Advertisement

உணவை வீணாக்கலாமா

கடைசியாக நீங்கள் பங்கேற்ற திருமண விருந்து நினைவுஇருக்கிறதல்லவா..? அங்கு
உங்களுக்கு பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளையும் வீணாக்காமல் சாப்பிட்டீர்களா? யோசித்துப் பாருங்கள். நிச்சயமாக பத்து சதவிகித உணவையாவது நீங்கள் வீணாக்கியிருக்க வாய்ப்பு உண்டு. இதேநிலைதான் உலகெங்கும் நாள்தோறும் உலகில் 87 கோடி மக்கள் பட்டினியால் வேதனைப்படுகிறார்கள் என வருந்துகிறது ஐ.நா. உணவுப்பொருட்களை வீணாக்குவதில் அமெரிக்கர்களுக்கே முதலிடம். ஆண்டுக்கு 165 பில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப்பொருட்களை அவர்கள் வீணாக்குவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான அமெரிக்கர்கள் தாங்கள் உண்ணும் உணவில் பாதியை குப்பையில் கொட்டுவதாக "தி கார்டியன்"
பத்திரிகை சொல்கிறது. சீனர்கள் ஆண்டுக்கு வீணாக்கும் உணவுப் பொருளின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய். அவர்கள் வீணடிக்கும் உணவை வைத்து 20 கோடிப் பேரின் பசியைப் போக்க முடியுமாம். இதையடுத்து, சீன அதிபர், 'ஓட்டல்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் உணவுப் பொருட்களை வீணடிக்கக் கூடாது' என உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஆப்பிரிக்காவில் ஓர் ஆண்டுக்கு உணவு உற்பத்தி 22 கோடி டன். ஐரோப்பாவில் சாப்பாட்டு மேஜையில் அதைவிட அதிகமான உணவு வீணடிக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகள் பலவற்றில் உணவு வீணடிக்கப்
படுவதும், பல ஏழை நாடுகளில் பலர் பட்டினி கிடப்பதும் வழக்க மாகி விட்டது. மொத்தத்தில், உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.6 பில்லியன் டன் உணவுபொருள்கள் வீணாகின்றன.
இந்தியாவில் எப்படி இந்தியாவில் ஒரு நடுத்தரகுடும்பத்தினர் சராசரியாகஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள். ஒவ்வொரு திருமண மண்டபத்திலும் சரா சரியாக 10 முதல் 75 நபர்கள் உண்ணும் அளவிலான உணவு வீணாக்கப்படுகிறது. "இலையில் வைக்கப்படும் உணவு
முழுவதையும் சாப்பிடுவது நாகரிகமில்லை" என்ற எண்ணம், நம் மனதில் விதைக்கப்பட்டிருப்பதும், உணவு வீணாக்கப்படுவதற்கு ஒரு காரணம். இந்தியாவில் தினமும் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் துாங்குகிறார்கள். 18 கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். உலகிலேயே அதிக அளவாக இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம். உலக
பட்டினி குறியீடானது, 118நாடுகளில் இந்தியாவை 97-ஆவது இடத்தில் காட்டுகிறது. அப்படி
யிருக்கையில் நாம் உணவை வீணாக்குவது நியாயம்தானா யோசியுங்கள்.

வீணாகும் தானியங்கள் : விவசாயியின் கடுமையான உழைப்பும், நவீன தொழில்நுட்பமும் தானிய உற்பத்தியை அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டு 27 கோடி டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டதாக பிரதமர் பெருமிதப்பட்டார். ஆனால், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்நிலை தொடர்ந்து வறட்சியில்தான் இருக்கிறது.நாடு முழுவதும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் கடனில் தத்தளிப்பதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. கடன் வாங்கி சிரமத்துக்குள்ளாகும் விவசாய குடும்பங்களின்எண்ணிக்கையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 92.9 சதவிகித விவசாய குடும்பங்கள் கடனில் தத்தளித்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 89.1 சதவிகிதம்,தமிழகத்தில் 82.5 சதவிகித
விவசாய குடும்பங்கள் கடன் சார்ந்த வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.உணவு உற்பத்தி அதிகரித்த போதும்கூட விவசாயியின் வாழ்க்கை வளமானதாகிவிடவில்லை. விவசாயியின் விளைபொருளுக்கு உரியவிலை கிடைக்க வில்லை. அதே நேரத்தில் தானியங்களின் விலையும் குறையவில்லை என நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் உற்பத்தி செய்யும் தானியம் எங்கு போகிறது..? வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான பதில்.

ஐ.நா., அறிக்கை : ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (எப்.ஏ.ஓ.) அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஆண்டுதோறும் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகின்றன என்றும் இதன் மதிப்பு சுமார் 750 பில்லியன் டாலர் (சுமார் ரூ.50 லட்சத்து 22 ஆயிரம் கோடி) என்றும் கூறியிருந்தது. அதாவது உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான உணவுப் பொருள்கள் வீணாகின்றன அல்லது வீணாக்கப்படுகின்றன என்றது அந்த அறிக்கை.இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்கள் வீணாவது குறித்த அதிர்ச்சித் தகவலைத் தந்திருக்
கிறது லுாதியானா நகரில் செயல்படும் "அறுவடைக்குப் பிந்தைய பொறியியல் தொழில்நுட்ப நடுவண் நிறுவனம்' அந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியா வில் ஆண்டுதோறும் அறு வடைக்கு பிறகு வீணாகும் தானியம், பருப்பு, காய், கனி ஆகியவற்றின் மதிப்பு சுமார் ரூ.95 ஆயிரம் கோடி. இதில், காய், கனிகள் கெடுவதால் ஏற்படும் இழப்பு மட்டுமே ரூ.40,811 கோடி. சேமிப்பு வசதி இல்லாத தால் அரிசி, கோதுமை போன்றவற்றின் இழப்பு ரூ.20,698 கோடி. பருப்பு வகையில் ரூ.3,877 கோடி இழப்பு எனப் பட்டியலிடுகிறது.சராசரியாக ஆண்டுக்கு உற்பத்தியாகும் 25 கோடி டன் உணவுதானியத்தில் 40 சதவிகிதம் வரை வீணாகிறது. இந்தியாவில் நாசமாகும் கோதுமை யின் அளவு, ஆஸ்திரேலிய கண்டத்தின் ஓராண்டு கோதுமை உற்பத்தியின் அளவுக்குச் சமம்.

காரணமென்ன : குளிர்பதன சேமிப்பு, சரக்கு கையாளுதல் ஆகியவற்றில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். நம்நாட்டில், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் அபரி
மிதமாக வீணாகக் காரணம், உணவுப் பொருள் கெடாமல் இருக்க, போதுமான குளிர்பதன கிடங்கு வசதிகள் இல்லை. 6.10 கோடி டன் உணவுப் பொருள்களுக்கு குளிர்பதன சேமிப்புக்கிடங்குகள் தேவை என்றாலும், நம்மிடம் இருப்பதோ 3 கோடி டன் அளவுக்குத்தான். இதில் பெரும்
பகுதி கிடங்குகள் பெருநிறுவனங்கள் வசமுள்ளன. மேலும், கணிசமானவை தனியார் வசமும் இருக்கின்றன. இவர்களெல்லாம் விவசாயிகளிடம் குறைந்த விலையில் விளைபொருட்களை வாங்கி சேமித்து வைத்துக் கொண்டு, பின்னர், அதன் விலையைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்.இத்தகைய குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உணவுப் பதப்படுத்தும் தொழில் மற்றும் குளிர்பதன கிடங்குகளுக்கான வங்கிக் கடன் அளிப்பதில் முன்னுரிமை தருவதற்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. விவசாயி, தன் விளைபொருளுக்கு உற்பத்தி செய்ததற்கான விலைகூட கிடைக்கவில்லை என்பதால் அதனை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதும், அழித்துவிடுவதும் நடக்கிறது.

என்ன செய்யலாம் : உலக மக்கள் தொகையின் தேவையைவிட அதிக அளவு தானியம் உற்பத்திச் செய்யப்படுகிறது. அப்படியிருந்தும் ஒட்டுமொத்த உலகமும் பட்டினி இல்லாமல் துாங்கிய தில்லை. உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவை அனைத்தும் சரிவிகித அளவில் இல்லாததே உணவு வீணாவது தொடர்பான பிரச்னைகளுக்குக் காரணம். இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாம் விளைபொருட்களையும் சமைத்த உணவுப் பொருள்களையும் வீணாக்குதல் மனித இனத்திற்குச் செய்யும்துரோகமாகும்.
விவசாயிகள் பலர் சேர்ந்து தங்கள் விளைபொருட்களை சேமித்து வைத்து, விற்பதற்கு ஏற்ற கிடங்குகளை உருவாக்கவேண்டும். அப்போதுதான் அவர்களின் விளைச்சலுக்கு அவர்களே விலையினைத் தீர்மானிக்கமுடியும். உணவு வீணாவதைத் தடுக்கும் பணியினை நம் வீட்டிலிருந்து தொடங்கவேண்டும். இன்று நம் வீட்டில் என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முன்
கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ற காய்கறிகளை மட்டுமே வாங்க வேண்டும். நேற்று வாங்கிய
தக்காளி இருந்தால் இன்று பயன்படுத்துங்கள். இன்றைக்கு வாங்கிய காரட்டை நாளைக்கு பயன்
படுத்திக் கொள்ளலாம். இதனால் உணவுப்பொருட்கள் கெடுவதும் வீணாவதும் தடுக்கப்படும்.
அதிகமாக சமைத்து விட்டோம் என்பதற்காகவோ, நிறைய சாப்பிடட்டும் என்பதற்காகவோ, நிறைய பரிமாறி அசத்தவேண்டும் என்பதற்காகவோ இலை முழுவதும் உணவைக் பரப்பாதீர்கள். சாப்பிடும்போது வேண்டியதைப் போட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் மீதமான உணவை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவமுடியும்.உணவை வீணாக்கும் போது, அதனை உற்பத்தித் செய்வதற்குத் தேவைப்பட்ட தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றையும் வீணாக்குகிறோம். ஒரு சோற்றுப் பருக்கையை உண்பதற்கு முன் யோசித்துப் பாருங்கள். அது
உருவாவதற்கும் குறைந்தது மூன்று மாதங்கள் தேவை. அத்தோடு, அதற்கு தண்ணீர், உரம், விவசாயி யின் உழைப்பையும் அளித்தாகவேண்டும். அப்படியிருக்கையில் உணவை வீணாக்கலாமா?

-ப. திருமலை
பத்திரிகையாளர். 84281 15522

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement