Advertisement

பார்வையை பாதுகாப்போம்!

முகத்துக்கு அழகு சேர்க்கும் முக்கிய உறுப்பு கண். நாம் இந்த உலகைப் பார்க்க, ரசிக்க, வியக்க வருந்த உதவுவது கண்கள். அம்மாக்கள் குழந்தைகளைப் பார்த்து சந்தோஷப்படும் போதெல்லாம் 'என் கண்ணு' என்று அன்பொழுக கொஞ்சுகிறார்கள். ஆனந்தமான வாழ்க்கைக்குக் கண்கள் மிகவும் அவசியம்.நாம் பார்க்கும் பொருட்களை எல்லாம் அதனதன் தன்மை மாறாமல் காட்டுவது கண்களின் மகிமை. கண்களை கேமராவோடு ஒப்பிடுவார்கள். புகைப்படம் எடுக்கப்படுபவரின் பிம்பம் அதன் லென்ஸ் வழியாக கேமராவில் விழுவதுமாதிரி, நாம் பார்க்கும் பொருளின் பிம்பம் கண்ணில் உள்ள விழிலென்ஸ் வழியாக விழித்திரையில் விழுகிறது. அதை பார்வை நரம்பு மூளைக்கு அனுப்புகிறது. அந்தச் செய்தியை மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் மூளை உணர்ந்து கொண்டு நாம் பார்க்கும் பொருளை உணர்த்துகிறது.

புத்தகம் படிப்பது எப்படி : மாணவர்கள் அதிக நேரம் கண்களைப் பயன்படுத்துவது புத்தகம் படிக்கத்தான். அந்தப் புத்தகத்தைச் சரியான நிலையில் வைத்துப் படித்தால்தான் கண்கள் களைப்
படையாது. பார்வையில் குறை ஏற்படாது. எப்படி? புத்தகத்துக்கும் கண்களுக்கும் இடையில் உள்ள துாரம் 30 செ.மீ. இருக்க வேண்டும். புத்தகத்தை 45 டிகிரி கோணத்தில் வைத்துப் படிக்க வேண்டும். அரை மணிக்கொரு முறை புத்தகத்தில்இருந்து பார்வையை விலக்கி, தொலைவில் உள்ள பொருளைப் பார்க்க வேண்டும். 40 நிமிடங்கள் தொடர்ந்து படித்தால், அடுத்த 5 நிமிடங்களுக்கு ஓய்வு தேவை.

கிட்டப்பார்வை-துாரப்பார்வை : புத்தகம் படிக்கும்போது எழுத்து சரியாகத் தெரியவில்லை என்றால் அது 'துாரப்பார்வை'. பஸ் நம்பர் சரியாகத் தெரியவில்லை என்றால் அது 'கிட்டப்பார்வை'. அதாவது, துாரப்பார்வையில் துாரத்தில் உள்ள பொருட்கள் தெரியும்; அருகில் உள்ள பொருட்கள் சரியாகத் தெரியாது. கிட்டப்பார்வையில் அருகில் உள்ள பொருட்கள் தெரியும்; துாரத்தில் உள்ள பொருட்கள் சரியாகத் தெரியாது. இவற்றைச் சரிசெய்ய கண்ணில் கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்ளச் சொல்வது பழைய முறை. இப்போது 'லேசர் சிகிச்சை'யில் சரி செய்கிறார்கள்.

என்ன காரணம் : சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு வரை 50 வயதுக்குமேல்தான் கண்ணுக்குக் கண்ணாடி அணிவார்கள். ஆனால் இப்போதோ எல்.கே.ஜி.யிலேயே கண்ணாடி அணிந்துவரும் குழந்தைகளைப் பார்க்கிறோம். காரணம் என்ன? பள்ளிக்குச் செல்லும்போது பல குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் செல்வதாலும், கீரை, காய்கறி என்று சத்துள்ள உணவு களைச் சாப்பிடாமல், சத்தற்ற நொறுக்குத்தீனி உணவுகளைச்சாப்பிடுவதாலும் சிறு வயதிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடு வந்துவிடுகிறது; பலர் படிக்கும்போது சரியான கோணத்தில் புத்தகத்தை வைத்துப் படிப்பதில்லை.குறைந்த வெளிச்சத்தில்படிப்பது, படுத்துக் கொண்டே படிப்பது, நீண்ட நேரம் தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்ப்பது போன்ற காரணங்களாலும் இளம் வயதிலேயே பார்வைக் குறைபாடுகள் வந்துவிடுகின்றன.

கண்வலி வந்தால் : பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழிவெண்படலத்தைத் தாக்கும்போது, கண்வலி வரும். கண்கள் இரண்டும் ஆப்பிள் போல் சிவந்துவிடும். இமைகளை விலக்க முடியாதபடி, பிசிறு வெளிப்படும். இமைகள் வீங்கும். கண்களை அடிக்கடி சுத்தமாக கழுவி மருத்துவர் யோசனைப்படி கண் சொட்டுமருந்து போட்டால் கண்வலி குணமாகும். இதனைத் தடுக்க, கண்வலி உள்ளவர்களுடன் நெருக்கமாக இருக்காதீர்கள். அவர்கள் பயன்படுத்திய சோப்பு, கைக்குட்டை, டவல் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.கண்ணில் ரசாயனம் பட்டால்
கண்ணில் மணல், துாசு, சுண்ணாம்பு, ரசாயனம், பட்டாசு போன்றவை பட்டுவிட்டால்
கண் எரியும். கண்ணீர் வடியும். கண் சிவந்து வீங்கிவிடும். அப்போது கண்களைக் கசக்கக் கூடாது. சுத்தமான குழாய்த் தண்ணீரில் கண்களைக் காட்டவும். அல்லது அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் கண்ணை மூழ்க வைத்து இமைகளைத் திறந்து திறந்து மூடவும். இல்லாவிட்டால் இமைகளை விலக்கி விழியில் தண்ணீரை ஊற்றவும்.

அந்நிய பொருட்கள் குத்தினால் : விபத்தினால் கண்ணில் ஏற்படும் காயங்கள் ஊமைக்காயமாகவோ துளைக்காயமாகவோ காணப்படலாம். விளையாடும்போது பந்து, குச்சி, கம்பு, கில்லித்தட்டு போன்றவையும் எதிர்பாராமல் பேனா, பென்சில், காம்பஸ் போன்ற கூர்மையான பொருட்களும் கண்ணில் பட்டு காயம் ஏற்படுத்தலாம். இவற்றை உடனே கவனிக்கத் தவறினால் கருவிழியில் தழும்பு ஏற்பட்டு பார்வையைப் பறித்துவிடலாம்.காயம் பட்ட கண்களைக் கசக்கக் கூடாது. தண்ணீர் ஊற்றக்கூடாது. அந்நியப் பொருள் சிறியதாக இருந்தால் சுத்தமான துணியைத் தண்ணீரில் நனைத்து கண்களைத் துடைக்கலாம். காயம் பெரிதாக இருந்தாலோ, குத்திய பொருள் கடுமையானதாக இருந்தாலோ, அதை அகற்ற முயலாதீர்கள். பாதிப்பு அதிகமாகிவிடும். இம்மாதிரி நேரங்களில் கண்களை அசைக்காமல் இருக்க வேண்டும். சுத்தமான துணியால் கண்ணுக்குக் கட்டுப்போட்டு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால் இளம் வயதில்பார்வையை இழப்பது, விழிவெண்படலம் வறட்சி அடைவது, அதில் வெள்ளி நிறப் புள்ளிகள் தோன்றுவது, மாலைக்கண் நோய் ஏற்படுவது போன்ற
வற்றுக்கு வைட்டமின்--ஏ குறைபாடுதான் முக்கியக் காரணம். வைட்டமின் -ஏ மிகுந்த மீன் எண்ணெய் மாத்திரை, வைட்டமின் டானிக் போன்றவற்றால் இதைக் குணப்படுத்தி விடலாம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பால், முட்டை, மீன், இறைச்சி, காரட், முட்டைக்கோஸ், பீன்ஸ்,
பீர்க்கங்காய், முருங்கைக்காய், அவரைக்காய், பப்பாளி,தக்காளி, மாம்பழம் முதலிய வற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை இழப்பதைத் தடுத்துவிடலாம்.

பார்வையைப் பாதுகாக்க.... : குழந்தைகள் அடிக்கடி கண்களைக் கசக்கினால் புத்தகத்தைப் படிக்கும்போது கண்களைச் சுருக்கினால் பள்ளியில் கரும்பலகையில் எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை என்றால் பார்வையில் குறை இருக்கலாம். உடனடியாக கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.இப்போதெல்லாம் கண்ணில் உள்ள குறைபாடுகளை மிகவும் தொடக்க நிலையிலேயே கண்டு பிடிக்க அல்ட்ரா சவுண்ட் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் என நவீன பரிசோதனைகள் வந்துவிட்டன. இதுபோல் கண் நோய்களைக் குணப்படுத்த அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக, லேசர் சிகிச்சை அணுக்கதிர் சிகிச்சை எனப் புதியவழிகள் வந்துள்ளன.மாறுகண், நிறக்குருடு போன்ற நோய்களுக்கும் நவீன சிகிச்சைகள் வந்துள்ளன. இளம் வயதிலேயே இச்சிகிச்சைகளைப் பெற்றால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆகவே ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொண்டால் பார்வையைப் பாதுகாப்பது மிக எளிது.

-டாக்டர் கு. கணேசன்
மருத்துவ இதழியலாளர்
ராஜபாளையம்
gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement