Advertisement

அம்மா என் தெய்வம் - நடிகர் கார்த்தி பரவசம்

நல்ல படங்களை நகைச்சுவை கலந்து, சமுதாய சிந்தனைகளுடன் நடித்து வருபவர் கார்த்தி. பருத்திவீரன் ஆகட்டும், 'கொம்பன்' ஆகட்டும் கிராமிய 'தாதா'வாக வந்து வேடத்தை 'வெளுத்து'க் கட்டியிருப்பார். கதையம்சத்தோடு அவரது ஊறிப்போன நடிப்பே அதன் வெற்றிக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று கேட்ட அடுத்த கணம், 'எனக்கு எல்லாமே அம்மாதான்' என்கிறார், கார்த்தி. திரையுலக பிரபலமான அப்பா சிவக்குமார் மீது அளவில்லா மரியாதை வைத்துள்ளார் கார்த்தி. 'அன்னையர் தினம்' என நாம் துவங்கியதும், இதுதான் தருணம் என்பது போல, அம்மா லட்சுமி மீதான அன்பை கொட்டித் தீர்த்தார்.* அம்மா செல்லமா நீங்கள்?தொழில் பக்தி கொண்ட அப்பா, சினிமா சூட்டிங் என்றால் 24 மணி நேரமும் அதில்தான் தீவிர கவனம் செலுத்துவார். 5 நிமிடம்கூட எங்களுடன் பேச நேரம் கிடைக்காது, அவருக்கு. எங்கள் குடும்பத்தையே நன்கு பார்த்துக் கொண்டது அம்மாதான்.* அம்மாவிடம் கற்றது?அம்மா எதற்குமே கவலைப்பட மாட்டார். எத்தனை கஷ்டங்கள், பிரச்னைகள் வந்தாலும், 'கஷ்டம் வந்தது போல போய்விடும். அதற்காக யாரும் வருந்தக்கூடாது' என்பார். ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தினரை போலத்தான் எங்களை வளர்த்தார். ஆடம்பர மோகத்தை எங்களுக்கு ஊட்டவில்லை. வாய்ப்பு இருந்தும், பள்ளிக்கு பிற மாணவர்களைப் போல, சைக்கிளில்தான் என்னையும் அனுப்பினார் என்றால் பார்த்துக்கோங்க. * பிடித்த அம்மா சமையல்?அம்மா கோவை மாவட்ட கிராமத்தில் பிறந்தவர். அதனால் கொங்கு நாட்டு சமையலை விரும்பி செய்வார். அதைப் போன்ற சுவையான உணவை நான் சாப்பிட்டது இல்லை. அடை, பணியாரம், காய்கறிகள் கூட்டு அவரே சமைப்பார். அவரே பரிமாறுவார். அனைவரும் சாப்பிட்ட பின்பே, அவர் சாப்பிடுவார்.* திட்டு வாங்கி இருக்கிறீர்களா?இல்லை. நான் சேட்டைகள் செய்யும் போதும் அமைதியாக, இதை செய்யாதே, அதைச்செய் என அன்பாக அறிவுறுத்துவார். அவருடைய குழந்தைகள் வளர்க்கும் அணுகுமுறையை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்.* படிக்க உதவினாரா?நான்றாக படிக்க வேண்டும் என்பாரே தவிர, அதிக மார்க் எடுக்க வேண்டும் என ஒருபோதும் நிர்பந்தித்தது கிடையாது. பொதுத் தேர்வு நேரத்தில் எனக்காக இரவில் கண்விழித்து இருப்பார். நான் துாங்கி எழும்முன் அவர் எழுந்து காபி தருவார். * சினிமாவுக்கு அம்மா உதவி எப்படி...?நான் அமெரிக்காவில் படித்து, அங்கேயே வியாபாரம் செய்யலாம் என்றுதான் நினைத்தேன். இந்தியா வர வேண்டும் என ஆசைப்பட்டது அம்மாதான். இங்கு வந்தபின் படங்களை இயக்க ஊக்கமளித்தார். பின்பு நடிக்கவும் அவர்தான் ஆலோசனை தந்தார். எந்த படம் எடுத்தாலும், நடித்தாலும் அம்மா ஓ.கே., சொன்னா அது நல்லா ஓடும். அதனால் அவரைத்தான் முதலில் படம் பார்க்க சொல்வேன். அது எனது சென்டிமென்ட்.* அம்மாவை ஏமாற்றியதுண்டா?அவரை ஏமாற்றவே முடியாது. பல விஷயங்களை தெரிந்து வைத்து இருப்பார். கல்லுாரி மாணவர்களுடன் ஒருமுறை ஓட்டலுக்கு சென்றது குறித்து பொய் சொன்னதை கண்டுபிடித்துவிட்டார். அவருக்கு விஷயம் எதுவும் தெரியாது என நினைப்பேன். ஆனால் அதுபற்றி தெரிந்து வைத்து இருப்பார். * அம்மாவின் பிடித்த குணம்அம்மாவிடம் பிடித்ததே விருந்தோம்பல்தான். எங்களைப் போலவே நண்பர்களிடமும் சகஜமாக பேசுவார். அவர்களோ, விருந்தினர்களோ யார் வந்தாலும், பழகுவதிலும், உணவு வழங்கி உபசரிப்பதிலும் திறமைசாலி. * அம்மாவிடம் உங்கள் கோபம்...?தெய்வத்திடம் யாரும் கோபப்பட முடியுமா? எனக்கு கோபமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால், அவரிடம் பேசினால் மனது லேசாகிவிடும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement