Advertisement

விதைகள் உறங்குவதில்லை!

இன்றைய சமூகத்தில் சராசரி யான மனிதனுக்கு மனதில் பொதுவாக எழக்கூடிய கேள்வி “என்ன உலகம் இது?”. சிலருக்கு இது ஆச்சரியம் அளிக்கக் கூடிய வகையில் இருந்தாலும் பொதுவானவகையில் பலருக்கு இந்த கேள்வி ஆச்சரியமற்ற, நியாயமான கேள்வியாகத் தோன்றும். ஏனென்றால் அவர்கள் மனதிலும் இதே போன்று கேள்வி ஏதாவது ஒரு மூலையில் துளிர்விட்டுக் கொண்டு தான் இருக்கும்.

சமூக அவலங்கள் : இந்த கேள்வியை சற்று நேரம் நாமும் உற்று கவனித்தால், மடை திறந்தவெள்ளம் போல் பல பதில்கள் நம் கண்முன்னே தெரியும். உண்மையை எடுத்துரைக்க வேண்டுமென்றால்அநேகமாக இந்த பதில்களில் பெரும் பகுதி கவலைக்குரிய சமூகக் குறியீடுகளை நோக்கிதான் செல்லும்.இதற்கு உதாரணமாக சமூகத்தில் நிலவக்கூடிய புள்ளி விபரத்தை எடுத்துக் கொள்ளலாம். ஐ.நா., சபையால் உலகத்திலுள்ள அத்தனை நாடுகளையும் அவரவர் கட்டமைப்புக்கேற்ப சமூக முன்னேற்றத்தின் தரத்தை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிடுகிறது. இந்த சமூக முன்னேற்றத்தின் குறியீடு, சமூகத்தில் மனிதர்கள் வாழும் பல சூழ்நிலையை
ஒப்பிட்டு தீர்மானிக்கப்படுகிறது. 200 நாடுகளுக்கு மேற்ப்பட்ட தரவரிசை பட்டியலில் இந்தியா 137வது இடத்தில் பின்தங்கிஉள்ளது. சமூகத்தில் எழக்கூடிய பல்வேறு பிரச்னைகளின் பிரதிபலிப்பாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம். தினமும் சமூகத்தில் அரங்கேற்றப்படும் கொலை, கொள்ளை, வன்முறைவெறியாட்டங்கள், மற்றும் வன் புணர்ச்சி செயல்கள். மேலும் போட்டி பொறாமையால் எழக்கூடிய சமூக பாதிப்புகள், சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்புகள் மீது தொடுக்கப்படும் தேவையற்ற தாக்குதல்கள் என பல வகையில் ஏற்படும் அல்லது நடந்து
கொண்டிருக்கிற சம்பவங்கள் முக்கிய காரணியாக அமையலாம். இது ஒருபுறம் இருக்க, தலைமுறை இடைவெளியால் ஏற்படும் பிரச்னைகளும், நவீன சமுதாய மோகத்தால் இளைய சமுதாயத்தினரை எதிர்நோக்கிஉள்ள சமூக, கலாச்சார சவால்களையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். பொருளாதாரம் ஈட்டக் கூடிய வாழ்க்கை முறையில்
எல்லையில்லா சமூக அந்தஸ்தை பெறுவதற்காக மனிதர்களுக்குள் கொளுந்து விட்டு எரியும் பணவேட்கையும், அதனால் ஏற்படும் குடும்ப, சமூகபாதிப்புகளையும் நமது கவனத்திலிருந்து ஒதுக்கிவிடமுடியாது.

சமூக மாற்றத்தின் ஆரம்பம் : சமூக அவலங்களை பிரதிபலிக்கக்கூடிய செயல்கள் எல்லாம் ஏதோ ஒரு மந்திர சக்தியால், ஒருஇரவில் மறைந்து விடுவதில்லை. இன்னும் விவரித்து கூறினால் சமூக அவலங்களை மாற்றுவதற்கான உடனடி தீர்வு எந்த சக்திக்கும் இருப்பதில்லை, இருந்து விடவும் முடியாது. இதேதருவாயில் ஒரு ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்கிட முடியாதது என்பதும் அல்ல.ஒவ்வொரு குடும்பமும் சமுதாயத்தின் முதல் படியாக
எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பலகோடி குடும்பங்கள் இணைந்து பொதுவான சமுதாயமாக
உருவாகிறது. இந்த வகையில் சமூக மாற்றத்திற்கான முதல் முயற்சி குடும்பத்திலிருந்து தான் பிறந்திட வேண்டும். இதற்கு அச்சாணியாக விளங்குவது குடும்பத்தாரின் பங்கோடு சேர்ந்த பக்குவமான வாழ்க்கைமுறை என்பதனை கருத்தில் கொள்ளலாம். அனைவரது மனதிலும் ஆணித்தரமாக பதிந்து வைத்துக் கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் எத்தகைய சமூக
பிரச்னைகளையும் எதிர்கொள்ளவேண்டிய சக்தி குடும்பங்களில் அபரிமிதமாக புதைந்துள்ளது.
குதுாகலமான குடும்பங்களில் அனைத்து வயதுடையோர் இருந்தாலும், நாம்அனைவரும் குடும்பத்தின் விளக்காக குழந்தைகளை தான்போற்றி பாதுகாத்து வளர்த்து வருகின்றோம். குடும்ப விளக்காக அறியப்படுகின்ற குழந்தைகள் மற்றும் இளையோர் எதிர்காலத்தில் சமுதாயத்தில் முக்கிய அங்கத்தினர்களாக பல்வேறு தருணங்களில் பிரகாசமாக விளங்கக்கூடியவர்கள். குழந்தைகளை மகிழ்ச்சியோடும், உணர்வோடும் நெறிப்படுத்துகின்ற குடும்பங்களில் எழுச்சியான உற்சாக சக்தி பிறக்கின்றது. இந்த குடும்பங்களில் பிறக்கின்றசக்தி, ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு பெரும் காரணியாக அமைகின்றது. அதே வேளையில் குடும்பங்களில் ஆரோக்கிய சக்தியை தவிர்த்து உற்சாகமிழந்து பரஸ்பர மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்தால் அதுவும் ஆரோக்கியமற்ற அளவில் சமுதாயத்தில் பிரதிபலிக்கும்.

விழுமிய விதைகள் : ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்கும் குடும்பங்களில் உயர்வான விழுமியஎண்ணங்களை விதைத்திடவேண்டும். இளம்குழந்தைகளின் மத்தியில் உயர்வான உணர்வு
பூர்வமான நல்லொழுக்க வாழ்க்கை முறைகளை விழுமியங்களாக விதைக்கப்படும் பொழுது, அதுஉயிர்பெற்று விருட்சகமாக வளர்ந்து ஆரோக்கிய சமுதாயத்தின் வேர்களாக மிகவும் ஆழமாக ஊன்றப்படுகின்றது. காலம் செல்ல செல்ல ஆழமான வேர்களைக்கொண்ட செடிகள் மரங்களாக வளர்ந்து பூத்துக்குலுங்கும் பூக்களோடு சுவையுள்ள கனிகளைத் தரும். இதேபோன்று தான்
குடும்பங்களில் குழந்தைகளின் மத்தியில் விதைக்கப்படும் விழுமியங்கள் எதிர்காலத்தில் ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்கிட உன்னத சக்தியாக உருமாறுகின்றது.குடும்பங்களில்
பெரியவர்கள் மூலமாக பெற்றோர்களின் வழிக்காட்டுதல் வாயிலாக குழந்தைகளுக்கு பல் வேறு வகையான நல்லெண்ண விதைகளை விதைப்பதற்கு எல்லோருக்கும் சமமான வாய்ப்பு
இருக்கின்றது. பொருளாதார, சமூக அந்தஸ்து ரீதியாகவோ இன்னும் பிற காரணிகளுக்காகவோ
குடும்பங்கள் எந்த வகையிலும் இதில் தரம் தாழ்ந்து விடுவதில்லை. சமூக பாதிப்பு இயற்கை என்றுமே மனிதனுக்கு பாதிப்புகளை உண்டாக்குவதில்லை. மாறாக மனிதர்கள் தான் சமூக பாதிப்புகளுக்கு ஏதோ ஒருவகையில் காரணமாகின்றனர். இந்தஉலகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு பிரதிபலன் எதுவும் செய்ய வேண்டுமென்று எண்ணினால், அவர்களுக்குக்கிடைத்த பெரும் பாக்கியம் விழுமிய விதைகளை விதைப்பதுதான்.எத்தகைய விதைகள் விதைக்கப்படவேண்டும் என்பதற்கான பொதுவான குறிப்புகள் சில...குழந்தைகளுக்கு எல்லோரிட மும் அன்பு செலுத்த கற்றுத் தரப்பட வேண்டும்.ஒவ்வொரு மனிதனின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கும் மரியாதை அளித்திட கற்றுக் கொடுக்கவேண்டும்.ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற வாழ்க்கை முறையை தகுந்த புரிதலோடு குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.
நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எந்த தீய செயல்களிலும் ஈர்க்கப்படாத வண்ணம் அவர்களை வழி நடத்திட வேண்டும்.அறிவுரைகளை தவிர்த்து ஆற்றுப்படுத்துதல் என்ற முறையில் குழந்தைகளோடு உறவாட வேண்டும்.குடும்பங்களின் பொருளாதார நிலையை விளக்கி வருவாய் ஈட்டக்கூடிய காரணிகளை எடுத்துரைத்து அதன் மீதுமதிப்பை ஏற்படுத்திட வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் தனது உழைப்பால்வராத எந்தவித வருமானத்தையும் அனு
பவிக்கக்கூடாத வண்ணம் அவர்களை வாழ்க்கை பயணத்திற்குத் தயார்படுத்த வேண்டும்.
சகோதரத்துவத்தையும் மாற்று பாலினரின் புனிதத்தை மதித்து வாழ்வதற்குக் கற்றுத்தரவேண்டும்.உண்மையை பிரதிபலித்து வாழும் முறைக்கு அவர்களை வழி நடத்தி உற்சாகப்படுத்திட வேண்டும்.குடும்பமும், நாடும் இரு கண்களாய் பாவித்து ஒன்றின் வளர்ச்சிக்கு ஒன்றை அழித்து கொள்ளாத விதமாக வளர்க்கவேண்டும். மனித உழைப்பின் மகத்துவத்தை போற்றிட கற்றுக்கொடுக்க வேண்டும். சுயமலர்ச்சி வெளிப்படுத்துகின்ற வாழ்க்கை முறையை அறிந்து பணத்திற்காகவோ, பதவிக்காகவோ, அந்தஸ்திற்காகவோ, நகையாடி வாழ்க்கையை வீணடிக்காமல் உன்னத வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்பிக்கப்பட வேண்டும்.விதைக்கும் காலம்
“ஒன்றே செய், அதுவும் நன்றே செய், முக்கியமாக இன்றே செய்” என்ற கூற்றிற்கு ஏற்ப விழு
மியங்களை விதைப்பதற்கு காலம், நேரம் பார்க்கத் தேவையில்லை.நாம் இப்பொழுது விதைக்கும் விதைகள் உடனடியாக பலன் தரபோவதில்லை என்று எல்லோரும் நினைத்துவிட்டால் என்னவாகும்? விழுமிய விதைகளை விதைப் பதற்கு சரியானகாலம் கடந்து போன நேற்று அல்ல, வரப்போகும் நாளை அல்ல, முக்கியமாக புதிய விடியலாக உதயமான இன்றுதான்!சுயநலம் பார்க்காமல் நமது குடும்பங்களில் சமூக மாற்றத்திற்கான விழுமிய விதைகளை விதைக்க முன்வந்து வளமான சமுதாயம் உதயமாகும் தருணத்தில் நமது செயல்களின் மூலம் கலங்கரை விளக்காக திகழ்வோம்!

--நிக்கோலஸ் பிரான்சிஸ்
எழுத்தாளர், மதுரை
94433 04776

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement