Advertisement

தண்ணீர்... தண்ணீர்... கண்ணீர்!

தமிழகம் முழுவதும் தண்ணீர் தேவைக்காக, மக்கள் பரிதவித்து அலைவதை பார்க்கும் போது, மனது பதைத்து போகிறது. கடும் வெயிலிலும், கால் கடுக்க, காலி குடங்களுடன் மக்கள் அலைந்து திரிவது, மிகவும் வேதனை தரும் விஷயம்.

நாடு முழுவதும், தண்ணீருக்கான தேவை பொதுப் பிரச்னையாகி விட்ட நிலையில், அரசும், பொது நல, சமூக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனி மனிதரும் சேர்ந்த கூட்டு முயற்சியாலேயே, பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.

சென்னையில், நடுத்தர மக்கள் வாழும் பகுதியில் வசிக்கும் நாங்கள், இது வரை தண்ணீர் பிரச்னையின்றி சமாளிக்கிறோம். அது எப்படி என்பதை, இந்த சமயத்தில் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்...எங்கள் வீடு, தனி வீடு; வீட்டை சுற்றிலும், தென்னை, மா, பலா, வாழை, நெல்லி, வேம்பு, கொய்யா மற்றும் முருங்கை என, பல மரங்களை வளர்க்கிறோம். வீட்டுக்கும், மதில் சுவருக்கும் இடைப்பட்ட, 10 அடி நிலப்பகுதியை, கற்கள், சிமென்ட் போட்டு மூடாமல், மண் தரையாக விட்டிருக்கிறோம்.

இது தான் முக்கியமான விஷயம். ஏனென்றால், இப்போது, தனி வீடு வைத்திருப்போர், கட்டுபவர்கள் கூட, பெரும்பாலும் இப்படி செய்வதில்லை.

அடுக்கு மாடிகுடியிருப்புகள் கட்டுவோரும், வணிக வளாகம் கட்டுவோரும், பூஞ்செடிகள் வளர்க்க மட்டும் சிறிது இடம் ஒதுக்கி, மீதி தரைப்பகுதி முழுவதையும், சிமென்ட் தளமாகவோ, கற்கள் பதித்தோ மூடி விடுகின்றனர்.

ஒரு சில இடங்களில், அந்தளவு இடம் கூட விடாமல், பூச்செடிகளை, தொட்டிகளில் வளர்க்கின்றனர். எங்கள் பக்கத்து, அடுக்கு மாடி வீட்டில், நிலத்தடி நீர், செம்மண் நிறத்தில் வண்டல் கலந்து வருகிறது.அதை சுத்திகரிக்க, பல ஆயிரக்கணக்கில் செலவில், பிரமாண்ட மோட்டார் அமைத்தும், தண்ணீரில் உப்பு படிவது அதிகம் இருக்கிறது. அது, 'டைல்ஸ்' தரையை வீணாக்குகிறது என்கின்றனர்.

நாங்கள், மண் தரையாக விட்டிருப்பதால், நிலத்தடி நீர் குறைவில்லாமல் இருக்கிறது; தண்ணீரும் நன்றாக இருக்கிறது. எனவே, மாநகராட்சி விடும் குடிநீரை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.அந்த தண்ணீர் வரும் போது, சேமித்து வைத்து, குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்துகிறோம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும், அவ்வப்போது எங்கள் வீட்டிலிருந்து தண்ணீர் பிடித்து செல்வர்.

மண் தரையாக விட்டிருப்பதால், கிடைத்த மிகப்பெரிய நன்மையை, 2015 டிசம்பர் பெரு வெள்ளத்தின் போதும், 'வர்தா' புயல், வெள்ளத்தின் போதும், அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.ஆம்... இடைவிடாது பெய்த பேய் மழையால், வீட்டை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருந்த போதும், வீட்டுக்குள் துளி தண்ணீர் புகவில்லை. ஏனெனில், மழையின் வேகம் சிறிது குறைந்ததும், அத்தனை மழை நீரும், அரை மணியில், பூமிக்குள் இறங்கி விடும்.

என் நண்பர்கள் வீடுகளிலும், அக்கம், பக்கத்திலும் தரையை மூடி விட்டதால், வெள்ள நீர் புகுந்து, கார்கள், மின் மோட்டார்கள் சேதமடைந்தன. நாங்கள், பூமித் தாயை அன்று குளிர்வித்ததன் பலனை, இந்த கோடையில், நிம்மதியாக அனுபவிக்கிறோம்.

மண் தரையாக விடப்பட்டிருப்பதில், சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆங்காங்கே, கல்லும், மண்ணும் சிதறி கிடக்கும்; மரங்களின் இலைகளும், தழைகளும் பரவி, வேலை வைக்கும். அந்த இலை, தழைகளையும், சமையலறை காய்கறி கழிவுகளையும், பூமிக்கு உணவாக, உரமாக ஆக்குகிறோம்.

எலி, பூனைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். அவற்றை, வீட்டுக்குள் வர விடாமல் தோட்டத்திலேயே, பால் வைத்து விட்டால், நமக்கு தொந்தரவு கிடையாது; எலிகளை அவை,
'கவனித்து' கொள்ளும்.பெரிய நன்மைக்காக, ஒரு சில குறைகளை அனுசரித்து தான் ஆக வேண்டும்.

மண்ணில், நிறைய மண் புழுக்கள் உருவாகியுள்ளன; அவற்றை உணவாக்கி கொள்ள வரும் சிட்டுக்குருவிகள், அணில், பட்டாம் பூச்சிகள் என, நிறைய உயிரினங்களை எங்கள் தோட்டத்தில் பார்க்கும் போது, குறைகள் பெரிதாக தெரிவதில்லை.

குடியிருப்பு, வணிக வளாகங்கள் கட்ட, திட்ட அனுமதி வழங்கும் போது, சில வரைமுறைகளை கட்டாயப்படுத்த வேண்டும். கட்டடத்தின் அளவு, விஸ்தீரணத்துக்கு ஏற்ப, மரங்கள் வளர்க்க, இட வசதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும். குறைந்த பட்சம், மரங்களை சுற்றியுள்ள மண் தரையே கூட போதுமானது.

பொதுவாகவே, அரசு வகுக்கும் மக்கள் நலத்திட்டங்கள் யாவும், தனி மனிதனின் ஒத்துழைப்பு இல்லாமல், வெற்றி பெற முடியாது. எரிபொருள், மின்சார சிக்கனம், தண்ணீர் சேமிப்பு இன்றைய காலத்தின் கட்டாயம்.புகைப்பதும், குடிப்பதும், உடலுக்கும், உயிருக்கும் கேடு என, தெரிந்தே குடிப்பவர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் சீரழிக்கின்றனர்.

அது போலவே, தண்ணீரையும், உணவையும் வீணாக்குபவர்கள், இயற்கையை அழிப்பவர்கள், அடுத்த தலைமுறைக்கும் தீங்கு செய்கின்றனர்.

சற்றே கற்பனை செய்து பாருங்கள்... இன்று, பாலும், பழமும் ஊட்டி, அன்பும், அரவணைப்பும் காட்டி பாசத்துடன், நாம் வளர்க்கும் பிள்ளைகள், நாளை, ஒரு வாய் தண்ணீருக்கு தவித்து அலையும் அவல நிலையை கற்பனையில் கூட சகிக்க முடியாது நம்மால்.தங்க நகைகளாகவும், வீட்டு மனைகளாகவும் அவர்களுக்காக நாம் சேமிப்பது போலவே, நல்ல காற்றையும், நல்ல உணவையும், சுத்தமான தண்ணீரையும் அவர்களுக்கு விட்டுச் செல்வதும்அவசியம்.

'ஸ்ஸ்ஸ்... என்ன வெயில் கொடுமை... தாங்க முடியலயே சாமி... ஒரு மழை வந்தால் தேவலாம்...' என, இப்போது புலம்பித் தவிக்கிறோம். கோவில்களிலும், மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.ஆனால், அந்த மழையை, நம்மை உய்விக்க வரும் ஜீவாமிர்தத்தை வணங்கி, வரவேற்க, அப்படியே அள்ளி பாதுகாக்க, சேமிக்க, தேவையான முன்னேற்பாடுகளை அரசும் செய்வதில்லை; எந்த அரசியல் கட்சிகளும் செய்ய முன் வருவதில்லை.

அவர்கள், தங்களது ஆட்சியை காப்பாற்றவும், கைப்பற்றவும், கொள்ளையடித்த பணத்தை பாதுகாப்பாக பத்திரப்படுத்தவும் தான் படாத பாடு பட்டு கொண்டிருக்கின்றனர்.

காடுகளை அழித்து, கட்டடங்களாக்கி, வளி மண்டலத்தையும் வாகனப் புகையால் மாசுபடுத்தி, 'ஓசோனிலும்' ஓட்டை போட்டு விட்டோம் நாம். எனவே, இயற்கையும், அடித்தால் உச்சி உருக வெயில், பெய்தால் பேய் மழை என, நம்மிடம் சீற்றம் காட்டுகிறது.

எவ்வளவு மழை பெய்தாலும், அதை அப்படியே உள் வாங்கும் வகையில், சுற்றுப்புறத்தை தயார் செய்ய வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமிக்காமலும், குப்பை கொட்டாமலும் பாதுகாப்போம். மண்ணுக்கு கேடு விளைவிக்கும், 'பாலிதீன்' பைகளை தவிர்ப்போம். அவை, பூமியின் நீர் முகத் துவாரங்களை அடைத்து விடாமல் காப்பது நம் கடமை.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை, ஆங்காங்கே, குளங்களை துார் வாரி, மீட்டெடுத்து நிரூபித்திருக்கின்றனர், நம் தமிழக இளைஞர்கள். எனவே, ஒவ்வொரு தனி மனிதரும், தமிழகத்தை தண்ணீர் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற முயற்சி செய்வோம்; சிறு துளி பெரு வெள்ளம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

எங்கள் வீட்டில், எப்போதுமே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த எங்கள் பிள்ளைகளும் பழகியிருக்கின்றனர். சமைலறையிலும், கை அலம்பும் இடத்திலும் நேரடியாக குழாயை திறந்து விடாமல், வாளியில் நிலத்தடி தண்ணீரை பிடித்து வைத்து தான் உபயோகிக்கிறோம். அரிசி, காய்கறிகளை அலம்பும் நீரை பிடித்து, செடிகளுக்கு விடுகிறோம்.

பாத்திரம் அலம்பும் போது கிடைக்கும், சோப்பில்லாத கழிவு நீரை கூட பிடித்து, மரங்களுக்கு விடுகிறோம். மேற்கத்திய கழிப்பறைகள் இருந்தும், அதைப் பயன்படுத்தாமல், இந்திய கழிப்பறைகளை பயன்படுத்துகிறோம். இதனால், பெருமளவு தண்ணீரை மிச்சப்படுத்த முடியும்.
தண்ணீரை உபயோகப்படுத்தும் போதெல்லாம், காலி குடங்களுடன் மக்கள் கஷ்டப்படுவதை, போராடுவதை, பத்திரிகைகளில் பார்த்தது நினைவுக்கு வந்து, மனம் வருத்தமடைகிறது.

அவர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாவிட்டாலும், தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பதன் மூலம் அவர்களுக்கு மட்டுமல்ல, நம் அடுத்த தலைமுறைக்கும் நன்மை செய்பவர்களாவோம்.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, நதி நீர் இணைப்பை சாதித்து காட்டியிருக்கிறார். மத்திய பிரதேசத்தில், நர்மதை நதியை துார் வாரி துாய்மைப்படுத்தி இருக்கின்றனர். அந்த மாநிலத்தில், 1,100 கிராமங்களில், 3,344 கி.மீ., நதியை, வெறும், 150 நாட்களில் துாய்மை பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

'நதி பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்' என, இந்த புனித பணியை பாராட்டி பேசியுள்ளார், பிரதமர்நரேந்திர மோடி.

நாமும், சிலை திறப்பு விழா போன்ற, தேவையற்ற விழாக்களுக்கு அவரை அழைக்காமல், கருவேலக் காடுகளை அழித்து, வறண்டு கிடக்கும் காவிரி போன்ற நதிகளை துார் வாரி, துாய்மைப்படுத்த, அதன் சிறப்பு பூஜைக்கு அழைக்கலாம். ஏனெனில், மதம் சார்ந்த நிகழ்வுகளை விட, மனிதம் காக்கும்நடவடிக்கைகளே இன்றைய அவசிய, அவசரத் தேவை.

இதற்கு, மடாதிபதிகள், தேவாலய, மசூதிகளின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், கோடிகளில் புழங்கும் சினிமாத்துறை, தங்க, வைர ஆபரணங்களை அளவுக்கு அதிகமாக முடக்கி வைத்திருக்கும் அறநிலையத்துறை, கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் என, எல்லாரும் சமூக, பொது நலன் கருதி, கூட்டமாக ஒத்துழைக்க வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆந்திராவைப் போல, தமிழகம் எங்கும் நதிகள் இணைப்பு நிச்சயம் சாத்தியமாகும்;தண்ணீர் பஞ்சமும் இல்லாமல் போகும்!

இ - மெயில்

ikshu1000yahoo.co.in

வி.எல்.சந்திரா சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Seena - Salem,இந்தியா

    Fantastic information and thanks to the sender.

  • pius - Nagercoil,இந்தியா

    நல்ல கட்டுரை, எத்தனை பேர் இதனை படிப்பார்கள். எல்லோருக்கும் இந்த மனமும், செயல்பாடுகளும் இருந்தால், தமிழகம் சோலைவனம் ஆகுமே. வாழ்த்துக்கள் தாயே.

  • ramtest - Bangalore,இந்தியா

    மக்கள் தொகை பெருகப்பெருக இருக்கும் காடுகள் விளைநிலங்களாகவும் விலைநிலங்கள் வீடுகளாகவும் கதைகளாகவும் அரசாங்க , தனியார் நிறுவனங்களாகவும் மாறிவிடும் ... கடுகளில்லாமல் எப்படி மழை ?... நிலத்தடியில் நீர் தாங்காமல் எப்படி தண்ணீர் கிடைக்கும் ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement