Advertisement

கவிதை எழுதுவோம்!

இலக்கியம் என்பது கவிதை: கவிதை என்பதுஇலக்கியம். கதை, கட்டுரை இவை எல்லாம் இலக்கியமன்று; துணை இலக்கியம்''இதை நான் சொல்ல வில்லை; பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சொன்னது. தமிழர்களின் வாழ்வில் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டு. தமிழர்களின் ஒழுக்கமான ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த வாழ்வியல் நெறியை பயிற்றுவித்தது இலக்கியம். உலக மனிதர்கள் யாவரும் ஓரினம் என “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என ஐ.நா., மன்றம் வரை பதிவு செய்யப்பட்டது தமிழர் இலக்கியம்.“கற்றது கைமண் அளவு கற்க வேண்டியது கடலளவு” என்ற அவ்வையின் கூற்று கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் இடம் பெற்றது. இப்படி தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழ்ந்த கவிதை பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம்.

மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்... : இது கணினி யுகம். இன்றைக்கும் மரபுக்கவிதைகளை மிகத்தரமாக கவிஞர்கள் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மரபுக் கவிதைக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.ஆனால் புதுக்கவிதை என்பது கற்காத பாமரர்களையும் சென்றடையும்விதமாக வந்து கொண்டு இருக்கிறது. மகாகவி பாரதியார் மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் எழுதி உள்ளார். வசன கவிதையும் எழுதி உள்ளார். கொக்கூ கவிதைகள் என
ஜப்பானிய ஹைக்கூ கவிதை வகையினை அன்றே பாரதி அறிமுகம் செய்து வைத்தார்.
கவிக்கோ அப்துல் ரகுமான்,புதுக்கவிதைத் தாத்தா மேத்தா, காலத்தால் அழியாத மகாகவி மீரா இப்படி தொடங்கிய புதுக்கவிதை பயணத்தில் இன்று எண்ணிலடங்கா புதுக்கவிஞர்கள் தோன்றி வருகிறார்கள். புதுக்கவிதையின் மீது பொறாமை கொண்டவர்கள் அல்லது புதுக்கவிதை எழுதத் தெரியாதவர்கள் சிலர் கேலி பேசுகிறார்கள். “மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட புதுக்கவிஞர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது” என்று. புதுக்கவிஞர்கள் பெருகுவதில் அப்படி என்ன வருத்தம் என்பது புரியவில்லை.

கண்ணதாசன் : கவியரசு கண்ணதாசன் வசன கவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை அனைத்தும் எழுதி இருக்கிறார். ஜப்பானில் ஹைக்கூ எழுதத் தெரியாதவர் களை குறைவாக நினைப்பார்களாம். எனவே அங்கே ஒவ்வொரு மனிதனும் படைப்பாளியாக உருவெடுக்கின்றான். ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டால் தரை மட்டமான ஜப்பான் இன்று உலக அரங்கில் கொடி கட்டி பறக்குது என்றால் அதற்குக் காரணம் ஒப்பற்ற உழைப்பு; அந்த உழைப்பை உணர்த்தியது ஹைக்கூ கவிதைகள், அவ்வளவு வலிமை வாய்ந்த ஆயுதம் ஹைக்கூ“போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி துாற்றுவார் துாற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்” -இந்த வரிகளை உச்சரிக்காத மேடைப் பேச்சாளர்களே இல்லை என்று சொல்லும்அளவிற்கு ஒரு காலத்தில் அனைத்து மேடைகளிலும் ஒலித்த வசன கவிதை இது.

காலக் கணிதம்

''கவிஞன் யானோர் காலக் கணிதம்; கருப்படு பொருளை
உருப்பட வைப்போன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்.
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம். இவை சரி யென்றால் இயம்புதென் தொழில்; இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை. ஆக்கல், அளித்தல், அழித்தல் இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தலை அறிக. பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன். பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன். நானே தொடக்கம், நானே முடிவு, நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்''
-இப்படி முடிக்கிறார் கவியரசு கண்ணதாசன்.

மற்றொரு வசன கவிதை,

'அழுவதில் சுகம்'.''தொழுவது சுகமா? வண்ணத் தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா? உண்ணும் விருந்துதான் சுகமா? இல்லை பழகிய காதலை எண்ணிப்
பள்ளியில் தனியே சாய்ந்து, அழுவதே சுகமென்பேன் யான்!
அறிந்தவர் அறிவாராக''
இது ஒரு உணர்வுக் கவிதை, உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் விளங்கும் அற்புதக் கவிதை.
கவிஞர் மேத்தா புதுக்கவிதை உலகிற்கு புதுப்பாதை வகுத்தவர். சமூகப் புரட்சிக்கான ஒரு ஆயுதம் புதுக்கவிதை என்பதை உணர்த்தியவர்.

“என்னுடைய போதி மரங்கள்” என்ற நுாலில் அவரது புதுக்கவிதை.

''எத்தனை தடவை கொள்ளையடிப்பது
ஒரே வீட்டில் உன் கண்கள்''
மேத்தாவின் வைர வரிகளில் இன்றைய வன்முறை
கலாச்சாரத்தை விளக்கும் அழகிய புதுக்கவிதை
''உலக வீதிகளில் ஊர்வலம் போகும்ஆயுதங்கள்
வீடுகளுக்குள் ஒளிந்தபடி எட்டிப் பார்க்கும் மனிதன்''

ஜப்பானில் ஹைக்கூ

பழமொழிகளை ஒட்டியும் வெட்டியும் ஹைக்கூ எழுதலாம். 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' கேள்விப்பட்ட பழமொழி. அதை வெட்டி ஒரு ஹைக்கூ, என்னுடையது.
''ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளைந்தது
முதியோர் கல்வி''
ஹைக்கூ கவிதைகளில் எதையும் உணர்த்தலாம், காதலையும் பாடலாம்.

உதாரணம்...
''அமாவாசையன்று நிலவு
எதிர்வீட்டு சன்னலில்''
இன்று அரசியல்வாதிகளின் நிலையைப் பார்க்கும்போது
மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பு வருகிறது. அதனையும் உணர்த்த ஹைக்கூ கவிதைகளில்.
''வண்ணம் மாறுவதில் பச்சோந்தியை
வென்றார்கள் அரசியல்வாதிகள்''
இப்படி உள்ளத்து உணர்வுகளை வடித்து, வாசகர்களின் உள்ளத்தில் அதிர்வுகளை நிகழ்த்திடும் ஆற்றல், ஹைக்கூ கவிதைக்கு உண்டு. வாசகர்களையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு.

பெண்மைக்குரல் : பெண்மைக்காக குரல் கொடுக்கும் ஹைக்கூ ஒன்று...
''ஆண் நெடில் தொடக்கம்
பெண் குறில் தொடக்கம்
எழுத்திலும் அநீதி''
''ஆட்டிற்குப் பெண் மகிழ்ச்சி
மாட்டிற்குப் பெண் மகிழ்ச்சி
பெண்ணிற்குப் பெண் ஏன் இகழ்ச்சி''
வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றி 10 பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய
செய்திகளை ஹைக்கூவில் 3 வரிகள் மட்டுமல்ல 3 சொற்களில் விளக்கும் என் ஹைக்கூ
''திருவோடானது பட்டச் சான்றிதழ்''
இப்படி சொல்ல வரும் கருத்தை, சுருங்கச் சொல்ல,
நெத்தியடியாய் சில வார்த்தைகளால் விளக்க ஹைக்கூ
உதவுகிறது.
-கவிஞர் இரா.இரவி
எழுத்தாளர், மதுரை
98421 93103

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement