Advertisement

இணையில்லை... யாரும் உங்களுக்கு...!

ஒன்றோடு ஒன்று, ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுக் கொள்வது நமது வாழ்க்கைப் போராட்டத்தில் தவிர்க்க இயலாததாக இருக்கிறது. ஒப்பீடு நமக்கு ஆறுதலையும்
தருகிறது; ஆர்வத்தையும் துாண்டு கிறது. சில நேரங்களில் ஆற்றாமையையும் தந்துவிடுகிறது.
ஒப்பீடுகள் அவசியம் தானா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இரண்டு பக்கத்திலும் நியாயங்கள் இருக்கின்றன. ஒன்றைவிட ஒன்று பரவாயில்லையே என்று ஆறுதலடைவது மனித சுபாவம். மனநலமருத்துவர்கள் கூட சில சூழல்களில் இதை நல்லது என்று கூறுவதுண்டு. “காலில் செருப்பில்லையே என்று கவலைப் பட்டேன். காலில்லாதவனை பார்க்கும்வரை” என்று ஒரு புதுக்கவிஞன் பாடியிருக்கிறான். நானும் என் பங்குக்கு “கையில்லை என்பதைவிடவா கையிலில்லை என்கிற கவலை” என்று எழுதியிருக்கிறேன். “மற்றவர்களின் துயரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் எவ்வளவோ பரவாயில்லையே” என்று நினைத்துக் கொள்வது மனதுக்குச் சற்று ஆறுதலாக இருப்பதென்னவோ உண்மைதான்.

அடுத்தவர் துயரம் : ஆனால் ஒப்பீடுகளில் அடுத்தவரின் துயரம் நமக்கு ஆறுதல் தரக்கூடாது. மாறாக நாம் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சி. பிரபலமான மனிதர் ஒருவர் வெளிநாடு சென்றிருந்திருக்கிறார். சென்னை திரும்புவதற்காக குறிப்பிட்ட ஒரு விமானத்தில் பயணிப்பதற்கான பயணச்சீட்டு அவரிடமிருக்கிறது. சற்று முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்துவிட்ட அவரை அப்போது புறப்படவிருந்த முந்தைய
விமானத்திற்கு பயணச்சீட்டை மாற்றி நண்பர்கள் அனுப்பிவைத்து விடுகிறார்கள். சென்னைக்கு
வந்ததும் ஒரு அதிர்ச்சியான தகவல் வருகிறது. பின்னால் வந்த அவர் பயணிக்க வேண்டிய விமானம் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து போகிறார்கள். பிரமுகர் ஊடகங்களுக்குப் பேட்டி தருகிறார். “நல்லவேளை நான் அதில்
பயணிக்காததால் தப்பிவிட்டேன்” என்று. தாம் தப்பித்த ஆறுதலை அவர் தன்னுடைய மனதில்
வைத்திருக்கவேண்டும். இன்னும் அதிகமாய் இறந்து போனவர்களுக்காக மனமிறங்க வேண்டுமேயன்றி தப்பிப் பிழைத்தமைக்காகத் தாம் ஆறுதலடைந்ததும் ஊடகத்தில் பெரிதாகப் பேசியதும் இறந்து போனவர்களின் ஆன்மாவை இழிவுபடுத்தியது போலிருந்தது.
“லட்சத்தில் ஒருவருக்குத்தான் இந்த நோய் வருகிறது” என்று மருத்துவர் சொல்கிறபோது “அந்த ஒருவன் நானாகவா இருக்க வேண்டும்?” என்று நோயில் விழுந்த ஒருவர் நொந்துவிடுவார். ஆனால் ஒரு லட்சம் பரிசுச் சீட்டுகளின் குலுக்கலில் லட்சம் பெறுவதற்காகத் தன்னுடைய எண் வரும்போது மட்டும் மனம் துள்ளிக்குதிக்கிறது. “நல்ல தென்றால் நமக்கு நடக்கவேண்டும், தீமையென்றால் பிறருக்கு நிகழ வேண்டும்” என்று எண்ணுவது எந்த வகையில் நியாயம்? என்று யாரும் யோசிப்பதில்லை.

பெண்ணின் மனநிலை : பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். பாவம் அந்தப் பெண் லிப்ட்டில் 7ஆவது மாடிக்குப் போகும் வழியில் ஐந்தாவது மாடியிலேயே அழகான ஆண் குழந்தையைப் பெற்றுவிடுகிறாள். அவளை மேலே அழைத்துவந்து படுக்க வைக்கிறார்கள். அழுதுகொண்டே இருக்கிறாள். அப்போது அவள் அழுதது வலி பொறுக்காமல் அல்ல; அவமானம் தாங்காமல்! “பிரசவமென்பது நான்கு சுவர்களுக்குள் யாருடைய பார்வையிலும்படாமல் நிகழ வேண்டிய பவித்திரமான நிகழ்ச்சி. இப்படிப் பாதிவழியில் பலபேர் நடுவில் நிகழ்ந்துவிட்டதே” என்று வெட்கப்பட்டு அழுத அவள் ஆறுதலடைய வேண்டும் என்று அவளுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர், “உனக்காவது பரவாயில்லை மருத்துவமனைக்கு வந்த பிறகு லிப்டில் பிரசவம்
நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சாலையைக் கடப்பதற்கு முன்பே பிளாட்பாரத்திலேயே ஒருத்தி குழந்தை பெற்றுவிட்டாள். அதைப் பார்க்கும்போது நீ எவ்
வளவோ பரவாயில்லை” என்றதும் அந்தப் பெண் மேலும் அதிகமாக அழத் தொடங்கினாள். 'ஆறுதல் தரும் என்று சொன்ன விஷயம் இப்படி அழுகையை அதிகப்
படுத்திவிட்டதே' என்று திகைத்த மருத்துவரிடம் அந்தப் பெண் சொன்னாள்: “அப்போதும் அசிங்கப் பட்டது நான்தான். பிளாட்பாரத்தில் குழந்தை பெற்றது வேறு யாருமல்ல… நானேதான்” என்று.அடுத்தவரைப் பார்த்துஆறுதலடைவதில் தவறில்லை. அதற்காக எல்லாத் துயரங்களும் தமக்கே வருகிறது என்று குமுறுவதோ வேறு எவரைக் காட்டிலும் தாமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று குதிப்பதோ தவறு. எனக்குத் தெரிய ஒரு பெரிய மனிதர் தன்னைப் போல உலகில் மகிழ்ச்சியான கொடுத்துவைத்த மனிதர் யாரும் இருக்கமுடியாது என்று மிகவும் பெருமையடித்துக் கொண்டிருந்தார்; மகிழ்ச்சி. ஆனால் அவரைத் தான் இறைவன் கொடுத்து வைத்தவராகப் படைத்திருப்பதாகவும், மற்றவர்களையெல்லாம் அவன் கெடுத்து வைத்திருப்பதாகவும் கருதுவது தவறு. ஒவ்வொருவருக்கும் ஒன்றில் அதிகமாகவும், ஒன்றிரண்டில் குறை வைத்தும் கணக்கைச் சரிசெய்து வைத்திருக்கிறான் இறைவன். சிலருக்கு அழகான மனைவி வாய்க்கலாம். அதற்காக அவளுடைய கணவனைப் பார்த்துப் பொறாமைப் படத் தேவையில்லை. “இறைவன் நமக்கு அன்பான மனைவியைத் தந்திருக்கிறானே” என்று ஆறுதல்
அடையலாம்.குழந்தைகளை ஒருவரோடு ஒருவர் ஒப்பிடக் கூடாது. அது அவர்களுடைய மன நிலையை பாதிக்கும். “பக்கத்துவீட்டு பாஸ்கரனை பார். அவனும் உன்னைப் போல ஒரு பையன். படிப்பில் கெட்டிக்காரனாகஇருக்கிறான் எல்லாப் பாடங்களிலும் 'நுாறு மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். நீயும் இருக்கிறாயே!” என்று இடித்தால் விளைவுகள் விபரீதமாகப் போகும். பெரும்பாலான மாணவச் செல்வங்களைப் பெற்றோர் திட்டுவதைக் காட்டிலும் பிற மாணவர்களுடன் ஒப்பிட்டுத் திட்டும்போதுதான் அதிகமாக உடைந்து போகிறார்கள். ஒப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் வந்தால், அது உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டும். “அடுத்த தேர்வில் ராமுவைவிட நீ அதிக மதிப்பெண்கள் பெற்றுக் காட்ட வேண்டும். உன்னால் முடியும்” என்றுதான் உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர உடைத்துப் போட்டுவிடக்கூடாது.ஒப்பீடுகள் காரணமாகத்தான் உயர்வு-தாழ்வு மனப்பான்மைகள் வருகின்றன. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எளிமையாக
இதமாக இருக்கிறபோது அவர்கள் மீது யாருக்கும் அசூயை வராது; ஆத்திரமும் வராது. மேலே இருப்பவர்கள் ஆடினால் கீழே இருப்பவர்கள் கூடிவிடுவார்கள். அலுவலக செயற்பாடுகளிலும் ஆலைகளின் இயக்கத்திலும்
ஒவ்வொரு படிகளில் அல்லது நிலைகளில் நாமிருக்கிறோம் அவ்வளவுதான். பணிநிலைகள் மனித நிலைகளில் மாறுதல் ஏற்படுத்தினாலோ உயர்வுதாழ்வு என்ற ஒப்
பீடுகளில் உழன்றாலோ தனி மனித உறவுகளும், தொழிலும், நிறு
வனமும் பாதிக்கப்படும்.
நல்ல தலைமை
ஒன்றையொன்று விஞ்சவேண்டும். ஒருவரையொருவர் வெல்ல வேண்டும் என்ற உற்சாகப்படுத்துகிற நல்ல தலைமை ஒருபோதும் ஒருவரையொருவர் ஒப்பிட்டுச் சோர்வடையச் செய்யாது. இன்று முன்னேறியிருக்கிற பலர் பின்னால் வருகிறவரைப் பார்த்து “நாம் பரவாயில்லையே” என்று ஆறுதல் அடைந்தவர்கள் அல்ல. “முன்னால் போகிறானே அவனை முந்த வேண்டும்” என்று முனைந்தவர்கள்தான்.
இலக்குகளைக் கொஞ்சம்
அதிகமாகக் குறித்துக் கொள்வதும் இலட்சியங்களைச் சற்றுப்
பெரிதாகப் பார்த்துக் கொள்வதும் நல்லது - கிடைக்கிற வெற்றி தோல்வி எதுவானாலும் நினைவுகள் பெரிதாக இருந்தால் போற்றப்படும்… பாராட்டப்படும். “இதுதான் நான் சுட்ட எலி” என்று அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வளைய வருவதைவிட “புலியைச் சுட்டேன். அது காயத்தோடு காட்டுக்குள் ஒடிவிட்டது” என்று வெறுங்கையோடு திரும்புவது
கேவலமில்லை. முயற்சிகளை அதிகமாக்கிக் கொண்டும், முனைப்புகளைப் பெருக்கிக் கொண்டும் முன்னேறத் துடிக்கிறவர்கள்
பாராட்டிற்குரியவர்கள். மாறாக “பரவாயில்லையே” என்று தன்னைச் சாதாரணமானவர்
களோடு ஒப்பிட்டு சாந்தமடைகிறவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.
பாராட்டு -பரிதாபம் இவற்றுள் எதுவேண்டும் என்பதில் சரியான முடிவுக்கு வருகிறவர்கள்தான் அடுத்த சாதனைக்கு ஆசை
வைப்பர். அதை அடைந்தும்
காட்டுவார்கள். முந்தைய
சாதனைகளை முந்துவார்கள். முயன்று முயன்று அவர்கள் முறியடிக்கும் சாதனைகள் அவர்களுடைய பழைய சாதனை
களாகவே இருக்கும். 'இதுவே
அதிக'மென்று அமைதியாய் இருந்து விடாமல் 'இதைவிட
அதிகமாய்' என்று தொடர்கிற
முயற்சியில் நாம் நம்மை
நம்முடன்தான் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும். அன்று நான் அப்படி இருந்தேன் இன்று நான் இப்படி இருக்கிறேன் என்று
நம்முடன் நம்மை ஒப்பிட்டு உயர்ந்து கொண்டிருக்க வேண்டும். மாறாக எப்படியிருந்த நான்
இப்படியாகிவிட்டேன் என்று நொடிந்து போய்விடக்கூடாது.
“உனக்கொன்றும் இந்தத்துயரம் அல்லது தோல்வி அத்தனை மோசமில்லை. இதனினும் மேலாய்த் துயரம் அனுபவித்தவர்கள் தோல்வி கண்டவர்களை ஒப்பிட்டுப்பார் ஆறுதல் அடைவாய்” என்று யாரேனும் ஆற்றுப்படுத்தினால் அதில் மயங்கிவிடக்கூடாது. ஆறுதல் கூறாமல் ஆற்றுப்படுத்தாமல் உங்கள் உயர்வுக்காக ஆக்க பூர்வமான வழிகளைச் சொல்கிறவர்களை, காட்டுகிறவர்களைப் பின்பற்றுங்கள். ஒப்பீடுகளால் கிடைக்கிற ஆறுதல் முக்கியமில்லை. உங்கள் வழி உங்கள் வழியாக இருக்கட்டும். உங்கள் வெற்றி உங்கள் வெற்றியாக இருக் கட்டும். யாருக்கும் சளைத்த வரல்ல நீங்கள். இணையில்லை யாரும் உங்களுக்கு...!
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
எழுத்தாளர். 94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement