Advertisement

அடிப்படை சட்ட அறிவு பெறுவோம்!

வழக்காளர்களிடம் 'இப்படிச் செய்யக் கூடாதே, ஏன் இப்படிச் செய்தீர்கள்!' என வழக்கறிஞர்கள் கேட்கும்போது, அவர்கள் சொல்லும் ஒரே பதில் என்ன தெரியுமா? 'ஓ, அப்படியா?, 'அப்படி செய்யக்கூடாது எனத் தெரியாது' என்பது மட்டுமே. உண்மையும் அதுவே. அவர்கள் செய்த ஒரு செயல், சட்டத்திற்கு ஏற்புடையதன்று என்பதை அறிந்திருப்பதில்லை. ஒருவேளை அவர்கள் செய்வது ஒரு குற்றச்செய்கை எனில், அறியாமையை நாம் ஒரு எதிர்வாதமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், அதுவே அவர்களின் அறிவுக்கு புகட்டப்படாத குற்றவியல் அற்ற
அடிப்படைச் சட்டவிதிகள் என்றால் அவர்களின் அந்த அறியாமைக்கு யார் பொறுப்பு?

'Ignorance of law is no excuse' என்பது ஒரு அடிப்படை சட்ட விதி. அதாவது, 'எனக்கு இப்படி ஒரு சட்ட விதி இருப்பதே தெரியாது; எனவே அதை மீறியது என் தவறல்ல,' எனக்கூறி யாரும் தப்பிக்க முடியாது. அனைத்து சட்ட விதிகளையும், நாம் அறிந்தவர்கள் என்பதே சட்டத்தின் அனுமானம். ஆனால் சட்டம், விதிகளை ஓரளவிற்காவது நாம் தெரிந்து கொள்ள எளிதான வழி ஏதும் இருக்கிறதா? எனில் 'ஏதும் இல்லை' என்பதே வேதனையான உண்மை.குறைந்தபட்ச, அடிப்படைச் சட்ட அறிவை மக்களுக்கு கற்பிக்க அரசு என்ன மாதிரி முயற்சிகளை எடுக்கிறது என பார்த்தால், இவ்விஷயத்தில் இந்தியா முழுவதும் எந்த ஒரு அரசும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.
குற்றவாளிகளை விட்டு விடுவோம். அவர்கள் சட்டத்தையே வளைக்கும் அளவிற்கு சட்ட ஞானம் கொண்டவர்கள்.ஆனால், சாமானியர்களுக்கு சட்ட விபரங்கள் எல்லாம்
எங்ஙனம் தெரியும்?

மனித உரிமை மீறல்கள் : உதாரணமாக மனித உரிமை மீறல்களை எடுத்துக்கொள்வோம். அதனால் பயன் பெறுவது பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்ட வர்கள், குற்றவாளிகள், தீவிர வாதிகள் மட்டுமே. அப்பாவிகளுக்கு மனித உரிமைகளை எடுத்துச் சொல்லவோ, அவர்களுக்காக பாடுபடவோ யாருமில்லை. அந்த உரிமைகள் என்ன என்பதே தெரியாது. இதுபோல் பல்வேறு சட்டங்கள் பற்றி மக்களுக்கு ஒன்றுமே தெரியாத நிலையைப் பார்க்கிறோம். விளைவு? குடி
மக்களின் நல்வாழ்விற்காக இயற்றப்படும் சட்டங்கள், சட்டம் பயின்ற சிலரின் அலுவலக
அலமாரிகளில் அடக்கம் செய்யப்பட்டு விடுகின்றன.அரசிதழில் சட்டங்களும் விதிகளும் வெளியிடப்பட்டால் மட்டும், அது ராமானுஜர்திருக்கோஷ்டியூர் கோபுரமேறி தானறிந்ததை ஊருக்குச் சொன்னதைப் போல ஆகிவிடுமா என்ன? அரசிதழ்களை நீதிமன்றம் உட்பட அரசு அலுவலகங்கள் பலவும், ஒரு மூலையில் துாக்கிப் போட்டு வைத்திருப்பது கண்கூடு.சட்ட விழிப்புணர்வு
தனியார் அமைப்புகள் அல்லது ஜுடிசியல் அகாடமி வாயிலாக, நான் சட்டம் சார்ந்த விஷயங்களை பேசி திரும்பும் பொழுதெல்லாம், என் எண்ண ஓட்டத்தில் எழும் கேள்வி இதுவே. மக்கள் எப்படி சட்டம் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள முடியும்?முழுமையான சட்ட விழிப்புணர்வு சாமானியன் முதல் தலைமக்கள் வரை அனைத்து மட்டங்களிலும் ஏற்படவேண்டும் எனில், குறைந்தபட்ச அடிப்படைச் சட்டக் கோட்பாடுகள், சட்ட விதிகள், சட்டம் அளித்துள்ள உரிமைகள், அவை பாதிக்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கைகள், ஒவ்வொருவருடைய கடமைகளை, கட்டாயம் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியாக பயிற்றுவிக்கப்படுவதே ஒரே வழி.அசோகர் சாலையின் இருபுறமும் மரங்களை நட்ட வரலாறு, அல்ஜிப்ரா கணிதம், ஆர்க்டிக் டர்ன் பறவையின் பருவகால இடப் பெயர்ச்சி, ஷேக்ஸ்பியரின் கிங் லியர், தமிழின் மனப்பாடப் பகுதி செய்யுள்கள், கொலம்பஸின் கடல்வழிப் பயணம், பிரஞ்ச் புரட்சியும் ஒருவனுக்கு வாழ்க்கையில் எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு அவனுக்கு தமது
உரிமைகள், கடமைகள், அதை நிறைவேற்றத் தேவையான சட்ட வழிமுறைகளை கற்பித்தல்
முக்கியம் அல்லவா?சட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல்தானே, ஒவ்வொரு நாளும் சாமானிய மக்கள் பல வழிகளிலும் வசமாக பலராலும் ஏமாற்றப் படுகிறார்கள்? விளிம்பு நிலை மனிதர்கள் இன்னும் தவித்து நிற்கிறார்கள்? பெண்களின் சமூக அவலம் தொடர்கிறது.
வசதி படைத்தவர்கள்கூட போதிய சட்ட ஞானம் இல்லாததால், பல சந்தர்ப்பங்களில் அல்லலுறுவதைக் காண்கிறோம். வசதி இல்லாதவன் கதி என்ன?

உரிமை இழப்பு

பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெறுதல், உயில், ப்ரோ நோட், ஜாமின் கையெழுத்து, கிரையப் பத்திரம், ஒத்தி, பட்டா மாறுதல், பிளான் அப்ரூவல், வில்லங்கம் பார்த்தல், திருமணப் பதிவு/பதிவுத் திருமணம், வேலை நிறுத்தம், இடை நீக்கம், சாலை விபத்து, முன் ஜாமீன், இன்சூரன்ஸ் பாலிசி, ஓட்டுநர் உரிமம், பெயர் மாற்றம், வாரிசுரிமை, வாடகை ஒப்பந்தம், விவாகரத்து, ஓய்வூதியம்,
சுவீகாரம், கடவுச்சீட்டு, மருத்துவக் காப்பீடு என எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்தில் போதுமான சட்ட அறிவு இல்லாமல் அன்றாட வாழ்வில் தவறாக வழிநடத்தப் படுகிறோம்; உரிமைகளை இழந்து தவிக்கிறோம் இல்லையா?குறைந்தபட்ச சட்டக் கோட்பாடுகள், அடிப்படை
உரிமைகள், குடிமகனின் கடமைகள், அதற்கான பரிகாரங்களை மட்டுமாவது பள்ளிக் கல்வியில் ஆறாவது வகுப்பில்இருந்து மாணவர்களுக்கு கற்பித்தல் நல்லது.ஒரு மாணவன் பள்ளியில் அடிப்படைச் சட்டக் கல்வி பயின்றால் அவருக்கு மட்டும் நன்மை கிட்டப்போவதில்லை. குடும்ப உறுப்பினர்கள் தெளிவுஅடைவது மட்டுமின்றி, சுற்றம், நட்பு வட்டமும் பயனடையும்.
ஒருவனுக்கு பள்ளிப் பருவத்திலேயே நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு சட்டத்தின் மூலம் கிடைக்கும் எனில், அவனும் அவனைச் சார்ந்து இயங்குபவர்களும் ஏமாற்றப்படுதல் கடினம்.

அடிப்படைச் சட்டக் கல்வியறிவு பெற்ற ஒருவனுக்கு தான் பாதிக்கப்படும் போது, அதை எதிர்த்துப் போராடும் வழிமுறைகள் தெரியும் என்பதால், அதை எதிர்க்கும் துணிவு தன்னம்பிக்கை தானாகத் தோன்றும். சமுதாயத்தில் நிலவும் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை, மந்தப்போக்கு குறையும். குறை தீர்வுக்காக யாரும், யாரையும் சார்ந்திருக்கத் தேவைப்படாது.கடமைகளை உணர, உரிமைகளைக் கோர சட்டம் தெரிந்தவனால் முடியும். கல்லுாரிக் கல்வி
என்பது துறை சார்ந்த கல்வி என்பதால் அடிப்படை சட்டக் கல்வியை, பள்ளிக் கல்வியாகப் பயிற்றுவிப்பதே சிறந்தது.

சட்டக்கல்வி : பள்ளிகளில் அடிப்படைச் சட்டக் கல்வி பயிற்றுவிப்பதால் இன்னொரு பலனும் உண்டு. சட்டம் பயின்றவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, சட்ட ஆசிரியராகப் பணியாற்றும் வேலை வாய்ப்பையும் அது உருவாக்கும். தனியார் அமைப்புக்கள் இவ்வகையில் ஆற்றும் பணி மெச்சத் தக்கது. ஆனாலும் பள்ளிகளைப் போன்ற பரந்த வீச்சும் மேடையும் இல்லாதது அவர்களுக்கு ஒரு பெரிய தடை.'சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்' என முழங்கிய பாரதி பிறந்த நாட்டில், நம் மக்கள் அடிப்படைச் சட்ட அறிவைக்கூட கற்க வழியில்லாத இழிநிலை இனியும் தொடரலாமா?நாட்டை பீடித்திருக்கும் எத்தனையோ சீர்கேடுகளை, சட்டத்தின் துணை
கொண்டுதானே வேரறுத்து வந்திருக்கிறோம்!சட்டம் என்பது வெறும் விதிகளும், விதி மீறல்களுக்கான தண்டனை மட்டும் அல்ல. சமூக மாற்றத்திற்கான ஒரு மகத்தான கருவியும் கூட.

இரவுப் பயணத்தின் : ஓய்விற்கான சத்திரம் என்பது, அப்பயணத்தின் முடிவல்ல. உண்மையில் அந்த ஓய்வானது மறுநாளின் நெடும் பயணத்திற்கான இளைப்பாறுதலே. சட்டத்தின் ஆட்சியும் அது போலத்தான்.

-எஸ்.ஸ்ரீனிவாசராகவன்
வழக்கறிஞர்
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
ssrlawofficeyahoo.co.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement