Advertisement

நாடகமே உலகம்!

கூத்து என்னும் சொல் முதலில் நடனத்தையும், பின்பு கதை, தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. இயற்றமிழைப் புலவரும், இசைத் தமிழைப் பாணரும் பேணி வளர்த்தாற் போலவே, நடனத்தையும் நாடகத்தையும் கூத்தர் என்போர் பேணி வளர்த்தனர். நடனம் ஆடும் மகளிர் விறலியர் எனப்பட்டனர். உள்ளக் குறிப்புப்புறத்தில் தோன்றும்படி திறம்பட நடிப்பவள் விறலி (திருச்சிரப்பள்ளிக்கு அண்மையில் உள்ள விறலி மலை என்பது இன்று தவறாக 'விறாலிமலை' என வழங்குகிறது) எனப்பட்டாள்.
கூத்தி, கூத்தர் ஆகிய இவர்கள் கதை தழுவி வரும் கூத்துக்களை ஆடினர். அங்ஙனம் ஆடிய ஆண்மகன் பொருநன் என்றும் பெயர் பெற்றான்.
தமிழ் தொன்றுதொட்டு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளைப் பெற்றிருந்தது. சிலப்பதிகாரம் ஒன்றே இன்று நாடகக் காப்பியமாக இருந்து வருகிறது. சிலப்பதிகார காலத்தில் வடமொழியாளர் கூட்டுறவு தமிழகத்தில் மிகுதியாக இருந்தது. அக்காலத்தில் நாடகம் என்னும் சொல், கூத்து என்னும் சொல் போன்றே நடனத்தையும், கதை தழுவி வரும்
கூத்தையும் குறித்தது.கோவில் விழாக்களிலேயே நாடகம் தோற்றம் எடுத்தது என்பது அறிஞர் கருத்து. ஆடல், பாடல் என்னும் இரண்டின் சேர்க்கையாக முதலில் நாடகம் அமைந்திருந்தது. பின்பு, பாட்டாலமைந்த உரைநடை இடையிடையே கலந்தது. அதன் பிறகு பேச்சு நடையிலமைந்த உரைநடை சேர்ந்தது.
எனவே, ஆடல், பாடல் வடிவில் அமைந்த உரைநடை, பேச்சு உரைநடை என்பன சேர்ந்து நாடகத்தை அழகு செய்தன.
இங்ஙனம் வளரத் தலைப்பட்ட நாடகம், அரசருக்கு என்றும், பொதுமக்களுக்கு என்றும் இருவகையாகப் பிரிந்தது. அவை, 'வேத்தியல்,' 'பொதுவியல்' எனப்பட்டன.
நாடகம் நன்முறையில் வளர்ந்து வந்த பொழுது, இந்நாட்டில் வந்து தங்கிச் செல்வாக்குப் பெற்ற ஆரியரும், சமணரும் நாடகம் காமத்தை மிகுதிப்படுத்துவதென்று தவறாக எண்ணினர்; அதனால், நுால்களில் நாடகத்தின் மதிப்பைக் குறைத்தனர்.
அவர்கள் செல்வாக்கு மிகுதிப் பட்டிருந்த காலத்தில், நாடகத் தமிழை வளர விடாமல் தடுத்தனர். எனவே, நாடக வளர்ச்சி படிப்படியாகக் குறைந்தது.
பல்லவர் காலத்தில் கி.பி. 7ம் நுாற்றாண்டில் பல்லவ மகேந்திரவர்மன், 'மத்த விலாசப் பிரகசனம்' என்னும் வேடிக்கை நாடகத்தை வடமொழியில் எழுதினான். வடமொழியில் சிறு நாடகங்கள் சில இராசசிம்ம பல்லவன் காலத்தில் செய்யப்பட்டன.
பக்தி இயக்கம் பரவத் தொடங்கிய அக்காலத்தில் சமயம் தொடர்பான நாடகங்கள் தலைதுாக்கின என்பது தெரிகிறது. கி.பி. 8ம் நுாற்றாண்டில் செய்யப்பெற்ற உதயணன் வரலாற்றைக் கூறும் 'பெருங்கதை'யிலும் நாடகத்தைப் பற்றிய செய்திகள் சில காணப் படுகின்றன.
சோழர் காலத்தில் கி.பி. 10ம் நுாற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கின்றது என்று கூறியுள்ளது.
“இளைமையங் கழனிச் சாயம்
ஏறுழு தெரிபொன் வேலி
வளைமுயங் குருவ மென்றோள்
வரம்புபோய் வனப்பு வித்திக்
கிளைநரம்(பு) இசையும் கூத்தும்
கேழ்ததெழுந் தீன்ற காம
விளைபயன் இனிதின் துய்த்து
வீணைவேந்(து) உறையு மாதோ.”
“நாடகத்தை விரும்பிக் காண்பவர் கண்களைத் தோண்டியும்.......இவ்வாறு பிறரை ஐம்பொறியால் நுகராமல் தடுத்து யாமும் நுகர்ச்சியைக் கைவிட்டேம்” என வரும் தொடர், சமணர் நாடகத்தை எந்த அளவு வெறுத்தனர் என்பதை நன்கு காட்ட வல்லது.”
“நாடகம் நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்றும்” -

-முத்தி இலம்பகம்இவற்றால், சிந்தாமணி எழுதப்பெற்ற கி.பி. 10ம் நுாற்றாண்டில் நாடகங்கள் தமிழ்நாட்டில் நடிக்கப்பெற்றன என்னும் உண்மையை உணரலாம்.

சோழருக்குப் பின்கி.பி.14ம் நுாற்றாண்டில், மாலிக்-கபூர் படையெடுப்புக்குப் பிறகு சேர, சோழ, பாண்டிய அரசுகள் நிலை தளர்ந்தன. விஜயநகர வேந்தர் ஆட்சி சிறிதுகாலம் சமயத்தைப் பாதுகாத்தது.
அப்பொழுது இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் புத்துயிர் பெற்றன. தென்னாட்டில் நாயக்கராட்சி மறையும் வரை இக்கலைகள் ஓரளவு உயிர்பெற்று வாழ்ந்தன. 17ம் நுாற்றாண்டுக்குப் பிறகு நாடு பல துறைகளிலும் அல்லற்பட்ட காரணத்தால் நாடகம் முதலிய கலைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.
கி.பி.19ம் நுாற்றாண்டின் முற்பாதியில் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையை ஆண்ட சரபோஜிமன்னர் மீது பாடிய குறவஞ்சி நாடகம் குறிப்பிடத்தக்கது.
அந்நாடகம் தஞ்சைப் பெரிய கோவிலில் நடிக்கப்பட்டு வந்தது. அதே நுாற்றாண்டின் கடைப் பகுதியில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாடிய மனோன்மணிய நாடகமும் போற்றத்தக்கதுவே.

இருபதாம் நுாற்றாண்டில்இருபதாம் நுாற்றாண்டின் முற்பாதியில் நாடகக்கலை நன்கு வளர்ந்தது. பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதியுள்ள பல நாடகங்கள் நாடெங்கும் நடிக்கப்பட்டன. சிறந்த நாடக ஆசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியுள்ள நாடகங்கள் பல.
அவற்றுள், அபிமன்யு சுந்தரி, பார்வதி கல்யாணம், பிரபுலிங்க லீலை, வள்ளி திருமணம், பாதுகா பட்டாபிஷேகம், இலங்கா தகனம், அல்லியர்ச்சுனா, சிறுத்தொண்டர், சதி அனுசூயா, பவளக்கொடி, மணிமேகலை, மிருச்சகடி, சீமந்தனி, சாவித்திரி, கோவலன், பிரகலாதன் என்பன குறிக்கத்தக்கவை.
கண்ணைய நாயுடு நாடகக் குழுவினர் நடித்து வந்த கிருஷ்ணலீலை, தசாவதாரம், ஆண்டாள் முதலிய நாடகங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சிறந்து விளங்கின.
நவாப் இராசமாணிக்கத்தின் குழுவினர் வள்ளி திருமணம், சம்பூர்ண ராமாயணம் முதலிய நாடகங்களை நடித்து வந்தனர்.காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்டு நாடகங்கள் பல இப்பொழுது பலரால் நடிக்கப்பட்டு வருகின்றன. என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினர்,
எம்.ஜி.ராமச்சந்திரன் குழுவினர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் குழுவினர், கே.ஆர்.ராமசாமி குழுவினர், சிவாஜி கணேசன் குழுவினர், எம்.ஆர்.ராதா குழுவினர், சகஸ்ரநாமம் குழுவினர், கே.ஏ.தங்கவேலு குழுவினர் முதலியோர் பயன்தரத்தக்க நாடகங்களை நடத்தி வந்தனர்.

நல்ல தமிழ் பேச்சுதமிழகத்தில் பல்லாயிரம் இளைஞர்களை நல்ல தமிழில் பேசப் பழக்கி வந்த அறிஞர் அண்ணாதுரை, சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்கவாசல் முதலிய நாடகங்களை எழுதியுள்ளார்.
மத்திய அரசு சகஸ்ரநாமம் என்ற நடிகர் பொறுப்பில் நடிகருக்குரிய நடிகர் பயிற்சிப்பள்ளி ஒன்றைச் சென்னையில் தொடங்கியுள்ளது.
அரசு நாடகக் கலை வளர்ச்சியில் நல்லார்வம் காட்டத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. சென்னைப் பல்கலைக் கழகத்திலும், இக்கலை வளர்ச்சிக்கு வகுப்பு நடத்தவும், அதனில் தேறியவருக்குப் பட்டம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வானொலியிலும் நாடகங்கள் அவ்வப்போது ஒலிபரப்பப் படுகின்றன. இக்கால உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லுாரிகளிலும் நாடக மன்றங்கள் இயங்கி வருகின்றன. அவற்றின் சார்பில் இளைஞர்கள் நடிப்புத்திறமை பெற்று வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.முனைவர் தி.சுரேஷ்சிவன்செம்மொழி இசைத்தமிழ் அறிஞர்மதுரை. 94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • VSK - CARY,யூ.எஸ்.ஏ

    நாடகக் காவலர் மனோகரை மறந்தீரே :(

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement