Advertisement

கலங்கடிக்கும் கறுப்பு பணமும், கலப்படமும்

கறுப்பு பணம் நாட்டின் பொருளாதாரத்துடன் கலந்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை சீர்குலைக்கும். அதை தடுத்து நிறுத்தும் தைரியமான முயற்சியில் பிரதமர் நரேந்திரமோடி பல வழிகளில் இறங்கியுள்ளார். அதில் அவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது ஒவ்வொரு சாமானிய குடிமகனின் ஆசையாக இருக்கிறது. பிரதமரின் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான பலன்
உடனடியாக கிடைக்காவிட்டாலும், எதிர்கால இந்தியாவிற்கு பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ரூபாய் நோட்டை செயலிழப்பு செய்த நேரத்தில், சிரமங்கள் இருந்தாலும் எப்படியோ நாட்டில் கறுப்பு பண முதலைகள் ஒழிந்தால் சரி என்றே மக்கள் நினைத்தனர். கறுப்புப் பண கலப்படத்தை தடுக்காவிட்டால் நாட்டிற்கு கேடு. அதுபோல உணவுப்பொருட்களில் கலப்படத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் அது உடல் நலத்திற்கு சீர்கேடு.

குழப்பத்தில் மக்கள் : தனியார் நிறுவன பாலில் கலப்படம் மற்றும் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவதாக பால் வள அமைச்சரே குற்றம் சாட்டி யிருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உணவுப்பொருட்களில் கலப்படம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டு தான் உள்ளன. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்த போதும் கூட அதை முற்றிலும் தடுத்து நிறுத்தியதாக வரலாறு இல்லை.

காவு வாங்கிய கலப்படம் : சில ஆண்டுகளுக்கு முன் ஓசூர் அருகில் விஷ சாராயம் குடித்து பலர் இறந்த செய்தி தமிழகத்தை பதற வைத்தது. அதுபோல கடுகு எண்ணெயில் கலப்படம்
செய்ததால் சிலர் இறந்தனர் என்ற செய்தியும் வெளியானது. மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் டீத்துாளில் கலப்படம்நடந்ததை அதிகாரிகள்கண்டறிந்தனர். கலப்படம்
செய்வதற்காக வைக்கப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். வழக்கமாக உணவுப்
பொருட்களை வாங்கி பல்வேறு பண்டங்கள் செய்து சாப்பிட விரும்பும் மக்கள் அவை தரமானதா? என தரம் பிரித்து பார்த்து வாங்குவதற்கு ஏனோ முயற்சிப்பதில்லை. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். இதில் நகரத்தில் வசிப்பவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். நடப்பதற்கு கூட நேரமின்றி ஓடிக் கொண்டே இருக்க வேண்டிய இயந்திரத்தனமான வாழ்க்கை அவர்களுடையது. இவர்களின் வாழ்வு நிலை உணர்ந்தே திடீர் பொருட்கள் கடைகளெங்கும் இன்று மழைக்கால காளான் போல முளைத்து கிளம்பியிருக்கிறது. கலப்படம் மிகுந்த இந்த திடீர் பொருட்களை சாப்பிட்டு வந்தால், வியாதிகள் மிகுந்து ஒரு நாள் உடல் கெட்டு விடும்.

எதிலும் கலப்படம் : பயிர்களை வாழவைக்கும் மழை, சில நேரம் வெள்ளமாக மாறி அதே பயிர்களை அழித்து விடும். அதைப்போல உயிர் காக்கும் மருந்துகளில் கலப்படம் செய்யும் கொடுமையால் மக்கள் உயிரையே இழக்க வேண்டிய அபாயம் இருக்கிறது. அன்னப் பறவைகளல்ல நாம். ஆனாலும் பாலில் தண்ணீர் கலப்பதை அன்றாடம் காலையில் அறிந்தே நாம் காபி குடிக்கிறோம். காபியிலும், டீயிலும் கலப்படம். வெண்ணெயின் எடையைஅதிகரிக்க பல்வேறு மாவுப்
பொருட்களை அதில் கலப்பது, கடைக்காரர்களின் அன்றாட பொழுது போக்கு. அதுபோல மிளகாய் துாளில் செங்கல் பொடி கலக்கப்படுகிறது. தேனில் வெல்லம், சர்க்கரை பாகு கலக்கப் படுகிறது. மஞ்சள் துாளில் நிறமேற்றிய மரத்துாள் கலக்கப்படுகிறது. சமையல் எண்ணெயில்
மலிவான ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் செய்யப்படுகிறது.

கண்டறியும் முறைகள் : கஷ்டப்படாமல் காரியமாக வேண்டும் என்ற கொள்கையில் நாம் கவனமாயிருப்பவர்கள். ஆனால் கலப்பட பொருட்களை வாங்கும் விஷயத்தில் கவனக்
குறைவாய் இருந்தால் பிரச்னை தான். கொஞ்சம் சிரமப்பட்டால் கலப்பட பொருட்களை
கண்டறிவது ரொம்ப சுலபம். பாலில் நீர் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய லாக்டோ மீட்டரை பயன்படுத்துகிறோம். சில துளிகள் அயோடின் திரவம் சேர்க்கப்படும் போது, கருநீல
நிறமாக மாற்றம் ஏற்பட்டால் வெண்ணெயில் மாவுப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதை கையும்
களவுமாக பிடித்து விடலாம். மிளகாய் துாளில் செங்கல் துாள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க மிளகாய் துாளை நீரில் கலக்கலாம். செங்கல் துாள் கலக்கப்பட்டிருந்தால் அது அடியில் சென்று விடும். மிளகாய் துாள் மிதக்கும். இதற்கு மற்றொரு சோதனையும் செய்து பார்க்கலாம். மிளகாய் துாளை தீயில் காட்டுகிற போது, சிவப்பு நிறமாக எரிந்தால் அதில் செங்கல் துாள் கலக்கப்பட்டிருப்பது தெரியும்.

கவர்ந்திழுக்கும் காந்தம் : கவர்ந்திழுக்கும் காந்தத்தை உபயோகித்து பொருட்களில் இரும்புத்துாள் இலவச இணைப்பாக இணைக்கப்பட்டுஉள்ளதா என்பதை புலனாய்வு செய்யலாம். கொஞ்சம் ைஹட்ரோ குளோரிக் அமிலம் போதும். நீலங்கலந்த பச்சை நிறம் தோன்றி உடனே மறைந்து விட்டால் பெருங்காயத்தில் பிசினும், ரெசினும் பின்னிப்பிணைந்திருப்பது வெட்ட வெளிச்சமாக்கும். தேனில் வெல்லப்பாகும், சர்க்கரை பாகும் கலந்திருக்கிறதா என்பதை கண்டறியும் முறை நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். நீரில் சிறு துளி தேன் சேர்த்தால் அது
கலப்படமற்றதாக இருந்தால் நுாலாக பிரியும். சர்க்கரை பாகு சேர்க்கப்பட்டிருந்தால் கரையும், இதை கண்டுபிடிக்க மற்றொரு முறையும் உண்டு. நல்ல தேன் துளியை ஒரு தாளில் இட்டால்
அப்படியே இருக்கும். சர்க்கரை பாகு கலந்த தேன் என்றால் தாள் ஊறி விடும்.

விழிப்புணர்வு தேவை : கலப்பு திருமணம் செய்து கொண்டால் பிறக்கும்குழந்தைகளாவது ஆற்றல் உள்ளவர்களாக பிரகாசிப்பர் என்பார்கள். நன்மை மிகுந்த அந்த மனித கலப்பட
விஷயத்தில் ஆணவ கொலைகள் வரை போகும் அவலம் நம் நாட்டில் உள்ளது. ஆனால் தீமைகள் மிகுந்த பொருட்களின் கலப்படத்தை தடுத்து நிறுத்துவதில் ஏன் மக்கள் ஆர்வம்
காட்டுவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது. கலப்பட பொருட்களை கண்டறிந்து, அவற்றை ஒதுக்குவோம். நம் உடல்நலனில் அக்கறை கொள்வோம்!

-எல்.பிரைட்
எழுத்தாளர், தேவகோட்டை
96980 57309

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement