Advertisement

விவசாயி வியாபாரியாக வேண்டும்!

மனித குலத்தில் உயர்ந்த தொழிலை செய்யும் விவசாயிகளின் நிலை, மிகவும் பரிதாபகரமானது. பருவ மழை பொழியாமல் பாதிப்பு, அதிக மழை பொழிவால் பாதிப்பு, சூறாவளி காற்றால் பயிர்கள் சேதம், இடுபொருட்களின் விலையேற்றம், பூச்சிகள் தாக்குதல் போன்ற அல்லலுக்கு ஆளாகின்றனர்.

விதைக்க துவங்கும் காலத்திலேயே வட்டிக்கு கடன் வாங்கி, ஏர் உழுது, நீர் பாய்ச்சி, களை எடுத்து, குடும்ப அங்கத்தினர்களோடு விளைநிலத்தில் உழைப்பை செலுத்தி, 120 நாட்கள், இரவும், பகலும், பாடுபடும் சாமானிய விவசாயிகளின் மகிழ்வான தருணம்,
அறுவடைக் காலமே.
ஆனால், அறுவடைக்காலம், விவசாயிகளுக்கு மகிழ்வான காலமாக அமைகிறதா என்ற வினாவுக்கு, 'இல்லை' என்பதே பதிலாக உள்ளது. இடர்களை எல்லாம் தாண்டி, நல்ல விளைச்சலை விவசாயி, எப்போதாவது அனுபவிப்பது உண்டு.
உபரி விளைச்சல் கிடைத்தாலும், உற்பத்தி பொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. நல்ல விலை கிடைக்கும் தருணத்தில்,
உற்பத்தி மிகவும் சொற்பமாக அமைந்துவிடும்.
மொத்த விளைநிலங்களின் பரப்பில், சாகுபடி ஆகும் நிலங்களின் அளவு, ஆண்டுக்காண்டு குறைந்து போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
எனினும், 'போதிய விலை இல்லை' என்ற பிரதான இடரே, விவசாயிகள் தங்கள் வாரிசுகளை, 'விவசாயம் வேண்டாம்' என, தடுப்பதற்கும், தங்கள் விளைநிலங்களை விற்க முற்படுவதற்கும், கிராமங்களில் இருந்து இடம்பெயர்வதற்கும் காரணமாக அமைகிறது.
நிரந்தர மூலதனம், நடைமுறை மூலதனம் என்ற தொழில் முறை கணக்கோடு சிறு மற்றும் குறு விவசாயிகளின், விவசாய லாப, நட்ட கணக்கை அணுகினால், லாபம் பெறும் விவசாயி கள், 5 சதவீதம் கூட தேறமாட்டார்கள்.
உதாரணமாக, கிணறு மோட்டாருடன் கூடிய, 2 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 15 லட்சம் ரூபாய் என, வைத்து கொள்வோம். தனி நபர், இதே தொகையை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து இருந்தால், 8 சதவீத வட்டி வருவாயாக, ஆண்டிற்கு, 1.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
எந்த உழைப்பையும் செலுத்தாமல், இந்த வருவாய் ஒருவருக்கு உறுதியாக கிடைக்கும்.
இந்த நிரந்தர மூலதனத்துடன், இடுபொருட்கள், இயந்திர பராமரிப்பு, உழைப்புக்கான ஊதியம், வட்டி ஆகியவற்றை செலுத்திய பின், விவசாயி ஆண்டிற்கு, 1.20 லட்சம் ரூபாயை நிகர லாப வருமானமாக பெறுகிறாரா என்றால், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அது கிடைப்பதில்லை.
விளை பொருளுக்கு உரிய விலை இல்லாமல் போவதே, இந்த துர்பாக்கியமான நிலைக்கு காரணம். இதன் தொடர்ச்சியாகவே, விவசாயிகள், கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனிலேயே இறந்து போகின்றனர். இதை மாற்றியமைக்க கிராம இளைஞர்களும், மாணவர்களும், விவசாயிகளும் ஒரு சேர தீவிரமாக சிந்திக்க
வேண்டிய தருணம் இது.

ஒரு பக்கம், விளைபொருட்களுக்கு உரிய விலை விவசாயிக்கு கிடைப்பதில்லை. மறுபக்கம், உணவுப்பொருட்களின் விலை, நுகர்வோர் வாங்க முடியாத உச்சத்திற்கு உயர்ந்து போகிறது.
பன்னெடுங்காலமாக நிலவும், இந்த மிகப்பெரும் பிரச்னைக்கு தீர்வு காண, எந்த அரசுகளும் பெரிய முனைப்பு எடுக்கவில்லை.
இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு, உழவன் வணிகனாக மாற வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசையே சார்ந்து நிற்காமல், விரைந்து செயலாற்ற வேண்டிய காலமிது. விவசாயத்தில் உள்ள தடைகளை தகர்த்து, ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த, உழவன், வணிகனாக மாற வேண்டியது
அத்தியாவசியமாகிறது.

விளைபொருட்களை அப்படியே விற்காமல், நெல், வரகு, சாமை போன்றவற்றை அரிசியாக்க வேண்டும். எள், வேர்க்கடலை, தேங்காயை, எண்ணெய், உருண்டை, கேக், பர்பியாக மாற்றி, விற்க வேண்டும்.
கரும்பை நாட்டு சர்க்கரையாக, வெல்லமாக மாற்றி, கேழ்வரகு, கம்பு, சோளத்தை மாவாக மாற்றி... இப்படி ஒவ்வொரு விளை பொருளை யும், உணவுப்பொருளாக
உருமாற்ற வேண்டும்.அது போல, மரச்செக்கு எண்ணெய், கைக்குத்தல் அரிசி தயாரிக்கும் இயந்திரம், சத்து குறையாமல், சூடாகாமல் மாவு உற்பத்தி செய்யும் இயந்திரம், தினை, சாமை, வரகு போன்றவற்றில் இருந்து அரிசி எடுக்கும் இயந்திரம்.
நாட்டு சர்க்கரை, வெல்லம் தயார் செய்யும், கரும்பு சாறு பிழியும் இயந்திரம், கொப்பரை, வேர்க்கடலை, எள், கடலை பர்பி தயார் செய்யும் உபகரணங்கள் போன்றவற்றை, விவசாயிகள் வாங்கி, பயன்படுத்த வேண்டும்.
போதுமான ஊட்டச்சத்து இன்றி, ஆரோக்கிய குறைபாடுகளோடு, மூன்றில் ஒரு குழந்தை, நம் நாட்டில் பிறப்பதாக உலக சுகாதார நிறுவனம், சமீபத்தில் தெரிவித்துள்ளது. சமூகத்தின் இந்த இழிநிலையை மாற்றும்
வல்லமை, விவசாயிகளிடம் மட்டுமே உள்ளது.
எதிர்கால சமுதாயம் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும் வகையில், இயற்கை வழி விவசாயம் செய்து, புரையோடி போய் இருக்கும், நஞ்சு கலந்த உணவை அகற்ற வேண்டும்.
இயற்கை வழி விவசாயத்தை தொடர்ந்து செய்யும் போது, ரசாயன விவசாயத்தை காட்டிலும் செலவு குறைவதுடன், உற்
பத்தியும் கூடுதலாகும். ஆனால், இயற்கை வேளாண் உணவுப்பொருட்களுக்கு பல மடங்கு விலையை கூட்டி, வசதியானோர் மட்டுமே வாங்கக் கூடிய பொருளாக இங்கு மாற்றியுள்ளனர்.
அதை முறியடிக்க வேண்டுமானால், விவசாயி வணிகனாக மாற வேண்டும். மதிப்பு கூட்டி, பொருட்களை விற்பதற்கு பெரும் இடராக இருப்பது, சந்தைப்படுத்துதல் மட்டுமே. படித்து முடித்து, பெரு நகரங்களில் பணி தேடி செல்வதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், வாழும் ஊரில், விளைபொருட்களை உணவுப்பொருளாக தயார் செய்ய வேண்டும்.
அவற்றை, நுகர்வோரிடம் நேரடியாக சந்தைப்படுத்தவும், கிராமப்புற மாணவர்களும், இளைஞர்களும், யுவதிகளும் திட்டமிடல் வேண்டும். உணவுப் பொருளாக மதிப்பு கூட்டுவது, சந்தைப்படுத்துவது போன்ற பணிகளை, கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து, கூட்டு முறையில் செய்ய முனைய வேண்டும்.
கைக்குத்தல் அரிசி, சிறிய அளவிலான பருப்பு மில் அமைத்து, தீட்டாத பருப்பு வகைகளை விற்பது. மர செக்கின் மூலம் உணவு எண்ணெய் தயாரிப்பு, இளநீர், கரும்பு ஜூஸ் போன்றவைகளை பாட்டிலில் அடைத்து விற்றல்.
நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரித்தல், வேர்க்கடலை, எள், வறுகடலை மூலம் கேக், உருண்டை, பர்பி தயாரித்தல்.நாட்டு பசும்பால், தயிர், மோர், வெண்ணை, நெய் விற்பனை, மூலிகை பல்பொடி, குளியல் பொடி, சுக்கு மல்லி காபி பொடி தயாரித்தல்.
சிறிய அளவிலான, பஞ்சு, 'ஜின்னிங், ஸ்பின்னிங்' மில், எளிதில் இயங்கும் கைத்தறி இயந்திரம் மூலம் ஆடை உற்பத்தி என, பல தொழில் வாய்ப்புகள், கிராமங்களில் விவசாயிகளுக்கு தயாராக உள்ளன.
விளைபொருளை உற்பத்தி செய்ய அறிந்த விவசாயிகள், அதை உணவுப்பொருளாக மாற்றுவதற்கு உரிய பயிற்சி களை மேற்கொள்ள முன் வர வேண்டும். நெல்லை
அறுவடை செய்து, அப்படியே விற்பதற்கு பதில், அதை அரிசியாக மாற்றவும், அதை நேரடியாக, நுகர்
வோரிடம் விற்கவும், முன் வர வேண்டும். இப்போது, 1,100 முதல், 1,200 ரூபாய் வரை விற்பனையாகும், 75 கிலோ நெல் மூட்டையில் இருந்து, 40 - -45 கிலோ அரிசி பெறலாம். ரசாயன உரம், பூச்சி மருந்தில்லா அரிசியை, கிலோ, 45 என்ற விலைக்கு விற்றால், 1,900 ரூபாய்க்கு விற்க முடியும்; தவிடு மூலம் உபரி வருவாய் கிடைக்கும்.
கைக்குத்தல் அரிசியை, இலகுரக மோட்டார்
இயந்திரம் மூலம் தயார் செய்யலாம். 80 கிலோ வேர்க்கடலை மூட்டை, 5,500 ரூபாய். 2.5 கிலோ கடலை யில் இருந்து, 1 கிலோ எண்ணெய் எடுக்கலாம்.
எண்ணெய், 240 ரூபாய்; புண்ணாக்கு, 60 ரூபாய் சேர்த்து, 300 ரூபாய் வருமானம் பார்க்கலாம். கடலையாக விற்றால், 175 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இந்த விற்பனை சூட்சமத்தை, விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்; இவ்வாறு விற்க முன்வர வேண்டும்.
கரும்பு, 1 டன்னில் இருந்து, 140 கிலோ நாட்டு சர்க்கரை தயார் செய்யலாம். மில் சர்க்கரைக்கு இணையான விலையில், கிலோ, 45 ரூபாய்க்கு விற்கலாம். கரும்பில் இருந்து சர்க்கரையாக மாற்ற, 1 டன்னுக்கு, 1,000 ரூபாய் செலவாகும்.
மில்களில், 2,500 ரூபாய் கொடுத்து, விலை கட்டுப்படியாகவில்லை-; நிலுவை பணம் கிடைக்கவில்லை போன்ற இடர்களில் இருந்து மீள்வதோடு, 6,300 ரூபாய்க்கு விற்கலாம். ரசாயனத்தோடு கூடிய சர்க்கரையை கடைகளில் நுகர்வோர் வாங்கும் விலைக்கே, நாட்டு சர்க்
கரையையும், உழவன் முயற்சித்தால், விற்க முடியும்.
இங்கே, இயற்கை வேளாண் பொருட்கள் என் றால், வழக்கமான விலையை விட சில மடங்கு கூடுதல் விலை என்ற நிலை இருப்பதால், நடுத்தர, எளிய வருவாய் பிரிவு மக்கள் வாங்க அஞ்சுகின்றனர்.
விவசாயி, வணிகனானால் மட்டுமே, ஆரோக்கியமான, நஞ்சில்லா உணவை, எல்லாரும் வாங்கும் விலையில் விற்பனை செய்ய முடியும்.
ஒவ்வொரு விளைபொருளையும், விவசாயிகளே, சுத்தமான உணவுப்பொருளாக மாற்றும் தொழில்கள், கிராமங்கள் தோறும் துவங்கப்பட வேண்டும். அவை, இயற்கை விவசாய பொருட்கள் என்பதால், கூடுதல் விலை இல்லை என்பதை, நுகர்வோர் உணர செய்ய வேண்டும்.
இப்படி, உழவன் வணிகனாக மாறினால், கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, சமூகத்திற்கும் நற்பணி செய்யும், அறம் சார்ந்த தொண்டாகவும் அமையும். அந்த முயற்சி விவசாயத்தின் மீதான நம்பிக்கையை நாடெங்கும் வளர்க்கும் என்பது உறுதி.
இ - மெயில்:visitanand2007gmail.com - சமூக ஆர்வலர் -
பேரணி ஸ்ரீதரன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Anand K - chennai,இந்தியா

    விவசாயிகளின் நிலை, மிகவும் பரிதாபகரமானது. இவர்களுக்கு சாப்பாடு பிரச்சனை அனால் அரசு ஊழியருக்கு இன்னமமும் சம்பளம் வேணுமா அரசு ஊழியருக்கு உன்ன சாப்பாடு பணம் போதும்

  • Anand K - chennai,இந்தியா

    NICE

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement