Advertisement

வாழ்க்கை வாழ்வதற்கே...

வாழ்வு என்பது, ஒரே ஒரு முறை, இப்பூவுலகில் அன்புடன் நாம் வாழ இறைவன் வழங்கிய அருட்கொடை.

''பூப்பதெல்லாம் காய்ப்பதில்லை
காய்ப்பதெல்லாம் பழுப்பதில்லை
பழுப்பதெல்லாம் பயன்படுவதில்லை
வாழும் வாழ்க்கை எல்லாம் வாழ்க்கையில்லை''.

ஒரு முறை நினைத்து பாருங்கள். நாம் எத்தனை பெரிய பாக்கிய சாலிகள். பலகோடி ரூபாய் கொடுத்தாலும், வடிவமைக்க முடியாத தசைகளால் ஆன கம்ப்யூட்டர் நமது மூளை. ஓய்வே எடுக்க முடியாமல், 24 மணி நேரமும், விழிப்போடு இருக்கும் நம் இதயம். கேமராவை விட காட்சிகளை பல மடங்கு, அற்புதமாக காட்டும் நமது கண்கள் இப்படிப்பட்ட அற்புதமான உடம்பை வெறுமனே படுக்கையில் படுக்க வைக்கலாமா? உழையுங்கள். உழைத்தால் தான் உடம்புக்கும், மனதுக்கும்ஆரோக்கியம். வாழ்க்கையின் சிறப்பு என்ன என்பது, அப்போது தான் தெரியும். காலம் முழுவதும், கல்லாய் கிடக்கவா? மண்ணில் வந்து பிறந்தோம். இருந்த இடத்தில் இருப்பேன். தானாக வந்து விழுந்தால், வாய் திறந்து உண்பேன் என்று, மலைப்பாம்பு நினைக்கலாம். மனிதன்
நினைக்கலாமா? செயலற்றுகிடப்பது சாவுக்கு சமம். உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி.
யாரையும் அச்சுறுத்த கூடாது, யாரைக்கண்டும் அஞ்சுதலும் கூடாது. எளியோர் என்று யாரையும் நாம் இகழ்ந்து பேசுதல் கூடாது. ஏனென்றால் காலம் ஒரு சக்கரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்ணும் உணவில்இருந்து, உருண்டு கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்து வரை நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை? ஆனால், நாம் யாரிடமிருந்து, எதை வாங்கலாம், எதை பெறலாம் என்ற மனநிலையிலேயே இருந்து வருகிறோம்.

படித்த பாமரர்கள்

எப்போதும் பெறுவதை விட கொடுப்பதில் தான் அதிக இன்பம். அன்று மனிதர்களை நேசித்தார்கள். பொருட்களை உபயோகப்படுத்தினார்கள். இன்று பொருட்களை நேசிக்கிறார்கள். மனிதர்களை உபயோகப்படுத்துகிறார்கள். அன்று படிக்காத பண்பாளர்கள் அதிகம். இன்று, படித்த பாமரர்கள் அதிகம்.பகிர்ந்து உண்ணல், ஆறறிவு மனிதனுக்கு மட்டும் அல்ல. ஐந்தறிவு பறவைக்கும் உண்டு. ஆனால், மனிதனை விட பறவைகள் தான் இதில் முன்னணியில் உள்ளன. பணத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள். நம்பிக்கையிடம் பணத்தை போட்டு வையுங்கள். பணமே
எல்லாமும் செய்து விடாது. பணம் வேறு, வாழ்க்கை வேறு.பணம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று விடும். ஆனால், வாழ்க்கை என்பது பரந்து, விரிந்து கிடக்கும் நிலம். நல்ல எண்ணங்களுக்கு வலிமை உண்டு. எண்ணங்களை சொல்ல, சொல்ல, வலிமை பெற்று அது கைகூடும் நிலைக்கு கொண்டு போய் சேர்க்கும், என்பதை புரிந்து, நல்லவற்றையே எண்ணுங்கள்.

எதிரொலி : வாழ்க்கை என்பது எதிரொலி போன்றது. நாம் என்னகொடுக்கிறோமோ அதையே திரும்ப பெறுவோம். ஆகவே,நல்லதை கொடுப்போம், நல்லதை பெறுவோம். பிறரின் நன்மைகளை கெடுத்து, பெறும் வெற்றிவிரும்பத்தக்கது அல்ல. நமது வெற்றி, நம்மை சூழ்ந்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் அடைந்த வெற்றி நமது மகிழ்ச்சியை கெடுத்து விடும். உலகத்தின் செல்வங்கள் அனைத்தை காட்டிலும், மனிதர்களே மிகவும் மதிப்பு மிக்கவர்கள். ஆகவே, புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்கள்
சொல்லவும் கூட நேரமில்லாதது போன்று தயவு செய்து நடந்து கொள்ளாதீர்கள்.

குடும்ப வாழ்வு : குடும்ப வாழ்வே மற்ற எல்லா வாழ்விலும் சிறந்தது என்று சான்றோர்கள் கூறுகின்றனர். கை நிறைந்த பொன்னை காட்டிலும், கண் நிறைந்த கணவன் தான் மேலானவன், என்பதை பெண்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். மங்களகரமான வாசகத்தை பேசும், மனைவியோடு உள்ளன்பு கொண்டு, கருத்து ஒருமித்து வாழ்தல் சொர்க்கத்துக்கு இணையாகும்.
மனிதர்களுக்கு தங்கள்அன்றாட நிகழ்வுகளை அர்த்தப்படுத்தி கொள்ள உறவு தேவை. அந்த உறவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க சில பொறுப்புகளும், பொறுமையும் அவசியமாக
உள்ளன. குடும்பத்தின் நல்லது கெட்டது என்று வரும்போது, உறவுகள் இல்லாமல் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. மனிதனுக்கு பிறப்பால், தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற சொந்தங்களும், மாமனார், மாமியார் போன்ற பந்தங்களும் கிடைப்பது எவ்வளவு பெரிய பலம்.

உறவுகளுக்கு சில மணி : உறவுகள் தான் மனிதனின் பலமே. துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப துன்பங்களில் உரிமையோடு பங்கேற்க உறவுகள் வேண்டும். உறவுகளுக்காக சில மணித்துளிகளை ஒதுக்க முயற்சி எடுங்கள். உலகையே மனிதன் உரிதாக்கி கொண்டாலும்,
உறவுகள் இல்லையேல் பயனேதும் இல்லை. உறவுகளை நேசிப்போம், உறவுகளால் வாழ்வுதனை வாசிப்போம். அடுத்தவர்களுடைய துாற்றுதலுக்கு நாம் காரணமாக இருக்க கூடாது என்பதில் என்ன தான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில், சில மனிதர்களின் செயல்பாடுகள் நமக்கு எதிர் மறையாக அமைந்து விடுகிறது. நாளை செல்லும் பாதையை இன்றே யார் அறிவார்.

''இன்பமும், துன்பமும், இயற்கையின் நியதி.
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி'' என்று கவியரசர் கண்ணதாசன் கூறுவார். துன்பங்கள் வரட்டும், வந்து போகட்டும். அப்போதுதான் உலகம் தெரியும், உறவுகள் புரியும். எல்லோருக்கும் நல்லவர்கள், தங்களை இழந்து விடுவார்கள் என்பதுதான் உண்மை. நல்லவர்களாக இருப்பது தான் எத்தனை பெரிய கடினம். ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக, நாம் யாருக்கோவேண்டாதவர்களா ஆக்கப்படுகிறோம். அல்லது, நமக்கு அவர்கள் வேண்டாதவர்களாகி போகிறார்கள்.நாம் யாரையும் குறை கூறக் கூடாது. காரணம், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. பழைய உறவுகளை தக்க வைப்பதும், புதிய உறவுகளை துளிர்க்க
வைப்பதும் அவசியமானது. உறவுகளை, உறவினர்களை சுமையாக கருதாதவரை, நாம் மகிழ்ச்சி கடலில் நீந்த முடியும்.

குறைகளை அடுக்காதீர்கள் : நம் கண்வழியே பார்க்கும்போது, ஆனந்தமாக தெரியும் அடுத்தவர் வாழ்க்கை, அவர்கள் கண்வழியே சுமையாக தெரிகிறது. தாழ்ந்த உயிரையும் தன்னைப்போல் நேசிக்க கற்று கொள்ளுங்கள். ஒருவரைவிமர்சிக்கும்போது, சகட்டு மேனிக்கு குறைகளை மட்டுமே அடுக்காதீர்கள். அவர்களின் நல்ல பண்பை பாராட்டுங்கள். அதுதான் நாகரிகம்.

கால சக்கரம் : 'குளம் வற்றி விட்டதே என்று கொக்கு கவலைப்பட கூடாது, இதோ மழை வருகிறது என்று நதி குதிக்க கூடாது, அதோ கோடை காலம் வருகிறது' என்று கண்ணதாசன் கூறியதை யாரும் மறுக்க முடியாது. நெருக்கமான குடும்ப உறவுகள், மனிதர்களை நெறி பிறழாமல் வாழ வைக்கிறது.சில உறவுகள் அறுந்த பின் அவைகளை புதுப்பிப்பது என்பது நடக்காத காரியம். பற்பசையிலிருந்து, பிதுக்கி எடுத்த பசையை மீண்டும் உள்ளே செலுத்துவது போன்றது தான் அறுந்த உறவை மீண்டும் புதுப்பிப்பது.

பெண்ணின் அழகு : மிகவும் பொறுமை மிகுந்த பெண்ணின் கோபத்தில் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமற்று போகும். ஒரு பெண் எவ்வளவு மகிழ்ச்சியாகஇருந்தாலும், துன்ப சூழலில் இருந்தாலும், இன்ப, துன்ப உணர்ச்சிகளை வெளியே காட்டக்கூடாது. அதுதான் பெண்ணிற்கு அழகு.வீட்டிற்கு தேவை நல்ல மனைவி, நல்ல மருமகள் என்று சான்றோர்கள் எவ்வளவு போதித்தாலும், தன் வீட்டுக்கு ஒரு மருமகளை தேர்வு செய்யும்போது, வரவு எவ்வளவு இருக்கும் என்று சிந்திக்க கூடாது. குலமகள் வாழும் இனிய குடும்பம், கோயிலுக்கு இணையாகும் என்பார்கள். பெண் தேடும்போது, பணமும் பத்தாக இருக்க வேண்டும், பிள்ளையும் முத்தாக இருக்க வேண்டும்,என்று நினைக்க கூடாது. ஏதோ ஒன்று தான் அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் இதுதான் வாழ்க்கை காட்டும் அனுபவம்.

சொர்க்கம் : சந்தோஷமும், நிம்மதியும் பணத்தாலும், கார், வீடு போன்ற வசதிகளாலும் கிடைப்பதில்லை. தனது மனைவியிடமே நல்லுறவை வளர்த்து கொள்ள ஒருவரால் முடியவில்லை என்றால், அவர் வேறு யாரிடமும் நட்பையும், உறவையும் வளர்த்து கொள்ள முடியாது.
வெளியே போன சுவாசம், உள்ளே வராமல் நின்று விட்டால், முடிந்தது கதை. உயிர் என்பது அந்த அளவு நிலையற்றது. ஆகவே கண்மூடி, மேனியை மண் மூடும் முன்னரே, வாழ்க்கையை அணுக வேண்டும். பிறப்பை நரகமாக்கி இறப்பில் சொர்க்கம் தேடாமல் வாழும் வாழ்க்கையிலேயே சொர்க்கத்தை நாம் தேட வேண்டும்.

-மகா.பாலசுப்பிரமணியன்,
எழுத்தாளர், காரைக்குடி.
94866 71830

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement