Advertisement

தன்னிகரில்லா தலைமை தமிழகத்திற்கு தேவை!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், தமிழகம் இரு பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஒன்று, நிர்வாக சீர்கேடு. இரண்டு, தலைமைத்துவத்தில் வெற்றிடம்.
வரலாறு காணாத வறட்சி, அழிவை நோக்கி விவசாயம், தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்கள், சரியான தலைமை இன்றி குழப்பங்களில் ஆழ்ந்து, கோபத்தில் இருக்கின்றனர்.தன்னலம் கருதாத பல அரசியல் தலைவர்களைக் கண்ட தமிழகம், தற்போது உறுதியான தலைமையின்றி, வெற்றிடத்தில் தடுமாறி நிற்கிறது.
தலைவர் என்பவர், தன்னை நம்புபவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவராகவும், உறுதியான முடிவுகளை எடுப்பவராகவும், கட்டுக்கோப்பாக அவர்களை வழிநடத்துபவராகவும், அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.மக்கள் ஈர்ப்புத் தலைமை என்பது, தமிழக அரசியல் தளத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக இருந்து வந்துள்ளது. இது, கடந்த, 50 ஆண்டுகளில் முக்கியமான பல நிலைகள், அரசியல் மாற்றங்களில் சிறந்த பங்காற்றியுள்ளது.
காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர், மக்கள் ஈர்ப்புத் தலைவர்களாக போற்றப்பட்டதால், தமிழக அரசியல் தலைமைத்துவ வரலாற்றில், ஒரு பெரிய வெற்றிடம், தற்போது உருவாகியிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.மக்களால் எளிதில் அணுகப்பட கூடியவராக, கட்டுப்படுத்த கூடியவராக, மக்கள் நலனுக்காக, தீர்க்கமான முடிவெடுப்பவராக திகழ்பவர்களே, மக்கள் ஏற்கும் தலைவர்களாக மட்டுமல்ல, மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தலைவர்களாவும் முடியும்.
அரசியல் தலைமைக்கான தகுதி, பிறப்பு, குடும்ப பின்னணி, உணர்ச்சியூட்டும் பேச்சுத் திறன் அல்லது தலைமை மீதான பற்றால் வருவதல்ல... மாறாக, அனுகூலமான அரசியல் மேதமை, சிறந்த முடிவெடுக்கும் திறன், அம்முடிவின் படி செயல்படும் துணிவில் அடங்கியிருக்கிறது.
இவற்றை பிரதிபலிக்கும் வகையில், மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக வாழ்ந்து காட்டியவர், அண்ணாதுரை.
ஈ.வெ.ரா.,வால் பொது வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அண்ணாதுரை, அவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போதும், தலைமையை ஒரு போதும் விமர்சித்ததோ அல்லது ஏற்க மறுத்ததோ இல்லை. கடந்த, 1967ல், தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது என, ஈ.வெ.ரா., எதிர் பிரசாரம் செய்தார். ஆட்சி அமைத்த அண்ணாதுரை, முதலில், ஈ.வெ.ரா.,வை சந்தித்து, அவருக்கு மாலை அணிவித்து, 'இந்த அரசு, உங்களுக்கு காணிக்கை' என்றார். அது, அரசியல் நாகரிகம்.
அன்பு, ஈகை, இரக்கம், அரவணைப்பு, சொல் மற்றும் செயலில் நேர்மை, எளிமை, மக்கள் நலன் பற்றிய சிந்தனை, ஏழை, எளிய மக்கள் நலன் விரும்புவோர், தலைமைக்கு வர வேண்டும். அத்தகையோர் கட்சி, ஆட்சியால் கிடைக்கும் அதிகாரத்தை, மலிவான அரசியலுக்கும், சுயநலனுக்கும் பயன்படுத்த மாட்டார்கள். அதே நேரத்தில், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்வழி காட்டுவர். அதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர், தன்னலம் கருதாத தனிப் பெருந்தலைவர் காமராஜர். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, காமராஜர் போன்றோரின் தலைமைப்பண்பு, ஜாதி, மதங்களை கடந்தது.எனவே, அவர்களால், மக்கள் நல அரசியலை மக்களுக்கான அரசியலாகவே முன்னெடுத்து செல்ல முடிந்தது.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், அரசியலை அவர்கள் வாழ்வியலோடு இணைத்து பார்த்ததால், அடித்தள மக்களின் வாழ்வு வளம் பெறவும், மாநிலத்தின் வளர்ச்சி தடையின்றி நிகழவும், அவர்களின் தலைமைப்பண்பு பயன்பட்டது. இதன் காரணமாக, மாநில நலன்களுக்கு நெருக்கடி வந்தால், கட்சி பேதங்களை கடந்த நிலையில் செயல்பட்டதுடன், அரசு நிர்வாகம் சிறப்பாக இயங்குவதற்கும், ஒத்துழைப்பு தந்தனர்.
அவர்கள் அரசியலை காட்டிலும், ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழும் மக்களையும், அவர்களை அங்கீகாரப்படுத்தும் அமைப்புகளையும், உயர்வாக கருதினர்.எதிர்க்கட்சிகளை ஒரு போதும் அரசியல் எதிரிகளாகவோ அல்லது எதிரி இயக்கங்களாகவோ பார்த்ததில்லை. மாறாக, ஆலோசனை தரும் அமைப்புகளாகவே கருதினர். இதனால், தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவிலும், ஒரு ஆரோக்கியமான அரசியல் போக்கு உருவானது.
மேலை நாடுகளில் கூட, அரசியல் தலைவர்களும், கட்சிகளும், கொள்கை ரீதியாக வேறுபட்டு நின்றாலும், ஜனநாயக அமைப்பு அல்லது அரசு நிர்வாகம் நெருக்கடிகளை சந்திக்கும் போது, ஜனநாயகத்தின் மாண்புகளை காக்கும் வகையில், தலைமையின் செயல்பாடுகள் இருக்கும்.
காரணம், மக்களிடையே தலைமையின் மீது மதிப்பு குறைந்து, அவநம்பிக்கை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான்.
ஆனால், இங்கு, 'அண்ணன் எப்போது சாவான்... திண்ணை எப்போது காலியாகும்' என்ற நிலை உள்ளதால், ஜனநாயக ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடிவதில்லை. மேலும், எதையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கும் மனப்பான்மையால், மக்கள் நல அரசியல் என்பது, மலிவான அரசியலாக மாற்றப்பட்டு விட்டது.மக்கள் நல அரசியலுக்காக, தன் இன்னுயிரை கூடத் தந்த, தியாகத் தலைவர்கள் வாழ்ந்த மாநிலம் இது. மக்களாட்சியின் மகத்துவம் உணராதோர், தொலைநோக்கு பார்வையற்றோர், கையில் தற்போது சிக்கித்தவிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
தலைமைத்துவத்தின் மதிப்புகளை உண்மையாக அறியாதவர்களின் கைகளில் அதிகாரம் இருப்பதால், மக்கள் நல அரசியலை, தேர்தல் என்ற குறுகிய வட்டத்தில் அவர்கள் நிற்க வைத்து விட்டனர். பல அரசியல் தலைவர்கள், அரசின் பொறுப்பில் இன்று இருந்தாலும், அரசாட்சி செய்வதில்லை. மாறாக, அரசியல் செய்வதில் தான், தங்கள் முழு ஆற்றலையும் செலவழிக்கின்றனர். முழு நேர அரசியல்வாதியாக தான் அவர்களின் செயல்பாடு உள்ளது.
இந்நிலை மாறி, புதிய சூழல் உருவாக வேண்டும். அதற்குத் தற்போதைய நம் தலைவர்களுக்கு தலைமைத்துவம் பற்றிய ஆழ்ந்த புரிதல் அவசியம்.மக்களாட்சிக் கூறுகள் செழுமை பெறுவதற்கும், அதன் அடிப்படையில் மக்கள் நல அரசியல் எழுச்சியுறுவதற்கும், தலைமை, முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
அத்தகைய அடையாளம், நம் நாட்டில், அரசியல் முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னிறுத்தப்படுவதால், பொருளற்றும், பயனற்றும் கிடக்கின்றன.நேர்மை தவறாத ராஜாஜி, தொலைநோக்கு சிந்தனை கொண்ட காமராஜர், கொள்கைக் கோமான் அண்ணாதுரை, எளிமையின் திருவுருவம் கக்கன், மனிதநேயத்தின் மறுவடிவம், எம்.ஜி.ஆர்., பொதுவுடமையின் தனி அடையாளம், ஜீவா.
இவர்களை போன்றோரால் தலைமைப் பெருமையும், இயக்கங்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலும் கிடைத்ததுடன், அரசியல் என்ற தேர், மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, புனிதப் பாதையில் உருண்டோடியது.எனவே தான், இவர்களால் தலைமை புகழ் பெற்றது. ஆனால், தற்போது தனி நபர்களின் பிம்பங்களை சார்ந்து, தலைமை கட்டமைக்கப்படுவதால், வளர்ச்சியை முன்னெடுக்கும் மக்கள் நல அரசியல், காலாவதியாகி போய் விட்டது.
கடந்த காலங்களில், தலைமைக்கு இலக்கணமாக தலைவர்கள் எவ்வாறு செயல்பட்டனர்... எத்தகைய சிந்தனைகளை முன்வைத்தனர்... எத்தகைய திட்டங்களை வரைந்தனர்... என்பது, நிதானமான சிந்தனைக்குரியதாக உள்ளது.மக்கள் நல அரசியலின் முயற்சிகளை பாழ்படுத்தும் செயல்களில் ஈடுபடும் அல்லது அவற்றை புறந்தள்ளும் நபர்களை தலைவர்களாக வைத்து, மக்கள் நலனை மேம்படுத்துவது இயலாததாகி விடுகிறது.
இவர்களுக்கு, மக்களாட்சி சிந்தனைகள் மற்றும் மக்கள் நல அரசியலின் முக்கிய நோக்கங்கள், வாழ்வதும், வீழ்வது பற்றியும் சிறிதும் கவலையில்லை. மாறாக, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எப்படி என்ற வகையில், தரம் தாழ்ந்த அரசியலை நடத்துவதில் முனைந்து செயலாற்றுகின்றனர்.
எனவே, தமிழகத்தின் அரசியல் தலைமைத்துவ வரலாற்றில், தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவை, வெற்றிடத்தை சரி செய்யும் வகையில், தன்னிகரில்லா தலைமை உருவாக வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. யார் அந்தத் தலைமை என்பதை விட, மக்கள் நல அரசியலை மாண்புடன் வளர்க்கும் செயல்பாட்டு தலைமையா, இல்லையா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
முனைவர் ஆர்.வெங்கடேஷ்
- சமூக ஆர்வலர் --
இ - மெயில்: rvsh76gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • sampath, k - HOSUR,இந்தியா

    God only now safe guard our tamil nadu. Nobody is available at his time to take up the leadership in good manner. however, god will definitely show the good leader to tamil nadu shorly. We believe and wait.

  • Ak Gopal - chennai,இந்தியா

    பிரச்சினை என்பது அதிமுகவுக்கு மட்டுமே ..சரியான தலைமை நட்டுவனார் இல்லாததால் அவர்கள் ஆடும் அரசியல் தப்பாட்டம் தமிழ் நாட்டை சீரழிக்கிறது ..

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    தலைவர்கள் என்றோ மறைந்து விட்டனர். இப்போது இருப்பவைகள் எல்லாம் வெறும் தலைவலிகளே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement