Advertisement

தகவல் தொடர்பும் தமிழர் மாண்பும் : இன்று சர்வதேச தொலைத்தொடர்பு தினம்

நீங்கள் இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அறிவியல் வளர்ச்சியின் வழியாகவே நாம் அதைக் கைப்பற்றியிருக்கிறோம் என்பது மிகப்பொருந்தும்.அறிவின் வளர்ச்சியும் தேவையும் புதியன கண்டுபிடிக்கும் நோக்கத்தை வளர்த்தன, குகைகளில் தங்கி வாழ்ந்த ஆதிமனிதன் குகைகளில் தீட்டியசித்திரங்கள், தனது எண்ணம் மற்றும் சிந்தனையை மற்றவர்க்குத் தெரிவிக்கும் கருவியாகவே அமைந்திருந்தது, என இருந்த தொடர்பு முறை ஒலி
எழுப்புதல், சைகை மொழி, வரிவடிவ முறையாக முன்னேறியது முதல் நான்காம் தலைமுறை
நுட்பங்கள் வரையிலான பாய்ச்சல், தொலைத் தொடர்புத்துறையில் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
கடிதங்கள், புறாக்கள்,குதிரைகள், கப்பல்கள் வழியாகப் பயணித்த தொலைத்தொடர்பு, மொழியின் உருவாக்கத்தாலும், 14 ஆம் நுாற்றாண்டில் கூடன்பர்க் கண்டறிந்த அச்சுமுறையாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. அடுத்த தாக அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது மின்சாரம். அதன் பொருட்டே தொலைத்தொடர்பு வசதிகளும் முன்னேற்றமும் நமக்குச்சாத்தியமாகி உள்ளது.

தகவல் சமூக தினம் : சர்வதேச தொலைத்தொடர்பு மற்றும் சமூக தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 17 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. முதல் சர்வதேச டெலிகிராப் மாநாட்டின் நினைவாக இந்த நாளானது அமைகிறது.சர்வதேச தொலைத்தொடர்புக் கழகமானது சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளில் இணைய, தொலைத்தொடர்பில் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.தொலைத்தொடர்பில் ஒரு இணைவை ஏற்படுத்தும் இத்தினமானது 1969 முதல்
கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளானது முன்னர் “உலகத் தொலைத்தொடர்பு தினம்” என்றும், 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் “உலகத் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு தினமாகவும் அறியப்படுகிறது.உலகளாவிய தொலைத் தொடர்பு கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான செயல்பாடுகளை மேம்படுத்தவும், பன்னாட்டு தொலைத் தொடர்பு சங்கம் பங்களிக்கிறது.தொலைத்தொடர்பு வளர்ச்சி நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதும், தகவல் சமூகத்தின், புதிய வாய்ப்புகளுக்கான சவால்களை ஏற்பதும் இந்த ஆண்டின் கருத்தாக உள்ளது.

தொலைத்தொடர்பு வளர்ச்சி : ஆகாய வீதியினில் தான் உலாவ மனிதன் வானுார்தி கண்டறிந்தான், உலக வெளியினில் தன் கருத்தைப் பதிக்கவும், தெரிவிக்கவும் தொடர்புக் கருவிகள் பலப்பல கண்டறிந்தான்.அவற்றில் குறியீடுகள் கொண்டு உருவாகி, இன்றைய காலத்திற்கு சற்று முன்பு வரை நாம் பயன்படுத்திய தந்தி முறையை நாம் மறக்க இயலாது.ஒலி, ஒளி அலைகளும், மின்காந்த அலைகளும், வான் வழியாக புகுந்து வானொலி, தொலைக்காட்சியாக மாயஜாலம்
காட்டின. தொலைதொடர்பின் இத்தகைய முன்னேற்றம் ஒரு வழித் தகவல் பெறுவதற்கான நிலையில் இருந்தது. கிரஹாம்பெல்லின் இரு முனை இணைக்கும் தொலைபேசி அமைப்பு, தற் போதைய தகவல் தொடர்பின் அடிப்படையாக அமைந்திருந்தது கிரஹாம்பெல் உருவாக்கியது, தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியை, உள் வைத்திருந்த சின்னஞ்சிறு விதையை. அதுவே, தொலை அச்சு, தொலை நகல், கணினித் தொழில் நுட்பம் என்னும் விருட்சமாக உலகெங்கும் கிளை பரப்பியிருக்கிறது.

அறிவியல் புரட்சியும் பயன்பாடும் : அறிவியல் புரட்சியாக உருவெடுத்துள்ள கணினி, தொலைப்பேசியின் நுட்பத்தினையும் உள்வாங்கிக் கொள்ள, இணையம் உருவானது. 1960களில்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாப்பு அமைப்பிற்காக உருவாக்கப்பட்ட இணையம் 1990 களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.வலைதளப் பக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாகத் தகவல்களைப் பெறவும், அனுப்பவும் கண நேரத்தில் இயல்கிறது. டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கல்வி பொழுதுபோக்குத் தளங்களுடன் வலை விரிக்கிறது. இணையத்தில் பெரும் பயன்பாட்டில் இருப்பது சமூக வலைதளங்களாகும். முகநூல், வலைப்பக்கங்கள்,
வாயிலாக கண் இமைக்கும் நேரத்தில் தகவல்கள் பதியப்பட்டு ஒட்டு மொத்த உலகிற்கும் கொண்டு சேர்க்கப்படுகின்றது. அன்றாட சமூக நிகழ்வுகள் பிரச்னைகள் சமூக வலைதளங்களால் அணுகப்படுகிறது.

பழந்தமிழரின் அறிவியல் நுட்பத்திறன் : பல்வேறு வகையிலான கருவிகளைக் கொண்டு மேல்நாட்டவர் கண்டுபிடித்த நுட்பங்களை, எத்தகைய தொலை நோக்குக் கருவிகளும் இன்றி பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவுறுத்தினர் நம் பழந்தமிழர். உலகம் உருண்டை என்பதை முன் மொழிந்த மாணிக்கவாசகரின் அறிவும் வள்ளுவப் பெருந்தகை யின் வாக்கும் இன்றும் வியக்கத்தக்கது.கோள்களின் நிறங்களைத்துல்லியமாகக் கூறியிருப்பதும், சந்திரனின் நிலைகள், மற்றும் தற்போதைய தொழில் நுட்பத்தில், காற்று ஓர் ஊடகமாய்ச் செயல்படுவதும் பழங்கால சங்க இலக்கியங்களில் காற்றின் தன்மை யும் அதன் வெவ்வேறான நிலைகளும் குறிக்கப்பட்டிருக்கிறது.அணுவே தொழில் நுட்பத்தின் அடிப்படை. இதனை,அணுவில் அணுவினை ஆதிப் பிரானைஅணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவில் அணுவை அணுகவல்லார்கட்குஅணுவில் அணுவை அணுகலுமாமே! என ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருமூலர் குறித்துள்ளது நம் மூதாதையார் அனைத்து அறிவியல் நுட்பங்களையும் அறிந்திருந்தனர் என்பதை தெளிவுபடுத்துகிறது.

உலகிற்கு ஒரு தமிழன் : இன்று உலக அளவில் பரந்து உள்ள வணிகம், கல்வி, பொருளாதாரம் பற்றிய தொடர்புகளில் மிகப்பெரும் முன்னோடியாக நிற்பது இ-மெயில் அன்றி வேறில்லை. இம்மி நேரத்தில் உலகத்தில் உள்ள எந்த நாட்டிற்கும் செய்தி அனுப்ப முடியும் என சாத்தியப்படுத்தியவர் தமிழன் சிவா அய்யாதுரை.ராஜபாளையத்தில் முகவூரைச்சொந்த ஊராகக் கொண்ட சிவா அய்யாதுரை, தொலைத் தொடர்புத் துறையில் அரும்பெரும் சாதனையைத் தன் 14 வது வயதில் நிகழ்த்திய அருந்தமிழர்.

அலைபேசி : வெகு எளிதாக மக்களைச் சென்றடைந்த ஊடகமாகச் அலைபேசிகள் மாபெரும் தகவல்புரட்சியை நிகழ்த்தியுள்ளன.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பயன்பாட்டைக் கொண்ட அலைபேசிகள் பேசுவதற்கு மட்டும் என இருந்த நிலை மாறிவிட்டது.தற்போதைய ஸ்மார்ட் அலைபேசிகள் ஒரு கணினியை உள்ளடக்கி வலம் வருகிறது. உள்ளங்கைகளுக்குள் உலகில் நடைபெறும் ஒவ்வொன்றையும் உடனே காண இயல்கிறது, நேரடியாக முகம் பார்த்துப் பேச முடிகிறது, தொலைத் தொடர்பு நுட்பம், தற்போதைய காலத்தின் மின்னணு நுட்ப வளர்ச்சியில், வானில் செயற்கைக்கோள் வழியாகவும் நிகழ்த்தப்படுகிறது.
உலகில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் போதும், எரிமலைச் சீற்றம், புயல் காற்றும்,
வெள்ளமும் கண் முன் நிறுத்தப்படுகிறது. தொலைத் தொடர்பு தாண்டி புவிக்குள்ளிருக்கும் வளங்களையும் வெளிக் கொணர்கிறது.

பயன்படுத்தும் பாங்கு : எந்தவொரு அறிவியல்நுட்பமும் அதை பயன்படுத்து வோர் கரங்களிலேயே அதன் நன்மையும் தன்மையும் குறிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு வகையில் மக்களைக்கவர்வதற்காக, வணிக யுக்திகளாக உருவான சமூக வலைதளங்களைப் பயன்படுத்திப் பொருளாதாரப்பயன், கருத்துகளைப்பரிமாற்றம் செய்தல், மற்றும் மக்களை ஒன்றிணைத்தல் சாத்தியமாகிறது. எனினும் இத்தகைய தளங்களை எச்சரிக்கையுடன் அணுகுவதும், பதிவுகள் இடுவதும் அவசியம். தனிப்பட்ட பதிவுகள் இடுதலில் விழிப்புணர்வும், பிறர் மனம் புண்படும்படியான கருத்துக்கள் தவிப்பதும், 180 கோடிக்கும் அதிகமான உறுப்பினர் எண்ணிக்கை கொண்டு இயங்கும் சமூக வலைதளங்கள் போன்ற தொலைத்தொடர்பு பகுதிகளின் முக்கியத்துவத்தை மேலும்
மேம்படுத்தும் என்பது உறுதி.

-அ. ரோஸ்லின், ஆசிரியை
அரசு மேல்நிலைப்பள்ளி
வாடிப்பட்டி
kaviroselina997gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள். நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement