Advertisement

தைராய்டு இல்லா உலகம் படைப்போம்

உலக அளவில் தைராய்டு நோயின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மே 25ம் நாள் உலக தைராய்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனுடைய முக்கிய நோக்கம். தைராய்டு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதும், அகற்றுவதும் ஆகும். இத்தினம் 2008லிருந்து கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பெண்கள் ஆண்களை விட இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 20 கிராம் எடையில் கேடய வடிவில் உள்ள தைராய்டு சுரப்பி உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை இருதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது.

தைராய்டு நோய்களை, தைராய்டு குறைநிலை நோய், மிகைநிலை நோய், கழுத்து கழலை நோய் மற்றும் தைராய்டு புற்றுநோய் என நான்கு வகையாக பிரிக்கலாம்.

தைராய்டு குறைநிலைஅயோடின் சத்து குறைபாட்டால் தைராய்டு குறைநோய் ஏற்படுகிறது. எனவே அன்றாடம் பயன்படுத்தும் உப்பு, அயோடின் கலந்த உப்பாக இருக்க வேண்டும். அயோடின் சத்து குறைவான உணவுகளை உண்ணும் போதும் அயோடின் குறைபாடு ஏற்படுகிறது. அது கழுத்து கழலை மற்றும் தைராய்டு குறைநிலை நோயாக வெளிப்படுகின்றது. உலக அளவில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கன் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் அயோடின் சத்து குறைவு அதிகமாக ஏற்படுகிறது.

இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை பிறக்கும் போதே தைராய்டு குறைநிலையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில், 2500 குழந்தைக்கு ஒரு குழந்தை பிறவி தைராய்டு குறைநோயால் பாதிக்கப்படுகிறது.

சிசுவுக்கு தைராய்டுகுழந்தையை துாக்கும் போது, இறுக்கம் இல்லாமல் தளர்ந்த நிலையில் உடல் இருத்தல், நாக்கு பெரிதாக இருப்பது, தொப்புளில் வீக்கம், உணவு எடுக்க மறுப்பது, அதிக நாட்கள் மஞ்சள் காமாலை இருப்பது, எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்ற அறிகுறிகள் இருந்தால் அக்
குழந்தைக்கு தைராய்டு குறைநிலை இருக்கிறது என அர்த்தம். இதற்கு குழந்தையின் பாதத்தில் ரத்தம் எடுத்து தைராய்டு சோதனை மேற்கொள்ள வேண்டும். தைராய்டு குறைநிலை இருக்கும் பட்சத்தில், உடனடி சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி பாதிக்கும்.

இந்நோய் வளரிளம் பருவத்தினர், முதியோருக்கும் வருகிறது. பெண்களில் ஆயிரம் பேருக்கு நான்கு பேர் தைராய்டு குறைநிலையால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களில் ஆயிரத்துக்கு ஒருவர் பாதிக்கப்படுகிறார்.

அறிகுறிகள்உடல் மற்றும் மனச்சோர்வு, மன அழுத்தம், மன உளைச்சல், உலர்ந்த தோல், குளிர்ச்சியான தோல், அதிகமாக முடி உதிர்தல், படிப்பு மற்றும் செய்யும் வேலையில் கவனமின்மை, குளிர் தாங்கும் சக்தி இல்லாமை, கை, கால் மதமதப்பு, எரிச்சல், நடக்கும் போது தள்ளாட்டம், ஞாபக சக்தி குறைதல், உடல் தசை வலுவிழத்தல், நரம்பு பிரச்னைகள், மலச்சிக்கல், உடல் எடை
அதிகரித்தல், மூச்சு முட்டுதல், குரல் மாற்றம், முகம் மற்றும் கால் வீங்குதல், புருவத்தில் உள்ள முடி உதிர்தல், நாடித்துடிப்பின் எண்ணிக்கை குறைதல், இருதயத்தை சுற்றி நீர் கோர்த்தல்,
ரத்த அழுத்தம் அதிகமாதல் போன்றவை தைராய்டு குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகளுடன் பெண்களுக்கு குழந்தையின்மை, குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு குறைதல், மாதவிடாய் பிரச்னை, காதுகேட்கும் திறன் குறைதல், ரத்த சோகை போன்றவை ஏற்படலாம்.

சிகிச்சைஇந்த அறிகுறிகள் இருக்கும் போது, தைராய்டு அளவினை பரிசோதித்து சிகிச்சை எடுக்க வேண்டும். அதற்கான 'தைராக்சின்' மாத்திரைகள் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவற்றை காலையில் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். பால் மற்றும் 'அல்சர்' நோய்க்கு பயன்படுத்தப்படும் 'ஜெல்' போன்றவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள கூடாது. ரத்த விருத்திக்கு பயன்படுத்தப்படும் இரும்புச் சத்து 'டானிக்'வுடன் சேர்த்து எடுக்க கூடாது. உணவு
சாப்பிடும் போது எடுத்துக் கொண்டால், மருந்தின் மிக சிறிய அளவு மட்டுமே உடலால் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒருநாள் மருந்து எடுக்காவிட்டாலும் அடுத்தநாள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், தேவைப்படும் அளவை விட 20 சதவீதம் குறைவான அளவு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இருதய நோயாளிகளும் குறைவான அளவு 'தைராக்சின்' மாத்திரை எடுக்க வேண்டும். ஏனென்றால், இம்மாத்திரைகள் இருதய
துடிப்பையும், இருதயம் இயங்கும் தன்மையையும் அதிகரிக்கிறது.

கர்ப்ப கால தைராய்டுகர்ப்பம் என அறிந்தவுடன் தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முதல் மூன்று மாதத்தில் ஒவ்வொரு மாதமும், அதன் பிறகு ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையும், ரத்தத்தில் தைராய்டு சுரப்பின் அளவை கணக்கிட்டு, தைராய்டு குறைநிலைக்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறையும். தைராய்டு குறைநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் தேவையான அளவை விட 50 சதவீத அதிகமாக 'தைராக்சின்' மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மறைந்திருக்கும் தைராய்டுஎந்தவிதமான அறிகுறிகளும் தெரியாமல் ரத்தத்தில் மட்டும் தைராய்டு குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. டி.எஸ்.எச்., ஹார்மோன் அதிகமாகவும், 'டி3', 'டி4' ஹார்மோன் சரியான அளவில் இருக்கும் போது அதனை மறைந்திருக்கும் தைராய்டு குறைநிலை என்கிறோம். இவ்வகை குறைநிலை பாதிப்பு கொழுப்புச் சத்தை அதிகமாக்கும். மலட்டுத்தன்மை ஏற்படுத்தும். எனவே இதனை கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

தைராய்டு மிகை நிலைஇந்திய அளவில் தைராய்டு மிகை நிலையால் ஒரு சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பசி எடுத்தல், எடை குறைதல், அதிகமாக வியர்த்தல், படபடப்பு, அதிக கோபம், வெப்பத்தை தாங்கும் சக்தி இல்லாமை, உடல் சோர்வு, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுதல், அதிகமாக சிறுநீர் கழித்தல், கை நடுக்கம், கழுத்தில் கழலை ஏற்படுதல், தோல் வெது வெதுப்புடனும் ஈரப்பதத்துடனும் இருத்தல், தசை நார்கள் பலமிழத்தல், வெளியே தள்ளிய நிலையிலுள்ள கண்கள் போன்றவை மிகை நிலையின் அறிகுறிகள்.

தைராய்டு ஹார்மோன்பரிசோதனை எடுத்துக் கொண்டு சிகிச்சை எடுக்காவிட்டால், இருதய பாதிப்பு ஏற்படும். மருந்துகள் பலனில்லாமல் போனால், அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியை அகற்ற வேண்டியதிருக்கும். கதிரியக்க முறையிலும் சிகிச்சை எடுக்கலாம்.

தைராய்டு புற்றுநோய்தைராய்டு கழலை நோய் அயோடின் சத்து குறைபாட்டினாலும், மலை வாழ், பள்ளத்தாக்கு பிரதேசங்களில் வசிப்பவர்களிடமும் அதிகமாக காணப்படும். இது சாதாரண கழலையாகவோ, தைராய்டு மிகை நிலையின் வெளிப்பாடாகவோ இருக்கலாம். சில நேரம் தைராய்டு புற்று நோயாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

எனவே கழலை நோயின் தன்மையை அறிந்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கழலையின் அளவு அதிகமானால் தொண்டையில் அழுத்தம் ஏற்பட்டு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். சில நேரங்களில் முக்கியமான நரம்புகளை அது பாதிக்கும்.தைராய்டு சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் பரவாமல், உடலை காத்துக் கொள்ளலாம்.

- டாக்டர் ஜெ. சங்குமணி

மதுரை
sangudryahoo.co.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    "தைராய்ட் நோய் இல்லா உலகம் படைப்போம்" தலைப்பு தான் சரியானது. Thyroid Controls hormones essential to your metabolism. If it has disease then the problem starts, so thyroid organ is a must for humans.

  • Snake Babu - Salem,இந்தியா

    தைராய்டு இல்லா உலகம் படைப்போம், அய்யா எனக்கு தைராய்டு இருந்தது, 150ம்ஜி மாத்திரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் இரண்டு வருடமாக போட்டுவந்திருக்கிறேன், எனக்கு மாத்தறை போடுவது தவறு என்று நினைப்பவன், நாம் எதோ தவறு செய்கிறோம் எது தெரியாததனால் மாத்திரைக்கு அடிமைஆகிறோம். கொஞ்சநாள் மாத்திரை நிறுத்தினால் காய் கால் எல்லாம் வீங்க ஆரம்பித்துவிடும். அப்புறம் அனட்டாமிக் தெரபி ஹீலர் பாஸ்கர் செவிவழி செகிச்சை, வாரம் இருமுறை எண்ணெய்தேய்த்து குளிக்கவேண்டும் நல்லெண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து சூரியஒளி அரைமணிநேரம் படும் படி இருந்துவிட்டு வெந்நீரில் குளிக்கவேண்டும், தைராய்டு ஒட்டிவிடும், சிறுநீரக கல் கரைந்து விடும் உடல் புத்துணர்வு பெரும், உடல் எடை குறையும் clacificcation, prov vitamin D, போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள் கடந்து மூன்று வருடத்திற்கு மேலாக எதற்கும் மாத்திரை போடுவதில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. எனக்கு சிறுநீரக கல் 23ம்ம் இருந்தது தற்போது அதுவும் குறைத்துவிட்டது எந்தவித மத்தரை அருமை சிகிச்சை ஏதும் இல்லாமல் குணப்படுத்திக்கொண்டேன். உணவுமுறை உடற்பயிற்சி ஆழ்ந்த உறக்கம் நீர் காற்று ஆகியவரை சரியாக வைத்துக்கொண்டிருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். தைராய்டு இல்லா உலகம் படைப்போம், பெண்களுக்கு எண்ணெய்தேய்த்து குளிப்பது என்பது சற்று சிரமம் தான் இருந்தாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தேய்த்துக்கொண்டு வெயில் படும்படி னென்று வெண்ணீரில் குளியுங்கள் உடலில் கால்சியம் குறைபாடு பற்றி நன்றாக அறிந்துகொள்ளுங்கள் இது வெறும் தைராயிட் மட்டும் அல்ல சிறுநீரக கல் உடல் எடை கூடுதல் குறைதல் கொழுப்பு மனஅழுத்தம் போன்ற பறவைக்கும் சிறந்த தீர்வு . நன்றி வாழ்க வளமுடன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement