Advertisement

நாட்டின் ரத்த நாளங்கள் மாணவர்கள்!

மாணவர்களின் மன நிலைக்கேற்ப, வகுப்பறை சூழலுக்கேற்ப, எப்போது, எது, மாணவர்களுக்கு தேவையோ, அப்போது, அதை, அவர்களுக்கு தயங்காமல் கொடுக்க முயற்சிப்பவரே நல்லாசிரியர்.

வேர்கள் செய்யும் சேவை வெளியே தெரிவதில்லை. ஆனால், அவை தான், தாவரங்கள் உயிர் வாழ, சத்து நீரை உறிஞ்சி கிளைகளுக்கும், இலைகளுக்கும் அனுப்புகின்றன. புயல் காற்றின் தாக்குதல்களிலிருந்து தாவரங்கள் சாய்ந்து விடாமல் பாதுகாக்கின்றன. அது போலவே, ஆசிரியரின் பணி அமைகிறது. மாணவர்கள், கற்றலில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பின், மிகவும் எளிதில் கற்றுக்கொள்வர். ஆனால், எல்லா மாணவர்களும், ஆர்வமுள்ளவர்களாயிருப்பர் என, எதிர்பார்க்க முடியாது. அத்தகைய நிலையில், ஆசிரியர்கள் தான் வலிய சென்று, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நன்கு கற்பிக்க, திட்டமிடுதல் அவசியம். திட்டமிடுதலை, நீண்ட கால அடிப்படையில் அல்லது ஒவ்வொரு பாட வேளைக்கும் திட்டமிடுதல் அல்லது பாட பொருளை சிறு சிறு பகுதிகளாக பிரித்து திட்டமிடுதல் என்பதாக அமைத்து கொள்ளலாம்.ஆசிரியர்கள், வகுப்பறைகளில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை, சீரிய முறையில் பராமரிக்க வேண்டும். அப்போது தான், கற்றல், கற்பித்தல், எந்த தடங்கலும் இல்லாமல் நடக்கும். மாணவர்கள், தங்களுக்கு எழும் சந்தேகங்களை, உடனுக்குடன் கேட்டு, நிவர்த்தி செய்து கொள்ள, ஆசிரியர்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

மதிப்பீடு செய்தல், ஆசிரியர் தொழிலுக்கு மிகவும் அவசியம். பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதே, வாய் வழியாக கேள்விகள் கேட்டு, மாணவர்களை மதிப்பிடலாம் அல்லது குறிப்பிட்ட கால இடை வெளியில், தேர்வுகள் நடத்தி மதிப்பிடலாம். இம்மதிப்பீடுகளில், மாணவரின் பன்முக திறன்களை கணிக்கும் வகையில், கேள்விகளின் வடிவத்தை மாற்றி வடிவமைத்து கொள்ளலாம்.

கற்பிக்கும் நேரத்தில், பாடம் சம்பந்தப்பட்ட படச்சுருள்கள், காட்சி வில்லைகள், விளக்கப்படங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் போது, மாணவர்கள் ஈடுபாட்டுடன், வகுப்பறை செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை, ஆசிரியர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
வகுப்பறைகளில், ஒரு ஆசிரியரே, ஒரு பாடத்தை கற்பிப்பதை காட்டிலும், பல ஆசிரியர்கள் இணைந்து, குழுவாக நடத்தலாம். நம் பள்ளிகளுக்கு, இன்றுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், இது சாத்தியமில்லை என்றாலும், ஒரு ஆசிரியர் சொல்ல மறந்த கருத்தை, இன்னொரு ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்ல, குழு கற்பித்தலில் வாய்ப்பிருக்கிறது.

விரைவுரையாற்றல் முறை என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். கருத்தரங்கு, உரைக்கோவை கருத்துப்பட்டறை போன்ற, நவீன கற்பித்தல் முறைகளை கையாளும் போது, மாணவர்கள் நன்கு பயன் பெறுவர். ஆசிரியர்களின் முழுமையான கரும்பலகை பயன்பாடு, மாணவர்கள் அறிவு வெளிச்சத்தை பிரகாசமாக பெற, விடியலாக அமையும்.

கல்வித்துறை அவ்வப்போது, ஆய்வு செய்து வெளியிடும் நுால்கள், கருவிகள் போன்றவற்றை, ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்வது நலம். வகுப்பறைகளில், மாணவர்கள் சோர்வடையும் போது, ஆசிரியர்கள், கலை வழி கற்பித்தல் முறையை கையாளலாம். ஆசிரியர்கள், தங்களின் குரல் வளம், நடிப்புத்திறன், நகைச்சுவை உணர்வை பயன்படுத்தும் போது, மாணவர்கள் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி பெறுகின்றனர்.

பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் காலத்திலும், பள்ளி கல்வி முடிந்து விடுப்பு சான்றிதழ் பெறும் நேரத்திலும், கையெழுத்து இட வேண்டிய கட்டாய சூழ்நிலைகளில் மட்டுமே, பள்ளிக்கு வருகின்றனர்.பள்ளிகளில் கேட்கப்படும் பொருட்களை வாங்கி கொடுப்பதும், சீருடைகள் தைத்து கொடுப்பதும், தேர்ச்சி அறிக்கைகளில் கையெழுத்து இடுவதும், 'டியூசன் சென்டருக்கு' விரட்டி விடுவதும் தான் கல்வி என, பெற்றோர் நினைத்து கொள்கின்றனர்.

பள்ளிக்கல்வி அனுபவங்கள் வெறும் ஏட்டு சுரைக்காயாக இருந்து விடாமல், வெளியுலகில், மெய்யானதாக அமைய, பெற்றோர் துணை புரிய வேண்டும். தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்கள் யார்... குழந்தைகளின் கல்வி இடர்ப்பாடுகள் என்ன; அவர்கள் எவ்வாறு கற்கின்றனர்; கற்றல் சூழ்நிலை, பள்ளிகளிலும், வீடுகளிலும் எவ்வாறு உள்ளது; நற்பழக்கங்கள் வேரூன்றி உள்ளனவா என்பதை பெற்றோர் ஆராய வேண்டும்.

குறிப்பாக, தங்கள் குழந்தைகளை, தீய பழக்கங்கள் சூழ்கின்றனவா; பள்ளி மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பை தங்கள் பிள்ளைகளால் பூர்த்தி செய்ய முடிகிறா... இல்லை எனில், அவ்வாறாக ஏன் இல்லை... போன்றவற்றை பெரும்பாலான பெற்றோர் எண்ணி பார்ப்பதேயில்லை.
இத்தகைய சூழ்நிலையில், பெற்றோர், ஆசிரியர் உறவு சிறந்திருக்குமேயானால், இச்சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். பெற்றோர், ஆசிரியர்களுக்கு இடையே நிலவ வேண்டிய உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்தே, தமிழக பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆனால், பல பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள், பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.பண்டைய காலத்தில், கல்வி கற்றல் ஆசிரியர் இல்லத்திலேயே நடந்தது. இன்று, கல்வி கற்பிக்கப்படும் இடம், பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகம் என்றும், கற்பதற்கும், கற்பிப்பதற்கும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இம்மாறுபட்ட கல்விச்சூழலில் ஆசிரியர், மாணவர் உறவு இன்றியமையாதது. கல்வி திட்டத்தில், குறிக்கோள்கள் மாணவர் மனதில் நிறைவை ஏற்படுத்தி வருகின்றனவா... இல்லையெனில், அதை சீர்படுத்த எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, ஆசிரியர்கள் எண்ணி பார்க்காததால், ஆசிரியர் - மாணவர் உறவு சீர் குலைகிறது. அறிவை தேடி வரும் மாணவர்கள் மத்தியில், அன்பை தேடி வரும் மாணவர்களும் இருக்க தான் செய்கின்றனர். அவர்களை ஆதரித்து, அரவணைக்க வேண்டும்.

அறிவு திறன் குறைந்த மாணவர்கள், ஆர்வமுடன் கற்க முயலும் போது, அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். தோல்வியுறும் போது, அவர்களுடன் சேர்ந்து, ஆசிரியர்களும் வருத்தமடைய வேண்டும். வெற்றி பெறும் போது, மகிழ வேண்டும்.மாணவர்கள் தவறுகள் புரியும் போது, அதை பெரிதுபடுத்தாமல், பக்குவமாக திருத்த முயல வேண்டும். தங்கள் கல்வி மேம்பாட்டை, தாங்களே தேர்வு செய்ய கூடிய சூழ்நிலைகளை உருவாக்கி தர வேண்டும். இதெல்லாம் பூர்த்தியாகும் போது, ஆசிரியர் - மாணவர் நல்லுறவு தழைத்தோங்குகிறது.

மேலும், எல்லாராலும் விரும்பப்படும் ஆசிரியர்களால் மட்டுமே, மாணவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்த முடிகிறது. ஆசிரியர் - மாணவர் விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில், மாணவர்கள் மீது, தனிக்கவனம் செலுத்த முடிவதால், ஆசிரியருக்கும், மாணவருக்கும் உறவு சிறந்து விளங்குகிறது.ஆசிரியரின் மேம்பட்ட கற்பித்தல் திறன், மாணவர் நல்லுறவுக்கு அடிப்படையாக அமைகிறது என, பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிப்பதை, ஆசிரியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றுள்ள சமூக அமைப்பு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக உருவெடுத்திருக்கிறது. குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை, கணக்கில் எடுத்து கொண்டால், பெரும்பாலா னோர் நன்கு படித்தவர்களாகவே இருக்கின்றனர்; காரணம் என்ன?

அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற, ஒரே குறிக்கோளுக்காகவே மாணவனை சுற்றியுள்ள, அனைத்து சக்திகளும், அவன் தலையில் பொறுக்க முடியாத அளவிற்கு, சுமைகளை ஏற்றி வைக்கிறோம். பூவின் தலையில், பூமியையே சுமக்க வைக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். மதிப்பெண்களுக்காக, தன் சந்தோஷமான தருணங்களை அவன் கொண்டாட கூட அனுமதிக்காமல், கொள்ளையடித்து விடுகிறோம். சின்ன வயதில் ஏற்படும் மன அழுத்தத்தால், மனது மரத்துப்போய், மனித நேயம் அற்றுப்போகிறான்.

அழுத்தும் சமூகத்தின் மீது கோபம் கொண்டு, பழி வாங்கும் எண்ணத்துடன் வளரும் அவன், பெரியவனானதும், குற்றம் புரிவதை தப்பாகவே நினைப்பதில்லை. இது தான் உண்மை!
குடிகார தகப்பன், குடும்ப சண்டை, ஒழுக்க கேடான பெற்றோர், மாணவனின் வளர்ச்சிக்கு, இடையூறாக இருக்கின்றனர். வறுமை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற காரணிகள், படிப்பதால் என்ன பயன்... என்ற அவநம்பிக்கையை, மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

திரைப்படங்கள் வலிந்து புகுந்தும் பாலியல் வக்கிரங்கள், வன்முறை காட்சிகள், காமநெடி வீசும், 'காமெடி' வசனங்கள், 'ஹீரோயிஸம்' போன்றவை, மாணவனின் மனசை திருப்பி, தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றன. நாட்டின் ரத்த நாளங்கள், இளைஞர்கள். அவர்களின் குருதியில், மதுவையும், போதை பொருட்களையும் கலக்கும் போதைத்தரகர்கள், தேசத்துரோகிகள்.
ஜாதி சங்கங்களும், மத அமைப்புகளும், தங்கள் சுய நலத்துக்காக, மாணவர்களை, தீவிரவாத சிந்தனைக்கு இட்டு செல்வதை நிறுத்தி கொள்ளாத வரை, மாணவர் சக்தி என்ற மகத்தான சக்தி மடிந்து போவதை தடுக்க முடியாது.

கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சமூக அமைப்புகள் போன்றவை, மாணவர்களின் உயர்வுக்கு உதவி புரியும், எக்கு துாண்களாக உருமாற வேண்டும். அப்படியொரு நிலை வந்தால், இந்தியா வல்லரசாகும் நாள் வெகு துாரத்தில் இல்லை.

கவிஞர், எழுத்தாளர் -- எல்.பிரைட்
இ - மெயில்:
brightdvkgmail.com-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement