Advertisement

கலங்காதிரு மனமே

காலம் தந்த காயங்கள் எல்லோர் மனதிலும் உண்டு. நிரம்பிய குளத்திற்கு நிறைய பறவைகள்
வருவதைப் போல் வருந்திய நாட்கள் நம் வாழ்வில் சாரைசாரையாய் வரத்தான்
செய்கின்றன. கீறிய ரப்பர் மரங் களிலிருந்து கண்ணீராய் ரப்பர் பால் வடிவதைப்போல், சிலர் கூறிய முட்சொற்கள் நம் மனமரத்தைக் கீறிச் சோகத்துளிகளாய் பீறிட்டு வரத்தான் செய்கின்றன. ஆனாலும் காயங்களை மாயங்களாய் மாற்றும் மருந்தை வாழ்க்கை நமக்கு தரத்தான் செய்கிறது.வலியில்லாமல் வாழ்க்கை இல்லை என்கிற உண்மையை உணர்த்திய படி நம் நந்தவன நாட்கள் நகரத் தான் செய்கின்றன. “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என்று கன்னியின் காதலி எனும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த கவியரசு கண்ணதாசன் வாழ்வில் பட்ட துன்பத்தை விடவா நாம் பட்டுவிடப் போகிறோம். ஆனாலும் அவர் எதற்கும் கலங்கியதில்லையே. காலம்தந்த காயங்கள் ஒருபுறம் இருந்தாலும் நெஞ்சினிக்கும் நினைவுகளும் நிறைய உண்டுதானே!

கற்றதும் பெற்றதும் : முங்கிக் குளிக்கிற நதியில் தங்கித் தவிக்கிற மனசுடனும் புலப்படாப் புரிதல்களோடும் நம் நாட்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. முட்களுக்கு மத்தியில், அழகாகப் பூத்திருக்கும் ரோஜா மலராய் நித்தமும், இந்த வாழ்க்கை நிறைய புன்னகையோடு தான் பூக்கிறது. ஆனாலும் உணரத்தெரியாத உணர்வற்று நாம் துன்பச்சுழலில் சிக்கித் தவிப்பதாக நாம் நினைக்கிறோம். எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்கிறவர்களை ஏதும் தெரியாதவர்கள் எனக் காட்டி மாயம் செய்கிறது வாழ்வு. அனுபவ நுால்களை அனுதினமும் வாசித்து, மற்றவர்களின் வாழ்வுப் பக்கங்களை நுட்பமாய் உள் வாங்குகிறவர்கள் எந்த ஆற்றின் சுழலையும் எளிதாகக் கடந்து விடுகிறார்கள்.

துாயவாழ்க்கை : உடலாலும், சொல்லாலும், மனதாலும் சுத்தமாய் இருப்பவர்களை யாரும் எதுவும் செய்யமுடியாது. அழுக்கை அகற்றிய ஆடை, அணிந்திருப்பவரையும் அழகாகக் காட்டுவதுபோல், நம் உள்ளழுக்கு களை அகற்றும்போது நம் துாய வாழ்க்கை மேலும் துாய்மை
யாகிறது. எளிமை எல்லா நலன்களையும் நமக்குத் தருகிறது. வெள்ளைச் சட்டையில் பட்ட ஒருதுளி கருப்புமை அதன்மீதே பார்வையைத் திருப்ப வைப்பதைப் போல நாம் செய்யும் சிறுதவறுகளும் நம்மைக் கலங்கவைக்கும் களங்கமாய் மாறிவிடும். மாசு மருவற்ற துாய வாழ்க்கை
துன்பங்களை எல்லாம் துடைத்துவிடும். கடுஞ்சொற்கள் நமக்கான துன்பங்களுக்கு முன்னுரை
எழுதுகின்றன. மென்மையும் உண்மையும் நமக்கு மேன்மையைத் தருகின்றன.

காலத்தை உணர்வோம் : நாம் கடக்க வேண்டிய துாரம் மிக அதிகமானது. நம் வாழ்நாளோ வெகுசுருக்கமானது என்பதை நினைவில் கொண்டால், ஒரு வினாடியையும் நாம் தவறவிடமாட்டோம். இன்று புதிதாய் பிறந்தோம் என்று, வாழ்வின்ஒவ்வொரு நிமிடத்தையும் பயன் உள்ள வகையில் செலவழித்தால், இன்று மட்டுமல்லாமல் எல்லா நாட்களும் இனிமையான நாட்கள் தான். காலத்தின் அருமையை உணராமல், அசட்டையாய் இருப்பவர்களை கால ஓட்டம் கடுமை யாய் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. யாரோடும் பகை கொள்ளாதவர்களின் வாழ்வு மிக அழகாகக்
காட்சிதருகிறது. எப்போதும் விழிப்புடன் இருப்பவர்களைக் காலம் என்றும் கைவிடுவதில்லை.

நல்ல நட்பு : நட்புக்குள் இல்லை முட்பூ. நல்ல நண்பர்கள் நம் தவறுகளைச் சுட்டும் கண்ணாடிகள். அவர்கள் நம்மைப் பற்றி சொல்லும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொண்டால் வாழ்வில் கலக்கம் இல்லை. தவறுகள் சிறிதாய் இருக்கும்போதே திருத்தி கொள்ளாவிட்டால் அவை நம் வாழ்வையே சாய்த்துவிடும். என்ன நினைக்கிறோமோ
அதுவாகவே நாம் மாறுகிறோம். அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்துவிட்டு அவை நமக்குக் கற்பித்த பாடங்களை எப்போதும் நினைவில் கொள்வோம். நம் அனுமதியின்றி நம்மை யாரும் அவமானப்படுத்திவிடமுடியாது. வேறுயார் நம்மை ஊக்கப்படுத்தாவிட்டாலும் நம்மை எப்போதும் நாம் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்போம்.

நுண்கவனம் : அறியாமை நம் வாழ்வின் போக்கை மாற்றி நம்மை அடிமைப்படுத்திவிடும். எனவே ஒவ்வொரு வினாடியையும் நம்மை அறிவால் நிரப்பவேண்டும். உயர்ந்த இலக்குகளை முன்வைத்து நாம் இயங்கும்போது வரும் அவமானங்களைத் தாங்கும் திடமனம் இருந்தால் நாம் விரும்பும் இலக்கை அடையலாம். எல்லாவற்றையும் அமைதியாகக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக்கொள்கிற மனிதர்கள், வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். அடைந்த தோல்வி களிலிருந்து நாம் பெற்ற பாடம் வெற்றியை நோக்கி நம்மைக் கொண்டுசெல்லும்.

கலக்கம் வேண்டாம் : தேங்கிய நீர் குட்டையாகிறது. அருவியாய் மேலிருந்து விழுந்து சமவெளிகளில் ஓடும் நீர் ஆறாக மாறி ஆர்ப்பரித்து கரைபுரண்டு ஓடுகிறது. சுறுசுறுப்பும் விடா
முயற்சியும் வெற்றிக்கு வெகு அருகில் நம்மைக் கொண்டு நிறுத்துகிறது. முன்னேறிக்கொண்டே இருப்பவன் பின்னால் திரும்பிப் பார்க்கமாட்டான். வாழ்வின் மீதான உயர் நம்பிக்கையும் நேர்மையும் நம்மை வெகுவாக உயர்த்தும்.எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்று வரலாறு பார்ப்பதில்லை. வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம் என்றே பார்க்கிறது. சிலவற்றைப் பெறச் சில காலம் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறவர்கள் எதற்கும் கலங்காமலிருக்கிறார்கள். “பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமைதான்” என்று சொன்ன புத்தர், “மரணமே வந்தாலும்கலங்காதீர்கள்” என்று போதித்தார். மனிதப் பிறவி எடுத்ததே
மாற்றவர்களுக்கு நன்மைசெய்யத்தான் என்றும் சொன்னார்.

நிலையாமை : நீர்க்குமிழியைப் போல் ஏதும் நிலைக்காது என்கிற உண்மையைப் புரிந்துகொண்டவர்களே இன்பத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தைக் கண்டு துடித்துப் போகாமலும் “இதுவும் கடந்துபோகும்” என்று அமைதியாய் வாழ்கிறார்கள். வாரிவாரிவழங்கவே இரு கைகள் என்று உணர்ந்தவர்கள் ஈகையால்தங்களின் இருகைகளையும்
புனிதப்படுத்திக் கொள்கிறார்கள்.துன்பத்திற்கு இலக்கமானது உடல் என்று உணர்ந்த அறிஞர்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைத் துன்பமாக எண்ணி மனம் தளரமாட்டார்கள் என்ற பொருளில் திருவள்ளுவர்

“இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்”
என்று தெளிவுபடுத்துகிறார். அதனால்தான் இடுக்கண் வருங்கால் நகுக என்று அவரால் சொல்ல முடிந்தது.

எப்படி மீண்டு வருவது? : நமக்கு இன்று நடந்த பெருந்துன்பம், நேற்று வேறு யாருக்கோ நிகழ்ந்ததுதான் என்ற உண்மையை உணரும்போது நம்மை ஏதும் ஒன்றும் செய்துவிடமுடியாது. என்ன செய்யப் போகிறோம் என்று திகைப்பதாலும் அடுத்து என்ன நடக்கும் என்று குழம்புவதாலும், இப்படி நடந்தால் என்ன செய்வது என்று அஞ்சுவதாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. நடக்கக் கூடாதது நடந்துவிட்டது இனி அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று பார்க்கவேண்டுமே தவிர வருந்துவதிலோ, துன்பத்தை அள்ளிஅருந்துவதிலோ எந்தப் பயனும் இல்லை.
மலைத்து நிற்கும் அந்த ஒற்றைக் கணம் மலையைவிடக் கனமானது. வெளுப்பதற்காகக் கொண்டு போவதாய் எடுத்துப்போன வாழ்க்கை பலரை அடித்துத் துவைத்துக் கிழித்துவிடுகிறது. எதற்கெடுத்தாலும் தன்னையே நொந்து கொள்பவனைக் காலம், காலனாகிக் காவுவாங்கிறது.
துணிவோடு எதிர்கொள்வோம் இன்னலும், மின்னல் போன்றது தான் அடாதமழையோடு அப்பால் போய்விடும். கதறல்களாலும் உதறல்களாலும் ஏதும் ஆகி விடப்போவதில்லை. எல்லா
வற்றையும் துணிவோடு எதிர்கொள்ளாவிட்டால் நிம்மதி வாழ்வில் ஒருநாளும் வராது. இடம்மாறும் பறவைகள்கூடத் தடம் மாறிப்பறப்பதில்லை. நம் இல்லாமை குறித்தே நாம் வருந்திக்கொண்டேயிருந்தால் விரைவில் தள்ளாமை வந்துவிடும். நம் அவநம்பிக்கை
களில்தான் அடுத்தடுத்த தோல்விகள் ஆரம்பமாகின்றன. சக்கரம் பூட்டிய சங்கட வாழ்வை வசந்த வாழ்வாய் மாற்றுவது நம் கையில்தான் உள்ளது. பலுானுக்குள் அடைத்த காற்று அதை ஆகாயத்தில் பறக்க வைப்பதைப் போல நம் உயர்ந்த எண்ணங்கள் நம்மை சாதனைவானில் பறக்கவைக்கின்றன மென்மேலும் சிறக்கவைக்கின்றன. எதற்கும் கலங்கா நெஞ்சமே
நிம்மதி உறங்கும் பஞ்சுமஞ்சம்!

-பேராசிரியர்சவுந்தர மகாதேவன்
தமிழ்த்துறைத்தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பாகல்லுாரி, திருநெல்வேலி
99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • www - chennai,இந்தியா

    நீண்ட நாட்களுக்கு பிறகு நான் படித்த ஒரு நல்ல எழுச்சி உரை..

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் அறிவுரைகள் ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement