Advertisement

'புகை'யிலை இல்லா உலகம் படைப்போம்! : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை 1950களில் இருந்தே மருத்துவர்களும்,
ஆராய்ச்சியாளர்களும் மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். ஆனால் இன்றும் உலகில் புற்றுநோய்க்கு முதல் காரணமாகவும், உயிர் கொல்வதில் இரண்டாம் காரணமாகவும் இருப்பது
புகையிலை என்பது வருத்தத்திற்குஉரிய உண்மை.இதற்கு காரணம் என்று
புகையிலை விற்பவர்களையோ, அரசையோ குறை கூறுவது தவறு. 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என்பது போல் புகையிலையின் தீமைகளை அறிந்து அது நம் உடலுக்கு விளைவிக்கும் கேடுகளை புரிந்து நாமாய் இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்.மனித உயிர் கொல்லும் பல காரணங்களில் தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்று புகை பிடிப்பது மற்றும் புகையிலை பயன்படுத்துவது. எனவே தான் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதியை புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மனதை மயக்கும் புகையிலை : நமக்கு நல்லதல்ல என்று தெரிந்தால் நாம் ஒரு விஷயத்தை செய்ய மாட்டோம். ஆனால் புகையிலை பற்றி பல தரப்பினரும் பல காலமாக எடுத்துக் கூறியும், இன்னும் புகையிலையை ஒழிக்க முடியவில்லை. காரணம் புகையிலையின் மனதை மயக்கும் திறன்.புகையிலை பழக்கம் ஆரம்பித்த புதிதில் அதில் உள்ள ரசாயனங்கள் (குறிப்பாக நிகோடின்) மூளைக்கு செல்லும்போது, நாம் சாந்தமாகவும், புத்தி கூர்மையுடனும் இருப்பது போல தோன்றும். நாளாக நாளாக நம் உடல் இயற்கையாக உடலில் உள்ள ரசாயனங்களுக்கு பலனளிக்காமல் புகையிலைக்காக ஏங்கும்.

சிகரெட்டில் இருப்பது என்ன? : ஒரு காலகட்டத்தில் உடலும் மனமும் இயல்பாக இருப்பதற்கே புகையிலை தேவைப்படும். ஒரு முறை உபயோகிப்பவர் பத்து முறை உபயோகிக்க வேண்டி இருக்கும். சிகரெட்டில் மட்டும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கார்பன் மோனாக்சைடு (நச்சு வாயு) ஆர்சனிக் (எலி மருந்தில் உள்ளது) ஹைட்ரஜன் சயனைடு (நச்சு வாயு) நாப்தலின் (இது பாச்சா உருண்டைகளில் இருப்பது) கந்தகம் (தீக்குச்சிகளில் உள்ளது) ஈயம் (நச்சுப் பொருள்). இவையெல்லாம் ஒன்று சேர்ந்தால் நம் உடலுக்கு ஏற்படும் கேடுகளை கற்பனை செய்தாலே பயத்தை வரவழைக்கிறது.

தெரியாத மற்றொரு முகம் : புகையிலையால் புகைப்பிடிப்பவர்களுக்கு தான் கெடுதல்
என்றில்லை. புகைக்காமல் புகைத்தல் (பாஸிவ் ஸ்மோக்கிங்) என்றொரு விஷயத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. அதாவது ஒருவர் புகைக்கும்போது மூன்றில் இரண்டு பங்கு புகை காற்றில் கலக்கிறது. இதனை சுவாசிப்பவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் தான் புகைக்காமல் புகைப்பது. அதே போல் புகைபிடிக்கும் போது பிடிப்பவரை சுற்றி உள்ள துணிகள், படுக்கை, தலையணை என பல பொருட்கள் மீது இந்த ரசாயனங்கள் படிந்துவிடுகின்றன. இதனை சுவாசிப்பவர்களுக்கு புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் அத்தனை பாதிப்புகளும் ஏற்படும். இதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது வருத்தம்அளிக்கும் ஒன்று.
ஏனெனில், குழந்தைகளின் உடலில் இந்த புகை எளிதாக இருமல், சளி, ஆஸ்துமா,
நிமோனியா போன்ற பல சுவாச மற்றும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும். புகையிலை
உபயோகம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது சிகரெட் மட்டும் தான். ஆனால் அவற்றிற்கு இணையாக பாக்கு போன்ற புகையிலை பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. அதுவும் நம் நாட்டில் சிகரெட்டுக்கு இணையாக இவையும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் புகையிலையோடு கூடிய பல நச்சு பொருட்கள் சேர்ந்து உள்ளது. எனவே 'புகையிலை ஒழிப்பு' என்பது புகையிலை சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் களையும்
முயற்சியாக இருக்க வேண்டும்

வாயே முதல் காவலன் : சிகரெட் பிடிப்பது, புகையிலை மெல்வது, பாக்கு போடுவது ஆகிய அனைத்து பழக்கங்களிலும் முதல் படி வாய்தான். இதனால் தான் புகையிலை பயன்படுத்துவர்களில் 90 சதவீதம் பேருக்கு வாய் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும் ஒரு மணிக்கு ஐந்து பேர் வாய் புற்று நோயால்
இறக்கின்றனர். வாயில் வைத்து புகையிலை மெல்லும்போது சிகரெட் புகைப்பதை விட மூன்று மடங்கு அதிகம் நிகோடின் நம் உடலில் கலக்கிறது. புகையிலையால் கன்னம், நாக்கு, உணவுக்குழாய், சுவாசக்குழாய் என பல இடங்களில் வெள்ளை திட்டுக்கள் உருவாகி, அதுவே நாளடைவில் புற்று நோயாக மாறும். அது போக ஈறு நோய், பல் சொத்தை, வாய் துர்நாற்றம், வாய் உலர்தல் என்று சகல பல் பிரச்னைகளிலும் புகையிலைக்கு பங்கு உண்டு. பெண்களுக்கு ஹார்மோன் தொல்லை, கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவம், நுரையீரல் நோய்கள், இருதய கோளாறுகள் என புகையிலையின் பிரச்னைகளை பட்டியலிட்டால் தலையே சுற்றி விடும்.

வாயில் இருந்து ஆரம்பியுங்கள்! : இந்த அமைதியான அரக்கனை தடுக்க முதல் முயற்சி வாயில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சிகரெட்டையோ அல்லது புகையிலை கலந்த பொருட்களையோ வாயில் வைப்பதற்கு முன் ஒரு கனம் அது நமக்கும் நம் குடும்பத்திற்கும், நம் சுற்றுசூழலுக்கும் ஏற்படுத்தும் தீய விளைவுகளை நினைத்து பார்க்க வேண்டும். இந்த பழக்கத்தில் இருந்து விடுபட பல வழிகள் உள்ளன. சுய கட்டுப்பாட்டுடன் நாமே நிறுத்தலாம் அல்லது உரியவரிடம் ஆலோசனை பெற்று சிறிதுசிறிதாக இதிலிருந்து வெளியே வரலாம்.புகையிலை பழக்கத்தை நிறுத்திய இருபதாவது நிமிடத்திலிருந்து நம் உடல் சுத்தமாக ஆரம்பிக்கிறது. எனவே உடலுக்கு தீங்கிழைக்கும் இந்த பழக்கத்தை நிறுத்தி, அந்த நேரத்தையும் பணத்தையும் ஆரோக்கியம் தரும் பழக்கங்களான விளையாட்டு, நல்ல உணவு, புத்தகங்கள் என பலவற்றுக்கு பயன்படுத்தலாம். நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் மனதில் கொண்டு இந்த பழக்கத்தை நம் சமுதாயத்தில் இருந்து அறவே ஒழிப்போம். புகையிலை இல்லா உலகம் படைப்போம்.

டாக்டர் ஜெ. கண்ணபெருமான்
மதுரை. 94441 54551

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • usMaN Ali / உஸ்மான் அலி - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்

    நன்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement