Advertisement

கடலைக் காதலிப்போம்.. ஜூன் 8 - உலகப் பெருங்கடல் தினம்

பெருங்கடல்கள்தான் மனித வாழ்வுக்கு அடித்தளம். உயிரினமே பெருங்கடல்களில்
இருந்து தோன்றியவைதான். பூமிப்பந்தின் 72 சதவிகித பரப் பளவையும், 140 மில்லியன் சதுர மைல்களையும் கொண்டது கடல் நீர்ப்பரப்பு. ஆனால், கடல் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை.

கடல் மிகப் பெரியதாக இருப்பதும், மிக ஆழமாகஇருப்பதும், எதிர்புறம் உள்ள கரை கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதும்.. இப்படி ஏதோ ஒரு காரணத்தால், கடல்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தோ அதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு பற்றியோ நாம், பெரிதாக அக்கறை கொள்வதில்லை.

ஆயினும், நாம் தொடர்ந்து உயிர் வாழ, கடல்களே பிரதானம். பருவங்களும், தட்பவெட்ப நிலையும், ஏன் மக்கள் சுவாசிக்கும் காற்றின் தரமும் கடல் நீர் பரப்பை சார்ந்தே உள்ளன.
நாம் சுவாசிக்கும் துாய காற்றை யும், ஊட்டமிகு உணவையும் வழங்கும் கடல்கள், சாதாரண மக்களின் வாழ்வாதாரமாகமட்டுமல்லாமல், உலக நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஆதாரமாகவும் திகழ்கின்றன. பல நாடுகளுக்குப் பயணிக்க சர்வதேச வர்த்தகப் பாதை
களாகவும் கடல்கள் விளங்கு கின்றன. மக்களைப் பிரித்ததும், சேர்த்ததும் கடல்களே.

கடல் மாசு''கடலுக்கு ஏற்படும் மாசுக்கான காரணங்களை மூன்று வகையாய் பிரிக்கலாம்'' என்று கடலியல் சுற்றுச்சூழலியலாளரான ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ் பாட்டின் கூறுகிறார். அவை, கடல்களில்நேரடியாய் கழிவுகளைக்கொட்டுவது, மழையினால் நீரில் அடித்து வரப்படுவது, மற்றும் காற்றில் இருந்து வெளியாகும் மாசுப் பொருட்கள்.''கடல்கள் பரந்தவை.. மிகப் பெரியவை என்பதால் மாசுகளை கரைத்து அபாயமற்றதாக்கி விடும்'' என்றுதான் அநேக
அறிவியலாளர்கள் தொடக்க காலத்தில் நம்பினர்.

1950களின் பிற்பகுதிகளிலும் 1960களின் ஆரம்ப காலத்திலும், அணுசக்தி வாரியத்திடம் உரிமம் பெற்றநிறுவனங்கள் அமெரிக்காவின்கடலோரங்களில் கதிர்வீச்சுக் கழிவுகளை கொட்டின. இது சர்ச்சையைக் கிளப்பியது. அதேபோல் விண்ட்ஸ்கேலில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக் கழிவுகள் அயர்லாந்து கடலில் கொட்டப்பட்டதும், பிரான்ஸ் அணு வாரியத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகள் மத்திய தரைக்கடலில் கொட்டப்பட்டதும் பிரச்னையை ஏற்படுத்தியது. கடலில் இதையெல்லாம் கொட்டலாமா? என்ற கேள்வி எழுந்தது.

1967ல் டோரி கேனியான் என்னும் எண்ணெய்கப்பல் மோதி நொறுங்கிய சம்பவம் மற்றும் 1969ல் கலிபோர்னியா கடலோரத்தில் சாண்ட பார்பரா எண்ணெய் கசிவு ஆகியவை சர்வதேச தலைப்புச் செய்தியாக்கின. கடல் மாசு குறித்து தொடர்ந்து பேசப்பட்டது. ஸ்டாக்ஹோமில் 1972ல் நடந்த ஐ.நா. மனித சூழல் மாநாட்டில் கடல் மாசு முக்கிய விவாதப் பொருளானது. கழிவுகள் மற்றும் பிற பொருட்களை கடலில் கொட்டி கடலினை மாசுபடுத்துவதைத் தடுக்கும் ஒப்பந்தம் அதே வருடத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது, கப்பல்களில் இருந்து கொட்டப்பட்ட கழிவுகளுக்கு மடடுமே பொருந்தும் என்பதால், குழாய்கள் வழியே திரவ வடிவில் கொட்டப்பட்ட கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பாதிப்பை ஏற்படுத்துபவைபூமியின் குப்பைத் தொட்டிபோல கடலை பயன்படுத்தத் துவங்கிவிட்டோம். இந்த மனோபாவம் கடந்த 20 ஆண்டுகளாக வலுத்ததால் கடல் மாசு அதிகரித்து வருகிறது. நெடுங்காலம் அழியாத்தன்மைக் கொண்ட பாலிதீன்குப்பைகள் கடல்களைச் சீரழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. நேரடியாகக் கடலில் பாலிதீன்குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், கழிவுகள் பெருமளவு கடலில் கலக்கிறது. கடல்களில் மிதக்கும் பாலிதீனின்
அளவு நுாறு மில்லியன் மெட்ரிக் டன்னைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.

இதுபோன்ற கழிவுகள் கடலில் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குகளா
கின்றன. இதனை ஆமை போன்ற உயிரினங்கள் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் நாம் உட்கொள்ளும் கடல் உணவு வழியாகவும் நம் உடலுக்குள் புகுந்துவிடுகிறது.

எண்ணெய் கசிவுசரக்குக் கப்பல் போக்குவரத்தின் போது அவற்றில் இருந்து கசியும் பொருள்களும் கடல் சூழலைக் கேள்விக்குறியாக்குகிறது. உலகஅளவில் ஒவ்வோரு ஆண்டும் 706 மில்லியன் காலன் எண்ணெய் கடலில் கலப்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது. இதில் 50 சதவிகிதம் கரைகளில் ஒதுங்குகிறது. முதலில் கடலின் மேல் மட்டத்தில் பரவும் எண்ணெய் படலம், சில மணி நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு ஊடுருவி, கடல்நீரின் அடர்த்தியையும், தன்மையையும் மாற்றி விடுகிறது.

கடலில் பரவும் எண்ணெய் படலத்தால் சூரிய ஒளி கடலின் கீழ் பரப்புக்குச் செல்ல முடியாமல் தடுக்கப் படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதோடு கரையில் ஒதுங்கும் எண்ணெய் படலத்தால் அங்கு வாழும்உயிரினங்களும் பாதிப்புக்குஉள்ளாகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்டதில் கொட்டிய எண்ணெய் கழிவை அகற்ற அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் படாதுபாடுபட்டதை அறிவோம்.

சுற்றுலா மேம்பாடுஉலகம் முழுவதுமுள்ளகடற்கரைச் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுக்காகக் கட்டடங்கள் பெருகி வருகின்றன. மற்றொரு புறம் வர்த்தக விஸ்தரிப்பும், தொழிற்சாலைகளும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் அதிகரித்து உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகள் சென்றுசேருமிடம் கடலாகத்தான் இருக்கிறது.2005ல் ட்ரங்கேடா என்னும் இத்தாலிய நிழல் உலக கும்பல் ஒன்று நச்சுக் கழிவுகள் கொண்ட சுமார் 30 கப்பல்களை கடலில் மூழ்கச் செய்ததாக குற்றம் சாட்டப் பட்டது.

இதில் பெரும்பாலானவை கதிர்வீச்சுக் கழிவுகள். இச் சம்பவத்தை அடுத்து கதிர்வீச்சு கழிவுகள் வெளியேற்றப்படுவதில் நடக்கும் மோசடிகள் பற்றி பரவலான விசாரணைகள் எழுந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின், சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரசாயன ஆயுதங்களை பால்டிக் கடலில் கொட்டின.
நிலப்பகுதியில் மரங்களை வெட்டினால் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதோ, அதுபோல் கடலில் பவளப் பாறைகள் வெட்டியெடுக்கப்படுவதால் சூழல் பாதிக்கப்படுகின்றது. இந்நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் பெருமளவு பவளப்பாறைகள் அழிந்து விடும் என கடலியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏன் பாதுகாக்க வேண்டும்அடுத்து, கடல்கள் காற்று மண்டலத்திலிருந்து கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை. நாம் காற்று மண்டலத்தில் வெளிவிடும், கரியமில வாயு அனைத்தையும் கடல்கள் உறிஞ்ச முற்படும் பொழுது அவை அதிக அமிலமயமாகின்றன. நாம் அவ்வளவு கரியமில வாயுவை வெளியேற்றுகிறோமா? எனக் கேட்கலாம். மின்விளக்கை ஏற்றும் பொழுதும், அலைபேசிக்கு சக்தியேற்றம் செய்யும் பொழுதும், கார், விமானங்களில் பயணிக்கும்போது கரியமில வாயு வெளியேற்றத்துக்கு நாம் வழி செய்கிறோம். இதனால், கடல் அமிலமயமாவதற்கும் அதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கும் வழி செய்கிறோம்.

நாம் படிவ எண்ணெய்களை அதிக அளவில் எரிக்கும் பொழுது அதிக கரியமில வாயுவை வெளியேற்றி கடல்களை அதிக அமில மயமாக்குகின்றன. அமிலமயமாக்கப்பட்ட கடல் நீர். ெவளிமண்டலத்தைப் பாழ்படுத்தி, அதை நம்பியிருக்கும் பற்பல கடல்வாழ் உயிரினங்களையும் மடியச் செய்து விடுகிறது. இதனால் கடலின் உணவுச் சங்கிலியும் பாதிக்கிறது.

பெருங்கடல்கள் பரந்த வெப்ப உள்வாங்கிகளாக இருந்த போதிலும், அவை, காலநிலை மாற்றங்களுக்கு எளிதில் உட்படுபவை. காற்றுவெளியின் வெப்ப அதிகரிப்பு கடல்வாழ் உயிரின
அழிவுக்கு காரணமாகலாம். புயலையும் ஊழிக் காற்றையும்தோற்றுவிக்கலாம். உலகைச் சுற்றி தட்பவெட்ப நிலையை மாற்றிவிடலாம்.

என்ன செய்யலாம்கடல் மாசுபாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.தேவையற்ற விமான, கார் பயணங்களைத் தவிர்க்கலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா வகையான சக்திப் பயன்பாட்டையும் குறைக்கலாம். லிப்ட் வேண்டாம் என்று சொல்லி படியேறலாம்.இவற்றின் மூலம் கரியமில வாயு காற்று மண்டலத்தில் கலப்பதைக் குறைத்து, கடல்களின் அழிவை மட்டுப்படுத்தலாம். பயன்படுத்தும் பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்வதின் மூலமும், அவை கடலை அடைவதைக் குறைக்கலாம். பொருள் வாங்க கடைக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை எடுத்துச்
செல்லலாம். கடல் பிரயாணத்தின் போது கப்பலிலிருந்து எதையாவது துாக்கி எறியவேண்டாம்.
கடற்கரை மகிழ்ச்சி தரும் இடம். எனவே அதனைப் பாதுகாப்பது நம் கடமை. கடற்கரையை விட்டு வெளியேறும் பொழுது இருந்த இடத்தைச் சுத்தப்படுத்திவிட்டுச் செல்வோம்.

நாம் எங்கு வாழ்ந்தாலும் கடலுக்கும் நமக்கும், நமது வாழ்க்கை முறைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. நமது சின்னஞ்சிறு செயல்பாடுகள்கூட கடலின் நலனுக்கு கேடுகள் விளைவிக்
கின்றன. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடல் மற்றும் அதன் உயிரினங்களுடன் பல வகைகளில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே கடலைப் பாதுகாப்போம். கடலைக் காதலிப்போம்.

ப.திருமலை,
பத்திரிகையாளர், மதுரை
84281 15522

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • mohan - Hyderabad ,இந்தியா

    அருமையான விளக்கம். ஆச்சிரியம் என்னவென்றால் மதுரையில் இருப்பவர் கடலின் அருமை தெரிந்துருகின்றார் ஆனால் கடலின் அருமை கடலின் அருகில் வசிப்பர்களிடம் இல்லை. வேதனை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement