Advertisement

எதைக் கொடுக்கிறாயோ... அதையே பெறுவாய்!

கண்ணாடி எதிரே இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும். கண்ணாடி முன் நின்று சிரித்தால் அதில் தெரியும் பிம்பமும் சிரிக்கும். கோபமாக முறைத்தால் பிம்பமும் முறைக்கும். உலகம் கண்ணாடி போன்றது. நாம் முறைத்து விட்டு பிம்பம் மட்டும் சிரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இப்படித்தான் நாம் அமைதியை கடைபிடிக்காமல் அடுத்தவர்களிடம் இருந்து அமைதியை எதிர்பார்க்கிறோம். நாம் கோபத்தை வெளிப்படுத்தி விட்டு பிறரிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறோம். அடுத்தவர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பதையே, அடுத்தவர்களுக்கும் நம்மிடம் எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர வேண்டும். புத்தர், இயேசு, காந்தி போன்றவர்கள் உலகை நேசித்தனர். உலகம் அவர்களை நேசித்தது. ஹிட்லர், இடிஅமீன் போன்றவர்கள் மனித குலத்தை வெறுத்தனர். இன்றும் உலகில் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். எதைக் கொடுக்கிறோமோ அதனையே பெறுவோம்! இதனையே பாரதிதாசன் தன்னுடைய 'உலகம் உன்னுடையது!' என்ற பாடலில் குறிப்பிடுகின்றார்.

“ஏறி நின்று பாரடா இப்புவி
மக்களைப்
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
'என் குலம்' என்றுனைத்
தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து
மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவு செய்; அகண்ட
மாக்கு !
விசாலப் பார்வையால் விழுங்கு
மக்களை!
அணைந்துகொள்! உன்னைச்
சங்கம மாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு!”
அறிவை விரிவு செய்வதுடன் அகண்டமானதாக்க வேண்டும். அப்பொழுதுதான் தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் பழக்கம் உருவாகும். ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஆனால் நிஜமும் நிழலும் வேறு வேறாக இருக்கின்றன. மனிதன் தனக்கு என்று சுயநலமாக வாழ்பவனாக வாழ்கின்றான். “காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவில் இருக்குது. மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிஞ்சு கிடக்குது” என்ற பாடலின் உண்மையை உணர வேண்டும்.

முரண்பட்ட மனிதன் : மனிதனின் இயல்பு ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. மனிதன் இயற்கையுடன் முரண்பட்டவனாக இருக்கிறான். அடர்ந்த புல்வெளியில் ஆடு, மாடு, மான், முயல் என ஆயிரம் விலங்குகள் நடந்து போகின்றன. அவை நடந்த சுவடுகள் கூட மற்றவர் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட வழியில் மனிதன் தொடர்ச்சியாக அடிக்கடி நடந்தால் அவன் கால்பட்ட இடத்தில் புற்கள் கூட முளைக்காமல் அங்கே ஒரு ஒத்தையடிப்பாதை தோன்றிவிடுகின்றது. மனிதன் பற்றுகளுடன் வாழ்கின்றான். அதனால் பிறரைப் பற்றி சிந்திக்க மறந்துவிடுகின்றான். பற்றுடன் வாழ்வதால் தன் ஆயுளை, பற்றி வாழ்பவனாக இருக்கின்றான். இறப்பு கண்டு அச்சம் கொள்பவனாய் இருக்கின்றான். மரணம் வாழ்வின் ஒரு பகுதி என்பதறியாமல், தன் ஆயுளுக்குள் எல்லாம் பெற்றிட வேண்டும் என்று சுயநலமாக வாழ்கின்றான். அதனால் பிறரை ஏமாற்றியோ, துன்புறுத்தியோ தனக்கென்று செல்வம் சேர்த்து வாழ்பவனாக இருக்கின்றான்.

புத்தரும் சீடரும் : புத்தர் சீடர்களிடம் “மனிதனின் ஆயுள் எவ்வளவு?” என்று கேட்டார். பலரும் அறுபது, எழுபது என பதிலளித்தனர். கடைசியாக புத்தர் “ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடையே உள்ள காலம்தான் மனித ஆயுள்” என்று கூறினார். உள்ளே சென்ற மூச்சு வெளியே வராவிட்டால், அல்லது வெளியே சென்ற மூச்சு மீண்டும் உள்ளே வராவிட்டால் முடிந்தது கதை. ஆகவேதான் “கணம் கணமாக வாழுங்கள்” என்கிறார் புத்தர்.
”எப்பொழுதும் மனித இனத்தின் நம்பிக்கை கொள்ளக் கற்றுக் கொடுங்கள்; உயிரின் மதிப்பை உணரக் கற்றுக் கொடுங்கள்” என்று ஆப்ரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியர்களுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். பற்றுகளை விடும் போது மனித இனத்தின் மீது கவுரவம் பிறக்கிறது.
இன்ப துன்பங்களை சமமாக பாவித்து, உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், மவுனமாக வாழ்பவர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றனர். அவர்களால் பிறருக்கு இடையூறுகள் ஏற்படுவதில்லை. அவர்களை இடையூறுகள் அணுகுவதில்லை.
மண்ணும் நானே, மக்களும் நானே, மரம், செடி, கொடிகளும் நானே என கீதையில் கண்ணன் கூறுகின்றான். ஆம்! எல்லாவற்றையும் தன்னைப் போலவே எண்ணி நேசிப்பவர்களுக்கு எல்லாமே இறைவனின் வடிவாகத் தென்படும் என்பதுவே அதன் பொருள். அவர் அன்போடிருக்கின்றார் என்று கூறவில்லை. அன்பாயிருக்கிறார். அன்பே இறைவன். தன்னப்போல் பிறரையும் நேசி என்பதும் இதுதான். எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் பண்பு வர வேண்டும் என்பதே இந்த இறை தத்துவம்.இன்பம் துன்பம் கடந்து வாழ்பவர்கள் 'தான்' என்ற கர்வம் கொள்ள மாட்டார்கள். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பவர்கள், பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தாமல் வாழ்பவர்களாக திகழ்கின்றார்கள். அவர்கள் வாழ்விலும் இடையூறுகள் அண்டாது. அதற்கு அனுமன் வாழ்வே சாட்சி.

கர்வம் இல்லாத அனுமன் : கடவுளாகிய சிவபெருமான் சனிபகவானுக்கு பயந்து மூன்றே முக்கால் நாழிகை சாக்கடை பொந்து ஒன்றின் சகதியில் ஒளிந்து கொண்டார். “பூவுலகின் ஏழரை ஆண்டுகள், அமரர் உலகில் முன்றே முக்கால் நாழிகைகள் தான் …ஏழரை முடிந்து விட்டது'' என்று சனி பகவான் சென்றார். சிவனே பயந்த சனி பகவான் அனுமனிடம் வந்து “ உனக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பமாகப் போகிறது” என்றார். ஆகட்டும் என்றார்.
சனியும் பற்றினான். அனுமன் ஒன்றும் செய்யவில்லை. மரத்தடியிலே படுத்திருப்பார். பசி வந்தால் மரத்தில் இருந்து இரண்டு பழங்களைப் பறிப்பார். தின்று விட்டு பழையப்படி படுத்திருப்பார். வெறுத்துப்போன சனி எப்படா எழரை முடியும்? என்ற தவிப்புடன் இருந்து விட்டு, முடிந்ததும் வேகமாக ஓடிப்போனார்.
மனிதர்களிடையே பலசாலி ஆஞ்சநேயர், சூரியனிடம் வேதம் கற்றவர். பிரம்மாண்ட வடிவம் எடுத்து கடலைத் தாண்டியவர். மலையை உள்ளங்கையில் ஏந்தியவர். ஆயினும் ஒரு இடத்தில் கூட நானே பலசாலி என்று கர்வப்படாதவர். அதனாலே உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல்,மவுனமாக தனக்கு வந்த இடையூறை அணுகினார்.
துறவியின் தத்துவம்
ஒருவர் வீட்டு வாயிலில் ஆடு ஒன்றை கட்டிப் போட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அவ்வழியாக துறவி ஒருவர் வந்தார். அவரை அழைத்தவர் நாளை திருவிழா என்பதால் அவர் வீட்டில் தங்கி செல்லுமாறு கூறினார். வாயிலில் கட்டிப் போட்டுள்ள ஆடு பலியிடுவதற்காக வளர்க்கப்படுவதாகவும் கூறினார். துறவி எதுவும் பேசாமல் அங்கிருந்த பானைகளில் ஒன்றை எடுத்து உடைத்து, உனக்குத்தான் எடுத்து கொள் என்று கூறினார். “என் பானையை உடைத்துவிட்டு என்னிடமே கொண்டு வந்து கொடுக்கிறாயே? என சீறினார் வீட்டுக்காரர். “கடவுள் படைத்த உயிரை பலியிட்டு கடவுளிடமே தருகிறாயே? அதை மட்டு கடவுள் ஏற்பாரா? என கேட்டார் துறவி.
கருணை காட்டுங்கள்
உனக்கு கீழே உள்ளவர்கள் மீது கருணை காட்டினால் உனக்கு மேலே உள்ள சக்தி உன்னிடம் கருணை புரியும். உனக்கு கீழே உள்ளவர்களை நீ மதிக்காமல் உனக்கு மேலே உள்ளவர்கள் மட்டும் உன்னை மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? எதை விதைக்கிறாயோ அதுவே விளையும். எதைக் கொடுக்கின்றோமோ அதுதான் திரும்பி வரும்.
மரம் நிற்பது மண்ணுக்குள் இருக்கும் வேர்களால் தான். உயர்வு என்பது தாழ்வில் இருந்து தான் தொடங்கும். “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” என்கின்றார் திருவள்ளுவர். ஆகவே உலகம் என்ற கண்ணாடியில் நிஜமும் பிம்பமும் ஒன்றாய் தெரிய 'தான்' என்ற அகந்தை அற்று சம தர்ம சிந்தனையுடன் அன்பு கொண்டு 'மனிதரில் நீயுமோர் மனிதன்' என்ற சிந்தனையை மனதில் நிறுத்தி பிறரையும் தன்னைப் போல் நேசிக்க கற்றுக் கொள்வோம்; கற்றுக் கொடுப்போம்!
-க.சரவணன்
தலைமை ஆசிரியர்
டாக்டர் டி. திருஞானம்
துவக்கப் பள்ளி, மதுரை
99441 44263

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement