Advertisement

தேவை தானா 'செல்பி' மோகம்

சொற்கள் மற்றும் சொற்களில் சில அன்றாட வாழ்வின் எல்லாத் தளங்களையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவ்வாறு மிகச் சமீபத்தில் நம்மை வந்தடைந்த சொல் தான் 'செல்பி'.
செல் ஆராய்ச்சிகளுக்கு இடையே இந்தச் சொல்லை ஆராய்வோம். ஒரு சொல்லை அர்த்தம் கொள்ள செய்வதும், இழக்க செய்வது நாம் தான். நம் பார்வைகள் தான். 'செல்பி' தமிழில் 'தற்படயி, தற்படம், தாமி, சுயமி, சுயபடம், தற்காட்டி போன்ற சொற்களால் அழைக்கப்படுகிறது.
2002ம் ஆண்டு ஆஸ்திரேலியா வில் நடந்த இணைய வல்லுநர் கூட்டத்தில் தன்னைத் தானே புகைப்படம் எடுப்பதை 'செல்பி' என்றனர். செல்ப்-போர்ட்ரைட் (Self-Portrait) என்ற இருச் சொற்களின் சுருக்கமே செல்பி (Selfie). ஆக்ஸ்போர்ட் (Oxford) அகராதி 2013ம் ஆண்டிற்கான வார்த்தை என்று 'செல்பி'யை தேர்ந்தெடுத்தது. ஆங்கிலத்திறனை இளைஞரிடையே மேம்படுத்தி வரும் பிரபலமான ஸ்கிராபில் (Scrabble) விளையாட்டில் 2014ம் ஆண்டு 'செல்பி' அங்கீகரிக்கப்பட்டது.
'செல்பி' எடுப்பதற்கு ஒரு முன் பக்கம் கேமரா உள்ள ஸ்மார்ட் போன் போதும் என்பதால்
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எளிதில் எடுக்கின்றனர்.'ஸ்மார்ட் போன்களில்'
கண் விழிக்கும் காலை நேரம் நம்மை பொய் நிகர் உலகத்திற்கு நம்மை அறியாமலேயே கடத்திச் சென்று விடுகின்றன. இதிலிருந்து விடுபட்டு அன்றைய தினத்தை துவக்கும் முன்பே ஆயிரம்
ஆயிரம் அர்த்தமின்மைகளை, அபத்தச் சிரிப்புக்களை விதைத்துச் சென்று விடுகின்றன. இது
நாள் முழுவதும் நினைவுகளில் நீடிக்கிறது. இதன் உச்சம் தான் 'செல்பி'.தன்னைத் தன் நட்பு
வட்டாரத்தில் வித்தியாசமான விதத்தில் வெளிப்படுத்த, தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய துவங்கிய 'செல்பி', இன்று தலைவன் முதல் தொண்டன் வரை, மழலை முதல் மரணம் வரை எல்லா இடங்களிலும் எடுக்கப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்குச் செல்லும் மக்கள் 'செல்பி' எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரும் நிகழ்வு இன்றைய மக்களின் மனநிலையாக பிரதிபலிக்கிறது.

செல்பியின் முன்னோடி : அமெரிக்க புகைப்படக் கலையின் முன்னோடியாகக் கருதப்படும் ராபர்ட் கொரனலிஸ், 1839ல் 'Daguerreotype' கேமராவில் புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது லென்ஸ் மூடியை சரியாகக் கழற்ற முடியாமல் அதற்கு முன்னால் ஓடி வந்து முயற்சித்துள்ளார். அது ஒரு நிமிடத்திற்கு மேல் ஆனதால் லென்ஸ் மூடியை கழற்றிய உடனே அவருடைய புகைப்படம் எதிர்பாராமல் எடுக்கப்பட்டது. இது திட்டமிட்டு எடுக்கப்படவில்லை.
அதைப்போல ரஷ்யாவைச் சார்ந்த பதிமூன்று வயது இளம்பெண் நிக்கோலேவனா 1914ல் கண்ணாடி முன் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின் தன்
நண்பர்களுக்கு எழுதிய கடித்ததில் தான் எடுத்த புகைப்படத்தை ஒட்டி அனுப்பினார். அக்கடிதத்தில் புகைப்படம் எடுக்கும் போது தன் 'கையும் மனதும்' எப்படிநடுங்கியது என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வுகளே 'செல்பி'யின் முன்னோடியாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலான 'செல்பி' கண்ணாடி முன் எடுக்கப்படுகிறது.பெரும்பாலான இளம்பெண்கள் முகம் பார்க்கும் கண்ணாடியாக 'ஸ்மார்ட்போன்' கேமராவை பார்த்து வருவதையும் பார்க்க முடிந்தது.

11 மணி நேரமும்'ஸ்மார்ட் போன்' : சமீபத்தில், கூகுள் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நாளைக்கு, 11 மணி நேரத்துக்கு மேல் 'ஸ்மார்ட் போனில்' மூழ்கிக் கிடப்போர், சராசரியாக,14 செல்பி, 16 புகைப்படங்கள் அல்லது வீடியோக் காட்சிகளை எடுக்கின்றனர். 21 முறை சமூக வலைத்தளங்களை பார்வையிட்டு, 25 எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர்.இளையோர்,
சராசரியாக, ஒரு நாளில், நான்கு செல்பி, ஆறு புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகளை எடுக்கின்றனர் என தெரிவித்துள்ளது. இந்த வரிசையில் உலகப் பிரபலங்களும் 'செல்பி' எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அன்றாட நிகழ்வுகளை 'செல்பி' எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 'நார்த்வெஸ்ட்ர்ன் பல்கலைக் கழகம்' நுாறு தம்பதிகளிடம் நடத்திய ஆய்வில் சமூக வலைத்தளங்களில் அதிகமான 'செல்பி' பகிரும் தம்பதிகள் உண்மையில் வாழ்க்கைத் துணையால் பாதுகாப்பின்மையை உணர்பவர்களாக இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் வித்தியாசமாக 'செல்பி' எடுக்க வேண்டும் என்று ஓடும் ரயிலில் எடுப்பது, வனப்பகுதிகளில் உலாவும் விலங்குகளின் அருகில் நின்று எடுப்பது, விஷமுடையப்பாம்புடன் எடுப்பது, நீர்வீழ்ச்சி, அருவிகள், ஆறுகள், உயரமான மலைகள், கிணறுகள், மிகப் பெரிய கட்டடங்கள், இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது மற்றும் பஸ்சில் படியில் தொங்கிக் கொண்டும் எடுக்கின்றனர்.

'லைக்ஸ்' வாங்க : ஆபத்தான இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை நண்பர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஷேர்செய்து, லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக இந்த ஆபத்தான வேலையை ஆர்வத்துடன் செய்கிறார்கள். பல இளைஞர்கள் சாகசத்துக்காக உயிரை பணயம் வைத்து 'செல்பி' எடுப்பது சகஜமாகி வருகிறது. கடைசியில், கவனச்சிதறல்களால் உயிரிழப்பில் போய்முடிகிறது. இது தொடர்பாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக் கழக ஆய்வுக்குழு 'என் வாழ்க்கையை நானே அழித்தல்' என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 2016-ஆம் ஆண்டு ஆய்வு முடிவில், செல்பி எடுக்கும் போது இந்தியாவில் இறந்தவர்கள் 76பேர், அடுத்து பாகிஸ்தான் 9பேர், அமெரிக்கா 8 பேர், ரஷ்யா6 பேர்என விபரங்கள் குறிப்பிடுகிறது. இறந்த வர்களில் பலர் இளம் வயதினர் என்பதும் தெரியவந்துள்ளது. 'செல்பி' எடுக்கும் போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.உருவத்தை காட்டும்;உள்ளத்தை அல்ல
ஒரு ஆள் தன்னை ஆளுமை யாகக் கட்டமைத்துக் கொள்ள, தன்னை நோக்கியத் தேடல் தான் துவக்கப்புள்ளி. சுயமதிப்பீடு என்பது நம்மை நாமே அறிவது, பின் தெளிவது. மாறாக 'செல்பி' நம் உருவத்தை மட்டுமே காட்டும். உள்ளத்தை அல்ல. இந்த வகையில் சில நுாற்றாண்டுகளில், நாம் மிகச்சிறந்த, ஆளுமைகளின் பட்டி யலை ஆராய்ந்தால் அதில் முன்நிற்பது 'காந்தி'யின் சித்திரம் தான். தன்னை செயல்பாடுகள் மூலமாக மட்டுமே மக்கள் மனதில் நிறுவிக் கொண்ட மனிதர்.
சுயபரிசோதனையை வழக்கமாக கொண்டு அதனை பதிவும் செய்து கொண்டவர். இப்படியான காந்தி ஒருபோதும் நிலைக்கண்ணாடி முன்னின்று தன் உருவத்தை சரிசெய்தலில் கவனம்கொண்டதாக செய்திகள் இல்லை. ஒருநாடே தன்னை, தன்செயல்பாடுகளை உற்று நோக்கிகொண்டு இருக்கிறது என்று அறியாதவர் அல்ல காந்தி. எனவே உண்மையில் மனிதர்களை அடையாளப்படுத்துவது அவர்களின் தேர்ந்த செயல்களால் தான். தன்னை அறிதல் மூலம், மேலெழும்பி வரும் மேம்பட்ட எண்ணங்களால் தான். 'செல்பி'யால் மட்டும் இல்லவே இல்லை.

-பேராசிரியர் பெரி.கபிலன்
கணினி அறிவியல் துறை
மதுரை காமராஜ் பல்கலைக் கல்லுாரி, மதுரை
98944 06111

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement