Advertisement

பள்ளிகளில் பண்பு பழகுவோம்!

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக் கூடங்கள் திறந்து விட்டன. மனிதவாழ்க்கை யில் கிடைப்பதற்கரிய அறிவு, ஆனந்தம், நட்பு ஆகிய மூன்றும் ஒருங்கே கிடைக்கும் ஒரே இடம் பள்ளிக் கூடம் மட்டுமே. மாணவ, மாணவிகள் மிகுந்த கவனத்தோடு தங்கள் பாதங்களை அவ்விடத்தில் பதிக்க வேண்டும். பண்பாட்டின் தொட்டிலாய் விளங்கும் நம் பாரத நாட்டில், பள்ளிக் கூடங்களுக்கென்று சில பண்பாடுகள் உண்டு. படிக்கும் பள்ளி, கற்கும் பாடப்புத்தகம், கற்பிக்கும் ஆசிரியர் ஆகியன அனைத்தும் புனித மானவை, புண்ணியம் தருபவை.எனவே இவை அனைத்தையும் மதித்துப் போற்ற வேண்டியது, மாணவச் செல்வங்களின் தலையாயக் கடமை.
கல்வி கற்கும் பள்ளிக் கூடமானது, கடவுளை வழிபடும் கோயிலுக்குச் சமம். எனவே அப்பள்ளிக் கூடத்தில் மிகுந்த பயபக்தியோடு மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
துாய்மையின் உறைவிடம்கோயில். எனவே கோயிலைச் சேதப்படுத்துவதோ, அசிங்கப்படுத்துவதோ பக்தர்களுக்கு அழகல்ல.அந்த நிலைப்பாட்டை மாணவர்கள், பள்ளிக் கூடங்களில் கட்டாயம் கடைபிடித்தாக வேண்டும்.கோயிலின் கருவறையிலிருந்து கழிப்பறை வரை எவ்வளவு
துாய்மையாக வைக்கப்பட்டுள்ளது என்பதை, இன்றைய மாணவச் செல்வங்கள் நன்கு உணர்ந்தாக வேண்டும். அந்தத் துாய்மையைப் பள்ளிக் கூடங்களின் வகுப்பு அறைக்குள் இருக்கும்கரும்பலகையிலிருந்து தொடங்கி கழிப்பறைவரை மாணவ, மாணவியர் கடைபிடிக்க வேண்டும்.

மாணவர் அமைப்புகள் : இந்தத் தூய்மை,சேவை, தியாகம், ஒழுக்கம் ஆகிய நற் பண்புகளை மாணவர்கள் கட் டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளிக் கூடங்களில், நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்) மற்றும்தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போன்ற
அமைப்புகள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இத்திட்டங்களில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதோடு, அதன் மூலம் கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும். கூடவே, இந்த
உன்னதப் பண்பு நலன்களை அப்படியே தங்களின் வாழ்க்கையில் கடைபிடித்தால், அந்தக் கடவுளே அவர்களுக்குத் துணையிருப்பார்.கோயிலுக்குள் ஆரவாரம் செய்வதற்கும் ஆடம்பரம் காட்டுவதற்கும் வாய்ப்பேயில்லை. அங்கு அமைதி, சாந்தம், சமத்துவம் மட்டுமே தவழ்ந்து விளையாடும். இந்த உண்மையை ஒவ்வொரு மாணவனும் உணர வேண்டும்; ஆசிரியர்கள் உணர்த்தியாகவேண்டும்.இந்த உயரியச்சிந்தனைகளை மாணவச் செல்வங்களின் மனதில் பதியம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், அன்றைய தமிழக முதல்வர், மக்களின் கல்விக் கண் திறந்த காமராஜர், பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்குச் சீருடைத் திட்டத்தையும் மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

பாகுபாடு வேண்டாம் : உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வு எவரிடத்திலும் இருக்கக் கூடாது. உடையோன், இல்லோன் என்ற பாகுபாடு மாணவர்களை அண்டக் கூடாது என்பதே அவரின் சீரியச் சிந்தை.எனவே பள்ளிப்பருவத்தில், எவ்விதமான ஆரவாரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் இடம் கொடாமல் இருந்தால், மாணவர்களின் வாழ்க்கையில் வசந்தம்
என்றென்றும் நிலைத்திருக்கும்.இதற்கும் மேலாக “ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்” என்பது கல்வியாளர்களின் கருத்து. அப்படியென்றால்,பள்ளிக் கூடமென்பது மாணவர்களின் இன்னொரு இல்லமாக அல்லவா இருக்க வேண்டும்?தங்கள் இல்லத்தை அழகுப் படுத்துவதிலும் அலங்காரம் செய்வதிலும், ஆர்வம் காட்டுவதைப் போன்று மாணவர்கள் தங்களின் பள்ளிக் கூடங்கள் மீது ஆர்வம் செலுத்த வேண்டும்.இவ்வாறெல்லாம் மாணவர்கள் பள்ளிக் கூடங்களில் கடைபிடிப்பார்களானால், தற்போது நம் தேசத்தில் மத்தியஅரசால் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கும் துாய்மை இந்தியா திட்டத்தில் இவர்களும் நேரடியாக பங்காளி
களாவார்கள்.

புனிதப்பொருள் : கோயிலிலிருந்து கிடைக்கும் பிரசாதத்திற்கு அல்லது புனித பொருள்களுக்குச் சமமானது பாடப் புத்தகங்கள். இந்தப் பாடப் புத்தகங்கள் அறிவின் ஊற்றுக் கண்களாகத் திகழ்பவை.அதனால்தான் அறிந்தோ,அறியாமலோ புத்தகங்கள் காலில் மிதிபட்டால், உடனே அதனைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள நம் மூதாதையர்கள் நம்மை பழக்கப்படுத்தி வைத்துஉள்ளார்கள்.கோயில் பிரசாதத்திற்கு எந்த அளவு மரியாதைக் கொடுக்க வேண்டுமோ, அந்த அளவு மரியாதையை சற்றும் குறையாமல் பாடப்புத்தகங்களுக்கும் மாணவர்கள் கொடுக்க வேண்டும்.கோயில் பிரசாதத்தைப் பெறுவதற்கும், சுவைப்பதற்கும் எவ்வளவு முண்டியடித்து, முன் வரிசையை நோக்கி முன்னேறுகிறோமோ அதைப் போன்று பாடப் புத்தகங்களிலிருக்கும் பாடங்களைப் படிப்பதற்கும், அவற்றை உள்வாங்கி,அடிமனதில் ஆழமாக நிலை நிறுத்துவதற்கும் முனைப்புடன் முயல வேண்டும்.பூஜாரி கோயிலில் தீபாராதனை நேரத்தில், கருவறையிலிருக்கும் கடவுளுக்குத் தீபம் காட்டும் போது, அதுவரை அங்குமிங்குமாகச் சிக்குண்டுக் கிடந்த பக்தர்களின் மனமானது, எவ்வாறு ஒருமித்து கடவுளுக்கு நேராக வந்து பிரார்த்தனைச் செய்கிறதோ, அதைப் போன்று வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம்சொல்லிக் கொடுக்கும் போது மாணவர்களின் முழு கவனமும் அப்பாடத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் கடவுள்கள் : அவ்வாறு செய்தால், ஆசிரி யர்கள் தினம் தினம் கற்பிக்கும் பாடங்கள் அப்படியே மனதிற்குள் பதிந்து, நிலைத்து நிற்கும். அதன் மூலம் தேர்வு நேரத்தில் அதிக சிரமமின்றி, அனைத்து வினாக்களுக்கும் அருமையாக விடை எழுதி அவரவர் விரும்பும் மதிப்பெண்கள் பெற வழிகோலும்.அதிக மதிப்பெண்ணுடன்வெற்றி பெற்றால், ஒவ்வொருவரும் விரும்பும் உயர்படிப்பிற்கு எளிதாகச் செல்ல முடியும்.அதோடு அவரவர் விரும்பும் பட்டங்
களையும் பதவிகளையும் பெற்று உன்னத நிலையை அடைவதற்கு ஊன்றுகோலாக இருக்கும்.
பள்ளியை கோயிலாகவும்பாடப் புத்தகத்தைப் பிரசாதமாகவும் நினைக்கும் மாணவர்கள், அவர்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை அக்கோயிலின் கருவறையின் உள்ளிருக்கும் கடவுளுக்கு நிகராக மதிக்க வேண்டும்.ஏனென்றால் ஆசிரியர்கள்தான் மாணவர்களின் அறிவுப் புலமை யையும் தாண்டி, அவர்களின் ஞான திருஷ்டியைத் திறக்கும் வல்லமைப் படைத்தவர்கள்.
அதனால் மாணவர்கள்எப்பொழுதும் ஆசிரியர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கீழ்படிதல் உள்ளவர்களாக இருப்பது மிக அவசியமானது. எந்த ஒரு மாணவன் தங்களிடம் கீழ்படிதலுள்ளவனாக இருக்கிறானோ அவனிடம்,ஆசிரியர்களுக்கு அன்பும் பாசமும் அதிகமாகவே இருக்கும்.
அதுபோலவே ஆசிரியர்களிடத்தில்அளவு கடந்த அன்பும், மரியாதையும் காட்ட வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்களின் பிரார்த்தனையும் ஆசியும் மாணவர்கள் மீது சொரிந்து கொண்டே இருக்கும்.கற்பிக்கும் ஆசிரியரின் பரிவும் பாசமும் ஒருவருக்குப் பரிபூர்ணமாகக் கிடைத்தால், அவர் வாழ்க்கையின் உன்னத நிலையை அடைவார் என்பதில் ஐயப்பாடு இல்லை.
அதற்குச் சான்றுபகர்ந்து நிற்பவர்கள்தான் நம் பாரதத்தின் ஆன்மிகப் பகலவன் சுவாமி
விவேகானந்தரும், நவீனஅறிவியல் நாயகன் அப்துல்கலாமும். இருவரும் இளைஞர்களின் எழுச்சிநாயகர்கள்.

பண்பட்ட மாணவர்கள் : ஓர் ஆசிரியரை,ஒரு மாணவன் விரும்புகிறான் என்றால், அவர் கற்பிக்கும் பாடங்கள் அனைத்தும் அவனுக்குமிக எளிமையாக, இனிமையாக, தெளிவாகப் புரிந்து விடும். கூடவே அவனுக்கு எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையும் உண்டாகும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் எந்தெந்த மாணவர்களிடத்தில் இருக்கிறதோ அவர்கள் மிகவும் பண்பட்ட மாணவர்களாக விளங்குவார்கள். பள்ளியில் பண்பட்ட மாணவர்கள், வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஊருக்கும், உலகிற்கும் பயனுடையவர்களாக இருப்பார்கள்.
இதனை வள்ளுவர் கூறும் போது,

''பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மாண்புக்கு மாய்வது மன்''
என்கிறார். பண்புடையவர்கள் உள்ளதால்தான் இந்த உலகம் நேர்மையான வழியில் இயங்கு
கிறது. இல்லையேல் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் என்பதே அவர் கூற்று.
எனவே பள்ளிக் கூடத்தைக் கோயிலாகவும், பாடப் புத்தகத்தை பிரசாதமாகவும், ஆசிரியர்களை கடவுளாகவும் கருதும் மாணவர்கள், எதிர்காலத்தில் நல்ல பண்பட்ட மாமனிதர்களாக ஏற்றமுறுவர் என்பது திண்ணம்.

-முனைவர் கமல. செல்வராஜ்
முதல்வர், கிரேஸ் கல்வியியல் கல்லுாரி
படந்தாலுமூடு. 94435 59841

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement