தவறாக புரிந்து கொண்டுள்ளோம். குழந்தைகளை ஆரோக்கியமாக வும், மன வலிமையுள்ளவர்களாகவும் மாற்ற வேண்டிய கல்வி அவர்களை புத்தகப் புழுக் களாகவும், மனப்பாட இயந்திரங்களாகவும் மாற்றியிருக்கிறது.
ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
என பாரதியார் பாடி குழந்தைப்பருவம் முதல் விளையாட்டை மேற்கொள்ள துாண்டு கோலாக திகழ்ந்தார்.

அடிப்படை உடல் வளமே : விவேகானந்தர், ''கீதையை படிப்பதை விட கால்பந்தை அடிப்பதன் மூலம் சொர்க்கத்திற்கு அருகில் செல்லலாம்,'' என்றார். மனவளத்திற்கும், அறிவு
வளத்திற்கும் அடிப்படை உடல் வளமே. அந்த உடல் வளத்தை பேணி காக்க உதவுவது விளையாட்டு. குழந்தைகளின் மனது என்பது எந்த விதமான மன அழுத்தமும் இன்றி கவனச் சிதறல் இன்றி செயல்பாடுகளில் முழு ஈடு பாட்டுடன் இருப்பதாகும். ஆனால் நாமே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி அவர்களுடைய தனித்திறமையும், தன்னம்பிக்கையும் வளர்க்க தவறி விட்டோம்.

மதிப்பெண் நோக்கி ஓட்டம் : விளையாட்டு மைதானத்தில் ஓட வேண்டிய குழந்தைகளை மதிப்பெண்களை நோக்கி ஓட வைத்து விட்டோம். அவர்களது ஆசைகளையும், கனவுகளையும் கண்டுகொள்வதேயில்லை. நம் எண்ணங்களையும், கனவுகளையும் அவர்கள் மீது திணித்து அவர்களை சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை களாக மாற்றி விட்டோம். அவர்கள் தானாகவே செய்ய வேண்டிய செயல்களை நம்முடைய அவசரத்திற்காகவும், தேவைக்காகவும் சொல்லி சொல்லி செய்ய வைத்து அவர்கள் சுயசிந்தனையை அழித்து விட்டோம்.

சச்சினும், தோனியும் சதமடித்தால் சந்தோஷப்படும் நாம், நம் வீட்டு பிள்ளைகள் கிரிக்கெட் மட்டையைகையிலெடுத்தால் அவர்களை பந்தாடுகிறோம். மைதானத்தில் விளையாட நினைப்பவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறோம்.

'மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு' என்ற வரியை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய நேரம் இது தான்.ஆனால் இன்று மாலை வேளைகளில் மாணவர்கள் காலை முதல் கற்ற கல்வியை தனிப்பயிற்சி என்ற பெயரில் கடமைக்காக கடமையாக செய்கின்றனர்.

விளையாட்டு பாடவேளை : பள்ளிகளில் விளையாட்டு பாட வேளை உண்டு. அது உயர்நிலை வகுப்புகளில் வாரத்திற்கு இரு பாடவேளையும், மேல்நிலை வகுப்புகளில் வாரத்திற்கு ஒரு பாடவேளையும் உண்டு. அதன் நோக்கம் வாரம் முழுவதும் தங்களது பாடத்திட்டத்தையே படித்து சோர்வடைந்த மாணவர்கள் புத்துணர்ச்சியும், உற்சாகமும் பெறுவதற்காக தான்.மற்ற எல்லா பாடவேளைகளுக்கும் ஆசிரியர்கள் வகுப்பறையை நாடி வருவார்கள். ஆனால் விளையாட்டு பாடவேளையில் மட்டும் மாணவர்கள் மைதானத்தில் உள்ள ஆசிரியரை நாடி வருவார்கள்.
இவ்வளவு ஏன்? இன்றுபள்ளிகளில் சிறிது நேரம் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் கூட நிற்க முடியாமல் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். அதற்கு காரணம் உடல் வலிமை
யின்மையே.படிக்கின்ற மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படக் கூடாது என்று வெறும் பேச்சளவில் மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் போதாது, அவர்களதுவிருப்பங்களை சுதந்திரமாக செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்.துவக்க காலத்தில் மாணவர்கள் மைதானத்தில் விளையாடினார்கள். அதன் பின்பு வீட்டிற்குள்ளே சிறிய திரையில் விளையாட்டை
ரசித்தார்கள். இப்போது உள்ளங்கையில் உள்ள அலைபேசியில் விளையாடி மகிழ்கிறார்கள். விளையாட்டில் ஜெயிப்பவரைபாராட்டலாம். விளையாட்டில் தோற்பவரை கூட பாராட்டலாம். ஆனால் பார்த்து கொண்டு இருக்கும் நபரை எவ்வாறு பாராட்ட முடியும்.

வாழ்க்கையின் தத்துவங்கள் : விளையாட்டுகளை நாம் இதுவரை விளையாட்டுகளாக மட்டும் தான் பார்த்து வந்தோம். ஆனால் அவை அனைத்தும் வாழ்க்கையின் தத்துவங்கள் ஆகும்.
பரமபதம் என்ற விளையாட்டு வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது என்பதை நமக்கு உணர்த்திய ஒருஅற்புதமான விளையாட்டாகும்.எண்ணிக்கையில் கூட்டலையும், பெருக்கலையும் விளையாட்டாய் கற்று கொடுத்து 'கிட்டிப்புல்' என்ற விளையாட்டு.
'தாயம்' என்ற விளையாட்டு, நம்மை வெட்டி வெயிலில் துாக்கி எறிந்தாலும் மீண்டும் தொடக்கத்தில்இருந்து துவங்கி இலக்கை அடைய சொல்லி கொடுத்தது.வேறு வழியில்லை என்ற நிலை வரும் வரை போராடு என்று நம்மை செதுக்கிய விளையாட்டின் பெயர் 'சதுரங்கம்' ஆகும்.
ஒளிந்தவர்களை கண்டு பிடிக்கும் பொறுமையை, ஒளிந்திருப்பதில் பொறுமையை பெற்று தந்தது 'கண்ணாமூச்சி' என்ற விளையாட்டு. தாம் அடுத்தவருக்கு சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற நெறியை நமக்கு ஊட்டியது 'நொண்டி' என்ற அற்புதமான சாகசம்.'பல்லாங்குழி' என்றவிளையாட்டு நமக்கு இருக்கும் இடத்தில் எடுத்து இல்லாத இடத்தில் நிரம்பும் குணத்தை கொடுத்தது.நண்பன் உயரம் போக முதுகும், தோளும் கொடுத்து குனிந்து பணிந்து நிற்க சொல்லி கொடுத்தது 'பச்சை குதிரை' என்ற பண்பு மிக்க விளையாட்டு.
இன்னும் எத்தனையோ விளையாட்டுகள் நமக்கு தேவையான விஷயங்களை எளிமையாக சொல்லி கொடுத்தது. ஆனால் இன்று நாம் இத்தனை விளையாட்டுக்களையும் தொலைத்து விட்டு துாரத்தில் நிற்கிறோம்.தொழில் நுட்ப வசதி நமது உடல் உழைப்பை ஒதுக்கி வைத்து, சோம்பேறித்தனத்தை வளர்த்தது. நோய்களை வரவழைத்தது. இன்பத்தை அழித்தது. இன்னல்களை அளித்தது.பாடத்திட்டத்தில் முக்கிய அம்சம் பொதுவாக விளையாட்டு என்பது மாணவனின் பாடத்திட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம். சிறு வயதில் பள்ளி பருவத்தில் அவனுக்கு என்னென்ன விஷயங்கள் தேவையோ அத்தனையை யும் அவனுக்கு கற்றுதருகிறது விளையாட்டு கல்வி.தன் வாழ்க்கையில் வெற்றிக்கனியை எட்டிபறிக்க துாண்டும் இலக்கை நிர்ணயிக்க வைப்பது விளையாட்டு.அந்த இலக்கை அடையும் வழியை காண வியூகம் அமைக்க செய்தது தான் இந்த விளையாட்டு.வியூகம் அமைக்க செய்து, வெற்றிக்காக திட்டம் தீட்ட செய்வது தான் விளையாட்டு.தாழ்வு மனப்பான்மை கொண்டவரிடம் உள்ள எண்ணத்தை அகற்றி தன்னம் பிக்கையை வளர்ப்பது தான் விளையாட்டு.

கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே எளிதாக இலக்கை அடைய முடியும் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்தியது விளையாட்டு.போட்டி என்று வரும் போது எதிரியின் பலவீனம் அறிந்தும்
நம்முடைய பலம் அறிந்தும் செயல்பட செய்தது தான் விளையாட்டு. ஓய்வு நேரத்தை வீணாக கழிக்காமல் உற்சாகமாக போக்கவும் அதன் மூலம் உடல் வளத்தை உயர்த்தவும் தனித்
திறமையை வளர்க்கவும் உறுதுணை புரிவது விளையாட்டு.இந்த விளையாட்டு தன்னுடைய வாழ்வில் ஏற்படும் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வழிகாட்டுகிறது. ஈட்டிய வெற்றியை இழந்து விடாமல் தக்க வைத்து கொள்ள தொடர்ந்து உழைக்க துாண்டுகிறது.இன்று சிறு வயதுள்ள மாணவர்களுக்கு கூட நீரிழிவு, கொழுப்பு சத்து போன்ற நோய்கள் உடல் உழைப்பின்மையால் ஏற்படுகிறது.இன்று எத்தனையோ நிறுவனங்களில் விளையாட்டு துறையில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இவ்வளவு ஏன் பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் கூட விளையாட்டு வீரர்களுக்கு பின்னால் தான், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இவ்வளவு உண்மைகள் தெரிந்தபின்பும் விளையாட்டை புறக்கணிக்காமல் தினமும் விளையாடுவோம். உடலாலும், மனதாலும் பலமாகுவோம்.

-எஸ்.ராஜசேகரன்
தலைமை ஆசிரியர் (பொறுப்பு)
இந்து மேல்நிலைப் பள்ளி
வத்திராயிருப்பு. 94429 84083

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement