Advertisement

சுதந்திர போராட்ட 'சிங்கம்' வாஞ்சிநாதன் : நாளை நினைவு தினம்

நெல்லைச் சீமையின் வரலாற்றுச் சுவடுகளின் நினைவுகளில் இருந்து மறக்க முடியாத இடம் மணியாச்சி ரயில்வே நிலையம். வருங்கால சந்ததியர், இதன் உண்மை, சுதந்திர வேட்கையை தெரிந்து கொள்ள வேண்டும். அது நம் கடமையும் கூட...

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கும்போது, புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரிட்டிசுக்கும், பிரெஞ்சுக்கும் எப்போதும் ஒத்துப்போகாது. புதுச்சேரி, பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இல்லாமல், பிரிட்டிஸ்ஆதிக்கத்தின் கீழ் இருந்திருந்தால், தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசு என்றோ அழித்திருக்கும்.
பொதுவாக வியாபார எண்ணம் கொண்ட பிரிட்டிஷார், தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும்
பஞ்சுகளை மிக குறைந்த விலைக்கு வாங்கி, அதை இங்கிலாந்து கொண்டு சென்று, வேட்டியாக்கி, 'கிளாஸ்கோ மல்' என்று பெயர் சூட்டி அதிக விலைக்கு நமக்கே விற்றனர்.
'ஓவல்' என்ற பொடியை டப்பாவில் அடைத்து, இரவு துாங்கும் முன் பாலில் கலந்து அருந்தினால், உடலுக்கு நல்லது என்று பிரசாரம் செய்து, அதையும் நம் தலையில் கட்டினர். இப்படி பல பொருட்களை இங்கிலாந்தில் தயாரித்து, இந்தியர்களிடம் விற்று பொருள் ஈட்டினர்.
சுதந்திர தீ சுடர் விட்டது வங்காள நாடு, பிரிட்டீஷ் வைஸ்ராய் கர்சன் பிரபு ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது. இவர் வெள்ளையர்களின் வசதிகளுக்காக வங்காளத்தை இரண்டாக பிரிக்க தீர்மானித்தார். ஏற்கனவே பிரிட்டிஷ் மேல் வெறுப்பு கொண்டு இருந்த இந்திய மக்கள், வங்க பிரிவினையை எதிர்த்து 'சுதேசி இயக்கம்' மூலம் அன்னிய பொருட்களை புறக்கணிக்க முற்பட்டனர்.
பாலகங்காதர திலகர், பிப்பின் சந்திரபால், லஜபதிராய் போன்றோர் போராட்டங்களை நடத்தினர். இது நாடு முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. இரும்புக்கரம் கொண்டு, கர்சன் அடக்க முற்பட்டார். தமிழகத்தில் வ.உ.சிதம்பரம், சுப்பிரமணியசிவா, சுப்பிரமணிய பாரதி போன்றோர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்காங்கே ரகசிய கூட்டங்கள் நடத்தினர்.

வ.உ.சி.,க்கு தண்டனை : இதன் காரணமாக வ.உ.சி.,க்கும் சுப்பிரமணிய சிவாவிற்கும் பிரிட்டிஷ் அரசு கடும் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தது. இதைக்கண்ட போராட்ட தளபதிகள், விடுதலை போராட்டத்தை நடத்த வேண்டும். பிரிட்டீஷ் அடக்கு முறையில் இருந்து தப்ப வேண்டும் என்று பிரெஞ்ச் ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரிக்கு சென்று பிரிட்டிசுக்கு எதிராகப் போராடினர்.
இந்திய தேசப்பற்று மிக்க வாலிபர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டிசுக்கு எதிராக ஆயுதங்களையும் சேகரித்து, புதுச்சேரியில் ஆயுதப் பயிற்சியும் பெற்றனர். வங்காளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சுதந்திர போராட்ட வீரர்கள் திருநெல்வேலி, துாத்துக்குடி, செங்கோட்டை போன்ற பகுதிகளில் சுதந்திர தீயை வளர்த்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் நீலகண்ட பிரமாச்சாரி.

பாரத மாதா சங்கம் : நீலகண்ட பிரமாச்சாரி, தஞ்சை மாவட்டம் இருகூர் கிராமத்தை சேர்ந்தவர். பாரதியார் மீது மிக்க பற்றுள்ளவர். இவர் கோல்கட்டாவில் சந்திரகாந்த் என்ற புரட்சியாளரை சந்தித்து, தமிழ்நாடு திரும்பிய பின் 'பாரத மாதா சங்கம்' என்று தோற்றுவித்து, சுதந்திர வேட்கையை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கினர். இதன் கிளைகள் தென்காசி, செங்கோட்டை, துாத்துக்குடியில் நீலகண்ட பிரம்மச்சாரி வழிகாட்டலில் இயங்கியது. இச்சங்கத்தின் உறுப்பினர்கள் 'காளி' தெய்வத்தின் படத்தின் முன் அமர்ந்து பூஜை செய்து, பின் குங்குமத்தை தண்ணீரில் கலந்து வைத்து, அதை பிரிட்டிசாரின் ரத்தமாக கருதி ஒரு துளி வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின் ஒரு காகிதத்தில் தங்கள் ரத்தத்தால் கட்டை விரல் ரேகையை பதிக்க வேண்டும். இப்படி கட்டை விரல் ரேகையை பதித்து பிரிட்டிசுக்கு எதிராக கிளம்பியவர் தான் வாஞ்சிநாதன்.
மணியாச்சி ரயில் நிலையம் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தின் நிர்வாகியாக 1910 ஆகஸ்ட் 2ம் தேதி ஆஷ் என்ற வெள்ளையர் பதவி ஏற்றுக் கொண்டார்.
இக்கலெக்டரின் முழுப்பெயர் ராபர்ட் வில்லியம் டி ஈஸ்ட் கோர்ட் ஆஷ். இவர் மனைவி மேரி வில்லியன் பேட்டர்சன். சுதந்திரப் போராட்ட வீரர்கள் வழி காட்டலில் வாலிபர்கள் வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்றத் தீவிரமாக போராடி கொண்டிருந்த நேரம்.
1886ம் ஆண்டு செங்கோட்டையில் ரகுபதி அய்யர், ருக்மணி அம்மையாருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு சங்கரன் என்று பெயரிட்டனர். இவர் தான் பின்நாளில் வாஞ்சிநாதன் என்று அழைக்கப்பட்டார். இந்த வாலிபர், நெல்லையில் கலெக்டர் ஆஷ் மக்களுக்கு செய்த கொடுமைகள் கண்டு கிளர்த்தெழுந்து, நீலகண்ட பிரம்மச்சாரியாரின் பாரதமாதா இயக்கத்தில் சேர்ந்து, சுதந்திர தீயை வளர்த்தார். வாஞ்சிநாதன், புதுச்சேரி சென்று வி.வி.எஸ். அய்யரின் நட்பை பெற்றார். பின் அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றார். கலெக்டரான பின் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையாக அடக்கினார்.

கப்பலோட்டிய தமிழன் : துாத்துக்குடியில் வ.உ.சி., சுதேசிக் கப்பல் இயக்கினார். அதை செயல்பட விடாமல் பல தடங்கல்களை வ.உ.சி.,க்கு ஏற்படுத்தினார் கலெக்டர் ஆஷ். பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர், எட்டையபுரம் அருகில் உள்ள பிதப்புரம் என்ற கிராமத்தில் உருவாக்க முயன்ற பஞ்சாலையை வர விடாமல் தடுத்தார் ஆஷ். (சிதிலமடைந்த பஞ்சாலை இன்றும் இருக்கிறது).
துாத்துக்குடியில் உள்ள லாயல் மில் தொழிலாளர்கள் சுதந்திர போராட்டத்தை துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கினர். நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் வெள்ளைக்காரர்கள் குளிக்கும் போது மற்றவர் குளிக்கத் தடை விதித்தார். இந்த இனத்துவேஷம் மக்கள் மத்தியில் ஆஷ் மீது கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. தேசிய தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களை, சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார். இவையெல்லாம் ஆஷ் மீது சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

ஆஷ் ஆட்டம் முடிந்தது : 1911 ஜூன் 17 ம் நாள், கலெக்டர் ஆஷ், மணியாச்சி ரயில் நிலையத்தில், ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் தன் மனைவியுடன் காலை 9:30 மணிக்கு கோடை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது தலை முடியின் முன் பகுதியை மட்டும் மழித்து பின் பக்கத்தில் தளர்ந்த முடியை சேர்த்து கொண்டையிட்ட ஓர் 25 வயது வாலிபர், சங்கர அய்யர் என்ற வாலிபருடன் ஆஷ் அமர்ந்திருந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் ஏறினார். கண் எதிரே கொடூரமாக காட்சியளித்த ஆஷ் எனும் கொடூரனை, வாலிபர் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின் மணியாச்சி ரயில் நிலையத்தின் கழிப்பறை நோக்கி சென்று துப்பாக்கியைத் தன் வாயிக்குள் திணித்து தன்னை தானே சுட்டுக்கொண்டு வீர மரணம் அடைந்தார். உடன் வந்த சங்கர அய்யர் ஏதும் தெரியாதது போல் காணாமல் போனார். வீரமரணம் அடைந்த அந்த வாலிபர் தான் வாஞ்சிநாதன்.

வாஞ்சி மணியாச்சி : ஆஷ் கலெக்டரை வாஞ்சிநாதன் சுட பயன்படுத்திய துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்டது. அத்துப்பாக்கி ரகசியமாகவே புதுச்சேரிக்கு வந்தது. இதை அனுப்பியவர் காமா அம்மையார் என்ற 'அபிநவ பாரத் அமித்' என்ற சங்கத்தை சேர்ந்தவர். வெகுகாலமாக மணியாச்சி என்ற பெயரில் இயங்கிய ரயில் நிலையம், வாஞ்சி மணியாச்சி என்றுமாறுவதற்கு போராட்டங்கள் பல நடத்தியவர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்.
இந்த ஆஷ் கொலை வழக்கு, 'திருநெல்வேலி சதி வழக்கு' என்ற பெயரில் விசாரிக்கப்பட்டது. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் தன்னைத்தானே சுட்டு தியாகம் செய்ததால், அந்த இடத்தில் அவர் நினைவாக ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டும். வாஞ்சிநாதன் சுட பயன்படுத்திய அந்த துப்பாக்கி எங்கு உள்ளது என்பதைப்பற்றிய தடயம் இல்லை. அதுபற்றி கண்டறிந்து துப்பாக்கியை அருங்காட்சியகத்தில் வைத்து போற்றி பாதுகாப்பது இந்தியர்களாகிய நமது கடமை.

- முனைவர். கே. கருணாகரப்பாண்டியன்
வரலாற்று ஆய்வாளர்
மதுரை
98421 64097

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Srikrishna KP - chennai,இந்தியா

    அவாளைப்பற்றிய அவதூறுகளைபரப்பினால் தான் பழைய வரலாறுகள் மறைக்கப்பட்டு ஒழிக்கப்படும். அதன் பின் இப்பொழுதுள்ள தலைவர்கள் லிருந்து வரலாறு ஆரம்பிக்கப்பட்டு திராவிடர்களுக்காக திராவிடர்களால் உருவாக்கப்பட்ட கழகங்கள் மக்களுக்கு நல்லாட்சி செய்து கொண்டு இருக்கின்றது என்ற மாயை யை உருவாக்க முடியும். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்மப்பா

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    "அவாள்" எல்லாம் சுதந்திரத்துக்குப் போராடியதே இல்லை என்கிறார்கள் பச்சைக் கொடியவர்கள் ..... இவரைத் தீவிரவாதி என்றும் கருத்துரை பரப்பி வருகிறார்கள் ..... இவரும், மகாகவி பாரதியும் மட்டுமே போதும் ..... சிறந்த உதாரணங்கள் ...... சுதந்திரத்துக்காகப் போராடிய பச்சைக் கொடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் .....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement