Advertisement

பள்ளிக்கு செல்வோம் பாதுகாப்பாக...

நீண்ட விடுமுறையை உற்சாகமாய் கழித்த பின் அடுத்த வகுப்பில் கால் பதிக்க ஆர்வமாய் உள்ளனர் மாணவர்கள். புதிய ஆடைகள், புத்தகங்கள், பைகள், காலணிகள் அவர்களை மகிழ்ச்சியின்
உச்சத்திற்கு கொண்டு செல்ல காத்திருக்கின்றன. தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட பெற்றோர் அவர்களுக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், குழந்தைகளின்
பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் மிக கவனமாக இருப்பது அவசியம்.

நோய்தொற்று : இன்றைய சூழலில் குழந்தை களை நோய் தொற்றுகளில் இருந்து காப்பாற்றுவதை பெற்றோர் மற்றும் ஆசிரியர் பெரும்சவாலாக நினைக்கின்றனர். ஆனால், பாதுகாப்பான செயல் முறைகளை குழந்தைகளுக்கு பயிற்றுவித்தால் நோய் தொற்றை எளிதில் சமாளிக்கலாம். அதற்கு எந்தெந்த வழிகளில் நோய்தொற்று ஏற்படுகிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.நுரையீரல் தொற்று, கிருமிகள் சுவாசத்தின் மூலம் எளிதில்
பரவுகிறது. இது சளி முதல் வைரஸ் காய்ச்சல் போன்ற தீவிரமான நோய்கள் வரை பரவ காரணமாய் இருக்கின்றன. குடல் மற்றும் இரைப்பையை பாதிக்கும் வகையிலான கிருமிகள்,
குழந்தைகளின் உடலில் புகுந்தால் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
தோல் நோய் கொண்ட குழந்தைகளின் பாதிக்கப்பட்ட இடங்களை தொட நேரிடும் போது, பிற
குழந்தைகளுக்கும் அந்நோய் பரவுகிறது. உணவு, தண்ணீர் மூலமாகவும் பல்வேறு நோய்கள் பரவுகின்றன. இருமல், தும்மல் போன்றவற்றின் போது நோய் கிருமிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அந்நிகழ்வின் போது எச்சில் மற்றவர்கள் மீது பட்டுவிடாதபடி கைக்குட்டையால் மறைத்துக் கொள்ள வேண்டும். இதனை குழந்தைகளுக்கு பெற்றோர் பயிற்றுவிக்க வேண்டும்.

கை கழுவும் பழக்கம் : ஒருவரிடமிருந்து மற்றொரு வருக்கு பரவும் பெரும்பாலான தொற்று நோய்களை நன்றாக கை கழுவும் பழக்கத்தினால் தவிர்க்கலாம். பெற்றோர் இப்
பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம். கழிப்பறையை பயன்படுத்துதல், சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளுதல், தும்மல், இருமல் போன்றவற்றுக்கு பின்னரோ, சளி அல்லது ரத்தத்தை தொட நேர்ந்தாலோ நன்றாக கை கழுவ வேண்டும். சாப்பிடும் முன், பின் கண்டிப்பாக கை கழுவ வேண்டும்.ஆனால், நம்மில் பெரும்பாலானோர் தண்ணீரில் கைகளை நனைத்து, எடுப்பதுதான் கை கழுவும் செயல் என தவறாக கருதுகிறோம். கைகளை எப்படி கழுவுவது என்பது பெரியவர்களுக்கே தெரியாத போது, குழந்தைகளிடமிருந்து அதனை எப்படி எதிர்பார்க்க முடியும்? கைகளில் விரல் இடுக்குகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சோப்பினை தேய்த்து, குறைந்தது பத்து வினாடிகளாவது காத்திருந்து பின்னர் ஓடும் நீரில் கைகளை
நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். கழுவிய பின் ஈரப்பதமற்ற, சுத்தமான துணியை கொண்டு கைகளை துடைக்க வேண்டும்.

தடுப்பூசி அவசியம் : குழந்தைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள காலகட்டங்களில், தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியமாகும். சமீபத்தில் மீசெல்ஸ், ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட போது தேவையற்ற வதந்திகள் கிளம்பின. தடுப்பூசிகளை நன்கு ஆராய்ந்த பின்னரே, அதனை பல்லாயிரம் குழந்தைகளுக்கு போட அரசு முடிவெடுக்கிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். சரியான வயதில் போடப்படும் தடுப்பூசிகள் குழந்தைகளை கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. எனவே பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. ஊசி போடும் தருணத்தில் குழந்தைகள் உடல்நிலை மோசமாக பாதிக்கப் பட்டிருந்தால் மருத்துவரின்
அறிவுரை பெறலாம்.

விலக்கி வைத்தல் : பள்ளி குழந்தைகள் எளிதில் பரவும் வகையிலான நோய்களால் பாதிக்கப்படும் போது, அந்நோயால் பிற குழந்தைகளுக்கும் பாதிக்கப்படாத வகையில் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். சில வகை நோய் தொற்று கிருமிகள் ஒருவருக்கு இருப்பதை தெரிந்து கொள்ளும் முன்னரே மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது.காய்ச்சல் மற்றும் சுவாசத்தின் மூலம் பரவும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அந்நோய்சரியாகும் வரை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளி செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். நோய் சரியாகி ஐந்து நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கு அனுப்பினால் போதுமானது. கண் நோய், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, அது சரியாகும் வரையும், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு வாரம் வரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சரியான பின் ஒரு நாள் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். கடந்த ஆண்டில் பள்ளி குழந்தைகளுக்கு கை, கால்களில் சிறு கொப்புளங்கள் தென்பட்டன. இந்தாண்டும் இவ்வகையான பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அது சரியாகும் வரை குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும்.குழந்தையின் தலையில் பேன் இருப்பதை பெற்றோர் சாதாரண பிரச்னையாக எடுத்துக் கொள்ளாமல், அதனை உடனடியாக அகற்ற வேண்டும். சிரங்கு நோயால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளை, சில நாட்கள் தனிமைப்படுத்துவதுடன் புண் மீது தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில்லு மூக்கு உடைதல் : குழந்தைகளின் 'சில்லு மூக்கு' உடைவதால் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது. இது சிறு வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் சாதாரணமாக நிகழ்கிறது. எனவே இதனை கண்டு பெற்றோர்பதட்டமடைய தேவையில்லை. ரத்தம் வழியும் பக்கத்தை விரலால் அடைத்துக் கொள்ள வேண்டும். பதினைந்து நிமிடங்களுக்கும் மேல் தொடர்ந்து ரத்தம் வழிந்தால் மருத்துவரை அணுகலாம்.குழந்தை கீழே விழுவதால் ஏற்படும் சிராய்ப்பு, கீறல்களால் ரத்தம் வழிவதை நிறுத்திய பின், முறையாக மருந்து வைத்து காயத்தில் கட்டு போட வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி அவ்வப்போது காயம் பட்ட இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்குள் சண்டை : ஏற்பட்டு சக குழந்தைகள் கடிக்கும் போது, பல் தடம் மட்டும்
உடலில் பதிந்தால் கவலைப்பட தேவையில்லை. ஆனால், தோலில் காயம் ஏற்பட்டால், அதனை ஓடும் தண்ணீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதன்பின் மருத்துவரிடம் சென்று முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் போன்ற விலங்குகள் கடித்தாலும் இம்முறையை பின்பற்ற வேண்டும்.பள்ளி செல்லும் குழந்தைகளின் படிப்பில், பெற்றோர் செலுத்தும் கவனத்திற்கு சமமாக, அவர்களது பாதுகாப்பிலும் கவனம் செலுத்துவோம்...

- டாக்டர்முருகன் ஜெயராமன்
குழந்தைகள் நல மருத்துவர்
மதுரை. 94864 67452

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement