Advertisement

தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி : நாளை கண்ணதாசன் பிறந்த நாள்

இருபதாம் நுாற்றாண்டு கவிதை உலகில் பாரதியார், பாரதிதாசன் இருவரையும் தொடர்ந்து கவிஞர் கண்ணதாசனுக்கு நிலையான ஓர் இடம் உண்டு.

'போற்றுபவர் போற்றட்டும்;
புழுதி வாரித்
துாற்றுபவர் தூற்றட்டும்;
தொடர்ந்து செல்வேன்;
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம்
என்றால்
எடுத்துரைப்பேன்; எவர்வரினும்
நில்லேன்; அஞ்சேன்!'

-என முழங்கி, தமிழ்க் கவிதை உலகில் முப்பத்து மூன்று ஆண்டு காலம் உலா வந்து, ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதிக் குவித்தவர் கவிஞர் கண்ணதாசன்.
உவமைக் கவிஞர் சுரதாவின் சொற்களிலே சொன்னால் அவர், 'திரையிசைக்கம்பர்!'
கவிஞர் வாலியின் பார்வை யிலே அவர், 'தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லாத பாரதி! பட்டணத்தில் வாழ்ந்த பட்டினத்தார் -கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த குணங்குடி மஸ்தான்'. காதல், தத்துவப்பாடல் ஆனாலும், தாலாட்டுப்பாடல் ஆனாலும், நகைச்சுவைப் பாடல் ஆனாலும், அதில் கண்ணதாசனின் முத்திரை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதிந்திருக்கும்.

நிலையாமைத் தத்துவம்

'இளமையும் நில்லா;
யாக்கையும் நில்லா;
வளவியவான் பெருஞ்
செல்வமும் நில்லா'

என மணிமேகலைக் காப்பியம் நிலையாமை தத்துவத்தை வகைப்படுத்திக் கூறும். இளமை நிலை யாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் இம் மூன்று நிலையாமை
தத்துவங்களை குறித்தும் கவிஞர் கண்ணதாசன் திரையிசை பாடல்களில் அழகுறப் பாடியுள்ளார். உடலில் இளமை கொலுவீற்றிருக்கும் பொழுது கட்டுக் கடங்காது காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு ஓடிய மனித மனம், நரை வந்த பின் கூனிக் குறுகி ஆடி அடங்கிவிடும்! 'திருவிளையாடல்' என்னும் படத்திற்கு பாடிய பாடல் ஒன்றில், இந்நிலையை ஓசை நயத்தோடு படம்பிடித்துக் காட்டுகிறார் கண்ணதாசன்.

'பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
செத்தா வெறகுக்காகுமா -
ஞானத்தங்கமே...
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
கட்டழகு மேனியைப் பார்
பொட்டும் பூவுமா - நீட்டி
கட்டையிலே படுத்துவிட்டா
காசுக்காகுமா?'

மனிதன் ஆசை மிகக் கொண்டு, அலைந்து திரிந்து, ஓடியாடிச் சேர்க்கின்ற பொருள் யாவும் அவன் சாகின்ற பொழுது அவனுடன் வருவதில்லை. பட்டினத்தாரும் பாம்பாட்டிச் சித்தரும் சுட்டிக் காட்டி-யிருப்பதைப் போல், 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே!', 'மாட மாளிகைகள், வண்ண மண்டபம், மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை கூட வாரா!'
செல்வம் நிலையாமையை குறித்து கண்ணதாசனும் திரைப்பாடல் எழுதியுள்ளார்.

'பட்டணத்தில் பாதி இவன் வாங்கி
முடித்தான்- அந்த
பட்டயத்தில் கண்டது போல்
வேலி எடுத்தான்- அதில்
எட்டடுக்கு மாடி வைத்துக்
கட்டடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்!'

மனிதன் தன் வாழ்நாளில் எத்துனை பொன்னும் பொருளும் ஈட்டினாலும், முடிவில் அவனுக்கு சொந்தம் எட்டடி நிலம்தான் - அந்த எட்டடி நிலத்தில்தான் அவன் வாழ்க்கை தஞ்சம் - என முத்தாய்ப்பாக 'முகராசி' படத்திற்காக பாடினார் கண்ணதாசன். 'போனால் போகட்டும் போடா - இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?'- என வாழ்க்கை நிலையாமை குறித்து கண்ணதாசன் பாடியிருக்கும் தத்துவ பாடல் மக்கள் மனத்தில் என்றும் குடிகொண்டிருக்கும்.

வாழ்க்கை தத்துவம்

'மயக்கமா... கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?' என தொடங்கி, 'சுமை தாங்கி' படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல், அவரது முத்திரை பாடலாகும்.

'வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!'

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வேதனைகளை வெற்றி கொள்வது எப்படி? வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்வது எப்படி? வாடி நின்றால் அவை ஓடிவிடுமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் கவிஞர் கூறும் ஒரே பதில், 'எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!' என்பதுதான்!

அமைதிக்கு வழி

நமக்கு மேலே உள்ளவர்களை பார்த்துப் பொறாமைப் படுவதை விட, நமக்கும் கீழே இருப்பவர் களை பார்த்து நிம்மதி அடைவது - அமைதி பெறுவது நல்லது;
நம்மிடம் இல்லாத பொருளுக்காக ஏங்குவதை விட, நம்மிடம் இருக்கும் சிறந்த பொருளை நினைத்து நிம்மதி அடைவது, அதனை தந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுவது - மிகவும் நல்லது. ஏழை மனத்தை விழுமிய எண்ணங்களால் மாளிகையாக்கும் பொறுப்பு நம் கையில்தான் உள்ளது.
இந்த உண்மையினை கண்ணதாசன் உணர்த்தியிருக்கும் பாங்கு, படிப்பவர் நெஞ்சில் இன்பத் தேனை பாய்ச்சுவதாகும்.
'ஏழை மனதை மாளிகை யாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளை பொழுதை இறைவனுக்கு
அளித்து
நடக்கும் வாழ்வில்
அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ள வர் கோடி
நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு'
விரக்தியின், வேதனையின், விளிம்பிற்கே சென்று விட்ட நெஞ்சம் கூட, இப்பாடலை ஒருமுறை பொருளுணர்ந்து படித்தால் நம்பிக்கை யையும் நிம்மதியை அடையும் என்பதில் உறுதியிலும் உறுதி.

நடைமுறை தத்துவம்

'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?' என்று கேட்டு நம்பிக்கை ஊட்டிய கவிஞர், திரைப்பாடல்களில்
ஆங்காங்கே அன்றாட வாழ்வின் நடைமுறையை, இன்றைய உலகின் போக்கை எடுத்துக்-
காட்டவும் தவறவில்லை.
'குளத்திலே தண்ணியில்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்தபுள்ள சொந்தமில்லே...
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா
சொந்தமில்லே பந்தமில்லே...'
என்று 'எங்க ஊர் ராஜா' என்ற
படத்திற்காக பாடிய பாடலிலும்,
'அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே! ஆசை
கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே...
பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின்
பந்த பாசமே ஏனடா?
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும்
யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா!'
என்று 'பழநி' திரைப்படத்திற்காக பாடிய பாடலிலும் இன்றைய அவசர உலகம், பொருளுக்கு தரும் மதிப்பை எடுத்துக் காட்டுகிறார் கண்ணதாசன். ஆனால், அதே நேரத்தில் வாழ்வில் உதிரத்தால் உறவாக இல்லாவிட்டாலும், உள்ளத்தால் உரிமை கொண்டு, பதைக்கும் நெஞ்சினை அணைத்து ஆறுதல் கூறி, அன்பு காட்ட யார் முன் வருகிறாரோ, அவர்தான் ஒரு மனிதனுக்கு உண்மையான உறவினர்ஆவார், அண்ணன் தம்பிஆவார் என்பதை யும் அவர் உணர்த்துகிறார்.

இறைத் தத்துவம்

கண்ணதாசன் இறைவனைப் பற்றி திரைப்பாடல்களில் வெளியிட்டிருக்கும் தத்துவச்
சிந்தனைகள் பல. 'வளர்பிறை' என்ற திரைப்படத்திற்காக அவர் எழுதிய புகழ் பெற்ற பாடல்...
'பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
-அவனைப்
புரிந்துகொண்டால் அவன்தான்
இறைவன்!'
'அவனைப்புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்!',
'அவனைத் தெரிந்துகொண்டால்
அவன்தான் இறைவன்!',
'அவனைத் தொடர்ந்து சென்றால்
அவன்தான் இறைவன்!'
என்னும் வரிகளின் வாயிலாக இறைவனின் அருமையினை அழகுற உணர்த்தியுள்ளார்.
'நீ தத்துவம்பாடினாய்!
வாழ்க்கை- தனது
முகமூடியைக் கழற்றி
முகத்தைக் காட்டியது!'

என கவியரசர் கண்ணதாசன் குறித்து வைரமுத்து பாடியிருப்பது வெறும் புகழ்ச்சி இல்லை.
'சத்தியமா நான் சொல்லுறதெல்லாம் தத்துவம்,
தத்துவமா நான் சொல்லுறதெல்லாம் சத்தியம்'- என்று திரைப்படத்திற்காக கண்ணதாசன்
பாடினாலும் சத்தியமாய், நித்தியமாய் நிற்கும் தத்துவங்களை அவர் பாடியுள்ளார் என்பது சத்தியம் எனலாம்.

-முனைவர் இரா.மோகன்
மதுரை. 94434 58286

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement