Advertisement

பாவம்! சட்டம் என்ன செய்யும் இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

'இன்றைய குழந்தைகள், நாளைய தலைவர்கள்', என்றார் காந்தியடிகள். மகிழ்ச்சியான
குழந்தைகள், நம் தேசத்தின் பெருமை. அவர்களுக்கு, வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியும், வளர்ச்சிக்கேற்ற அறிவு வளர்ச்சியும், மனப்பக்குவமும் அளிக்க வேண்டியது இந்த தேசத்தின் கடமை.

ஆனால், நாளைய தலைவர்களின் இன்றைய நிலை வேதனைக்குரியதாக உள்ளது. வீடுகளில் தினசரிகளை எறிந்து விட்டுச் செல்பவர்கள், காலணிகளுக்கு மெருகூட்டுபவர்கள், ஓட்டல்களில் இலையெடுப்பவர்கள், -அலுவலகங்களில் எடுபிடி வேலைபார்க்கும் ஊழியர்கள், -தெருக்களில் குப்பை பொறுக்குபவர்கள், பட்டாசு, தீப்பெட்டி, சாயம் போன்ற அபாயகரமான தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் என இவர்களில் பெரும் பகுதியினர் 14 வயது நிரம்பாத குழந்தைகள் அல்லவா?...

இப்படி எத்தனையோ ரூபங்களில் நம் கண் முன் உலவும் குழந்தைத் தொழிலாளர்களை வேடிக்கைப் பார்க்கிறோம். ஏராளமான சட்டங்களை உருவாக்கியும், குழந்தைத் தொழிலாளர் பிரச்னை நம் நாட்டிலிருந்து ஒழிந்தபாடில்லை. காரணம் என்ன?

ஏட்டில் மட்டும் சட்டம்
ஒரு சட்டத்தை உருவாக்கும் போது, அதனை அமல்படுத்த வேண்டிய அதிகாரி, அவருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் போன்றவை அச்சட்டத்திலேயே வரையறுக்கப்படுகின்றன. குற்றங்களைத் தடுக்கவும், விதிமீறல்களை உரிய மன்றத்திற்குக் கொண்டு செல்லவும், அந்தந்த துறையில் ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்கள் சட்ட விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்கின்றனர்.

நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் பிரச்னை, பரவலாக இருந்த நிலை மாறி, குறிப்பிட்ட சில தொழில்களில் மட்டும், இன்னும் நிலை கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வைரக்கல் மெருகூட்டுதல், ம.பி.,யில் சிலேட்டுக் குச்சிகள் தயாரித்தல், உ.பி.,யில் கம்பள நெசவு, கண்ணாடி வளையல் தயாரிப்பு, பூட்டு தயாரித்தல், வெண்கலப் பாத்திரம் தயாரித்தல், காஷ்மீரில் கம்பளி நெசவு, ஆந்திராவில் ஓடு தயாரித்தல், தமிழகத்தில் சிவகாசி, சாத்துார், கோவில்பட்டி ஆகிய இடங்களில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு போன்ற தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

இது குறித்து உலக அளவில் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கின்றன. 1881ல் துவங்கி 1986வரை குழந்தை தொழிலாளர்களை காப்பாற்ற பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், அவை ஏட்டளவில் மட்டுமே உள்ளன.

யார் குழந்தைகள்
1986ல் இயற்றப்பட்ட சட்டத்தில் அனைத்து தொழில்களிலும், குழந்தைகளின் வயது வித்தியாசம் நீக்கப்பட்டு, பொதுவான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. 14 வயது நிரம்ப பெறாதவர்களே குழந்தைகள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர்கள் தினசரி ஆறு மணி நேரமே வேலை செய்ய அனுமதிக்கப்படலாம் என்று இச்சட்டம் கூறியது.

ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதற்கு பதில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு விட்டது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிக்கத் துவங்கினர்.

அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகள் குழந்தைத் தொழிலாளர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதித்தன. இது இந்திய ஏற்றுமதியை பாதித்தது. மறுபுறம், குழந்தை தொழிலாளர் குடும்பங்களின் வறுமைக்கு தீர்வு காணும் வரை, பிரச்னையை ஒழிக்கும் அனைத்து முயற்சிகளுமே தோல்வியைத் தரும் என்ற கருத்து வலுவுற்றது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பணி செய்யும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் கீழ் ஆய்வாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தும், ஆண்டுக்கு ஐம்பது வழக்குகள் கூட இச்சட்டத்தின் கீழ் பதியப்பட்டு, நீதிமன்றம் கொண்டு செல்லப்படவில்லை என்கின்றது புள்ளி விபரம். பலருக்கு தாங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு ஆய்வாளர் என்ற விபரமே தெரியாது என்பது பரிதாபமான உண்மை.

மக்களிடையே குழந்தைத் தொழிலாளர் பிரச்னை, ஒரு பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. ஒழிக்கப்பட வேண்டிய மிகப்பெரும் சமூகக் குற்றமாக இதனை மக்கள் பார்க்கவில்லை. விழிப்புணர்வுக்கான ஒரு மக்கள் இயக்கமாக இதனை மாற்றும் அளவிற்கு அரசுத் திட்டங்கள் அமையவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இச்சட்டத்தினை அமல்படுத்த வேண்டிய ஆய்வாளர்களிடையே சமூக அக்கறையில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
இந்நிலையில், மேத்தா என்பவர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில் 1996ல் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.இதன்படி, இந்தியா முழுவதும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களை, அத்தொழிலில் இருந்து விலக்கி, 14 வயது வரை கட்டாயக் கல்வி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அவர்கள் குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார நஷ்டத்தினை ஈடுகட்ட, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும்.

குழந்தைத் தொழிலாளரை வேலைக்கமர்த்திய நிறுவனம், ஒரு குழந்தை தொழிலாளருக்கு இருபதாயிரம் ரூபாய் வீதம் அபராதம் செலுத்த வேண்டும். அதனுடன் அரசும் ஐந்தாயிரம் ரூபாய் பங்களிக்க வேண்டும். மொத்த நிதியான 25 ஆயிரம் குழந்தை தொழிலாளர் நலனுக்கு பயன்படுத்தப்படும். இது போன்ற பல்வேறு உத்தரவுகள் தீர்ப்பில் இருந்தது.

பயிற்சி வேண்டும்
குழந்தை தொழிலாளர் முறை இன்னும் நாட்டில் ஒழிக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் அலறிக் கொண்டிருக்க, ஆண்டு ஒன்றிற்கு ஆய்வாளர் ஒருவர், ஒரு வழக்குத் தொடுத்தால் கூட, ஒரே ஆண்டில் தமிழ்நாட்டில் 40 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து முழுக்க முழுக்க குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை விரைவில் மாற்றலாம்.

வரதட்சணை, மதுக் கொடுமைகளை விட கோர முகம் கொண்ட சமூகப் பிரச்னையான குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வெண்டுமெனில், சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ஆய்வாளர்களுக்கு சமூக அக்கறை வேண்டும். அரசு தகுந்த நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும். நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளை வெற்றிகரமாக நடத்த அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.

விழிப்புணர்வு
மக்களிடையே இப்பிரச்னையின் விளைவுகளை கொண்டு செல்லும் வகையிலும், இம்முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தொடர் பிரசாரம் செய்ய வேண்டும். 1966ல் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இருந்த எதிர்ப்புகள் மாறி, அது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

இன்று தமிழ்நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் எவருக்கும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அது போல, குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துபவர்களையும் பெற்றோர்களையும் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கட்டாயக் கல்வியை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்தியா வல்லரசாக மாற ஆயுதங்கள், ஏவுகணைகள் மட்டும் போதாது. இது போன்ற சமூக பிரச்னைகளை முற்றிலுமாக தீர்த்தால்தான் நாடு வல்லரசாகும். வெறும் சட்டம் மற்றும் இயற்றினால், பாவம்! சட்டம் என்ன செய்யும்?

- எஸ்.எம்.ஷம்சுதீன் இப்ராகிம்

தொழிலாளர் இணை ஆணையர் (ஓய்வு) மதுரை

96005 00300

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rajasekaran Ayyavoo - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    தொலைக்காட்சி, சினிமா வில் தோன்றும் குழந்தைகளும் கை நீட்டி சம்பளம் வாங்கினால் அவர்களும் இந்த குழந்தை தொழிலாளர்கள் என்ற வளையத்திற்குள் வருகிறார்கள். அவர்களையும் நாம் கொண்டாடி ஊக்கு விக்க கூடாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement