Load Image
Advertisement

இயற்கையின் முக்கியத்துவம்: அறிந்தால் மகத்துவம்

கோத்தகிரி : 'நீலகிரியின் இயற்கை முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோத்தகிரி வனத் துறை சார்பில், சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ், சிறப்பு கருத்தரங்கு, 'லாங்வுட்' சோலை சுற்றுச்சூழல் மையத்தில் நடந்தது.
லாங்வுட் சோலை வாட்ச்டாக் கமிட்டி செயலர் ராஜூ சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:
நீலகிரியின் சுற்றுச்சூழல் அமைப்பு என்பது, புல்வெளிகளும், சோலைக் காடுகளும் நிறைந்ததாகும். நீலகிரியில் கடந்த, 150 ஆண்டுகளில், 90 சதவீதத்திற்கும் மேல் புல்வெளிகள் அழிக்கப்பட்டு, விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன; கணிசமான அளவில், காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய இடங்களில், அன்னிய நாட்டு மர வகைகளான கற்பூரம், சீகை மரங்கள் நிறைந்துள்ளன. அதன் விளைவாக, மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. காடுகளின் மண் வளம் பாதிக்கப்பட்டு, அமில நிலமாக மாறியுள்ளது. அவற்றில் சாதாரண புற்கள் கூட முளைப்பதில்லை. இதனால் தான், வன விலங்குகள் உணவுத் தேவைக்காக, மக்களின் வசிப்பிடம் நோக்கி வருகின்றன.
மாவட்டத்தில் மட்டும், 5,000க்கும் மேற்பட்ட சிற்றாறுகள் காணாமல் போயுள்ளன. ஒரு ஆய்வில், ஒரு சதுர மீட்டர் பரப்புள்ள சீகை காடு, ஆண்டுக்கு, 820 லிட்டர் தண்ணீரை குடிக்கிறது என, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீலகிரியில் உள்ள, 10 ஆயிரம் ஹெக்டர் கற்பூர காட்டையும், 15 ஆயிரம் ஹெக்டர் சீகைக் காடுகளில், நீலகிரிக்கான மர வகைகளை வளர்த்தால், ஆண்டுக்கு, 4,000 டிஎம்சி., நீர் கூடுதலாக கிடைக்கும் என மாணவர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டது.
நீலகிரியின் இயற்கை வளம் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, மாணவர்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி பாடத் திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு, ராஜூ பேசினார்.
சுற்றுச்சூழல் ஆய்வாளர் செந்தில், 'நெஸ்ட்' அறக்கட்டளை உறுப்பினர் ராமதாஸ், நீலகிரி கானுயிர் சங்க உறுப்பினர் ரங்கசாமி ஆகியோர் பேசினர்.
புற்றுநோயை கட்டுப்படுத்தும் மாப்பியா போட்டிடா, காட்டின் தீயணைப்பு படை எனப்படும் ரோடோ டெண்ட்ரான், நீரை இயற்கையாக சுத்தப்படுத்தும் சயாத்திகா, காட்டு குறுமிளகு, பல் வலியை போக்கும் மூலிகைச் செடிகள், அரிய தாவர வகைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கோத்தகிரி ரேஞ்சர் சீனிவாசன் தலைமை வகித்தார். தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, வனவர் தருமன் வரவேற்றார். சந்திரசேகர் நன்றி கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement