Advertisement

தாயிடம் கற்றது...தங்கபச்சான்

'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'ஒன்பது ரூபாய் நோட்டு' உட்பட மக்கள் வாழ்வியலுக்காக சினிமாக்களை தந்து, கவனம் ஈர்த்து வருபவர் இயக்குனர் தங்கர்பச்சான். அவர் தனது தாயின் பெருமைகள் குறித்து கூறியதாவது:பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டைதான் எங்கள் சொந்த ஊர். எனது தாய் லட்சுமியம்மாள். அவருக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. 10 குழந்தைகள் பிறந்தன. நான் ஒன்பதாவது குழந்தை. பிறக்கும்போது ஒருவர், சிறு வயதில் 2 பேர் இறந்ததுபோக, தற்போதுள்ள 7 பேர் தப்பினோம்.எனது தாய் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்வார். பாத்திரங்களை துலக்கி, மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, சமைத்து முடித்து, எங்களை பள்ளிக்கு அனுப்புவார். வயலுக்கு சென்று, வேலை முடிந்து விறகுக் கட்டுடன் இரவு வீடு திரும்புவார். அச்சமயத்தில் நாங்கள் துாங்கிக் கொண்டிருப்போம். வீட்டிற்கு வந்த 30 நிமிடத்தில் சமைத்து முடித்து, எங்களை எழுப்பி சாப்பாடு ஊட்டிவிடுவார். அனைத்து வேலைகளையும் முடித்து, இரவு 11:00 மணிக்கு துாங்கச் செல்வார். இடையில் ஒரு நொடி கூட கண் அயர்ந்து பார்த்ததில்லை.எனது தந்தை பச்சானின் தாக்கத்தைவிட, எனக்கு தாயின் தாக்கம் அதிகம். தாய் எழுத, படிக்கத் தெரியாதவர்; கைரேகைதான். எப்போதாவது பண்ருட்டி, கடலுார் வரைதான் சென்று வந்திருப்பார். ஆனால் உலகத்தையே பாடமாக படித்தவர். விவசாய நிலம், அறுவடை கணக்கு வழக்குகள் அத்தனையும் அத்துபடி.எனது தாய் 91 வயதில் இறக்கும் வரை, ஒருமுறைகூட மருத்துவமனை சென்றதில்லை; மருந்து சாப்பிட்டதில்லை. அதிக ஆளுமைத்திறன் மிக்கவர். யார் தயவிலும் வாழக்கூடாது என்ற வீராப்பு கொண்டவர்.எனது தந்தை எதிலும் பற்றில்லாதவர். தெருக்கூத்து கலைகள் மீது ஆர்வமுள்ளவர். சந்தைக்குச் சென்று வேண்டியவர்களுக்கு மாடுகள் பிடித்துக் கொடுப்பார். 'கேட்பவர்களுக்கு இருப்பதை கொடுத்துவிட வேண்டும்,' என்பது எனது தந்தையின் குணம். அவரின் பிடிவாதத்தால் கொடுத்ததுபோக மீதி இருந்த புஞ்சை, முந்திரிக் காட்டை வைத்து எங்கள் ஏழு பேரையும் கரைசேர்த்தவள் தாய்.எனது தாய்க்கு நகர வாழ்க்கை பிடிக்காது. சென்னைக்கு எனது வீட்டிற்கு 3 முறைதான் வந்துள்ளார். அதிலும் சில நாட்கள்தான் தங்கியுள்ளார். நான் திரைப்படக் கல்லுாரியில் சேர விண்ணப்பம் வாங்கி வந்தபோது,' அங்கெல்லாம் சேர்ந்தால் மகன் கெட்டுப் போவான்,' எனக் கருதி அதை கிழித்துப் போட்டார். 'தர்மசீலன்' படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளராக, 'கிரேன்' மீது அமர்ந்து கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தேன். அதை காண வந்த என் தாய்,' நீ கீழே விழுந்திருவப்பா..., இந்த தொழிலே வேண்டாமப்பா. என் மகனை கீழே இறக்கிவிடுங்கப்பா...,' என்றார் பதட்டத்தோடு.'என்னப்பா படமெல்லாம் எடுக்குறே; படம் காட்டுற; ஆனா...,படத்துலே உன்ன காணமேப்பா...,' என்பார். கடைசிவரை நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை அறியாமலேயே 2015ல் இறந்தார்.காலையில் எழுந்ததும் என் பெற்றோரின் போட்டோவில் கண் விழிக்கிறேன்.பள்ளிகள் சொல்லித் தராததை பிள்ளைகளுக்கு கற்றுத் தருபவள் அம்மா தான். நான் எங்கே இருந்தாலும் என்னை வழிநடத்துவது தாய்தான். எனது படங்களில் பெண்ணியம் சார்ந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரக்காரணம் தாய்தான். அப்படங்களில் கதாநாயகிகள் குழந்தைகளுக்கு தாயாகத் தான் நடித்திருப்பர்.எனது தாயைப் பற்றி 'என் அம்மா' என்ற தலைப்பில் (En Amma-My Mother) ஆவணப்படம் வெளியிட்டுள்ளேன். இவ்வாறு கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • sankar - trichy,இந்தியா

    இவரின் படங்கள் மேல் எனக்கு ஒரு மரியாதை உண்டு Nalla படம் எடுத்தவர் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement