Advertisement

என்ன கல்வி தேவை

கல்வித் துறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுஇருக்கும் தருணம். இந்த சமயத்தில் கற்பதன் நோக்கங்களும், பயன்களும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை ஆராய்வது சரியாக இருக்கும்.சுகப்பிரசவம் என்றால் தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும். குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் பிறந்திருக்க வேண்டும்.சுகமான கல்வி என்பதும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆரோக்கியமான கல்வியை கற்றிருக்க வேண்டும். ஒரு மாணவர் பெற்ற கல்வியால் அவரது பெற்றோரும், ஆசிரியரும் இந்த மாணவரும் (தாயும், சேயும்) நலமாக இருக்க வேண்டும். இந்த சமூகத்தின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய அளவில் கல்வி கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி கற்பதன் முழுமையாக பயனை அடைய முடியும்.
கல்வி என்பது மனம் உட்பட நமது புலன் உறுப்புகளை சரியான முறையில் உபயோகிக்கக் கற்றுக்கொடுக்கும் செயல்என்கிறார் காந்தி. மனமும், செயலும் ஒருமுகப்பட்டு சரியான திசையில் செயல்படுகிற போது உயர்லட்சியங்களை நோக்கி உயர முடியும். மாணவனின் உன்னத லட்சியங்களை நிறை வேற்றுவதில் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது.

வாழ்வியல் கல்வி : மாணவர்களை நல்ல குடிமக்கள் ஆக்க வேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் பணியாற்ற வைக்க வேண்டும். தேசத்திற்கு புகழ் தேடி தருபவர்களாக மாணவர்களை
உருவாக்க வேண்டும். குடும்பத்தை சிறப்பாக நடத்திச் சமூகத்தில்சிறப்பாக வாழ தகுதியானவர்
களாக செய்ய வேண்டும். கல்வியின் மிக முக்கியமான நோக்கங்கள் இவை. எழுத்தறிவு பெறுவது மட்டும் கல்வியல்ல. வாழ்வறிவு பெறுவதுதான் உண்மையான கல்வியாக இருக்க முடியும்.
ஆனால் இன்று படிப்பு என்பது நல்ல தொழிலைத் தேடுவதற்காக மட்டுமே இருக்கிறது. தொழில் வாய்ப்புள்ள படிப்புகளையே மாணவர்கள் எடுத்துபடிக்கிறார்கள்.தன் வலிமை, தன் தேவை, தன் தகுதி, மனவலிமை, எதிர்காலத்திட்டம், நடைமுறைப் பயன்பாடு ஆகியவற்றை மனதில் கொண்டே கல்வியைத் திட்ட மிட்டு படிக்க வேண்டும். தேச நலனையும், நோக்கமாக கொண்டு கல்வியைத் திட்டமிடுவது மிகவும் நல்லது. இன்று நாம் படிக்கும் படிப்பு நமக்கே பயன் தருகிறதா என்றால், கேள்விக்குறிதான். தேசத்தின் அடிப்படை அலகாக இருக்கக் கூடிய குடும்பத்தை சிறப்பாக நடத்தக்கூடிய அறிவை பெற வேண்டியது மிக அவசியம்.

விசால பார்வை : படிப்பறிவில்லாத ஒரு விவசாயி மண்ணை நேசிக்கிறான். தன் உழைப்பால் விளையும் பயிர்களால் உலகம் பசியாற வேண்டும் என்ற எண்ணமே அந்த விவசாயிக்கு இருக்கிறது. ஆனால் எண்களையும், எழுத்துகளையும் கற்றுக்கொண்டு, படிப்பாளர் என்று கூறிக்கொண்டு சக மனிதனைப் பற்றி அக்கறையே இல்லாமல் இருந்தால், நாம் கற்ற கல்வியால் விளையும் பயன்தான் என்ன?வாழ்வறிவு பெறுவதுதான் உண்மையான கல்வி. எழுத்து
அறிவால் வாழ்வறிவை வழங்கி விடமுடியாது. ஆனால், எழுத்தறிவால் வாழ்வறிவைக் கூடச் செய்ய முடியும். எளிமையாக இருந்தாலும் வாழ்வறிவு பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையையும், சூழலையும் சந்தோஷமாக மாற்றிக் கொண்டு மன நிறைவோடு வாழ முடியும்.
நாம் பெற்றிருக்கிறவெறுமையான எழுத்தறிவால், தேவைப்படாத தகவல்களை தெரிந்து கொண்டும், வேண்டாத பொருள்கள் மீது ஆசைப்பட்டுக் கொண்டும், அவை கிடைக்காமல் வருத்தப்பட்டுக் கொண்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இப்படியொரு கவலை சூழ்ந்த வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் நம் எழுத்தறிவுக் கல்வி பயன் படுகிறது.

பணத்தின் மதிப்பு : பணம் என்பது பண்ட மாற்றுக்கு பதிலாக வந்த ஒரு கருவி. அந்த பணத்திற்கு மதிப்பை நிர்ணயித்ததே மனிதன் தான். இன்று மனிதனின் மதிப்பை அந்த பணம் நிர்ணயிக்கிறது.பணத்தை பொருளை வாங்கும் ஒரு கருவியாக கருதாமல், பணத்தையே இலக்காக
அடைகிற போதையில் மூழ்கி கிடக்கிற தன்மையில் இருந்து மனித குலம் வெளியேற
வேண்டிய அவசியத்தை வகுப்பறை போதிக்க வேண்டும்.

ஒழுக்கம் : இன்றைக்கு மிக அவசியமான தேவை யாக இருப்பது தனி மனித ஒழுக்கம் தான். கல்வியின் முக்கிய நோக்கமாக “உயிரினும் ஓம்பப்படும்” ஒழுக்கம் கற்றுத்தரப்பட வேண்டும். ஒரு செயல் அவரவரது கோணத்தில் சரி யாகவே தோன்றும். தன் சந்தர்ப்பத்தையும், சூழலையும் சொல்லி, வசதியான வாதங்களை முன் வைத்து அந்த செயலை நியாயப்படுத்துகிற சம்பவங்கள் நடக்கின்றன. இங்குதான் ஒழுக்கத்தில் பிழைகள் நடக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் தான் கற்ற கல்வி யானது எது சரி? எது தவறு? என்று தராசுத் தட்டில் நிறுத்தி சரியான முடிவெடுக்க உதவுகிறது. அப்படிப்பட்ட கல்வியை பள்ளி வளாகம் போதிக்க வேண்டும்.ஒழுக்கத்தின் முக்கிய கூறான சுயக்கட்டுப்பாடு குறைந்து வருகிறது. மாணவர்களிடம் சுயக்கட்டுப்பாட்டை வலியுறுத்துவதன் மூலம், தவறான பாதையிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்கலாம்.சாலை விதிகளை மதித்து
நடந்தால்தான் பயணம் பாதுகாப்பானதாக இருக்கும். அதுபோல வாழ்க்கைப் பயணம்
சிறப்பாக அமைய வேண்டுமானால் நமக்கு நாமே வாழ்க்கை நியதிகளை கடைப்பிடித்து
நடக்கிற பண்பு கற்றுத்தரப்பட வேண்டும்.வாழ்வியல் ஒழுக்கங்களை பின்பற்ற மாணவர்கள் நெறிப் படுத்தப்பட வேண்டும்.தன் மதிப்பும்,மதிப்புத் தேவையும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. பாரம்பரியம், சூழல், வயது, வளர்ப்பு முறை உடல் நிலை, உணவு முறை முதலிய பல காரணங்களால் இந்த தனித்தன்மை வேறுபடும். இந்த தனித்தன்மையில் உள்ள வேறுபாட்டை நாம் தர வேறுபாடாக கருதக்கூடாது. எல்லா உதிரி பாகங்களும் இருந்தால்தான் ஒரு வாகனம் உருவாகும். அனைத்து பாகங்களும் அதனதன் பணியின் அடிப்படையில்
முக்கியமானவை.அதுபோல சமூகத்தில் ஒவ்வொருவரின் பணியும், வேலையும் முக்கியமானவை. இதில் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லை. ஒவ்வொருவரிடமும் உள்ள தனித்தன்மையைக் கண்டுபிடித்து அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த தனித்தன்மையை, வளர்ப்பதன் மூலம் பெற்ற மனிதனாக ஒரு மாணவன் உருவாக முடியும் என்பதும்
வகுப்பறையில் கற்றுத்தரப்பட வேண்டும்.இலக்கற்ற பயணத்தில் போகும் இளைஞர்களுக்கு உறவு முறை, பெரியோர்களின் மதிப்பு, தான் சார்ந்த சமூகத்தின் பெரியவர்கள் கற்றுத்தரப்பட வேண்டும். அப்போது தான் தன் மதிப்பும், தன் மதிப்பின் தேவையும், தன்னம்பிக்கையும் மாணவர்களுக்கு வசப்படும்.

ஆரோக்கியம் : தனி மனித ஆரோக்கியம் பற்றி அதிகம் கற்றுத்தரப்பட வேண்டும். நாளுக்கு நாள் புதிது புதிதாக தோன்றும் நோய்களில் இருந்து காத்துக் கொள்ள உடல் ஆரோக்கியம், சுற்றுப்புறச் சூழல், துாய்மையின் அவசியம் ஆகியவற்றை பாடப் பொருளாகச் செய்வதன் மூலம் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும்.ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கல்வி அவசியம். தரமான வேலை என்பது செய்யப்படும் தன்மையில் இருக்கிறதே தவிர, வேலையின் தன்மையில் இல்லை என்பதை வருங்கால சமுதாயத்திற்கு உணர்த்த வகுப்பறைதான் சிறந்த இடம்.உடல் உழைப்பை ஊக்குவிக்கும் கல்விதான்உன்னதமானது. ஏனென்றால் அதுதான் தேக ஆரோக்கியத்திற்கும் நல்லது. தேச ஆரோக்கியத்திற்கும் நல்லது.

-முனைவர்ஆதலையூர் சூரியகுமார்
ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலுார்.
98654 02603

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement